கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 28, 2013

இரவுப் பறவைகளின் ஓலம்.

x120813130017

சன்னமான காற்று ஊருக்குப் புறத்தே மீதமிருக்கும் சில மரங்களில் இருந்து வந்து வீதிகளில் சுற்றித் திரிகிறது, மழையின் சீவல்கள் மஞ்சள் நிற நியான் விளக்குகளில் தோன்றி மறைகின்றன, ஒரு இரவுப் பறவை ஓலமிட்டபடி கடக்கிற நொடிகளின் அதிர்வுகள் வாழ்க்கையின் நெருக்கடியை உணர்த்துகின்றன, அந்த இரவுப் பறவையின் தேவையை, அதன் சோகத்தை யார் தான் அறிவார்கள்.

தொலை தூரத்தில் கேட்கிற வெடியோசை அந்தப் பறவையின் இரவைக் குலைத்திருக்கலாம், வழக்கம் போலவே இரவைக் கொண்டாடுகிறது மனம், மனிதர்களும், வாழ்க்கையும் தூங்கி… விடுகிறார்கள், தனிமையின் எல்லையற்ற வெளிகளில் ஒரு இரவுப் பறவையின் சிறகுகளில் அமர்ந்து வெகு தொலைவு பயணிக்கலாம்.

மோ யோனின் ஊருக்குப் புறத்தே இருக்கும் மரங்களில் ஏறி அவர் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளையும், மாடுகளையும் பார்வையிடலாம், ஹெம்மிங்வேயின் படகில் ஏறி ஆழ்கடலின் ஏகாந்த அமைதியில் பயணித்தபடி எதிரில் வரும் இன்னொரு படகின் காண்டா விளக்கொளியை, அதன் செம்மஞ்சள் நிறப் பிழம்புகளை வேடிக்கை பார்க்கலாம், பஷீரின் காதலுக்குள் மூழ்கித் தொலையலாம், அரவமற்ற இரவின் விழுதுகளைப் பிடித்தபடி வாசலில் வந்திருக்கும் நத்தையின் கொம்புகளோடு பேசலாம்….

இப்படித்தான் நகர்கிறது இரவுகள், வாழ்க்கையின் அற்புதமான கணங்களில் வாசிக்க எண்ணற்ற நூல்களும், எழுத நிறையத் தாள்களும், கணக்கில் அடங்காத இசையின் துளிகளும், பார்க்கக் கிடைக்காத புகைப்படங்களும் இன்னும் எண்ணற்ற வண்ணங்களும் பேரண்டம் முழுதும் சிதறிக் கிடக்கையில் உறக்கம் ஒரு வேண்டாத விருந்தாளியாகி விடுகிறது.

இப்போது மேலே இருக்கிற புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த போது தவறுதலாக இந்தப் புகைப்படத்துக்குள் விழுந்து விட்டேன், இந்தப் புகைப்படத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையின் சுவடுகளும் குருதிக் கறையோடு படிந்து கிடக்கிறது,

காற்றில் தவழும் அந்தப் பெண்ணின் கேசத்தின் பின்னே இழப்பின் ஆற்றமுடியாத வலி தொக்கிக் கிடக்கிறது, பின்புலத்தில் ராணுவ மரியாதையோடு ஊர்தியில் கிடத்தப்பட்டிருக்கிறது காதல் கணவனின் உடல், மழை பெய்து முடிந்த இன்னொரு மாலையைத் துரத்தியபடி இரவு வந்து கொண்டிருக்கிறது, அனைத்தையும் அமைதியாய் வேடிக்கை பார்த்தபடி மழை முடிந்த அடிவானில் குளிர் காற்றோடு உரையாடிக் கொண்டு ஒரு வானவில் மலர்ந்து கிடக்கிறது. குழந்தையை உறவினர் யாரோ வைத்திருக்கிறார்கள், அவளது கைகளில் தேசியக் கொடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

கணவனின் உடலோடு டென்வர் பன்னாட்டு வானூர்தி வளாகத்தில் மற்றொரு விமானத்தில் சொந்த ஊரான ரெனொவுக்குப் பயணிக்க வேண்டும். அங்கு முழுமையான ராணுவ மரியாதையோடு கணவனின் உடல் அடக்கம் செய்யப்படும். காலடியில் நொறுங்கிக் கிடக்கும் கனவுகளை அந்தப் பெண்ணால் பார்க்க முடியும், தொலைதூர அடிவானில் வானவில் ஒன்று மனித வாழ்க்கையின் அவலங்களுக்கு சாட்சியாய் வளைந்து விரிந்து கிடக்கிறது

கடந்த ஆண்டு ஜூலை இருபதாம் தேதி அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் அரோரா நகரில் "தி டார்க் நைட் அரைசெஸ்" (The Dark Night Arises) என்கிற திரைப்படத்தை (Century Movie Theatre) இல் பார்த்துக் கொண்டிருந்த பன்னிரண்டு பேரைச் சுட்டுக் கொன்றான் ஒரு அடையாளம் தெரியாத மனிதன். இந்தப் புகைப்படத்தில் அழியாத உலக வரலாற்றின் ஓவியமாய் நின்று கொண்டிருக்கும் இளம்பெண் தன்னுடைய கணவனோடும், அழகுக் குழந்தையோடும் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அமெரிக்க வான்படையில் அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்திருந்தான், விடுப்பில் வந்திருந்த காதல் கணவனோடு அடம் பிடித்து அன்றைக்குத் திரைப்படத்துக்கு வந்திருந்தாள் சண்ட்டெல். ஏன்?, எதற்கு? என்கிற எந்தக் கேள்விகளுக்கும் விடையின்றி அகாலமாய் மரணிப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய கொடுமை. ஆனால் அப்படித்தான் மரணித்தான் சண்ட்டெல்லின் காதல் கணவனும், அமெரிக்க வான்படை வீரனுமான ஜோனாதன் ப்ளங் (Jonathan Blunk). கூட்டமாய் இறந்து போன பன்னிரண்டு பேரில் ஜொனாதனும் ஒருவன்.

மறுநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது, சண்ட்டெல் பளங் (Chantel Blunk) துயரங்களின் ஓவியமாய் உலக வரலாற்றில் இந்தப் புகைப்படம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது, அவள் ஒரு வேளை அந்தத் துயரில் இருந்து விடுபட்டிருக்கலாம், இப்போது மகிழ்ச்சியான இன்னொரு வாழ்க்கையைக் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

ஆனால், புகைப்படத்துக்காக நிறுத்தப்பட்ட இந்த நொடிப் பொழுதில் இழப்பின் வலியை சொட்டியபடி கால காலத்துக்கும் அவளது கண்கள் நிலை கொண்டிருக்கும்.

சற்று முன் ஓலமிட்டபடி கடந்த அந்த இரவுப் பறவையின் குரலில் "சண்ட்டெல் ப்ளங்" கின் அழுகுரலை நான் கேட்டேன், தனது மகிழ்ச்சியான பொழுதுகளை எந்தக் காரணங்களும் இன்றி பறித்துப் போன மனித மனத்தின் வக்கிரத்துக்கான பதிலைக் கேட்டபடி அவளது பிரிவின் வலி புகைப்படத்தின் பின்னிருக்கும் வானவில்லின் வழியாய் ஏறி இரவுப் பறவைகளின் குரலில் தொக்கிக் கொண்டிருக்கக் கூடும்.

ஒற்றை "சண்ட்டெல் ப்ளங்" இன் ஒலத்தைப் போல புகைப்படத்தில் இல்லாத எத்தனையோ ப்ளங் களின் ஓலத்தைச் சுமந்தபடி உலகமெங்கும் சுற்றித் திரியும் கணக்கிலடங்காத இரவுப் பறவைகளின் குரலுக்கு யார் தான் விடை தருவார்கள்.

 

****************

Advertisements

Responses

  1. கொடுமை… இப்படியுமா இருப்பார்கள்…?

  2. ஒற்றை “சண்ட்டெல் ப்ளங்” இன் ஒலத்தைப் போல புகைப்படத்தில் இல்லாத எத்தனையோ ப்ளங் களின் ஓலத்தைச் சுமந்தபடி உலகமெங்கும் சுற்றித் திரியும் கணக்கிலடங்காத இரவுப் பறவைகளின் குரலுக்கு யார் தான் விடை தருவார்கள்.

    அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நெகிழ வைக்கும் பதிவு.
    (மற்ற பக்கங்களில் பகிர்வதற்கான share buttons ம் சேர்த்து விடுங்கள் – face book, google plus, twitter etc.,)


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: