கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 28, 2013

நான் பார்த்த கடவுள்.

IMG_0874

இன்று காலை நிறைமொழியின் பள்ளியில் குழலூதும் கண்ணனாகவோ, ராதையாகவோ வேடமிட்டு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள், அம்மாவும், மகளும் மும்முரமாக நேற்றே பல்வேறு பொருட்களை சேகரிக்கத் துவங்கி இருந்தார்கள். என் பங்குக்கு நானும் சிலவற்றை வாங்கிக் கொடுத்து விட்டு அமைதியாக இருந்தேன். நமது சமூகத்தில் நெடுங்காலமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பள்ளியில் சேர்க்கும் போதே "குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று எழுத்து வடிவில் கேட்டார்கள்.

"எனது குழந்தைக்கு மத நம்பிக்கைகளையோ, வேறுபாடுகளை உண்டாக்குகிற சாதி நம்பிக்கைகளையோ சொல்லிக் கொடுக்க வேண்டாம்" என்று உறுதியாகச் சொல்லி இருந்தேன். "மதமில்லை" என்று விண்ணப்பத்தில் நான் எழுதி இருந்ததை இரண்டு மூன்று முறை அந்தப் பள்ளியின் தாளாளர் படித்துப் பார்த்தார்.

பிறகு பள்ளியின் நடவடிக்கைகளை கவனித்துப் பார்த்துக் கொண்டு தானிருந்தேன், ரம்ஜானின் போது வெண்ணிற ஆடைகளை  குழந்தைகளுக்கு உடுத்தி, தொப்பிகளை அணிவித்து இஸ்லாமிய மத நம்பிக்கைகளை மதிப்போடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார்கள், அந்தக் காரணத்துக்காகவே இப்போது ராதை வேடமிடுவதற்கும், நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் எந்தத் தடையும் நான் சொல்லவில்லை.

குழந்தையின் ஒப்பனைகளைப் பார்த்து நிறைவு கொண்ட துணைவியார், "கடவுள் மனிதர்களுக்குக் கொடுக்கிற ஒப்பற்ற செல்வம் குழந்தைச் செல்வம் தான்" என்று நிறைமொழிக்கு ஒரு முத்தம் கொடுத்தார். அவரது முதல் சொல் மனதுக்குள் கிடந்தது உறுத்தியது.

குழந்தை ஒப்பனைகளை நிறைவு செய்து கொண்ட பிறகு என்னிடம் கேட்டாள்,

"அப்பா, குழலூதும் கண்ணன் யாரு?, கண்ணன், ராதை இவங்க எல்லாம் எங்கே இருப்பாங்க?, ஏன் இன்னைக்கு லிட்டில் கிருஷ்ணா மாதிரி, ராதா மாதிரி எல்லாரும் வேஷம் போடுறாங்க".

சமாளிப்புக்காக "அவங்கல்லாம் நமக்கு முன்னால வாழ்ந்த மனிதர்கள், ஏழைகளுக்கு உதவியவர்கள், நன்மைகளைச் செய்தவர்கள்"  ஏதோ ஒரு பதிலைச் சொல்லியபடியே என் நினைவுகள் பின்னோக்கிப் போனது.

2008 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் நானும், துணைவியாரும் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்று முடிவு செய்திருந்தோம், நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பது நமது சமூகத்தில் இருபாலருக்கும் மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும் ஒரு காரணி. முதிர்ச்சி பெற்ற ஒரு மனிதனாக என்னால் அதனைக் கடந்து வர முடியும் என்று நம்பினேன், ஆனால், துணைவியாரின் நிலை சிக்கலானது, அவர் பல்வேறு உளவியல் அழுத்தங்களால் பாதிப்படைந்திருந்தார். இறுதியாக ஒரு மருத்துவரிடம் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்,

முதன்முறை அவரைப் பார்த்த போது அவர் நம்பிக்கையோடு என்னைப் பார்த்துச் சிரித்தார், இரண்டாம் முறையும் அதே நம்பிக்கையோடு "கவலைப்படாதீர்கள்" என்று சொன்னார். மூன்றாம் முறை அவரைச் சந்தித்த போது அறிவியலின் உன்னதத்தை இயன்ற வரையில் முயன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தையை அவர் உருவாக்கி இருந்தார்.

IMG_0874

துளைத்தெடுக்கிற, அழகான, அன்பு நிரம்பிய ஒரு மனித உயிரை உருவாக்கி அதனை எங்கள் கைகளில் கொடுக்க அவர் எத்தனையோ கடுமையான சவால்களை வாழ்க்கையில் சந்தித்தவர், அவரது மருத்துவக் கல்வியை முழுமை அடையச் செய்வதற்காக மிதிவண்டியில் பயணித்து முருங்கைக் கீரை விற்ற ஒரு தந்தையை என் துணைவியார் அறிந்திருக்க வாய்ப்பில்லை, தனது மருத்துவக் கல்வியை நிறைவு செய்வதற்காக எண்ணற்ற துயரங்களைச் சந்தித்த அந்த மருத்துவரின் பழைய குடும்பத்தை அனேகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

கண்டிராத கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் காட்டும் அக்கறையில் ஒரு பத்து விழுக்காடு கூட நாம் எத்தனையோ உயிர்களை உருவாக்குகிற, எத்தனையோ உயிர்களைக் காக்கிற மருத்துவர்களுக்குக் கூட வழங்குவதில்லை.

குழந்தையை வெளியே அழைத்துச் செல்ல முடியும் என்கிற நாள் வந்த போது அந்தக் கோவிலுக்குத் தான் போனோம், மூலவரைப் போல அமர்ந்திருந்த அந்த மருத்துவரின் கால்களின் ஒரு முறை விழுந்து கும்பிட்ட போது தான் என் மனம் மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருந்தது.

இதோ, முதல் முறையாக ஒரு வளர்ந்த பெண்ணைப் போல வேடமணிந்து புதிய கேள்விகளோடும், மொழிபெயர்க்க முடியாத புன்னகையோடும் எங்களைச் சுற்றி வலம் வரும் இந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தக் கடவுளரின் நினைவும் வருவதில்லை, மாறாக கண்ணனாக, ராதையாக, சிவனாக, விநாயகனாக, அல்லாவாக, இயேசு கிறிஸ்துவாக, மகாவீரராக இன்னும் காணக் கிடைக்காத அத்தனை கடவுளராகவும் இந்த உலகின் மீதும், மனிதர்களின் மீதும் கருணை கொண்டு இரவும் பகலுமாய்ப் பணியாற்றும் மருத்துவர்களின் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.

உலகம் இன்று கோகுலாஷ்டமியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நானும் ஒரு "உமா"ஷ்டமியைக் கொண்டாடிக் கொண்டுதானிருக்கிறேன்.

நாம் கொண்டாட வேண்டிய மனிதக் கடவுளர்கள் நம்மைச் சுற்றிலும் நிறைய இருக்கிறார்கள். ஒவ்வொரு கடவுளரின் விழாக்களையும் குறிப்பிட்ட மனிதர்களை நினைவு கூறும் நாளாக மாற்றலாம் என்றிருக்கிறேன்.

IMG_0878

கடவுள் தான் நம்பிக்கையின் முழு முதற்பொருள், இருப்பின் உச்சம் என்று சொல்பவர்கள் உண்டு, கடவுளே படைப்பாளியும், பாதுகாவலரும் என்று சொல்பவர்கள் உண்டு, கடவுளே பேரண்டம், பேரண்டமே கடவுள் என்றும், பேரண்டத்தின் மூலப்பொருள், வேதங்களின் நாயகன், நமக்கு முன்னாள் வாழ்ந்த ஆற்றல் வாய்ந்த மனிதர்களே கடவுள் என்று சொல்பவர்கள் உண்டு.

அச்சத்தின் அடைக்கலமாக மனிதன் உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமே கடவுள், சரணடைதலுக்காகவும், தப்பித்தலுக்காகவும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு படிமமே கடவுள் என்றும், கடவுள் ஒரு கற்பனை, கடவுள் ஒரு பொய், புரட்டு என்று சொல்பவர்களும், பேரண்டத்தின் நிகழ்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உயர் ஆற்றல் ஏதுமில்லை என்று அறிவியலின் வழியைச் சொல்பவர்களும் உண்டு.

விவரம் அறிந்த நாளில் இருந்து தந்தை பெரியாரின் தத்துவங்களை, அவரது சிந்தனைகளை, மனிதனை மதிக்கும் அற்புதமான கருத்தியலை, கண்டிராத கடவுளை நோக்கி நாம் செலுத்தும் இந்த வழிபாட்டு ஆற்றலை, பொருளைத் துயரில் இருக்கிற மனிதனையும், அவனது வாழ்வியலையும் நோக்கி செலுத்தினால் இன்னும் அழகான ஒரு உலகை நம்மால் வாழும் காலத்திலேயே காண முடியும் என்று சொன்ன அவரது அளப்பரிய மனித குலத்தின் மீதான அன்பை வழியெங்கும் கண்டுணர்ந்து வளர்ந்தவன் நான். ஆகவே கடவுளைக் குறித்த பெரிய அளவிலான ஆர்வம் எனக்கு சிறு வயதில் இருந்து இருக்கவில்லை.

மனிதர்களையும், மனித வாழ்வின் துயரம் மிகுந்த இருப்புக்கான போராட்டங்களையும் வெறும் நம்பிக்கைகளாலும், வழிபாட்டினாலும் துடைத்து விட முடியும் என்று நான் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை. ஆனாலும் நமது வாழ்க்கை முறையோ கடவுளர்களோடு நெருங்கிய தொடர்புடையது, கடவுளை மறுதலிக்கும் வாழ்க்கை முறையை நீங்கள் வாழ வேண்டுமானால் பல்வேறு நம்பிக்கைகளை, அந்த நம்பிக்கையில் உழன்று தவிக்கும் மனிதர்களை அவமதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நெடுங்காலமாக எனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கித் தவித்த அம்மாவோடு வழிபாட்டுத் தளங்களில் கடவுளரின் கருவறைக்கு நெருக்கமாக அமைதியாக எந்தச் சலனனும் அற்று நின்றிருக்கிறேன். துணைவியாரின் நம்பிக்கைகளோடு பல முறை நெற்றியில் நீறு பூசிக் கொண்டிருக்கிறேன், எங்கோ காணாத வெளியில் மறைந்து அருள்பாலிக்கிற கடவுளரைக் காட்டிலும் எனக்கு அருகில் இருக்கும் மனிதர்களின் மனமும், நம்பிக்கையும் பெரிதாக இருந்தது என்பதே காரணமாக இருக்கக் கூடும்.

சிறு வயதில் துடுக்குத்தனமாக மனிதர்களின் நம்பிக்கையை, அவர்களின் வழிபாட்டு முறைகளைக் கேலியும், கிண்டலும் செய்தபடி சிரித்து மகிழ்ந்தவன் தான் நான். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே பெரியார் தான் நம்பிக்கையை சிதைப்பதும், கேலி செய்வதும் மனிதப் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார், மத நம்பிக்கைகளைப் பல முறை தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டிருக்கிறார், கடவுளருக்காக அல்ல, கண்ணுக்குப் புலப்படும் நெருக்கத்தில் நின்றிருக்கும் மனிதர்களுக்காக.

IMG_0884

காலம், பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் உழன்று, தனது இருப்புக்காக ஒருவனை உயர்ந்தவன் என்றும், ஒருவனைத் தாழ்ந்தவன் என்றும், அழுது சண்டையிட்டு, உருண்டு, புரண்டு ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிப் போகிறது, நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த புலையன் என்று சொல்லப்படுகிற ஒரு மனிதன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து செழித்து வளர்ந்த பருப்பை பூசை புனஸ்காரங்கள் செய்து பூணூல் அணிந்து சாப்பிடுகிற ஒரு பிராமணர், எதிரில் வருகிற அதே புலையனைப் பார்த்து "அபிஷ்டு" என்கிறார். வாழ்க்கை நமக்கு வழங்குகிற அதிகபட்ச நகைச்சுவை இது.

மனதளவில், மனிதர்களின் மத நம்பிக்கைகளை, அவர்களது வழிபாட்டு முறைகளை பிறகு எப்போதும் கேலியும் கிண்டலும் செய்தது கிடையாது, அதற்காக அவற்றை நான் அங்கீகரிக்கிறேன் என்று பொருள் கிடையாது, கிடைக்கிற நேரங்களில், வாய்ப்புகளில் எல்லாம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, நண்பர்களுக்கு என்று இயன்ற வரையில் கடவுள் என்கிற கோட்பாட்டின் நிலைத்தன்மை மீதான ஐயங்களை எழுப்பி இருக்கிறேன், தெளிவான, மூர்க்கமில்லாத விளக்கங்களோடு அவர்களிடம் கடவுள் என்கிற நம்பிக்கையின் மீதான விவாதங்களை உருவாக்கி இருக்கிறேன். நமது கல்வி முறையும், அதன் தாக்கமும் அறிவியலின் மீதான நம்பிக்கைகளை சமூகத்தில் உருவாக்க இன்னும் பல காலம் பிடிக்கும், அதற்கான மாற்றங்களை நோக்கி நமது அறிவுலகம் பயணம் செய்ய வேண்டிய தொலைவு நெடியது.

கடவுளின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்ட பேர் தங்கள் சக மனிதர்களை வெகு எளிதாக அவமதிப்பதையும், வெறுப்பதையும் கண்டிருக்கிறேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத பலரால் எண்ணற்ற பக்தர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.

IMG_0889

உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மதங்கள் நல்ல நோக்கங்களுக்காவே தோற்றுவிக்கப்பட்டது, மனிதர்களையும், அவர்களது மேம்பாட்டையும் கருதியே மதங்களும், நம்பிக்கைகளும் உண்டாக்கப்பட்டன, ஆனால், மனிதர்கள் தங்கள் வசதிக்கேற்ப அந்த நம்பிக்கைகளை மூலதனமாகவும், தங்களின் வசதியான இருப்புக்கான ஒரு தளமாகவும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். நாகரீகமும், பண்பாடும் தழைத்துச் செழிக்கிறது நாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நமது சமூகத்தில் மதம் வெறியாக மாற்றப்பட்டிருக்கிறது, சக மனிதன் மீது அன்பு செலுத்துகிற கோட்பாட்டைச் சொன்ன மதங்கள், அவன் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தி அவனது வழிபாட்டுத் தளங்களை இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

சக மனித நம்பிக்கைகளையும், சக மனித வழிபாட்டு முறைகளையும் மதிப்பதும், அவர்கள் மீது அன்பு செலுத்துவதுமே கடவுளரை அடைவதற்கான மிக எளிய வழி. அது ஒன்றைத் தவிர நாம் வேறு எல்லா வழிமுறைகளையும் பின்பற்றிக் கடவுளரை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம்.

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: