கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 8, 2013

இளவரசன் – திவ்யா, சமூகம் தோற்ற கதை.

ilavarasan_divya-350_070513040519

உணர்வு மயப்பட்ட எம் தமிழ்ச் சமூகம் இன்னொரு காதல் கதை குறித்த செய்திகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறது, “அவன் மனைவியோடு இவள் கணவன் ஓட்டம்”, “பதினாறு வயது மாணவனை வசப்படுத்திய முப்பது வயது ஆசிரியை” மாதிரியான மறை நீலச் செய்திகளை உரக்க வாசித்து தனது மன விகாரத்தை குளுமைப்படுத்திக் கொள்ளும் அதே மனநிலையில் தான் பெரும்பாலான நமது முற்போக்கு பொன்னம்பலங்கள் கிடைக்கிற ஊடகங்களில் இந்த இளவரசன் – திவ்யா காதலைக் குறித்துப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள், நாட்டாமை எல்லாம் முடிந்து இல்லம் திரும்பும் போது தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல வழக்கம் போலவே அவர்களிடம் இந்த அரதப் பழைய சொற்கள் மிச்சமிருக்கிறது. "அந்தப் பயலுகளோட எல்லாம் சேந்து சுத்தாத".

தலித் அரசியல், தமிழ் தேசிய அரசியல், திராவிட அரசியல், தேசிய அரசியல் என்று பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிற பெரியவர்கள், இளைஞர்கள் என்று அனைவருக்கும் ஒரு பொதுவான தனிப்பட்ட வாழ்க்கை நெறி இருக்கிறது, இவர்களில் யாரும் அவ்வளவு எளிதாக தங்கள் சொந்த சாதி அடையாளங்களை விட்டு விடுவதாக இல்லை, திராவிட அரசியலில் தீவிரமாக இயங்கும் பல மனிதர்கள் வேறொரு தளத்தில் சாதிச் சங்கத் தலைவர்களாக வலம் வருவதை நீண்ட காலமாக நான் அறிவேன், தமிழ்த் தேசிய அரசியல் பேசுகிற தம்பிமார்கள் பலர் சொந்த வீடுகளில் சாதீயப் பரிவட்டங்கள் கட்டிக் கொள்வதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தலித் அரசியல் பேசுகிற பலருக்கு சொந்த சாதி அடையாளங்களைத் தாண்டிச் செல்வதற்கான வாய்ப்பு பெரும்பாலும் வழங்கப்படுவதே இல்லை. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஊரில், நிலங்களில் இன்னமும் போராளிகளாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு உரிமைக்காக காலம் காலமாகப் போராடிக் கொண்டே இருக்கிற தலித் மக்களின் வாழ்வியல் இந்திய தேசத்தில் மிகச் சிக்கலான பன்முகத் தன்மை வாய்ந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியையும், வன்னிய சமூகத்தையும் தோலுரிப்பதாகக் கூறிக் கொண்டு சாதிய வன்முறை மற்றும் சாதிய வன்மங்களுக்கு எல்லாம் மருத்துவர் ராமதாசும் அவரது தொண்டரடிப் படையும் மட்டுமே ஏகபோகப் பொறுப்பு என்கிற ரீதியில் காய் நகர்த்தும் பல ஆற்றல்களையும் இந்த நேரத்தில் நாம் அம்பலப்படுத்துவது மிக இன்றியமையாதது. பாட்டாளி மக்கள் கட்சியையும், அதன் தலைவர்களையும் விடக் கொடுமையான சாதிய வன்மம் நிரம்பிய தலைவர்களை தி.க,  தி.மு.க,  அ. தி. மு. க,  காங்கிரஸ்,  பா ஜ க,  கம்யூனிஸ்ட் என்று எந்த வேறுபாடுகளும் இன்றி நம்மால் அடையாளம் காண முடியும்.

பெரும்பான்மைச் சாதியினர் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக இருக்கிற திராவிட ஓட்டுக் கட்சிகள் சாதி ஒழிப்பு குறித்துப் பேச அருகதையற்றவர்கள் என்பதை நாம் முற்றிலுமாக உணர வேண்டும், ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பிக் கொண்டும், அறிக்கைகள் கேட்டும் கொண்டும் தங்கள் முற்போக்கு முகங்களை ஒப்பனை செய்து கொள்வதைக் காட்டிலும் நமக்கு இருக்கிற மிக முக்கியமான தேவை, சமூக அறிவியலில் சாதியின் தாக்கம் குறித்து வெளிப்படையான பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்குவது, இன்றைக்கு இறந்து போன ஒரு இளைஞனின் புகைப்படங்களை வைத்து அரசியல் பஞ்சாயத்துகள் செய்யும் பெரிசுகளில் பலர் தங்கள் குடும்பத்திலேயே கடும் போராட்டங்களுக்கு இடையில் நிகழ்ந்த வெற்றிகரமான காதல் திருமணங்களைக் குறித்து வாய் திறப்பதே இல்லை.

Ilaravarasan-Firstpost

காதலுக்கு முற்றிலும் எதிரான சமூகமோ, அல்லது காதல் திருமணங்களே நடக்காத சமூகமோ அல்ல நமது தமிழ்ச் சமூகம், அதே வேளையில் இந்தத் திருமணத்தில் உள்ளீடு செய்யப்பட்ட சாதி, அரசியல் காரணங்கள் தனி மனித வாழ்க்கையின் உள்ளறைகளில் நுழைந்து உயிர்களோடு விளையாடும் அளவுக்கு முதிர்ச்சி இல்லாததாக இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சாதி ஏறத்தாழ நமது சமூகத்தில் ஒரு நிறுவனம், இந்த நிறுவனம் அரசியலோடு நீக்கமற நிறைந்திருக்கிறது, தனி மனித வாழ்க்கை, காதல் என்கிற வெகு நுட்பமான கூறுகள் சிக்கலடையும் போது சாதி, அரசியல் போன்ற நிறுவனத் தன்மை வாய்ந்த காரணிகளை நீக்கி விட்டு தாய்மை உணர்வோடு அவர்களை அணுக வேண்டியதன் அவசியத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, நமது ஊடகங்கள் தனி மனித வாழ்க்கை குறித்த செய்திகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகளை தங்கள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒரு காலம் உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆரம்பப் பள்ளிகளில் இருந்து குழந்தைகளுக்கு சாதி அடையாளத்தின் கோர முகத்தை முற்றிலுமாக நீக்கும் பயிற்சியை நமது அரசுகள் வழங்க முன்வர வேண்டும், சமூக அறிவியல் பாடங்களில் சாதி மற்றும் மதம் குறித்த பல்வேறு செயல்திட்டங்களை உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டும். ஊரகப் பகுதிகளில் சாதி நல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி அக்குழுக்களின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்குப் பல்வேறு ஊக்கத் தொகை வழங்கிச் சிறப்பிக்கும் திட்டங்களை நமது அரசுகள் அறிமுகம் செய்ய வேண்டும்.

ஆரம்பப் பள்ளிகளில் இருந்து உயர்நிலைப் பள்ளிகள் வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சாதி, மதம் குறித்த புரிந்துணர்வை உருவாக்கும் பயிற்சிப் பட்டறைகளை அரசு உடனடியாகத் துவக்க வேண்டும், சமூகத்தோடு நேரடித் தொடர்பில் இருக்கும் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறை போன்ற மிக முக்கியமான துறைகளில் சாதிய மனப்போக்கு ஒரு நஞ்சைப் போல மண்டிக் கிடக்கிறது, இத்தகைய நிலைகளை உடைக்க என்ன மாதிரியான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று நமது கல்வியாளர்களும், அறிவுத் தளத்தில் இயங்குபவர்களும் ஒன்று கூடி விவாதிக்க வேண்டியது இந்த நேரத்தில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இளவரசன் – திவ்யா காதலில் சமூக ரீதியாக நாம் பல்வேறு தவறுகளைப் புரிந்திருக்கிறோம், காதல் மனம் புரிவதற்கான தகுதி, பொருளாதார உறுதிப்பாடு ஆகியவை குறித்து இரு தரப்பிலும் பெற்றோர் இழைத்த குளறுபடிகள், சாதி ரீதியாகக் காதலைக் கையாண்ட நமது அரசியல் கட்சிகள் இழைத்த குளறுபடிகள், முறையான பாதுகாப்பும், சட்ட வழியிலான உதவிகளும் செய்யத் தவறிய நமது காவல்துறையும் நீதிமன்றங்களும் இழைத்த குளறுபடிகள், முதிர்ச்சியற்ற நிலையில் செய்திகளைப் பரபரப்புக்காகவும் வணிகத்துக்காகவும் வெளியிட்ட ஊடகங்கள், நாளேடுகள் இழைத்த குளறுபடிகள் என்று வரிசையாகப் பல்வேறு நிலைகளில் ஒட்டு மொத்த சமூகமாகவே நாம் தவறிழைத்திருக்கிறோம்.

ஒரு கட்சியும் அதன் தலைவர்களும் மட்டுமே இளவரசனின் மரணத்துக்குக் காரணம் என்று இன்னமும் நாம் நம்பிக் கொண்டு அதன் மீதான விவாதங்களில் ஈடுபடுவோமேயானால் நமது சமூகத்தில் அமைதியையோ, மேம்பாட்டையோ கண்டடைவது எட்டாக் கனியாகவே இருக்கும், மாறாக நமது கல்விமுறையும், வாழ்வியல் நெறிகளும் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், சமூக அறிவியலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க அரசுகள் வாக்கு வங்கி அரசியலை விட்டு வெளியேற வேண்டும்.

நம்பிக்கைகள் குறித்த உள்ளீடுகளை எப்படிக் கையாள்வது என்கிற உளவியல் ரீதியான அறிவை நமது குழந்தைகளுக்கு உருவாக்குவது அத்தனை எளிதான செயல்திட்டம் அல்ல, மதம் என்கிற மிகப்பெரிய நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கிற ஒரு முக்கிய விளைபொருளான சாதியை முறையான கல்வி என்கிற ஆயுதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும் என்கிற உண்மையை நாம் இன்னும் சென்றடையவில்லை, நமது கல்வியோ தொடர்ந்து முதலீட்டிய நிறுவனத்தை நோக்கி நமது குழுந்தைகளை அழைத்துச் செல்லும் ஒரு சிக்கலான காலத்தில் இருக்கிறது, முதலீட்டியம் எப்போதும் நவீனக் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் அனுமதிப்பதே இல்லை.

06-ilavarasan211-600

மனித குலம் நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் பயணித்து தனது குறைகளை அகற்றுவதற்குப் போராடிக் கொண்டே இருக்கிறது, பேரண்டத்தின் துகளாக, எளிய வேதிப் பொருட்களாலும், மூலக் கூறுகளாலும் உருவாகி நகரும் உயிர்ப் பொருளாய் எண்ணிலடங்காத கனவுகளோடு இளவரசனையும், திவ்யாவையும் போலத் தான் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் கூட்டு மனமும் இயங்கிக் கொண்டிருக்கிறது, வாழ்க்கை ஒரு வரலாற்று வலியாகவும், இருத்தலுக்கான மிகப்பெரிய போராட்டமாகவும் நம்மைத் தொடரும் காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் என்ன தரப் போகிறோம் என்பதே இறுதிக் கேள்வி.

வழக்கம் போலவே நாம் மூலக் கதையை விட்டு கிடைக்கிற சுவாரசியமான கிளைக் கதையின் வாலைப் பிடித்துக் கொண்டு பயணிக்கிறோம், இப்போது இளவரசன், அவன் சார்ந்த சமூகம், அந்த சமூகத்தைப் வழி நடத்தும் அரசியல் கட்சி என்று ஒரு பிரிவும், திவ்யா, அவள் சார்ந்த சமூகம், அந்த சமூகத்தை வழி நடத்தும் அரசியல் கட்சி என்று இன்னொரு பிரிவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, இந்த இரு பிரிவுகளுக்கிடையில் நிகழும் பல்வேறு நகர்வுகளை நமது சமூகமும், ஊடகங்களும் வெகு நுட்பமாக எண்ணெய் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றன, மூலக் கதையான சாதி மதங்களைத் தாண்டிய மனிதமும், அன்பும் நிரம்பிய காதலோ தண்டவாளத்தின் அருகே இளவரசனின் உடலைச் சுற்றி வரையப்பட்ட கோட்டைப் போல கேட்பாரின்றி கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது.

இளவரசனைப் போல கனவுகளைத் தொலைத்து இறந்து போன ஒரு குழந்தையும், திவ்யாவைப் போல மிகக் கொடுமையான உளச்சிக்கலுக்கு ஆட்பட்டிருக்கும் இன்னொரு குழந்தையும் நமது சாதி அடையாளங்களைத் தாண்டி நமது மனசாட்சியை உலுக்கியபடி நமக்கு முன்னே எப்போதும் நின்று கொண்டே இருப்பார்கள்.

************

Advertisements

Responses

 1. சமூக நீதிப் போராளிகள், சமூக சிந்தனையாளர்கள், இன்னும் எத்தனையோ பெயர்கள்… என்ன பயன்… தன் குடும்பம் வளரவே பயன்படுத்துகிறான் ஒவ்வொரு அரசியல்வியாதியும்… இவன் அனைத்து நிகழ்வுகளையும் தன் கோணத்திலேயே பார்க்கின்றான்… பிறர் குடும்பத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றான்… அவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டே சீரழிக்கின்றான்… இந்த வியாதிகள் ஒழிந்தால்தான் நாடு உருப்படும்…

 2. /**
  வழக்கம் போலவே நாம் மூலக் கதையை விட்டு கிடைக்கிற சுவாரசியமான கிளைக் கதையின் வாலைப் பிடித்துக் கொண்டு பயணிக்கிறோம், இப்போது இளவரசன், அவன் சார்ந்த சமூகம், அந்த சமூகத்தைப் வழி நடத்தும் அரசியல் கட்சி என்று ஒரு பிரிவும், திவ்யா, அவள் சார்ந்த சமூகம், அந்த சமூகத்தை வழி நடத்தும் அரசியல் கட்சி என்று இன்னொரு பிரிவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, இந்த இரு பிரிவுகளுக்கிடையில் நிகழும் பல்வேறு நகர்வுகளை நமது சமூகமும், ஊடகங்களும் வெகு நுட்பமாக எண்ணெய் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றன, மூலக் கதையான சாதி மதங்களைத் தாண்டிய மனிதமும், அன்பும் நிரம்பிய காதலோ தண்டவாளத்தின் அருகே இளவரசனின் உடலைச் சுற்றி வரையப்பட்ட கோட்டைப் போல கேட்பாரின்றி கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கிறது.
  **/
  தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

 3. /**
  இளவரசன் – திவ்யா காதலில் சமூக ரீதியாக நாம் பல்வேறு தவறுகளைப் புரிந்திருக்கிறோம், காதல் மனம் புரிவதற்கான தகுதி, பொருளாதார உறுதிப்பாடு ஆகியவை குறித்து இரு தரப்பிலும் பெற்றோர் இழைத்த குளறுபடிகள், சாதி ரீதியாகக் காதலைக் கையாண்ட நமது அரசியல் கட்சிகள் இழைத்த குளறுபடிகள், முறையான பாதுகாப்பும், சட்ட வழியிலான உதவிகளும் செய்யத் தவறிய நமது காவல்துறையும் நீதிமன்றங்களும் இழைத்த குளறுபடிகள், முதிர்ச்சியற்ற நிலையில் செய்திகளைப் பரபரப்புக்காகவும் வணிகத்துக்காகவும் வெளியிட்ட ஊடகங்கள், நாளேடுகள் இழைத்த குளறுபடிகள் என்று வரிசையாகப் பல்வேறு நிலைகளில் ஒட்டு மொத்த சமூகமாகவே நாம் தவறிழைத்திருக்கிறோம்.
  **/

  பரபரப்புக்கு ஏங்கும் முதிர்ச்சி அற்ற மனநிலை எல்லோருக்கும் இருக்கிறது. தெருவில் ஒரு வீடு எரிந்தால் நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம்தான் அதிகம்.
  மற்ற வலைப்பதிவர்கள் அணுகாத கோணம் உங்களுடையது. தொடருங்கள். உங்களுடைய இந்தப் பதிவைத் தளங்களின் தளமான கன்னிமாராவில் இணைத்துள்ளேன்.

  துடிமன்னன்

  http://kannimaralibrary.co.in
  http://tamilodai.wordpress.com

 4. […] https://tamizharivu.wordpress.com/2013/07/08/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e… […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: