கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 9, 2013

பிருந்தாவனப் பெண்கள்.

TH06_VRINDAVAN_WID_1609427f

நண்பன் ஹரிகிருஷ்ணா வீட்டுக் குட்டிப் பிள்ளைக்குப் பிறந்த நாள், கண்டிப்பாக நீ வர வேண்டும் என்று சொல்லி இருந்தான், நானும் ஒரு மணி நேரம் முன்னதாகவே போயிருந்தேன், ஹரி கிருஷ்ணாவின் அம்மா ரொம்பவே அற்புதமான மனிதர், அவருடைய அன்பு கட்டற்றது, அமைதி தவழும் அவரது முகத்தில் ஒரு மின்னல் கீற்றைப் போல எப்போதும் புன்னகை இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் கூடத் துவங்கினார்கள். சிரிப்பும், கொண்டாட்டமும் களை கட்டத் துவங்கி இருந்தது வீட்டுக்குள். குட்டிப் பிள்ளைகளுக்குத் பிறந்த நாள் தொப்பி அணிவிக்கப்பட்டது. அவர்களின் பிஞ்சுக் காலடிகளின் தடதடப்பில் வீடு முற்றிலும் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருக்க, அந்த நாள் அருள் பெற்றிருந்தது.

அனுஷா கேக் வெட்டி அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஊட்டினாள். நீண்ட நேரமாக அம்மாவைப் பார்க்க முடியவில்லை, கொஞ்ச நேரத்தில் மெல்ல ஹரியிடம் சென்று நான் கேட்டேன்.

"ஹரி, அம்மா எங்கடா?"

"இங்கதான் இருப்பாங்கடா"

"இல்ல, ரொம்ப நேரமா நான் பாக்கலையே"

"மாடி ரூம்ல இருப்பாங்க போய்ப் பாரு"

படிகளில் வேக வேகமாய் ஏறிப் போனேன், அறைக் கதவு பாதி திறந்தபடி தான் இருந்தது, அம்மா கட்டிலில் அமர்ந்திருந்தார்கள், கண்கள் சிவந்து அவர்கள் அழுதிருந்தற்கான அடையாளங்கள் இருந்தது.

"அம்மா, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?"

"ஒன்னும் இல்லடா அறிவு, லேசா தல வலிக்கிறது”

"இல்லம்மா, பாப்பாவுக்கு வாழ்த்துச் சொல்லக் கூட நீங்க கீழ வரல!!!"

அவ்வளவுதான் அம்மாவின் பொறுமை, உடைந்து அழத் துவங்கினார்கள். சேலைத் தலைப்பை வாயில் பொத்தியபடி குலுங்கிக் குலுங்கி அவர்கள் அழுத போது இதயம் நொறுங்கிப் போனது.

"நல்ல நாளும், பெரிய நாளுமா, பூவும், பொட்டுமா நாலு பேரு வரும் போது உலாத்தாம ஒரு இடத்துல போயி இருக்கீங்களா" என்று மருமகப் பெண் காலையில் சொல்லி இருக்கிறாள்.

L I N E. Vrindavan

சின்ன வயதிலேயே தகப்பனை இழந்த ஹரியையும், ரேவதியையும் அம்மா வளர்த்தெடுக்கப் படாத பாடுபட்டவர்கள், புகுந்த வீட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்கள், சமூகத்தின் கழுகுப் பார்வையில் இருந்தெல்லாம் தப்பி ஹரியை முதுநிலைப் பட்டதாரி ஆக்கினார்கள் அம்மா, வீட்டு நிலங்களை விற்று, தனது இளமையின் மலர்ச்சியைக் குழந்தைகளுக்காக அடகு வைத்து அவர்களை சமூகத்தின் மதிப்பான உறுப்பினர்களாக்கி இருந்தார்கள்.

அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன், ஹரி சிக்கலை அதிகமாக்க வேண்டாம் என்று அமைதியாக இருப்பது அவனது கண்களில் தெரிந்தது. மனிதர்கள் விடை பெறத் துவங்கி இருந்தார்கள், அனுஷா கேக் துண்டுகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடினாள், பாட்டியின் வாயில் ஊட்டி விட்டு அவர்களுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.  மனைவி கண்களால் நாங்கள் விடை பெறுவதற்கான நேரம் கேட்டார்கள். நான் மறுமொழி ஏதும் குறிப்பிடவில்லை. நிறைமொழியும், அனுஷாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மா இப்போது கீழே இறங்கி இருந்தார்கள்.

இரண்டு, மூன்று நெருங்கிய குடும்பங்கள் எஞ்சி இருந்தார்கள், நான், துணைவியாரையும், நிறைமொழியையும் பக்கத்தில் அழைத்தேன், பிறகு அம்மா காலில் விழுந்து ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன், மூவரும் அம்மாவின் காலடியில் விழுந்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம்.

"ஹரி, அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கி இதுவரைக்கும் எனக்கு எங்கேயும் தோல்வியே இல்லடா, எப்போதும் நிறைவான கோவில் அவர்களின் காலடிதான்"

Screen-Shot-2013-05-03-at-8_34_42-PM

ஹரி என் பக்கத்தில் வந்தான், கைகளால் என்னை அணைத்தபடி ஒரு கேக் துண்டை எடுத்து ஊட்டினான். ஹரியின் கண்களில் நீர் கட்டிக் கொண்டதை ஒரு நண்பனாய் என்னால் உணர முடியும், அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். நிறைவாகவும், உணர்ச்சி மயமாகவும் இருந்தார்கள். என்னால் யாருக்கும் அங்கே அறிவுரை சொல்ல முடியாது, என்னால் இயன்றது அம்மாவின் கனத்த இதயத்தை லேசாக்க முடிந்தது மட்டும்தான்.

இவ்வுலகின் அப்பாவின் மரணம் உட்பட எந்த மரணமும், அம்மாவை விதவை ஆக்கி விட முடியாது, அம்மா எப்போதும் அம்மாதான்.

      *************************************************************

                                                                                                                              

ஓரிரு நாட்களுக்கு முன்பாக நாளிதழ்களில் ஒரு அதிர்ச்சியான செய்திப் படங்களைப் பார்த்தேன், பிருந்தாவன் மற்றும் மதுராவிலிருந்து ஐம்பது பெண்களை வானூர்தியில் கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்வது, பிறகு அவர்கள் படகுச் சவாரி செய்வது என்று ஏதோ விசித்திரமான உடல் அல்லது மன நலிவுற்ற மனிதர்களையோ விலங்குகளையோ சுற்றுலா அழைத்துச் செல்வது போல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

செய்தியின் முக்கியத்துவத்துக்குக் காரணம் அவர்கள் விதவைகளாம். அதாவது கணவனை இழந்து விதவைக் கோலம் பூண்டவர்கள். கணவனை இழந்ததன் காரணமாக குடும்பங்களால் கைவிடப்பட்டவர்கள் அல்லது துரத்தி அடிக்கப்பட்டவர்கள். இந்த ஊடகச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வெகு நுட்பமான, மிக மோசமான உளவியல் யுக்தி இருப்பதை நாம் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. விதவை என்கிற சொல்லே பெண்களை அவமானம் செய்யும் அவர்கள் மீது உடலியல் வழியிலான அடக்குமுறையை ஏவும் ஒரு சொல். நமது சமூகத்தின் விதைவைகள் மட்டுமே உண்டு, விதவன்கள் கிடையாது.

அரசுகள் ஆகட்டும், சமூக இயக்கங்கள் ஆகட்டும், பெண்களை விதவைகள் என்கிற பெயரில் அடையாளம் ,செய்வதும், அவர்களை விழாக்களுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி இழிவு செய்வதும் சமூகக் குற்றம், அப்படிச் செய்வது மறைமுகமாக ஒன்றைத் தான் சொல்கிறது, விதவைகள் புனிதமானவர்கள், கணவனை இழந்த பிறகு அவர்கள் மேற்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான அடக்குமுறைகள் மதத்தின் பெயரால் புனிதம் செய்யப்படுகிறது என்பதுதான் அது.
image001

கணவனின் உயிரிழப்புக்குப் பின்னால் பெண்ணுக்கான இயல்பான வாழ்க்கை மறுக்கப்படுவது ஒரு பண்பாட்டு வகைக் குற்றம், காலம் காலமாய் ஹரிகிருஷ்ணாவின் மனைவி துவங்கி, பிருந்தாவன் சமூக இயக்கங்கள் வரை நாம் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.

*********************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: