கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 11, 2013

ஒரு பஞ்சுப் பொதியின் கதை………….

images

பெங்களூர் நகரத்துக்குப் புதிதாகக் குடியேறிய காலம், அலுவலகத்துக்கு ஒரு நிறுவன முகவர் வந்திருந்தார், மாலையில் ஒரு கூட்டு விருந்து இருப்பதாகவும், கலந்து கொள்ளுங்கள் என்று என்னையும் அழைத்தார் சக பணியாளர் ஒருவர், நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன்.அப்போது பெங்களூரில் இரவு விடுதிகள் அனுமதி பெற்று "பப்" என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தன. அப்படி ஒரு இரவு விடுதியில் தான் கூட்டு விருந்து. உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்டார்கள், புகையும், இருளும் சூழ்ந்து கோப்பைகளில் மதுவும், முகங்களில் காமமும் வழிய மனிதர்கள்.

முற்றிலும் புதிதான சூழல், இரைச்சலான இசை துவங்கியவுடன் வண்ண வண்ண ஆடைகளில் பெண்கள் அறையெங்கும் நடனமாடத் துவங்கினார்கள், மதுக் கோப்பையுடன் அமர்ந்திருந்த ஆண்கள் தங்களுக்குப் பிடித்த பெண்களை அருகில் அழைத்துப் பணம் கொடுத்தார்கள், தவறான இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பதை மட்டும் இதயத் துடிப்பு அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டே இருந்தது.

தப்பிக்க இயலாத நிலையில் மேசையில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை ருசிப்பது ஒன்றே விரும்பிய வாய்ப்பாய் இருந்தது. மது மனிதர்களை அவர்களின் இயல்பில் இருந்து மாற்றிக் கொண்டிருந்தது. பெண்களை ஒரு உணவுப் பொருளைப் போலத்தான் அங்கிருந்த ஆண்கள் கையாண்டு கொண்டிருந்தார்கள். கண்களால் வெறித்துப் பார்த்தார்கள், கைகளால் வயிற்றுப் பகுதியில் பணத்தைச் செருகி விட்டு சிரித்தார்கள்.

அதிர்வுகள் நீங்காமல் மெல்ல சுற்றிலும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்களை கவனிக்கத் துவங்கினேன், அவர்களில் முதிர்வான வயதில் இருந்த பெண்கள், இளம்பெண்கள், ஒரு குழந்தைக்கும் பெண்ணுக்குமான இடைப்பட்ட வயதில் இருந்த பெண்கள் என்று எல்லா வயதுப் பெண்களும் இருந்தார்கள். பல பெண்களின் கண்களில் ஒருவிதமான அச்சமும், வெட்கமும் நிரம்பி இருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

கூட்டம், ஆர்ப்பரிக்கத் துவங்கி இருந்தது. இசை பெருத்த ஓசையாய் அச்சமூட்ட, மனித மொழிகள் வற்றிப் போய் கற்கால உடல் மொழிகள் அறையை நிரப்பிக் கொண்டிருந்தன. என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியாது என்று உறுதியான ஒரு கணத்தில் அலுவலக நண்பர்களிடம் இருந்து விடை பெற்றேன், சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது, கழிவறைப் பகுதியை நோக்கி நகரத் துவங்கினேன், இரைச்சலான இசை மெல்ல என்னிடமிருந்து பின்னோக்கியது. கழிவறையிலிருந்து திரும்பி பக்கவாட்டு நடையில் நகர்ந்த போது மரக்கதவின் மறைவில் நிழலாடியது.

imagesCAMW6RDD

அரவமற்ற அப்பகுதி ஒரு இனம் புரியாத அச்சத்தை உண்டாக்கியபோது ஒரு பெண் மரக்கதவின் பின்னால் மறைவதும், வெளியேறி எட்டிப் பார்ப்பதுமாய் இருப்பது கண்ணில் உரைத்தது. கொஞ்சம் வேகமாய் நடக்கத் துவங்கினேன்,நடைப்பகுதியில் இருந்து திரும்பி நுழைவாயிலுக்கு வந்தால் காவலர் இருப்பார், அவரிடம் நமது நுழைவுச் சீட்டைக் கொடுத்த பின்பு வெளியேறலாம், அநேகமாக நடையின் முடிவுக்கு வந்திருப்பேன், மிக மெல்லிய குரலொன்று உடைந்த ஹிந்தியில் நெருக்கமாய்க் கேட்டது,

"பையா……(அண்ணா) ".

பதட்டமாய்த் திரும்பி, என்னவென்று சைகையில் கேட்டேன்,

"முஜே ஏக் ஹெல்ப் கர்ணா"
(எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்).

"க்யா கர்ணா" (என்ன செய்ய வேண்டும்).

என்று கேட்டபடி நிமிர்ந்து ஒரு முறை அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன், ஓய்வான நேரங்களில் வீட்டு முகப்பில் நிற்கும் போது மிதிவண்டியைத் தள்ளியபடி கடந்து போகிற ஒரு பள்ளிப் பெண்ணை நினைவு படுத்துகிற முகம், நிலவைப் போல வெளிச்சம் தெரிகிற பெண் குழந்தை, கண்களில் அன்புக்கு ஏங்கும் நடுக்கம், வறுமையில் துவண்டு மண்ணைக் கடந்து கண்காணாத இடத்தில் ஏதோ ஒரு அண்ணனிடம் உதவி கேட்டு நிற்கும் கொடுமையான நிலை. அவசரமாய் என் கையில் ஒரு காகிதத்தையும், இருபது ரூபாய்ப் பணத்தையும் கொடுத்து,

"முஜே பாரு ஜானேக்கா நஹி ஹோத்தா ஹே, ஜெரா ப்ளீஸ் யே லேக்கி தீஜியே பையா"

(என்னால் இங்கிருந்து வெளியேறிச் செல்ல முடியாது அண்ணா, எனக்காக இதை வாங்கித் வந்து தருவீர்களா அண்ணா?.

வாங்கிப் படித்தேன், எனது இதயம் சிறிது நேரம் இயக்கத்தை நிறுத்திப் பின் முன்னிலும் வேகமாய் இயங்கத் துவங்கியது, அந்த இருபது ரூபாயை அந்தப் பெண்ணிடமே திரும்பக் கொடுத்து விட்டு

"பாஞ்ச் மினிட் மே ஆத்தாஹும், ஆப், இதரி ருக்கோ"

"இங்கேயே இரு, ஐந்து நிமிடத்தில் வருகிறேன்."

என்று சொல்லி விட்டு வாயிலுக்கு வந்தேன், வாயிற் காவலரிடம் நான் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்கிறேன் திரும்பவும் வருவேன் என்று சொல்லிவிட்டு சாலையில் இறங்கி நடந்தேன். குளிரும், ஈரப்பதமுமாய் காற்று முகத்தில் அறைந்தது. கடைகளைத் தேடினேன், வழக்கமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது, சாலையின் இருபக்கமும் கடைசி வரை கடைகள் இல்லை, ஒரு பான் கடையில்

"பக்கத்துல "மெடிக்கல் ஷாப்" எதாச்சும் இருக்கா???" கேட்டேன்,

"செகண்ட் கிராஸ் மே ஜாவ், குல்லா ஹே தேக்கோ"
("இரண்டாவது குறுக்குத் தெருவில் திறந்திருக்கும், போய்ப் பார்").
national-girl-child-day

வேகமாய் ஓடத் துவங்கினேன், கடையின் வெளி விளக்குகளை அணைத்தபடி நாளை முடித்துக் கொண்டிருந்த முதியவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பவும் ஓடினேன். காவலர் எனது நுழைவுச் சீட்டை மீண்டும் கேட்டார், சரிபார்த்துத் தலையசைத்து அனுமதி கொடுத்தார்.

பக்கவாட்டு நடைப்பகுதியில் திரும்பினேன், மரக்கதவின் அருகில் சென்று பார்த்தேன். யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. கண்ணுக்கெட்டிய தொலைவில் மனிதர்கள் யாருமே இல்லை, சமையலறைப் பணியாளர்கள் அரங்க வாயிலைத் திறக்கும் போது வெளியேறும் இசை மட்டும் தனிமையாய் நடைப்பகுதியின் வெளிகளில் கசிவதும், நிற்பதுமாய் இருந்தது.

நான்கைந்து முறை நடந்து சுற்றிலும் தேடித் பார்த்தும் அந்தப் பெண்ணை என்னால் திரும்பப் பார்க்க முடியவில்லை. நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. காவலரிடம் இப்போது நான் இறுதியாக வெளியேறுகிறேன் என்று சொல்லி விட்டுச் சாலையில் இறங்கினேன். உள்ளங்கை வரைக்கும் வியர்வையாய் இருந்தது, இடது கையில் மடிந்திருந்த பிளாஸ்டிக் பேப்பரில் இருந்து அந்தப் பொட்டலத்தை ஒரு முறை கையில் எடுத்துப் பார்த்தேன்.

வெண்ணிற அச்சில் ஆங்கிலத்தில் "STAY FREE" என்கிற எழுத்துக்கள் மஞ்சள் நிற நியான் விளக்கு வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்தது. பக்கத்தில் சிரிக்கிற பெண்ணின் முகம் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணைப் போலவே இருந்தது. கடைசி வரை கொடுக்க முடியாமல் போன பரிசுகள் எல்லாவற்றிலும் மதிப்பு வாய்ந்த அந்தப் பஞ்சுப் பொதி எனது கண்ணீரைத் துடைக்குமா என்று தெரியவில்லை.

hope

கண்காணாத தேசத்தின் நிலத்திலும் தனக்கொரு அண்ணன் அங்கிருப்பான் என்று நம்பிய அந்தப் பிஞ்சு முகத்தை இன்னொரு முறை என்னால் பார்க்க இயலாது. ஆனாலும், அவளது நம்பிக்கையை இன்னொரு தலைமுறைக்குக் கடத்தும் மதிப்பு மிக்க அண்ணனாய் இருக்க என்னால் இயலும்.

இன்று பெண் குழந்தைகள் நாளாம், வாழ்க்கையின் விளிம்பில், வறுமையின் பெயரில் இந்தியாவின் நிலமெங்கும் வெம்பிய மலர்களைப் போல முகிழ்த்திருக்கும் எனது பெண் குழந்தைகள் அனைவருக்கும் அண்ணன்களின், அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்.

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: