கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 8, 2013

எழுத்துரு மாற்றம் – மானுடத்தின் துயரம்.

HomeImg1

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

உங்கள் "எழுத்துரு மாற்றம் ஏன்?" என்கிற நீண்ட விளக்கத்தைப் படித்தேன், தொடர்பாக சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று தோன்றியது.

கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு போன்ற சொற்களைக் கண்டவுடன் ஐரோப்பிய சிந்தனைத்தளத்தை நோக்கி தாவுவதில் எப்போதும் நீங்கள் முன் நிற்கிறீர்கள், முதலில் நீங்கள் ஒரு அடிப்படையான விஷயத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது, நிலப்பரப்பின் அரசியல், நிலம் சார்ந்த வாழ்க்கை முறை, இயற்கையின் சூழல் தகவமைப்பு சார்ந்த மொழிப் பின்புலம் இவை எல்லாம் மனித வாழ்க்கையில், மானுட வரலாற்றில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது, ஐரோப்பியர்களின் நிலப்பரப்பும், வாழ்க்கை முறையும் எந்த வகையிலும் நமது இந்தியச் சூழலுக்குப் பொருந்தாதவை, அவர்களுடைய உடல் மொழியில் இருந்து, உடைகள், பண்பாட்டுக் குறியீடுகள் என்று எல்லாமே நமது நிலவியலுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்றவை.

சிந்தனை மாற்றமோ, பகுத்தறிவோ, கருத்துச் சுதந்திரமோ ஐரோப்பியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் சொல்லாமால் சொல்வது ஒருவகையான மனச்சிதைவு, முதலில் ஐரோப்பியப் பின்பற்றலை விட்டு விட்டு இந்தியச் சூழலில் இருந்து மொழியின் எழுத்துருக்கள் குறித்து நீங்கள் சிந்திக்கத் துவங்கினால் இப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். இந்தியத் தத்துவ மரபு உலகத் தத்துவ மரபுகளின் தந்தை என்று எப்போதும் முழக்கமிடும் நீங்கள் இந்த தத்துவ மரபு சார்ந்த மொழிக் குறியீடுகள் விஷயத்தில் எதற்காக ஐரோப்பிய வந்தனம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.

பெருந்திரள் மனநிலையில் நீங்கள் சொல்வதைப் போல குறைபாடுகள் இருந்தாலும் கூட இந்தியத் தத்துவ மரபினை ஆய்வுக்கு உட்படுத்தும் போது பல நன்மைகளையும் அது சமூகத்துக்கு வழங்கி இருக்கிறது, ஒருமித்த தனி மனிதக் கட்டுடைப்புகளில் திரண்டு மாற்றங்களை உருவாக்கிய எத்தனையோ எடுத்துக்காட்டுகளை உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். பெரியார் செய்து காட்டிய தனி மனிதக் கட்டுடைப்பும், தொடர்ச்சியான பெருந்திரள் மனநிலையும் கூட அத்தகைய ஒரு அடைப்புக்குள் வரும். கட்டுடைப்புகள், தனி மனித சிந்தனைச் சுதந்திரம், பகுத்தறிவு என்று எல்லா சமூக நன்மைகளும் பெருந்திரளை நோக்கியே முன்னேறியாக வேண்டும்.

தனித்த அறுந்து போன உலகமாக எந்த ஒரு உயிரியக்கமும் இங்கு நிலைத்திருப்பது இயலாத ஒன்று. மேலும் எந்த ஒரு தனி மனித சிந்தனையும்,கருத்துச் சுதந்திரமும் ஏற்கனவே நிலைத்திருக்கும் பிறிதொரு கருத்தியலில் இருந்தே பெறப்பட வேண்டியிருக்கிறது, சிந்தனைகளும், கருத்து வடிவங்களும் தன்னிச்சையாகப் பிறப்பெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை, ஆக, பெருந்திரளால் நம்பப்படுகிற, இயக்கப்படுகிற முன்னரே நிலைத்திருக்கும் ஒரு பொதிவில் இருந்தே எந்த ஒரு தனி மனிதனின் இயக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக, தனி மனிதன் பெருந்திரள் நோக்கியும், பெருந்திரள் தனது கூட்டுக்குள் இருக்கும் இன்னொரு தனி மனிதனை நோக்கியோ தான் நகர வேண்டியிருக்கிறது, இது ஒரு சுழற்சி.

மேலும் ஐரோப்பிய சமூகம் ஒற்றைக் குடும்ப அமைப்பு முறையை தனது குறியீடாகக் கொண்டு பயணிக்கவில்லை, தனி மனித நலன்களும், தனி மனித சுதந்திரமும் அந்த சமூகத்தில் மிகுந்த கவனத்தில் கொள்ளப்படுவதற்கு அதுவே ஒரு மிக முக்கிய காரணம், இந்திய சமூகம் அப்படியானதில்லை, இங்கு குடும்ப அமைப்பு முறை, பிறப்பில் இருந்து துவங்கி இறப்பு வரைக்கும் ஒரு நிலவியல் வாழ்க்கை முறையாக நெடுங்காலமாய் இருந்து வருகிறது, நாம் இந்த விஷயத்தில் ஐரோப்பிய சமூகத்தைப் பின்பற்ற வேண்டும் என்கிற எந்த நெருக்கடியும் நமக்கு இல்லை.

நமது சமூக அமைப்புக்கான பெரும்பான்மை நன்மைகளும், ஒழுங்குகளும் இந்தக் கூட்டுச் சமூக அமைப்பில் இருந்தே நமக்குக் கிடைக்கிறது. ஆகவே அளவற்ற கட்டுடைப்பும், கருத்துச் சுதந்திரமும் படிப்படியாகப் பெறப்பட வேண்டியவை, மொழிச் சீர்திருத்தம் உட்பட எல்லாச் சீர்திருத்தங்களும் வேறொரு நிலவியல் சமூகத்தின் அடிச்சுவட்டை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று சொல்வது அபத்தம். இந்திய தத்துவ மரபுகளின் மீது அளவற்ற பிடிப்பும், நேசமும் கொண்ட நீங்கள் ஐரோப்பிய சிந்தனைத் தளத்தை மையப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

தமிழ்ச் சமூகம் பெரியார் சொல்லியதை ஏற்றுக் கொண்டிருந்தால் இப்போது ஒரு கறாரான சுய விமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும் என்று சொல்கிறீர்கள், இங்குதான் நீங்கள் ஒரு மிக நுட்பமான எளிய உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும், இந்திய சமூகத்தில் என்றில்லை எந்த சமூகத்திலும் முழுமையாக எந்த ஒரு கருத்தியலும் ஏற்றுக் கொள்ளப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோ இல்லை, பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு உள்ளீடுகள் அல்லது திராவிட இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் இருந்து முற்று முடிவாக அவர் எதிர்த்த எல்லாவற்றையும் துறந்து விடவில்லை.

கடவுளும் சரி, ஏனைய மத நம்பிக்கைகளும் சரி மனித குலத்திற்கு நன்மை விளைவிக்கும் என்று சொன்னால் அவற்றை நான் ஏற்றுக் கொள்வேன் என்று வெளிப்படையாகச் சொன்னவர் தான் பெரியார். கடவுள் உங்கள் முன்னாள் தோன்றினால் என்ன செய்வீர்கள் என்கிற மிகச் சிக்கலான கேள்விக்கு அவர் சொன்ன பதில் மிக எளிதானது மட்டுமல்ல வியப்புக்குரியதும் கூட, "கோவிந்தா, கோவிந்தான்னு, உங்களைப் போலவே சாஸ்டாங்கமாய் விழுந்து  கும்பிடப் போகிறேன்".

"லடாக் பயணத்தில் அந்தவிவாதத்தின் முடிவில்தான் நான் சொன்னதைச் சோதித்துத்தான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் வந்தது. தமிழக அரசியலின் ‘புனித பசுவாக’ போற்றப்படுவது மொழி. மொழிக்காக எவரும் எதுவும் செய்வதில்லை என்றாலும் மொழியை சென்ற ஐம்பதாண்டுக்காலமாக எந்த மதக்கொள்கையைவிடவும் தீவிரமான உணர்ச்சிகர நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளை வழிபடுவது பிற்போக்கு மொழியை வழிபடுவது முற்போக்கு என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.பகுத்தறிவை முன்வைத்த ஈவேரா அவர்களின் வழிவழ்ந்தவர்கள் உருவாக்கிய தீவிர நம்பிக்கை அது".

மொழி தீவிர இலக்கியத்தின் நிழலில் மட்டுமே பதுங்கி வாழ்கிறது என்பது மாதிரியான ஒரு கற்பனையை நீங்களே வடிவமைத்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால், உண்மை அப்படி இல்லை, இன்றும் உலகின் பத்து கோடி மக்களால் பேசப்படுகிற, புழக்கத்தில் இருக்கிற தமிழ், உலகின் இருபது மிக முக்கியமான பண்பாட்டுத் தாக்கம் விளைவிக்கிற மொழிகளின் பட்டியலின் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது, இளைய தலைமுறையின் ஒரு தரப்பு இணைய தளங்களில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தாலும் கூடத் தனது மொழியை தொழில் நுட்பத்தோடு இணைக்கிற வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் துவங்கி, ஞோ, ஞா என்று இணையத்தில் வசை பாடிக் கொள்கிறவர்கள் கூட தமது மொழியின் வரி வடிவத்திலே அதனைச் செய்ய வேண்டும் முனைப்புக் காட்டுவதே கூட மொழிக்கான ஒரு மரியாதை என்று தான் தோன்றுகிறது. எளிதாகத் தங்கள் வேலை வாய்ப்புக்கான பயன்பாட்டு மொழியான ஆங்கிலத்தில் எழுதுகிற வாய்ப்பு இருந்தும், தனது மொழியை இன்னொரு மொழியின் வரி வடிவத்துக்குள் நுழைத்து தனது மொழியின் வரி வடிவத்துக்குள் நுழைந்து பதிவு செய்து மகிழ்ச்சி கொள்கிற, இலக்கியம் குறித்த பெரிதான அக்கறையோ, அறிவோ இல்லாத ஒரு தொழில் நுட்பத் தமிழ் இளைஞனை நினைத்துப் பாருங்கள். அவனுடைய மொழி குறித்த புரிதலும், மதிப்பீடுகளும் எந்தப் பெரிய எழுத்தாள சமூகங்களுக்கும் குறைவானதல்ல, தன்னையும் அறியாமல் அவனது உள்ளார்ந்த மொழி குறித்த ஈடுபாடும், புரிந்துணர்வுமே அவனை அப்படிச் செய்யத் தூண்டுகின்றன, யோகொஹோமோவில் இருந்தாலும், கலிபோர்னியாவில் இருந்தாலும் தன்னுடைய வரி வடிவத்திலேயே எழுத வேண்டும் என்கிற அவனது உள்ளுணர்வை எந்த உலகளாவிய பொது மொழிக் கூற்றுகளும், பொது வரி வடிவக் கூற்றும் விழுங்கிச் செரித்து முடியுமென்று நீங்கள் நம்புகிறீர்களா?

மிக முக்கியமாக இன்னொரு விஷயம் குறித்தும் நாம் பேசியாக வேண்டும், ஆங்கிலம் தனது நிலவியல் ஆக்கிரமிப்பை விடுத்து மொழி ஆக்கிரமப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, உலகின் பல்வேறு மொழிகளை, அதன் கலாச்சாரப் பெருமைகளை, எழுத்து வரி வடிவங்களை ஆங்கிலம் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இந்த ஆபத்தில் இருந்து மொழிகளைக் காக்க வேண்டிய பொறுப்பும், முயற்சியும் அந்த மொழியைப் பயன்படுத்துகிற ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும்.

இதனை எதிர் கொள்கிற தீர்வாக உலகெங்கும் பல்வேறு மொழியியல் அறிஞர்களும் வைக்கக் கூடிய ஒன்று துவக்கக் கல்வியைத் தாய்மொழியில் வழங்குவதும், அதன் வலிமையான அடித்தளத்தில் இருந்து பிற மொழிகளுக்கான திறப்பை உண்டாக்குவதும் தான். உலகின் எந்த மொழி அறிஞனும், இலக்கியவாதியும் தன்னுடைய மொழியை இன்னொரு மொழியின் வரி வடிவங்களில் ஏற்றி விட வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாகத் தனது மொழியில் இல்லாத கலைச் சொற்களை, அகராதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறான். பொது மொழிப் படுத்தல் என்பது ஏனைய முதலாளித்துவக் கோட்பாடுகளைப் போலவே இன்னொரு வணிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் கோட்பாடு, அந்தக் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு தீவிரமான மொழிப் போரை நாம் செய்தே ஆக வேண்டும். மாறாக அந்தக் கோட்பாட்டு ஆளுமைக்கு உட்பட்டு நமது வரி வடிவங்களை இன்னொரு மொழி வரி வடிவங்களுக்குள் முடக்க நினைப்பது "கொசுவுக்குப் பயந்து வீட்டைக் காலி செய்வது" மாதிரியான ஒரு நிலைப்பாடு.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஆங்கிலத்தின் தாக்கமும், பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் ஆங்கிலத்தை ஒரு சமூக அடையாளமாக, உயர் மதிப்பீட்டுக் குறியாக மாற்றி வைத்திருக்கும் நம்முடைய பொதுப் புத்தி, அடக்குமுறைகளுக்கும், தீண்டாமை மாதிரியான சமூக அழுத்தங்களுக்கும் மாற்றாக இத்தகைய ஆங்கில மனநிலை நமது இந்திய சமூகத்தில் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்து நீடித்து வருகிறது, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் நல்ல தமிழ் பேசத் தெரிந்த பல துறை சார்ந்த அறிஞர்கள் கூட தங்கள் கருத்தை வலியுறுத்தியோ, அல்லது பிறரால் கருத்தியல் சீண்டல் செய்யப்படும் போதோ ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த சமூகம் ஆங்கிலம் என்கிற அந்நிய மொழியை எந்த அளவுக்கு ஒரு சமூக அடையாளமாக, மதிப்பீடாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு அதுவே சிறந்த உதாரணம். அதைப் போலவே ஆங்கில மயப்படுத்தல் என்கிற பொதுப் புத்தியில் நமது மொழி இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறது, அந்தச் சிக்கலில் இருந்து நமது மொழிகளைக்  காப்பதும், ஆங்கில மயப்படுத்துதளுக்கு எதிரான கலகக் குரலை உரக்க ஒலிப்பதும் தான் இன்றைய தேவை மாறாக, இத்தகைய குழப்பமான கருத்துக்கள் இளம் தலைமுறையின் உள்ளத்தில் சில எதிர் மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கக் காரணமாகலாம்.

வரி வடிவங்களை மாற்றுவதில் இருக்கும் உளவியல் வழியான சிக்கலையும், மருத்துவ வழியான சிக்கலையும் நீங்கள் புறக்கணிக்க முடியாது, ஒவ்வொரு மொழியின் சொற்களுக்கும் அகராதியில் காணக் கிடைக்கும் புறப் பொருளுக்கும் (Denotative Meaning) , சமூக அரசியல், பண்பாட்டு வழியிலான அகப் பொருள் (Connatative Meaning) ஒன்றுக்குமான வேறுபாட்டையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது, ஒரு சொல் பயன்படுத்தப்படும் போது அதன் வரி வடிவம் பயன்படுத்துகிற மனிதனின் உளவியலில் தன்னையும் அறியாமல் ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

அந்தச் சொல் இதுகாறும் அவனுடைய வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தருணங்கள், நிகழ்வுகள் என்று ஒரு உடலியல் சுழற்சியை வரிவடிவங்கள் உருவாக்கி விடுகிறது. பொத்தாம் பொதுவாக வரி வடிவங்களை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று சொல்வது சமூக உளவியலையே கேள்விக்குள்ளாக்குகிற ஒரு பொருந்தாத மாற்றம் என்பதை இன்னும் ஆழமாக உங்களால் அறிய முடியும் என்று நம்புகிறேன்.

மேலும் தாய் மொழியுடனான நம்முடைய தொடர்பு என்பது நாம் கருவில் இருக்கிற காலத்தில் இருந்தே துவங்கி விடுகிறது, தாயின் சொற்கள், தாயின் மொழி, தாயின் சொற்களுக்கான பொருள், அது தரும் அதிர்வுகள்  என்று கருவில் இருக்கும் குழந்தை மொழியைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறது, முதன்மை மொழி அல்லது தாயின் மொழி பெரும்பாலான "பிராகோ" (Brocha’s Area) பகுதியின் நியூரான்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது, பிறகு கற்றுக் கொள்ளப்படுகிற எந்த இரண்டாம் மொழியும், அதன் வரி வடிவங்களும் வெர்னிக்ஸ் (Werniche’s Area)  பகுதியின் நியூரான்களில் தங்கி இருந்து கட்டளைகளை உள்வாங்கிக் கொள்கிறது.

ஒரு மொழியின் வரி வடிவங்களில் செய்யப்படுகிற மாற்றம், அல்லது வேற்று மொழி வரி வடிவங்களுக்குள் உள்ளீடு செய்யப்படுகிற மொழியின் சமூகம் ஏறத்தாழ ஒரு மிகப்பெரிய உளவியல் குழப்பத்துக்குள் தள்ளப்படும், அதன் தாக்கம் உள்ளார்ந்த இயற்கையின் செயல்பாடுகளுக்கு எதிரானதாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தகவமைப்பின் மூலமாகப் பெறப்படும் நுட்பமான உடலியல் அதிர்வுகளை நாம் இழக்க நேரிடும் என்கிற மருத்துவ உண்மையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஒரு மொழியின் வரி வடிவத்தை இன்னொரு மொழியின் வரி வடிவத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வாதம் எல்லாச் சூழலிலும் ஒரு இயற்கைக்கு முரண்பட்ட வாதம், அத்தகைய மாற்றத்தால் சில வணிக நன்மைகளையும், பொருளியல் வாய்ப்புகளையும் வேண்டுமானால் மானுட சமூகம் பெற்றுக் கொள்ளக் கூடும், ஆனால், உளவியல், நிலவியல், பண்பாட்டியல், அரசியல், தத்துவவியல் என்று பல துறைகளில் நாம் இதுகாறும் பாதுகாத்த பல்வேறு நுட்பமான மானுட வரலாற்றின் ரகசியப் புரிதல்களை இழக்க நேரிடும் அபாயம் இருக்கிறது.

வணக்கங்களுடன்

கை.அறிவழகன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: