கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 30, 2013

"ஓநாயும், ஆட்டுக்குட்டியும்" – பார்வையாளனின் கொண்டாட்டம்.

Onaaiyum_Aatukuttiyum_teaser

நவீன மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது சக்கரம் என்று சொல்வார்கள், என்னைக் கேட்டால் நவீன மனிதனின் கண்டுபிடிப்புகளில் சக்கரத்துக்கு இணையான கண்டுபிடிப்பு திரைப்படம் என்று சொல்வேன். கதாபாத்திரங்களை உருவாக்கி அதற்கு ஒளியும், ஒலியும் ஊட்டி உயிர்cகொடுத்து மனித உணர்வுகளில் தாக்கம் விளைவிக்க வைக்கிற ஒரு அற்புதமான கலை திரைப்படக் கலை. கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு இருபது திரைப்படங்களைப் பார்த்திருப்பேன்.

திரைப்படக் கலையின் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதன் மதிப்பைக் குலைக்கிற எண்ணிக்கை அளவிலான  திரைப்படங்களை எப்படியாவது தவிர்க்க வைத்து விட்டிருக்கிறது. தவிர்க்க முடியாது அல்லது ஏமாற்றாது என்று நினைத்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் நம்மை ஏமாற்றி இருக்கிறது. பெருமளவில் பேசப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானின் நில அமைப்புகளையும், நியூயார்க் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளையும் தவிரக் காண்பதற்கு வேறொன்றுமே இல்லை. 

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பார்வையாளனுக்கும் திரைக்கும் இடைப்பட்ட தொடர்பு விகிதத்தில் அடைந்திருக்கிறது. திரைப்படத்தின் ஏதோ ஒரு பிரிவில் ஈர்க்கப்பட்டு அதன் நீட்சியாக அந்தத் திரைப்படத்தை மதிப்பீடு செய்யும் ஒரு அவலமான நிலையில் தான் நமது தமிழ் திரைப்படங்கள் இது நாள் வரையில் இருந்து வந்திருக்கிறது. கலைஞர்கள், அவர்களை உருவாக்கும் சமூகம் என்று இரண்டு பிரிவுமே வணிகம், நடிகர்களின் தோற்ற உருவாக்கம் என்று இருவேறு நிலைகளில் நிலை கொண்டிருக்க, அவ்வப்போது பெரும் போராட்டங்களுக்கு இடையில் தமிழ் திரைப்பட உலகை நகர்த்திக் கொண்டிருந்தார்கள் சில இயக்குனர்கள். நம்பிக்கை அளிக்கக் கூடிய அந்தப் பயணம் எளிய மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்த மகேந்திரன், பாரதிராஜா போன்ற சில மனிதர்களால் கொஞ்ச தொலைவுக்கு நகர்த்தப்பட்டது.

பின்னர் தொழில் நுட்பத்தின் உதவியால் பல்வேறு நுட்பங்களைக் கையாண்டு தமிழ் திரைப்படங்களுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் மணிரத்னம். ஆரண்ய  காண்டத்துக்குப் பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட பல திரைப்படங்களில் பாலாவின் பரதேசிக்கு நிகராக  வேறெந்தப் படமும் காட்சிப்படுத்தலில் கவனம் கொண்டிருக்கவில்லை, சிறந்த திரைப்படம் என்பதற்கு நம்முடைய நிறைய இயக்குனர்கள் ஒரு இலக்கணம் வைத்திருந்தார்கள். இயன்ற அளவிற்குத் தங்கள் பார்வையாளனை உணர்வு மயப்படுத்தி அவனை அழ வைப்பது அல்லது சிரிக்க வைப்பது என்கிற அவர்களின் புரிதல் பல நேரங்களில் நம்மை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு ஒரு திரைப்படம் இத்தகைய வழக்கமான உணர்வு மயப்படுத்தலில் இருந்து விலகி காட்சிகளைத் துரத்தி ஓடி இன்புறும் ஒரு பார்வையாளன் மனநிலையை களிப்படைய வைத்தது என்பதில் தான் ஓநாயும், ஆட்டுக்குட்டியும் என்கிற மிஷ்கினின் திரைப்படம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

திரையில் வெளிச்சம் விழுகிற அந்த முதல் காட்சியிலேயே படம் துவங்கி விடுகிறது என்பது தான்(ஏனைய முன்னணி இயக்குனர்கள்) கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். எளிமையான, எந்தச் சிக்கலும் இல்லாத  கதை.கதை மிக எளிமையானது, வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மனிதர்கள் துரத்தப்படுகிறார்கள், குறிப்பாக "வுல்ப்" என்கிற மனிதனை ஏறத்தாழ அனைவருமே துரத்துகிறார்கள், பார்வையாளன் உட்பட, குறிப்பாகப் பார்வையாளனே "வுல்ப்" என்கிற மனிதனை அதிகம் துரத்துகிறார்கள். அவனை நாம் ஏன் துரத்த வேண்டும் என்பதற்கான சரியான காரணங்களைக் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் வைத்திருந்ததில் தான் ஒரு இயக்குனராக மிஷ்கின் வெற்றி பெறுகிறார்.

tamil_director_mysskin_images_stills_photos_01

இதுவரை நான் பார்த்த திரைப்படங்களில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரையில் மனத் தொய்வு உருவாகாமல் பின்னப்பட்ட ஒரு திரைக்கதை "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" என்று தயங்காமல் என்னால் சொல்ல முடியும். அது மட்டுமன்றி இத்தனை வருடங்களில் ஒரு தமிழ்த் திரைப்படம் இன்னும் கொஞ்ச நேரம் திரையில் ஓடாதா என்று ஏங்க வைத்திருக்கிறது. விமர்சனங்களுக்கும், அறிவு ஜீவி மன நிலைக்கும் அப்பால் எனக்குள் கிடந்த ஒரு எளிமையான ஊரகப் பார்வையாளனை உயிர்ப்பித்த படம் என்று இந்தப் படத்தை நான் சொல்வேன். மிஷ்கினால் உருவாக்கப்பட்ட ஒரு புனைவுலகுக்குள் மூன்று மணி நேரம் திளைக்கத் திளைக்க உலவித் திரிந்த நிறைவை உண்டாக்கியது இந்தத் திரைப்படம்.

ஏனைய  திரைப்படங்களின் கதை குறித்தோ, அது சொல்ல முனைகிற அரசியல் குறித்தோ நாம் இந்தத் திரைப்படத்தில் பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை, இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் சரிவிகித அளவில் எல்லாத் தரப்பு அரசியலையும் பேசி விடுகிறார்கள். பெருங்கவலைகளும், எளிதில் வசப்படாத அலைபாயும் மனம் கொண்டவனுமாகிய மனிதனை  மூன்று மணி நேரத்துக்கு எந்தக் கவலைகளும் இல்லாத தன்னுடைய அக மனதில் உருவான ஒரு கதைக் களத்துக்குள் கொண்டு போய் உலவ விடுவது ஒன்றும் அத்தனை எளிதான வேலையல்ல இன்றைய இயக்குனர்களுக்கு, ஆனால், அந்த வேலையை வெகு காலத்துக்குப் பிறகு வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்கிறார் மிஷ்கின்.      

ஆனால், இந்தத் திரைப்படத்தில் நான்கு மிக முக்கியமான பகுதிகளை நாம் பேசியாக வேண்டும்.

1) திரைக்கதையின் நேர்த்தி (Perfection of Screen Play)

2) கதை சொல்கிற விதம் (Style of Presentation)

3) ஒருங்கிணைந்த தொழில் நுட்பம் (Clarity of Technical Co Ordination)

4) பின்னணி இசைக்கோர்ப்பு (Backround Score)

1) திரைக்கதையின் நேர்த்தி (Perfection of Screen Play) :-

தான் செய்கிற வேலையை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒரு மனிதனால் மட்டுமே இப்படிப்பட்ட நேர்த்தியை உருவாக்க முடியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி மூச்சு விட வேண்டும் என்று அனேகமாக ஒரு நிமிடத் திரைக்காட்சிக்கு இரண்டு பக்கங்களில் திரைக்கதை எழுதி இருப்பார் போலத் தெரிகிறது மிஷ்கின். நிகழ்கால உண்மைகளில் இருந்து பிறழ்ந்து நடைமுறை எல்லைகளுக்கு அப்பால் பயணிக்கும் பிழைகளைக் கூட திரைக்கதையின் நேர்த்தி அடித்து நொறுக்கி விடுகிறது.

கல்வி  அறிவும்,தொழில் நுட்ப அறிவும் இல்லாத ஒரு பாமர மனிதனுக்கும் புரியக்கூடிய எளிமையான கதைக்களம், மேட்டிமைத் தனம் இல்லாத இயல்பான கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களின் வகையான கூறுகள், கதைப்போக்கில் வலிந்து ஏற்றப்படாத திருப்பங்கள் அல்லது சுமைகள், கதைக்கு உரமேற்றும் ஒளிப்பதிவு மற்றும் கதைக்களத் தேர்வு. கண்களை உறுத்தாத ஆடை வடிவமைப்பு என்று அனைத்துத் துறை சார்ந்த குறிப்புகளையும் திரைக்கதை வடிவமைப்பில் மிஷ்கின் உருவாக்கி இருக்கிறார் என்பது அப்பட்டமாக நமக்குத் தெரிகிறது. அவரது ஈடுபாடும், உழைப்பும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் இந்தப் படத்தை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாற்றி இருக்கிறது.

2) கதை சொல்கிற விதம் (Style of Presentation) :-

தொழில் நுட்ப ரீதியாகப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தி நவீன திரைப்படங்களில் கதை சொல்லும் விதம் குறித்து விவாதிப்பார்கள், அவற்றை எல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தில் ஒரு தனியான கதை சொல்லும் பாணி இருக்கிறது, அந்தப் பாணி வேறொன்றுமில்லை, எல்லாத் தரப்பு மனிதர்களுக்கும் புரியக்கூடிய ஒரு எளிமையான பிணைப்பு. பார்வையாளனும், கதாபாத்திரங்களும் எவ்விடத்திலும் முரண்படவில்லை, இந்தத் திரைப்படத்தில் வருகிற தம்பா என்கிற வில்லனைக் கூடப் பார்வையாளர்கள் வெறுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை, ஏனெனில் கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமாக நம்மை அழைத்துச் சென்று அமர வைக்கும் ஒரு கதை சொல்லியாக மிஷ்கின் இருக்கிறார்.

தொழில் நுட்பக் கலைச் சொற்களைக் கடந்து மிச்சமிருக்கும் ஒரே ஒரு விஷயம் நமக்கும், கதைக்கும் இடையிலான பிணைப்பு ஒன்று தான். புனைவுலகக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவற்றோடு நம்மைப் பிணைத்து மூன்று மணி நேரம் அமர வைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது, பார்வையாளர்கள்  தன்னிலை உணர்ந்து கதைப் போக்கில் இருந்து விடுபட நினைக்கிற  நுட்பமான அந்தக் கால வெளியில் ஒரு சுவாரசியமான தூண்டிலில் கண்களுக்கு இரை போட்டுக் காட்சிக் கடலுக்குள் மீண்டும் அவர்களை இழுத்து விட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு புதிய பாணியை தமிழில் ஒன்றிரண்டு முயற்சிகளுக்குப்  பிறகு முழுமை அடைய வைத்திருக்கிறார் இயக்குனர்.

3) ஒருங்கிணைந்த தொழில் நுட்பம் (Clarity of Technical Co Ordination) :-

திரைப்படத்தின் எல்லாப் தொழில் நுட்பங்களையும் திரட்டி ஒரே நேர்கோட்டில் இணைய வைப்பது ஒரு இயக்குனரின் தொழில் திறன் நேர்த்தியில் அடங்கி இருக்கிறது, நீண்ட நெடுங்காலமாக திரைப்படக் கலையை சுவாசித்துக் கிடந்த ஒரு மனிதனுக்கு இது உறுதியாக சாத்தியமானதுதான். கதை நிகழும் இயற்கையான புவியியல் தளங்கள், உருவாக்கப்பட்ட தளங்கள், கதை மாந்தர்களின் உடல் மொழி, விபத்துகள் நேர்கிற போது நிகழ்கிற இயல்பான காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவு, தேர்வு செய்யப்பட்ட வெகு இயல்பான வசனங்கள், காட்சிகளை இணைத்து நகர்த்தும் படக்கோர்ப்பு என்று எல்லாப் பகுதிகளிலும் காணக் கிடைக்கிற ஒருங்கிணைவு இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.

raja5

4) பின்னணி இசைக்கோர்ப்பு (Backround Score) :-

மடிக்கணினியில் இந்தச் சொற்களை தட்டச்சு செய்கிற  இந்தக் கணத்தில் பின்னணியில் இளையராஜாவின் "நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி" என்கிற "ஹே ராம்" திரைப்படப் பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏகாந்தமான இரவின் விழுதுகளை அந்த இசை மெல்ல நிரப்புகிறது. இளையராஜாவின் ஈடுபாடு மிகுந்த திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகில் சாகாவரம் பெற்றவை, முள்ளும், மலரும் படங்களில் துவங்கி நாயகனில் எழுச்சி பெற்று மௌன ராகம், இதயம், பிதாமகன் என்று அவர் ஈடுபாட்டோடு உழைத்த படங்களில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் தலைசிறந்த திரைப்படங்களை அவர் அடையாளம் கொண்டு ஒன்றிப் போய் விடுவார். இந்தப் படத்துக்கும் அப்படித்தான் பின்னணி இசை கோர்த்திருக்கிறார்.

திகட்டாத இசை இன்பத்தைப் படம் முழுவதும் வழிய விடுகிறார் இளையராஜா. கதாபாத்திரங்கள் பேச முடியாத நேரத்தில் இசை பேசுகிறது, கதாபாத்திரங்கள் பேச வேண்டிய நேரத்தில் இசை அமைதி கொள்கிறது. தமிழ் என்கிற மொழியைக் காலம் காலமாகப் பேசுகிற இந்தப் பழங்குடியின் இசை விழுமியங்களின் தொன்ம அடையாளம் இளையராஜா. அவரது இசை நமது பண்பாட்டுக் கூறுகளின் முதிர்ச்சி, அவரது இசை நமது அடையாளம். பெரும்பாலான நேரங்களில் மேற்கத்திய இசையின் உச்சங்களை படத்துக்குள் வெகு இயல்பாக உள்ளீடு செய்கிறார். மற்றபடி இளையராஜாவின் இசை மிஷ்கினின் திரைக்கதையைப் போலவே அனுபவித்து மகிழ வேண்டிய உன்னதம்.

சரி, புகழாரங்களின் நடுவில் குறைபாடுகளை விட்டு விடுவது எந்த விமர்சனத்துக்கும் அழகல்ல என்பதால் கவனம் கொள்ளப்பட வேண்டிய சில குறைபாடுகளை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

பெரும் காயங்களில் இருந்தும், ஆபத்துக்களில் இருந்தும் எப்படியும் மீண்டு வருகிற தமிழ்க் கதாநாயகர்களின் நிழல் "வுல்ப்" மீது நிறையவே படிந்திருக்கிறது, வெகு இயல்பாகச் சொல்லப்பட்ட ஒரு தமிழ் மரபுக் கதைக் களத்தில் செருகப்பட்ட சீன தேசச் சண்டைக் காட்சியின் தழுவல் கதையின் ஓட்டத்தை ஓரிரண்டு நிமிடங்களாவது தொய்வடைய வைக்கிறது. "லாஜிக் எர்ரர்ஸ்" என்று சொல்லப்படக் கூடிய நிறைய சின்னச் சின்னப் பிழைகளை ஒரு தீவிர திரைப்பட ரசிகனால் கூடக் கண்டு பிடிக்க முடியும் இந்தப் படத்தில். ஆனாலும், அவை ஒரு செழுமையான இலக்கியக் கட்டுரையில் காணக் கிடைக்கும் தட்டச்சுப் பிழைகளைப் போலத்தான். நாமாகவே அவற்றை நீக்கி விட்டுப் படிக்க முடியும்.

onayum-attukuttiyum1

கடைசியாக இந்தத் திரைப்படத்தின் உயிரைப்  போன்ற அந்தக் காட்சியை நாம் சொல்லியே தீர வேண்டும், வுல்ப் என்கிற கதாபாத்திரமாக மாறி இழையோடும் சோகத்தைப் பிழிந்து ஒரு குழந்தைக்கு அவர் சொல்லும் அந்தக் கதையில் மிஷ்கின் நம்மை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிற ஒரு தேர்ந்த நடிகனாக மிளிர்கிறார். கரடியும்,ஓநாயும், ஆட்டுக் குட்டிக்களுமாக நமது மனக்காட்டில் ஒரு புனைவுலக அற்புதத்தை நிகழ்த்தும் அந்தக் கணம் இந்தத் திரைப்படத்தின் பானை சோற்றுக்கான பருக்கைப் பதம்.

ஒரு விமர்சகனாக, எனது சமூகத்தின் எழுத்தாளனாக நின்று திரைப்படங்களை விமர்சனப் பார்வை கொள்கிற எனது கண்களை வெகு நாட்களுக்குப் பிறகு "ஓநாயும், ஆட்டுக்குட்டியும்” என்கிற முழு நீளத் திரைப்படத்தைக் காண வைத்ததற்காக நான் மிஷ்கினுக்கு நன்றி உடையவனாகிறேன்.

**************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: