கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 6, 2013

ஆங்கில எழுத்துருவுக்குப் பதில் எம்மொழி செத்தால் தான் என்ன?

Jeyamohan_Author

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், மீண்டும் ஒரு விவாதத்தில் உங்களோடு உரையாடுவது குறித்து மகிழ்ச்சி. “தி இந்து” நாளிதழில் எழுதப்பட்ட உங்கள் கட்டுரை படித்தேன், நீங்கள் நகைச்சுவையின் உச்சமாக இந்தக் கட்டுரையில் யாரையேனும் பகடி செய்திருக்கிறீர்களா என்று மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன். அப்படி ஒரு சுவடும் எனக்குத் தட்டுப்படவில்லை, ஆக நீங்கள் தீவிரமாகவே உங்கள் தரப்பைச் சொல்லி இருக்கிறீர்கள் என்று தோன்றியது.

ஒருவேளை நான் நினைத்தது போலவே உங்கள் அந்தக் கட்டுரை பகடியாக இருக்குமேயானால் இப்போது கீழே நான் எழுதப் போகும் கட்டுரையை நீங்கள் பகடியாகவே எடுத்துக் கொள்ளலாம். உங்கள் கட்டுரையின் நோக்கமும், மூலமும் வாசிக்கும் தரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற உள்நோக்கில் இருந்தே துவங்குகிறது என்பதை பெரும்பாலானவர்களால் அறிய முடியும் என்றே கருதுகிறேன். ஆங்கில நூல்கள் அதிகம் விற்கிறதே என்கிற உங்கள் ஆதங்கமும், கவலையும் புரிந்து கொள்ள முடிந்தவை தான். ஆனாலும், ஒரு தகவலை இங்கே உங்களுக்கு இங்கே தர விரும்புகிறேன்.

“முற்றத்து மரங்கள்” என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பை முனைவர் மணிவண்ணன் அவர்கள் தனது தகிதா பதிப்பகத்தின் மூலம் பதிப்பித்தார், ஆயிரம் நூல்கள் அச்சேற்றப்பட்டு இருநூறு நூல்களை அவர் எடுத்துக் கொண்டார், எஞ்சிய எண்ணூறு நூல்கள் அனேகமாக மூன்று மாதங்களில் விற்கப்பட்டன, பெரிய அளவிலான விளம்பரங்களோ, கண்காட்சிப் பங்களிப்போ இல்லாத, நூலகக் கொள்முதல் குறித்த எந்த அறிவும் இல்லாத என்னைப் போன்ற இணைய அளவில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளனின்? தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஆயிரம் பிரதிகள் விற்றுப் போகிறது என்று சொன்னால் இன்னும் பல நூறாண்டுகளுக்கு எமது மொழியை, எமது மொழியின் வரி வடிவத்தை எத்ததைய உலக மயச் சூழலும் அத்தனை எளிதாக அழித்து விட முடியாது என்கிற அளவற்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த ஒரு செய்தியின் பின்னே தமிழின் எழுத்தாள சமூகங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அதற்கான வரவேற்பு என்ன என்பதையும் நம்மால் அறிய முடியும் என்றே கருதுகிறேன். ஒரு  எழுத்தாளனின் வெற்றி அந்த மொழியை வாசிப்பவர்களின் எண்ணிகையை அதிகரிக்க வைப்பதில் அடங்கி இருக்கிறது, குறை சொல்வதில் அல்ல அவனது வேலை, மாறாக அந்தத் துறையின் மிக முக்கியமான பங்களிப்பாலம் என்கிற முறையின் அவனது பிரதான வேலை வாசிக்கும் தரப்பை அதிகரிக்கச் செய்வது.

பரவலாக வாசிக்கும் பழக்கத்தை ஒரு மொழியின் சமூகம் குறைத்து வருகிறது என்று சொன்னால் அதற்குப் பின்னே அந்த மொழியின் எழுத்தாளர்கள் மொக்கையாக ஏதோ பக்கத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பொருள் இருக்கிறது. ஆக, உங்கள் முதல் பத்தி தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களின் எழுதும் திறனை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆங்கில மொழி குறித்த எந்த ஆழமான உள்ளுணர்வும் இல்லாமல் அதன் பின்னே ஓடுகிற ஒரு சராசரி மனிதனைப் போல நீங்கள் இரண்டாம் பத்தியில் “ஆங்கிலமே வேலை வாய்ப்புக் கல்விக்குரிய மொழி” என்று முடிவு செய்வது வேதனையளிக்கிறது. உலகின் பதினைந்து விழுக்காடு மக்கள் மண்டாரின் என்கிற சீன மொழியைப் பேசுகிறார்கள், அவர்களில் பெரும்பாலனாவர்களுக்கு அடிப்படை ஆங்கிலமே தெரியாது, பெரும்பான்மை ஜப்பானிய மக்களால் ஆங்கிலம் அங்கீகரிக்கப் படவில்லை, பெரும்பானையான ஜெர்மானியர்கள் ஆங்கிலம் பேசுவதை உளப்பூர்வமாக விரும்புவதில்லை.

ஆங்கிலத்தை விடக் கொஞ்சம் கூடுதலான மக்கள் உலகமெங்கும் ஸ்பானிய மொழியைப் பேசுகிறார்கள், ஏறத்தாழ ஹிந்திக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளை உலகமெங்கும் 500 மில்லியன் மனிதர்கள் புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். இந்தியா மாதிரியான ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஆங்கில நூல்களைப் படிப்பது ஒரு ஜீன்ஸ் கலாச்சாரம் மாதிரியான பிணி. அந்தப் பிணியில் சிக்கி உழலும் பலரில் நீங்களும் ஒருவராக இப்போது இந்தக் கட்டுரையின் மூலமாக உங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

தமிழ் மொழியில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் பல்வேறு இலக்கிய வடிவங்களைச் சார்ந்த நூல்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது, இன்னமும் பெரும்பான்மை ஊரகப் பகுதியின் மக்கள் தங்கள் குழந்தைகளை அடிப்படைக் கல்வியைத் தமிழில் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அவர்களுக்கு அதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை. நீங்கள் காண்கிற இந்த ஆங்கில வரி வடிவக் கவர்ச்சி மாநகரங்களில் வாழும் மேட்டுக்குடி அல்லது மேட்டுக்குடி ஒட்டிய நடுத்தரக் குடும்பங்களின் பிள்ளைகளால் செய்யப்படுகிற ஒரு குரங்குச் சேட்டை அவ்வளவுதான்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் பள்ளிகளில் வேற்று மொழிக் குழந்தைகளின் மொழியை ஆசிரியர்கள் கற்றுக் கொள்கிறார்கள், அவர்களின் தாய்மொழியில் கடிதம், மின்னஞ்சல் என்று தொடர்பு கொள்கிறார்கள், பெற்றோர்களை அழைத்து வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் தாய்மொழியில் கற்றுக் கொடுங்கள் ன்று தாய்மொழியை ஊக்கப்படுத்துகிறார்கள். தாய்மொழியின் அடிப்படைக் கல்வி கற்கும் குழந்தைகளே சுயமாகச் சிந்திக்கிற தகுதியை எட்டுகிறார்கள் என்று அதற்கான காரணத்தையும் அவர்களே சொல்கிறார்கள்.

மதிப்புக்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு இது போன்ற தத்துவ மரபு சார்ந்த விஷயங்களை என்னைப் போன்ற சிறுவர்கள் சொல்லித் தர வேண்டியதில்லை என்று கருதுகிறேன், ஏனென்றால் உங்களைப் போன்றவர்களிடத்தில் இருந்து தான் நாங்கள் இவற்றை எல்லாம் கற்றோம், மொழி என்பது வெறும் வேலை வாய்ப்புக்குரிய ஒரு கருவி என்று வெகு எளிமையான ஒரு சராசரி மனிதனின் சிந்தனைத் திறனோடு நீங்கள் எப்படிக் கடந்தீர்கள் என்று எனக்கு உண்மையில் இன்னும் விளங்கவில்லை.

மொழி மனிதனின் ஆன்ம நாதம், அவன் வாழ்க்கையை எதிர் கொள்ள அவனிடத்தில் இருக்கிற முதலும் கடைசியுமான ஆயுதம் அவனது தாய்மொழி மட்டுமே, ஆற்றமுடியாத துயரத்தின் போதும், அளவற்ற மகிழ்ச்சிக் போதும் அவன் தனது தாய்மொழியில் தான் கதறி ஆக வேண்டும், இன்றைய சந்தை உலகின் நெருக்கடிகளைத் தாங்கி ஒரு தனி மனிதனின் உளவியலைப் பாதுகாக்க, அவனது அக உலகத்தை நெருக்கடிகளற்ற ஒரு சூழலில் பாதுகாக்க அவனுக்கு இருக்கும் ஒரே கவசம் அவனது தாய்மொழி மட்டும்தான். வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவற்றை எல்லாம் கடந்து ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வின் நாதத்தை அவனது தாய் மொழி தான் இடைவிடாது மீட்டிக் கொண்டே இருக்கிறது.

நமது குழந்தைகளுக்கு இப்போது இருக்கும் சூழலில் இரண்டு மொழியின் எழுது வடிவங்களைப் படிப்பதல்ல சிக்கல், அவர்கள் இன்னும் ஏராளமான எழுத்து வடிவங்களைக் கற்றுக் கொண்டு விடுவார்கள், ஆனால், அவர்களின் எதிரே இருக்கும் மிகப்பெரிய சவால், நம்மைப் போன்ற மனிதர்கள் அவர்களின் மீது திணிக்கும் பொருளியல் சார்ந்த வேலை வாய்ப்புக்குரிய கல்வியின் கடும் சுமை மட்டும்தான்.

ஒரு மனிதனின் சிந்தனைத் திறனை விரிவு செய்கிற முழுமையான கல்வியை நம்மால் குழந்தைகளுக்கு வழங்க முடியுமென்றால் அவர்களால் பொருளீட்டும் கலையை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன். உலகின் பல்வேறு மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்,

“தாய்மொழியின் எழுத்து வடிவங்களின் மூலமாக அடிப்படைக் கல்வியைக் கற்று வரும் குழந்தைகளே பல்வேறு துறை சார்ந்த கல்வியில் முன்னணியில் இருக்கிறார்கள்”.

மிஷெல் பியூக்கோ வின் கூற்றுக்கும் நீங்கள் கட்டுரையில் சொல்லி இருக்கும் எழுத்து வடிவம் தொடர்பான கூற்றுகளுக்கும் எள் முனையளவும் தொடர்பில்லை என்பது எனது தாழ்மையான அவதானிப்பு.

ஏறத்தாழ பத்துக் கோடி மக்களால் உலகமெங்கும் பேசப்படும், எழுதப்படும் ஒரு இனக்குழு மக்களின் மொழியை, உலகம் போற்றும் பல இலக்கிய வடிவங்களை உலக நாகரீகத்துக்கு வழங்கிய ஒரு மொழியின் எழுத்து வடிவத்தை ஆங்கிலம் மாதிரியான ஒரு வல்லாதிக்க மொழியின் எழுத்து வடிவங்களுக்குள் சுருட்டி எழுத்துரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு மூத்த எழுத்தாளராக இருந்து கொண்டு நீங்கள் சொல்வது அந்த மொழி பேசும் மனிதர்களை, அந்த மொழியின் மூத்த இலக்கியவாதிகளை, அந்த மொழியின் வளர்ச்சிக்கு இதுகாறும் பாடுபட்டு உயிர் நீத்த எண்ணற்ற மொழியியல் முன்னோடிகளை அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தோன்றுகிறது.

மேலும், உங்களின் இந்தக் கூற்று தமிழ் என்கிற பல்லாயிரக்கணக்கான வரலாற்று ஆண்டுகளைத் தன்னிடத்தே கொண்ட ஒரு மொழியின் இருப்பைக் கேலிக் கூத்தடிக்கிறது. தமிழ் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை, அழிவுகளை, சுமைகளை, அடக்குமுறைகளை அந்த இனத்தோடு சேர்ந்தே கடந்து வந்திருக்கிறது, இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ் என்கிற மொழியை அதன் எழுத்து வடிவங்களை யாராலும் அழித்து விட முடியாது.

புவியின் உயிர் வாழ்க்கைக்கு எப்படி சூழலியல் மாறுபாடுகளும், உணவுப் பழக்கங்களும் மிக முக்கியமானதோ அப்படியே பல்வேறு மொழிப் புழக்கம் எனபது கலாசாரப் பண்பாட்டு அடையாள பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. அது உலகின் சமநிலையைப் பேணுகிறது, அது மனிதர்களின் வெவ்வேறு உளவியல் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது, நீங்கள் சொல்கிற எழுத்து வரி வடிவ மாற்றம் என்பது மிக மோசமான, உளவியல் ரீதியில் ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டுப் போன, ஆங்கில மோகத்தின் மேலாக வைக்கப்படுகிற கருத்தியல்.

மனித மனங்களின் ஊடாக மொழி செய்கிற பல்வேறு நுட்பமான வேலைகளைப் புரிந்து கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக நீங்கள் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்திருக்கும் இந்த கட்டுரையின் சாரம் மிக ஆபத்தானது என்று நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். மொழி மீதிருக்கும் உங்கள் புரிதலை வெளிப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்புக் கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

ஐக்கிய நாடுகள் அவை தாய் மொழியில் கல்வி கற்பதையும், தாய் மொழி குறித்த உரிமைகளை அந்த மொழி பேசும் மக்கள் அடையும் வகையிலும் பல்வேறு தீர்மானங்களையும், கொள்கைகளையும் உலக நாடுகளுக்காக வகுத்திருக்கிறது, ஒரு மொழியின் எழுத்து வடிவங்களை, அதன் இலக்கிய இலக்கண வடிவங்களை போற்றிப் பாதுக்காக்கவும், கொண்டாடி மகிழவும் அந்த மொழியைப் பேசும் கடைசி மனிதனுக்கும் உரிமையுண்டு. ஆக, பன்னாட்டு விதிகளின் படியும் கூட நீங்கள் ஒரு மொழியை, அந்த மொழி பேசும் மக்களை அவமதிக்கிறீர்கள்.

“உங்கள் மொழியை நீங்கள் உண்மையிலேயே நேசிப்பவரா, அப்படியென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்தையும், சொல்லையும் கொண்டாடி மகிழுங்கள்” என்று சொன்னான் “ஒலிவர் ஸ்டீகன்”. அவனுடைய சொற்கள் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

தனது குழந்தையின் வலியைத் தாங்க முடியாத ஒரு தாயோ, தனது குழந்தையின் பசியைத் தீர்க்க நிலமெங்கும் அலைந்து திரிந்து வேட்டையாடிய ஒரு களைத்த தந்தையோ, தனது காதலைச் சொல்ல இயலாத ஒரு காதலனோ, தனது மரணத்தின் வலியை உணர்த்த முடியாத ஒரு மனிதனோ பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பாக இங்கிருக்கும் ஒரு எழுத்து வடிவத்தின் மூலத்தைத் துவக்கி வைத்திருப்பான்.

இணையத்தில் எழுதுவதற்கும், சோம்பேறிகள் வாசித்துப் பயனுறட்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான நியாயங்களிலும் ஒரு மொழியை, அதன் எழுத்து வடிவங்களை அவமதிப்பது என்பது அவமானகரமான நியாயம். அப்படியான ஒரு துயரம் தமிழுக்கு நிகழ்ந்து விடாது என்பது ஒரு புறமிருக்கட்டும். எமது எழுத்து வடிவங்களை இன்னொரு மொழிக்குள் உள்ளடக்கி சிறுமைப்படுத்தி அதனை வளர்க்க வேண்டும் என்கிற எந்த அடிப்படைக் கவலையும் எங்களுக்கு இல்லை, அப்படி ஒரு நிலை வருமாயின் அழிந்தே போகட்டும் எம்மொழி.

இன்னமும் இந்தக் கட்டுரையை நீங்கள்  யாரையோ,எதற்காகவோ பகடி செய்வதற்காகத்தான் எழுதி இருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடனும்,

நிறைய அன்புடனும், வணக்கங்களுடனும்

கை.அறிவழகன்

பின்குறிப்பு – தம்பி அஜிதனுக்கு என்னுடைய நிறைந்த அன்பும், தமிழில் உங்களுடைய தொடர்ச்சியான எழுத்துப் பணிகளுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்களும் நிறைய.

 

******************

Advertisements

Responses

  1. இணையத்தில் எழுதுவதற்கும், சோம்பேறிகள் வாசித்துப் பயனுறட்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான நியாயங்களிலும் ஒரு மொழியை, அதன் எழுத்து வடிவங்களை அவமதிப்பது என்பது அவமானகரமான நியாயம். அப்படியான ஒரு துயரம் தமிழுக்கு நிகழ்ந்து விடாது என்பது ஒரு புறமிருக்கட்டும். எமது எழுத்து வடிவங்களை இன்னொரு மொழிக்குள் உள்ளடக்கி சிறுமைப்படுத்தி அதனை வளர்க்க வேண்டும் என்கிற எந்த அடிப்படைக் கவலையும் எங்களுக்கு இல்லை, அப்படி ஒரு நிலை வருமாயின் அழிந்தே போகட்டும் எம்மொழி. = முகநூல் நண்பர் திரு Arivazhagan Kaivalyam அவர்களின் பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பதிவு முழுவதையும் படித்துப் பார்த்து பாரபட்சமில்லாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறேன். தனிமனித தாக்குதல் இருக்க்க் கூடாது. நன்றி நண்பர்களே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: