கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 6, 2013

குட்டி போபோ……..

1467462_10202354593487127_771410540_n

தெரு முழுவதும் வெடிச் சத்தம் முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளிப் பண்டிகையின் முதல் நாள் இரவு, எட்டு மணி இருக்கும் அப்போது தான் அந்தக் குரல் சன்னமாக வெடிச் சத்தங்களிடையே கேட்டது, அந்தக் குரலை முதலில் கேட்டது நிறைமொழிதான், மெல்ல எனக்கருகில் வந்து "அப்பா", என்றவளைத் தூக்கி "என்னடா" என்றேன்.

"குட்டி போபோ ஏன் கத்திகிட்டே இருக்கு?". கூர்ந்து கவனித்த போது எனக்கும் அந்தக் குரல் கேட்கத் துவங்கியது. வெடி ஓசைக்குப் பயந்து அழுகிற ஒரு குட்டி நாயின் குரல் அது. மாடியில் நின்று தெரு முழுவ…தையும் ஒரு முறை "ஸ்கேன்" செய்து பார்த்தேன், குரல் வரும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. "குட்டி போபோ எங்க இருக்குன்னு தெரியலடா, கொஞ்ச நேரம் கழிச்சு வேணும்னா அப்பா போய்த் தேடிப் பார்க்கிறேன்" என்று சமாதானத்துக்காகச் சொல்லி விட்டு மறந்து விட்டேன்.

ஆனாலும், அந்தக் குட்டி போபோவின் குரல் அதன் பிறகு பெருவிருட்சமாய் மனசுக்குள் வளர்ந்து விட்டது. வெடிச்சத்தம் கேட்டு மிரண்டு எங்கிருந்தோ தப்பி வந்திருக்க வேண்டும் குட்டி போபோ. நிறைமொழியின் கண்களில் கவலையின் ரேகைகள் படிந்திருந்ததை என்னால் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. படியில் இருந்து இறங்கும் போது இயல்பாக பக்கவாட்டுக் குடியிருப்பின் சாளரத்தைப் பார்த்தேன். இன்னொரு குட்டிப் பெண் நிறைமொழியைப் போலவே குட்டி போபோவின் நிலை குறித்துக் கவலை கொண்டிருக்க வேண்டும், அவளது அம்மாவிடம் நாய்க்குட்டியின் குரல் வந்த திசையை நோக்கிக் கையைக் காட்டியபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொல்லி வைத்தாற்போல வளர்ந்த மனிதர்கள் யாருக்கும் அந்தக் குரல் கேட்காமல் போனது அந்தக் கணத்தின் வியப்பான உண்மையாக வெடி ஓசைகளுக்கு இடையில் கரைந்து போயிருந்தது. வீட்டிலிருந்து கீழிறங்கிக் குட்டி போபோவைத் தேட ஆரம்பித்தேன், எதிர் வீட்டு மகிழுந்து ஒன்றின் கீழிருந்து அதன் அழுகுரல் தெளிவாகக் கேட்கவும் குனிந்து பார்த்தேன்.

வெள்ளையும், கருப்பும் கலந்த புள்ளிகள் கொண்ட அழகான குட்டி போபோ. ஏறத்தாழ மகிழுந்தின் பக்கவாட்டில் படுத்துக் கொண்டு கைகளை நீட்டி அருகில் இழுக்க முயற்சி செய்தேன், எனது கைகளில் இருந்து தப்பிப் பின்னோக்கி நகர்ந்து கொண்டது. அதன் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. மகிழ்வான வெடியோசை என்கிற நிலையிலிருந்து அடுத்த படிக்கு முன்னேறி விலை உயர்ந்த வெடியோசை என்கிற வெறி கொண்ட நிலைக்கு தீபாவளிப் பண்டிகை நகரமெங்கும் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக அச்சத்தில் உறைந்திருந்த அந்த குட்டி நாயை மீட்டு மாடிப்படி ஏறும் போதே நிறைமொழியின் குரல் மகிழ்ச்சியில் வெடித்தது, குழந்தைகள் தங்கள் பொம்மைகளையோ, நாய்க்குட்டிகளையோ கொஞ்சும் மொழி மகத்தானது, எந்த விருப்பும், எதிர்பார்ப்புகளும் அற்ற அன்பை அவர்கள் தங்கள் மழலைக் குரலில் குழைந்து வீட்டுக்குள் வழிய விடும் போது உயிர் வாழ்தலுக்கான பொருள் புரியும்.

நாங்கள் கட்டிலுக்கு அடியில் ஒரு அழகான படுக்கையை அதற்காக உருவாக்கினோம், அந்த அறையின் கதவுகளை இருக்க மூடி வெடியோசை பெரிய அளவில் கேட்காத வண்ணம் பார்த்துக் கொண்டோம், குட்டி போபோவின் உடல் நடுக்கம் இப்போது கொஞ்சம் குறைந்திருந்தது, குட்டி போபோவுடன் நானும், நிறைமொழியும் பேசிக் கொண்டிருந்த ஒரு கணத்தில் குழந்தை சாப்பிடும் ஒரு கிண்ணத்தில் சோற்றைப் பிசைந்தபடி அம்மா நின்று கொண்டிருந்தார்கள்.

போபோவாகட்டும்,குழந்தையாகட்டும் தாய்மை வழியச் சோறூட்ட அம்மாக்கள் எங்கே கற்றுக் கொள்கிறார்கள் என்று வருடக் கணக்கில் பயிற்சி செய்தாலும் கண்டறிய முடியாது, இட மாறுதல்கள், அவர்களுக்கான குட்டிக் கதைகள், போலி வாக்குறுதிகள், சென்ட்டிமெண்டல் முத்தங்கள் என்று ஒரு அரை மணி நேரத்தில் ஏறத்தாழ நம்முடைய அரை நாள் வேலைகளை அசாத்தியமாகச் செய்கிறார்கள் அம்மாக்கள்.

முதலில் முரண்டு பிடித்த குட்டி போபோ பின்பு, அம்மாவின் அன்புக்குக் கட்டுண்டு விட்டது, அன்றைய இரவு நிறைவானதாயிருந்திருக்க வேண்டும் நிறைமொழிக்கு, அவ்வப்போது அழுவதும் பின்பு தூங்குவதுமாய் குட்டி போபோ போக்குக் காட்டிக் கொண்டிருக்க எனக்கு வீட்டு முதலாளிகளைப் பற்றிய கவலை வந்தது. வாடகைக்கு இருப்பவர்கள் நாய் வளர்க்கக் கூடாது என்பது பெருநகரங்களின் எழுதப்படாத விதிமுறை.

மறுநாள் காலை வேடியோசைகளோடு தீபாவளி வந்து விட்டிருந்தது, இப்போது குட்டி போபோ கொஞ்சம் தெளிவடைந்தவராய் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தார். அவருடைய வெள்ளையும், கருப்பும் கலந்த புள்ளிகள் வீடெங்கும் மகிழ்ச்சியைத் தெளித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. பத்து மணிவாக்கில் சிவப்பு வண்ண மிதிவண்டியை உருட்டியபடி ஒரு குழந்தைகளின் குழாம் வீட்டை அடைந்தது. மாடியை நோக்கி அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான் எதிர் வீட்டு வாண்டு.

கூட்டமாக அவர்கள் படியேறி வாசலில் வந்து நின்று கொண்டார்கள், நடுவில் இருந்த குண்டுப் பையன் "அங்கிள், பப்லு இங்கே இருக்கா?", அறைக்குள் இருந்த போபோ பப்லு என்கிற அந்தக் குரலைக் கேட்டதும் தாவி ஓடி வாசலுக்கு வந்து விட்டிருந்தார் போபோ. குண்டுப் பையன் குனிந்து போபோவைக் கையில் எடுக்கவும் தனது மென்மையான நாவால் அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் வாஞ்சையோடு நக்கத் துவங்கி இருந்தார் போபோ.

Child-and-Puppy-sharing-a-view

குழந்தைகள் தங்கள் போபோவை மீண்டும் கண்டடைந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள், முத்த மழை பொழிந்தார்கள். எனக்கும் நிறைமொழிக்கும் கூடச் சில முத்தங்கள் கிடைத்தது. இப்போது நிறைமொழியின் முறை, குரலை உயர்த்தி "இது எங்க போபோ", நாங்க தான் வளக்குறோம், அதுக்கு பெட் எல்லாம் இருக்கு" என்று சொல்லவும், குழந்தைகளில் ஒருத்தி "அங்கிள் பாப்புவுக்கு என்னோட சைக்கிள் வேணும்னாலும் குடுக்குறேன், ப்ளீஸ் பப்லுவக் குடுத்துருங்க".

நிறைமொழியை ஒருவாறு சமாதானம் செய்து வாரம் ஒருமுறை நாங்கள் பப்லு என்கிற குட்டி போபோவை சென்று பார்ப்பது என்றும், இடைப்பட்ட காலை நேரங்களில் பப்லுவை அவர்கள் அழைத்துக் கொண்டு வருவது என்றும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பப்லு என்கிற அந்தக் குட்டி போபோ இப்போது அச்சமூட்டும் பெரியவனாக வளர்ந்து விட்டிருக்கிறான். ஆனாலும், நிறைமொழியையும், என்னையும் பார்த்து விட்டால் அவன் காட்டுகிற அன்புக்கு நிகரான ஒன்றை நாம் புவிப்பந்தில் கண்டடைவது ஒன்றும் அத்தனை எளிதானதல்ல.

எனக்கு உறுதியாகத் தெரியும் என் குழந்தையின் மகிழ்ச்சிக்காகவே நான் அந்த நாய்க்குட்டியைத் தேடித் போனேன் என்று, ஆனால், அத்தனை வெடியோசைகளுக்கு நடுவிலும் அழுகிற குட்டி போபோவின் அழுகுரலைக் கண்டு கொண்டு கலங்கிய நிறைமொழி, பக்கத்து வீட்டுப் பெயர் தெரியாத குட்டிப் பெண், தனது புத்தம் புதிய சைக்கிளை பப்லுவுக்காக இழக்கத் துணிந்த இன்னொரு குட்டிப் பெண், "பப்லு" என்கிற தனது மனித நண்பனின் குரலைக் கேட்டுத் துள்ளிக் குதித்து ஓடி வந்த குட்டி போபோ, போபோ இருக்கும் இடத்தைக் கண்டறிந்து நண்பனுக்குச் சொன்ன எதிர் வீட்டுக் குட்டிப் பையா என்று அவர்களின் அன்பும், நேசமும் கொண்ட உலகம் தான் எத்தனை அழகானது.

உண்மையில் கள்ளமற்ற நிஜமான அன்பு காட்டுவது எப்படி என்பது குறித்து நாம் நாய்க்குட்டிகளிடமும், குழந்தைகளிடமும் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

*******************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: