கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 6, 2013

நம்ம வண்டி நகருமா என்ன?

1426469_10202362769491522_754049840_n

நேற்று மாலையில், பரபரப்பான லால்பாக் சதுக்கம் அருகில் மெல்ல நகரும் மனிதக் கூட்டம், சிவப்பு விளக்கில் காத்திருக்கும் ஊர்திகள், கவலைகள் மூச்சுக் காற்றில் பரவி ஊர்திக்குள் அடைந்திருக்க என்னுடைய மகிழுந்துக்கு முன்னதாக ஒரு தாயும் குழந்தையும் "ஹோண்டா ஆக்டிவா" வில், அந்தக் குட்டிப் பெண்ணுக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம்.

ஆரஞ்சு, பின்பு பச்சை, பக்கவாட்டில் வண்டிகள் சரசரக்கிறது, விக்கென்று வண்டி துள்ளிய வேகத்தில் குழந்தை கையில் இருந்த புத்தகப் பையைத் தவற விட்டுத் தவிக்கிறாள்…, அம்மாவுக்குத் தெரியாது விழுந்த பை குறித்து, குழந்தை அம்மாவின் முதுகைத் தட்டி விஷயத்தைச் சொல்வதற்குள் முன்னகர்ந்து பக்கவாட்டில் இருபது அடி நகர்ந்து விடுகிறது அவர்களின் வண்டி. இன்னொரு குழந்தையைப் போலவே எனக்கு முன்னாள் விழுந்து கிடக்கிறது புத்தகப் பை.

பின்னிருக்கிற ஊர்திகளின் ஓசைக்கு பிரதமரே அங்கு நிற்க முடியாது. என்னுடைய மகிழுந்தின் முன்னாள் மத்தியில் இருக்கிறது புத்தகப் பை. நான் நகரத் துவங்கினால் அனேகமாக அந்தக் குழந்தையின் புத்தகப் பை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. என் குழந்தையின் புத்தகப் பையைப் போலவே அதற்குள் மெல்லிய விரல்களின் தடம் பதிந்த சில சொற்களும், பின்புறம் கடிக்கப்பட்ட ரப்பர் பென்சிலும் இருக்கக் கூடும் என்பதை சுட்டுகிறது எனது இதயத் துடிப்பு.

பச்சை விளக்கை சுட்டும் நொடிகள் நகர நகர பின்னிருக்கிற மனிதக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. "நம்ம வண்டி நகருமா என்ன?". குழந்தை பையைப் பார்க்கிறாள், என்னைப் பார்க்கிறாள். கையைக் காட்டி வந்து எடுத்துக் கொள் என்கிறேன் நான். அச்சப்படுகிறாள் குழந்தை, வேறு வழியில்லை, வண்டியை அணைத்து விட்டு இறங்கி எடுத்துக் குழந்தையின் கைகளில் பையைக் கொடுக்க புன்னகையால் நிறைக்கிறாள் என்னையும் பேரண்டத்தையும் குழந்தை.

அம்மா கைகளைத் தூக்கி வணக்கம் சொல்கிறார் தொலைதூரத்தில். ஊர்திகளின் ஓசையும், பெருமிதமும் நிறைந்திருக்கக் கால்கள் தரையில் படாமல் பறந்தபடி மீள்கிறேன் ஊர்திக்குள். மீண்டும் ஒளிர்கிறது சிவப்பின் நொடிகள். பச்சை விழுந்து வண்டி நகர்கையில் பக்கவாட்டில் இருந்து இதயம் காட்டிப் புன்னகைக்கிறார் போக்குவரத்துக் காவலர். இப்போது மகிழ்ச்சியை நிறைத்துக் கொண்டு பறக்கிறது மகிழுந்து.

எதிரே மிகப்பெரிய விளம்பரத் தட்டியில் தனது மந்திரங்களால், தத்துவங்களால் "உலகை மாற்றுவோம் வாருங்கள்" என்று அனைவரையும் அழைக்கிறார் மத குரு ஒருவர்……….அவர் அருகில் இருந்திருந்தால் இப்படிச் சொல்லி இருப்பேன், "தத்துவங்களால் நீங்கள் மாற்ற நினைக்கும் இந்த உலகை மாற்றுவதற்கு உண்மையில் ஒரே ஒரு அளவற்ற புன்னகை போதுமானது ஐயா”.

****************

Advertisements

Responses

  1. அருமை. வாழ்த்துகள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: