கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 6, 2013

மச்சான் எனப்படுவது யாதெனில்……..

579187_3591094985550_845970340_n

அப்போதெல்லாம் விடுமுறைக் காலங்களைக் கழிப்பது ஒரு அற்புதமான அனுபவம், அத்தை வீடுகள், மாமா வீடுகள் என்று எல்லா வீட்டின் கதவுகளும் எப்போதும் திறந்தே கிடந்த காலம், அப்படி ஒரு கோடைக் காலத்தில் எனக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது, அழகிய மாலை ஒன்றில் மச்சானும், அத்தாச்சியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

மச்சானின் உயரமும், இதயம் திறக்கிற புன்னகையும் எப்போதும் அவரை நெருக்கமாக வைத்திருக்க உதவும் காரணிகள் அப்போது, அவர்கள் கிளம்பிச் …செல்லத் தயாரான ஒரு மாலையில் அம்மாவிடம் அடம் பிடித்து அழத்துவங்கினேன், மச்சானோடு நான் ஊருக்குப் போக வேண்டும் என்று.

ஒருவழியாய் அனுமதி கிடைத்த பிறகு பில்ட்டும், ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட்ட சில சட்டைகளை அம்மா "ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ்" என்று அச்சடிக்கப்பட்டு செட்டிநாட்டின் எல்லா வீடுகளிலும் காணக் கிடைக்கும் ஒரு மஞ்சள் பையில் திணித்து உடைந்த முறுக்குகளையும், சீடை உருண்டைகளையும் மேலாக வைத்து வழியனுப்பினார்கள்.

உலகெங்கும் சுற்றும் வாய்ப்பிருக்கிற இன்றைய எல்லாப் பயணங்களையும் விட அந்தப் பயணம் மிக அழகானதாக இருக்கப் பக்கத்தில் இருந்த அன்பான மனிதர்களை விட வேறெந்தக் காரணமும் இல்லை. நாங்கள் தேவகோட்டை ரஸ்தாவில் இறங்கினோம். அங்கிருந்து அப்போது வெகு தொலைவாக இருந்த ஒரு ஊருக்கு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம், வழியெங்கும் ஆவாரம் பூக்கள் எனது வருகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தன. பகல் வெளிச்சம் மரங்களில் அடையத் துவங்கி இருந்த ஒரு அரை இரவில் நாங்கள் மச்சானின் வீட்டை அடைந்தோம்.

ராக்கோழிகள் சுதிப் பெட்டியிலிருந்து கசியும் இசை போல சீராக இரைந்து கொண்டிருக்க பனைமரங்களின் நிழல் நெடிதாய் கிழக்கில் படுத்திருந்தது அந்த மாலையில், அந்த ஓட்டு வீட்டின் பிம்பம் இன்னும் என் கண்களில் நிறைந்திருக்கிறது, சுற்றிக் கட்டப்பட்ட ஒட்டு வீட்டின் நான்கு பக்கத் தாழ்வாரத்தில் உயிர் வாழ்க்கை நிறைந்திருந்தது.

ஒருபக்கமாய் அடுக்கி வைக்கப்படிருந்த விறகுகள், கிழக்குத் தாழ்வாரத்தில் இரவு உணவைச் சமைத்து முடித்துப் புகைந்து கொண்டிருந்த அடுப்பு, மின்சாரம் குறித்த எந்தக் குறிப்புகளும் இல்லாத லண்டியன் விளக்கு, சுவற்றில் கரும்புகையோடு ஒட்டிக் கிடந்த சிம்னி விளக்குகள், பக்கவாட்டில் படிகிற மஞ்சளான லண்டியன் விளக்கொளியில் வெளிப்படுகிற உன்னதமான மனித உயிர்களின் உரையாடலில் ஒன்றிப் போய் சிரிக்கிற முகங்கள் எல்லாமே அழகானவை. அந்த முகங்களில் நேசத்தையும், உவப்பையும் தவிர வேறொன்றையும் பார்க்கவே முடியாது.

மடிக்கப்பட்ட கோரைப்பாயை விரித்து பெரிய அத்தை ஆவி பறக்கப் பரிமாறிய அந்த இரவு உணவின் வாசம் இன்னமும் நெஞ்சக் குழிகளில் நிறைந்து கிடக்கிற பரிதவிப்பை இந்த எழுத்துக்களால் அத்தனை எளிதாய் விளக்கி விட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. நிலவொளி பால் நீரில் அலையடிக்க, மச்சான் மாமரக் கதைகளைச் சொன்ன அந்த இரவின் கணங்கள் தான் வாழ்க்கையை எத்தனை அழகானதாக உணரச் செய்திருந்தன, பெரிய அத்தாச்சியின் ஊரான தென்னீர் வயலுக்குப் போகிற வழியில் "ஆய்" வரும் என்று யாருக்குத் தெரியும், வழிக் கிணற்றில் நீர் இறைத்து நீங்கள் ஊற்றிக் கழுவியது வற்றாத அன்பல்லவா?.

திடீரென்று ஒரு இரவில் "கோகுலம்" நூலைக் கேட்டு நான் அடம் பிடிக்க அந்த இரவில் எங்கு சென்று கொண்டு வந்தீர்களோ அத்தனை கோகுலங்களை, நெரூடாவின் கவிதைகளை விடவும், செகாவின் சிறுகதைகளை விடவும் அவையன்றோ இப்போதும் சிலிர்க்க வைக்கும் இலக்கியங்கள் என் இதயச் சுவர்களில்.
பிறகு எல்லா விடுமுறைகளையும் நான் உங்களோடு கழிக்க விரும்பினேன். ஆனால், வாழ்க்கை அத்தனை எளிதாக விருப்பங்களை நிறைவேற்றி விடுகிற வேலையாளா என்ன? தனது விருப்பங்களைச் சுமத்தி மனிதர்களை விரட்டி அடிக்கும் முதலாளி அல்லவா அது.

எனக்கு நிறைய மச்சான்கள் இருப்பது உங்களுக்கும் தெரியும் தான், ஆனாலும், மச்சான் என்கிற சொல்லுக்கு "பிரேம்நாத்" என்று மொழிபெயர்த்துத் தான் இன்னமும் பொருள் கொள்கிறேன் நான். வெகு குறைவான எனது இளமைக் கால நாட்களையே உங்களோடு நான் கழித்திருக்கிறேன், ஆனாலும், அந்த நாட்கள் மனித உறவுகளின் அன்பை, மாறாத நேசத்தை உங்கள் தோட்டத்து மாமரங்களைப் போல எனக்குள் காலம் காலமாய்ப் பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பழுக்கின்றன.

நெடுங்காலமாய் உங்களை விட்டுத் தொலைவில் இருக்கிறோமோ என்கிற ஐயம் இருந்து கொண்டிருந்தது, ஆனால், தொழில் நுட்பமும், சமூக இணைய தளங்களும் ஒருநாள் மாலையில் உங்கள் புகைப்படத்தையும் பெயரையும் எனது மடிக்கணினியின் திரையில் உமிழ்ந்தபோது உன்னதமான அந்தப் பழைய இரவொன்றின் நிலவொளியில் நீங்களும் நானும் உரையாடிக் கொண்டிருந்த மகிழ்ச்சியை நான் திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

நேற்று, இன்று, நாளை என்று நாட்கள் வேண்டுமானால் நகரலாம், நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பையும், நெகிழ்வையும் யாரும் அத்தனை எளிதில் நகர்த்தி விட முடியுமா என்ன? ஒருமுறை அம்மாவிடம் அறிவு ஒரு பின்னூட்டம் கூடப் போடுவதில்லை என்று வருத்தப்பட்டீர்களாம், அந்தக் குழந்தைத்தனமான அன்புதான் தானே மச்சான் உங்கள் மீதான நேசத்தை விருட்சமாய் வளர்த்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு அமைதியான மாலையில் நமது பழைய வீடிருந்த நிலத்தருகில் மெல்ல நடந்து சென்று நிலவொளியில் நின்று உற்றுப் பாருங்கள், தோட்டத்துச் செடிகளிலும், மரங்களிலும் விருப்பங்களும், பின்னூட்டங்களும் மஞ்சள் மலர்களாய் பூத்துக் கிடக்கும்.

லவ் யூ மச்சான்ன்ன்னன், இந்தப் புகைப்படத்துல கூட உங்களுக்குப் பின்னாடி இருக்கிற ஈபில் கோபுரம் ஒருநாளும் உங்களை விட உயரமா எனக்குத் தெரியவே தெரியாது.

*****************

Advertisements

Responses

  1. மச்சான் எனப்படுவது யாதெனில்… = உங்கள் பதிவில் கிராமத்தைப் பார்க்கிறோம், அன்பை, பாசத்தைப் பார்க்கிறோம். நெகிழ வைக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்

  2. மச்சான் எனப்படுவது யாதெனில்… = உங்கள் பதிவில் கிராமத்தைப் பார்க்கிறோம்,
    அன்பை, பாசத்தைப் பார்க்கிறோம். நெகிழ வைக்கிறது. எனது பக்கத்தில்
    பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கை.அறிவழகன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: