கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 4, 2013

ஈழமும், மான் கராத்தேயும்

537868_10202029019344525_814407104_n

தமிழீழ மக்களின் தாய்நாடு குறித்த கனவுகளும், போராட்டங்களும் தமிழக எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது, இப்போது என்றில்லை, எப்போதுமே தமிழக அரசியல் இயக்கங்கள் தமிழீழம் என்கிற அந்த மக்களின் தாயகக் கனவை நேர்மையோடு அணுகி இருக்கவில்லை, ஒருங்கிணைந்த, கட்சிகளைத் தாண்டிய நிலைப்பாடுகளையும், அழுத்தங்களையும் தாய்த் தமிழகம் ஒரு போதும் இந்திய அரசுக்கோ, பன்னாட்டு சமூகத்துக்கோ வழங்கத் தவறியது கண்கூடு.

இப்போது ஒரு புதிய திறப்பாக மாகாண அவைத் தேர்தல் என்கிற வலிமையான கருத்தாயுதத்தின் மூலம் ஈழ மக்கள் தமது வேட்கையை, ஆழ்மனக் கிடக்கையை, பெரும்பான்மை சிங்கள இன ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்கள் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆயுதப் போராட்டங்களால் வெற்றி பெற இயலாத ஒரு சூழலில் இந்த அற வழியிலான எதிர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது, மக்களை முன்னிலைப்படுத்தி இந்த அமைப்பு வழியிலான திறப்பின் வழியாக அவர்கள் தங்கள் இழந்த உரிமைகளை திரும்ப மீட்டுக் கொள்வதும், பன்னாட்டு சமூகங்களின் தொடர்பு வழியாக எழுச்சி பெறுவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தமிழீழ மக்களுக்கு உண்மையிலேயே ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால் வாக்கு வங்கி அரசியலையும், கட்சி வேறுபாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்கும் அறிவார்ந்த செயல்திட்டங்களை நோக்கியே நகர்ந்தாக வேண்டும், நமது இரு பெரும் அரசியல் இயக்கங்களான திராவிட இயக்கங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தியல் வழியாக ஓரணியில் நிற்க வைத்து வெளியுறவுத் துறை போன்ற மிக முக்கியமான துறைகளில் ஆளுமை செலுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.

c_vigneswaran

தமிழ்த் தேசியம் பேசுகிற எந்த இயக்கமும் வெகு மக்கள் இயக்கமாக வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே காணக் கிடைக்கிறது. தனி மனிதர்களை முன்னிறுத்துகிற, வேறு சில அறுவடைகளைச் செய்து கொள்கிற, அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் முதிர்ச்சி அற்ற தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ளும் எந்தத் தீவிர செயல் திட்டங்களும் இல்லாத தமிழ்த் தேசிய இயக்கங்களால் நன்மைகளுக்கு மாறாகக் குழப்பங்களே அதிகரிக்கிறது.

அவர்கள் சொல்கிற தமிழ்த் தேசியமே அமைக்கப்பட வேண்டுமென்றால் கூட இன்றைய அரசியல் சூழலில் இந்தியா என்கிற கட்டமைப்பின் பிடியில் இருந்து நாடாளுமன்ற அரசியல் வழியாகவே நாம் தப்பிக்க வேண்டியிருக்கும். அத்தகைய செயல் திட்டங்களை உருவாக்கி வழி நடத்துகிற அரசியல் இயக்கங்களோ, தலைமையோ நம்மிடம் உறுதியாக இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக உண்ணாவிரதம் இருப்பது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, ஒலிபெருக்கிகளின் முன்னாள் மான் கராத்தே ஆடிக் காண்பிப்பது போன்ற வழக்கமான நமது போராட்ட முறைகளால் பெரிய அளவில் மாற்றங்கள் ஒன்றும் நிகழப் போவதில்லை, மாணவர் போராட்டம் போன்ற பெரிய அளவில் தாக்கம் விளைவிக்கிற தன்னெழுச்சியான போராட்ட வழிமுறைகளோ, கட்சி வேறுபாடுகளை மறந்து நமது அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைக்கிற அழுத்தமான அரசியல் நிலைப்பாடுகளோ ஓரளவு பயன் விளைவிக்கக் கூடும்.

பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கலந்து கொள்ள விடாது தடுப்பதற்கான ஒரே வழி, நமது மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பிரதமரைச் சந்தித்து அந்த கோரிக்கையை விடுப்பதும், இல்லையென்றால் நாங்கள் பதவி விலகும் சூழல் உருவாகும் என்று அரசியல் வழியிலான மிகப்பெரிய அழுத்தம் கொடுப்பதும் மட்டுமே ஆகும். அப்படி ஒரு சூழல் வந்தால் ஒழிய இந்திய அரசு எக்காரணம் கொண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் சூழல் அறவே இல்லை.

tamil-sri-lanka-1_2679307b

தோழர் தியாகு போன்றவர்கள் இப்போது ஈடுபட்டிருக்கும் உண்ணாநிலைப் போராட்டம் காரணமாகப் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்து விடப் போவதில்லை.

தமிழகத்தின் நிலப் பகுதியிலேயே பெருமளவில் ஒற்றுமை இன்றி சிதறிக் கிடக்கும் நமது மக்களையே நோக்கிச் செல்ல வேண்டிய எண்ணற்ற பணிகள் நம்மிடம் கைவசம் இருக்கிறது. அந்தப் பணிகளை தோழர் தியாகு போன்றவர்கள் இன்னும் தீவிரமாகச் செய்யலாம், சீமான் போன்ற மான் கராத்தே வீரர்கள் இன்னும் கொஞ்ச காலம் தமிழக அரசியல், சமூக வரலாற்றைத் தீவிரமாகப் படிக்கலாம்.

வை.கோ, தமிழருவி மணியன் போன்ற மாற்று அரசியல் பேசும் மூத்தோர்கள் கூட நரேந்திர மோடி போன்ற மனித வேட்டையாடுகிற அரசியல்வாதிகளை குறித்து இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்டு நிதானமாக தமிழக அரசியல் களத்துக்குள் வரலாம். அண்ணன் திருமாவளவன் கூட உள்நாட்டிலேயே விடுதலை தேவைப்படுகிற நமது எத்தனையோ கிராமங்களின் முகவரியை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து அங்கு சென்று ஒரு அடையாள உண்ணாவிரதமாவது மேற்கொள்ளலாம்.

964488_649547695062075_1097043545_o-600x399

கடைசி கட்டப் போர் நிகழ்ந்த காலத்தில் தமிழகமெங்கும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஈழ ஆதரவு அடையாளப் போராட்டங்களுக்கும், இன்றைய தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்கும் அடிப்படையில் நிறையே வேறுபாடு இருக்கிறது. இலங்கையின் தமிழ் மக்கள் இன்னும் எத்தனை யுகங்கள் கழிந்தாலும் தங்கள் போராட்ட குணத்தை மாற்றிக் கொள்கிற சோரம் போனவர்களாக இல்லை என்பதே வரலாறு. அவர்கள் முன்னின்று நிகழ்த்தப் போகிற அற வழியிலான அரசியல் போராட்டமும், அதற்கு முட்டுக் கொடுக்கிற புலம் பெயர்ந்த தமிழர்களின் அறிவார்ந்த சமூக மற்றும் பொருள் வழிப் போராட்டங்களுமே இனி அவர்களின் தாயகக் கனவை உயிர்ப்பிக்கப் போகிற ஆயுதம்.

நாம் குட்டையைக் குழப்பாமல் அமைதியாக இருப்பது ஒன்றே இப்போதைக்கு அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மை போலத் தெரிகிறது.

 

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: