கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 1, 2014

பெண்ணின் மனமும், உடலும்.

heartshare-international-2

ஒரு வருடம் தனது நிகழ்காலத்தை முடித்துக் கொள்கிற கடைசி நாளில் இரண்டு காட்சிகளை நான் நினைவு கூர்ந்தேன், அவற்றில் சில காட்சிகள், வெவ்வேறு இடங்களில் வெகு இயல்பாக இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன, அவை நமது கருவிழிப் படலங்களில் சயனைட் துளிகளைப் போலச் சொட்டிப் படிந்து இதயச் சுவர்களின் நினைவகங்களில் பல காலம் உறுத்திக் கொண்டிருக்கும் கொடுங்கணங்கள் அவை.

வாழ்க்கை குறித்த மனித மனத்தின் முன்வடிவுகளை மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய மிக… யதார்த்தமான வேடிக்கைக் காட்சியாய் அவற்றைக் கடந்து ஒரு மனசாட்சியுள்ள மனிதனாக என்னால் நகர முடியவில்லை. வக்கிரம், அகங்காரம், அடக்குமுறை, ஆதிக்கத்தின் ஒட்டு மொத்தக் குறியீடு என்று அவற்றை எப்படி வேண்டுமானாலும் அவற்றை நாம் குறியீடு செய்யலாம், ஆனால், எல்லாக் குறியீடுகளையும் தாண்டி அது நம்மிடம் உருவாக்கும் தாக்கமோ மானுட சமூகத்தின் பண்பாட்டைக் கேள்விக் குறியாக்குவது மட்டும்தான்.

நிகழ்வு – 1

மாநகரத்தின் பரபரப்பான பேருந்து நிலையச் சந்திப்பு, ஊரகப் பேருந்தில் இருந்து நிறைய மனிதர்கள் இறங்கிப் பெருமூச்செறிகிறார்கள், பயணத்தின் களைப்பும், நிகழ்கால இருப்பின் சுமையை மூட்டைகளோடு சுமந்து கொண்டிருக்கும் அவர்களில் பலருக்கு நாம் நினைப்பதைப் போல வாழ்க்கை அத்தனை எளிதானதாக இல்லை, துணிக்கடைப் பையை ஒரு கையிலும், உடலின் இன்னொரு பாதியோடு இன்னொரு கையில் குழந்தையைப் அணைத்தபடியும் படிகளில் அவசர அவசரமாக இறங்கி நிற்கிறாள் அந்தப் பெண்.

தெரியாத ஊரில் நிற்கிற நம்முடைய அம்மாவைப் போலவோ, தொலைவில் இருந்து பார்க்கையில் தெரிகிற நம்முடைய துணைவியைப் போலவோ, மருமக்களைத் தூக்கிக் கொண்டு நிற்கிற நமது தங்கையைப் போலவோ இருக்கிறாள் அந்தப் பெண். பின்தொடர்ந்து இறங்கி ஒரு முதலாளியைப் போல நிற்கிறான் அந்த இளைஞன், அந்தப் பெண்ணுடைய காலையிலேயே குடித்திருக்கிறான் என்பதை அவனுடைய தள்ளாடுகிற உடலும், சிவந்த கண்களும், குளறுகிற சொற்களும் வெட்ட வெளிச்சமாய்க் காட்டுகிறது. அந்தக் குழந்தை அப்பாவின் தள்ளாட்டத்தை ஒரு விதமான மருட்சியோடும், அச்சத்தோடும் பார்க்கிறது.

"நடத்துனரிடம் சில்லறையை மறக்காமல் வாங்கினாயா?" என்று தள்ளாட்டம் குறையாமல் உறுதி செய்து கொள்கிறான், நிலமும், வானமும் அவனுடைய தீண்டத்தகாத சுமையைத் தாங்க முடியாத அவமானத்தில் தடுமாறுகின்றன. எல்லாச் சுமைகளையும் அந்தப் பெண்ணே சுமக்கிறாள், பெண்ணின் உடலைத் தனது உடமை என்று கருதுகிற அந்த சாத்தானோ காரணங்கள் இன்றி மென்மையான அந்தப் பெண்ணுடலைத் துன்புறுத்துகிறது, குளிருக்காக அவள் அணிந்திருக்கிற ஆடையைப் பிடித்து இழுக்கிறது, பெண்ணின் மனமோ தனது உடலுக்குக் காலம் காலமாய் தனக்கு நேர்கிற அவமானம் தானே இது என்று எந்தச் சலனமும் இன்றி நகர்கிறது.

எந்தச் சுமைகளையும் சுமக்கத் தயாரற்று தனது போக்கில் தள்ளாடியபடி நடக்கிறான் அந்த இளைஞன், கண்களில் மாநகரம் வேடிக்கை பார்க்கிற அவமானம் ஒருபுறம், குழந்தை நேற்று இரவில் ஏதேனும் சாப்பிட்டிருக்க வேண்டும், அதன் கண்களில் பசியின் களைப்பும், குழப்பமும் எஞ்சி இருக்கிறதே என்கிற சினம் ஒருபுறம், தள்ளாடும் தனது கணவனின் கால்கள் சாலைத் தடுப்புகளைத் தாண்டி நெடுஞ்சாலை ஊர்திகளின் பக்கமாக நகர்ந்து விடுமோ என்கிற பாதுகாப்பு உணர்வு இன்னொரு புறம் என்று சிக்கலான உயிராய் மாநகரத்தின் சாலையில் நடக்கிறாள், வேடிக்கை பார்க்கிற நூற்றுக் கணக்கான இணைக் கண்களைப் போலவே நானும் அந்தக் காட்சியைப் பார்த்தபடி எனக்கே எனக்கான உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தக் காட்சி கண்களை விட்டு விலகி நெடுநேரம் ஆன பின்பும் அந்தக் குழந்தையின் பசி பொதிந்த முகமும், அந்தப் பெண்ணின் நசிந்து போன உடலும் விலக மறுக்கிறது, பெண்ணின் உடல் அவமதிக்கப்படுகிற கணங்கள் எந்த வடிவிலும் ஏற்க முடியாத சுமையாய் மாறிப் போயிருக்கிறது. தனது உடலை அல்லது மனதைக் குறித்த எந்தக்கவலையும் அற்ற ஒரு மனிதப் பதரின் உயிரைப் பாதுகாத்தபடி நடக்கிறாள் அந்தப் பெண். அவன் வீழப் போகிற போதெல்லாம் ஒரு தேவதையின் சிறகுகளைப் போல அவளுடைய கைகள் விரிந்து அவனை அணைத்துக் கொள்கின்றன.

நிகழ்வு – 2

31592

விடுமுறையில் அத்தைகளின் ஊருக்குப் போவதென்பது அத்தனை மகிழ்ச்சி தரக்கூடியது, விவரம் தெரிந்த நாட்களில் இருந்து விடுப்புக் காலங்களில் அப்படித்தான் பயணித்திருக்கிறேன் நான், நகர வாழ்க்கையில் மறைக்கப்பட்ட அடையாளங்கள் ஊரகப் பகுதிகளில் எல்லையிலிருக்கும் ஐயனார் சிலையைப் போல வானளாவி நிற்கிற கதையை அப்போதெல்லாம் அறிந்திருக்கவில்லை மனம், செம்மண் புழுதியில் புரண்டு விளையாடும் அழுக்கற்ற மனம் கொண்ட நாட்களின் ஒரு மாலையில் அப்படித்தான் அத்தையின் ஊரில் இருந்தேன், மாமா, என்னை அழைத்துக் கொண்டு கடைக்குப் போனார்.

போகிற வழியில் ஒரு வீட்டின் வாசலில் தயங்கி நின்றபடி "ஐயா" என்று குரல் கொடுத்து விட்டு பவ்யமாக நின்று கொண்டார் மாமா, நானும் யாரோ ஒரு முதியவரை எதிர் நோக்கியபடி வாசலில் நின்றிருந்தேன், மாமாவுக்கு அனேகமாக நாற்பதுக்கு மேலிருக்கும் வயது, "என்னடா போசு" என்று வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த பெரியவருக்கு வயது இருபத்தைந்தைத் தாண்டி இருக்க வழியே இல்லை. பதறித் துடித்தது மனம், ஒடுங்கிப் போனது உள்ளம், மகிழ்ச்சியும், பெருஞ்சிரிப்பும் குடி கொண்டிருந்த சின்னஞ்சிறு மனதுக்குள் தன்னை விட வயதில் பெரிய ஒரு மனிதரை "என்னடா?" என்று எகத்தாளமாய் அழைக்கும் ஒரு வக்கிரத்தைச் சகிக்க முடியவில்லை.

நிலப்பட்டா ஒன்றை ஒளிநகல் எடுக்க வேண்டுமென மாமாவிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போகிறான் அந்த இளைஞன், வயதில் மூத்தவர்களை யாரும் அப்படி ஒருமையில் அழைத்ததை இதுவரை பார்த்திராத மனமோ கதறித் துடித்தது, மாமாவுக்கு நேர்ந்த மிகப்பெரும் அவமானம் அதுவென்று புரண்டு தவித்தது. மாமாவோ எதுவுமே நிகழாதது போல தொலைவில் விட்டிருந்த செருப்பை மாட்டிக் கொண்டு நடக்கத் துவங்கி இருந்தார்.

சாதி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து, கல்வி, பதவி, பாலினம் என்று எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை அழைக்க ஏதோ ஒரு நெறி இருப்பதாகவும், அந்த நெறி தமிழ்ச் சமூகத்தின் குருதியில் ஊறிக் கிடப்பதாகவும் நம்மை தந்தையார் ஏமாற்றி இருக்கிறார் என்பதை முதன்முதலாக உணர்ந்து கொண்ட அந்தக் கணம் மிகக் கொடுமையானதும், மறக்க இயலாததுமாக நெஞ்சக் கூட்டுக்குள் உறைந்து கிடக்கிறது, இன்றும் அத்தகைய இழிவுகளை, அவமானங்களைத் தாங்கியபடி ஏதும் நிகழாத மனிதர்களைப் போலவே எத்தனையோ மாமாக்களும், அப்பாக்களும், ஐயாக்களும் இந்திய தேசத்தின் வீதிகளில் நடந்து போகிறார்கள்.

ஆண்கள் பெண்களின் உடலை அவமதிப்பது போல ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உடலை வாழத் தகுதி அற்ற உழைக்கும் அழுக்கு எந்திரங்களாகப் பார்க்கும் கோடான கோடி மனிதர்கள் தங்களை உயர் சாதிக்காரர்கள் என்றும், பிராமணர்கள் என்றும் எந்தத் தயக்கமும் இன்றி இன்னமும் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், தன்னுடைய உலகை அழகாக்கும் உழைத்துத் தேய்ந்து போன சக மனிதனின் உடல் குறித்தும், மனம் குறித்தும் எந்த விதமான அக்கறையும், தயக்கமும் இன்றித் தொடர்ந்து அவனை அவமதிக்கும் முதல் நிகழ்வு மனிதனுக்கும், இரண்டாம் நிகழ்வு மனிதனுக்கும் என்னைப் பொருத்தவரை எந்த வேறுபாடுகளும் இல்லை, அவன் மதுவைக் குடித்துப் போதையில் உழன்று பெண்ணுடலை அவமதிக்கிறான், இரண்டாமவனோ, சாதியைக் குடித்து அதன் போதையில் உழன்று சக மனித உடலை அவமதிக்கிறான்.

முகநூலில் இரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் கவிஞரின் கீழ்க்கண்ட சொற்களை சினந்தும், ஆற்றாமையோடும் வாசித்தேன்,

"ஒரு பெண்குழந்தை பிறந்து, தன் கண்களை மலர்த்துகையில் அதற்கு ஒரு பெயர் மட்டுமே. வளர்ந்து, அவளது தலையில் ஆணியடித்து இறுக்கப்பட்ட சமூகத் தீர்மானங்களை மறுத்தோடுபவளாக வாழும்பட்சத்தில், எத்தனை பெயர்களோடு மடிந்துபோகிறாள்!!!"

ஒரு சக மனிதனாக மிகுந்த அவமானமாய் உணர்ந்தேன், வாழ்க்கையின் வலிகளை எதிர் கொள்ளும் துணிவை எழுதுகிற என் சமூகத்தின் பெண் கவிஞருக்கே இந்த நிலைத் தகவலைப் போடும் பாக்கியத்தைத் தான் எம் சமூகம் கொடையளித்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னதான இன்னொரு ஆண் கவிஞரின் சொற்களோ கண்களை சிவக்க வைத்தது, தன்மான உணர்ச்சியை அழைக்கழித்து அவமானம் செய்தது, அந்தச் சொற்களின் மூலம் இப்படிச் சொன்னது,

"ஐயா, எங்களை இப்படி ஒடுக்குகிறீர்களே இது நியாயமா? எங்களை எப்படி அடித்து நொறுக்குகிறீர்களே இது நீதியா, நாங்கள் பாவமில்லையா, நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்லவா, எங்களை நீங்கள் இப்படி அவமதிக்கலாமா?"

நாடறிந்த இரண்டு கவிஞர்கள் பாலின வேறுபாடுகளைக் கடந்து அவமதிக்கப்பட்டிருப்பது தான் செய்தி, வேறொன்றுமில்லை. புத்தம் புதிய ஆண்டுகள் பலவற்றைக் கடந்து கொண்டே தானிருக்கிறோம், ஆனாலும், வக்கிரமும், அநீதியும் நிறைந்த நமது அழுக்கு மனங்களைக் கழுவித் துடைக்கும் ஒரு புத்தாண்டு இந்த சமூகத்தின் வரலாற்றில் என்றாவது வருமா என்கிற கேள்வி விடைகள் ஏதுமின்றிக் காற்றில் அலைகிறது.

பெண்ணின் மனமும், உடலும் மதிக்கப்படுகிற, ஒடுக்கப்பட்டவனின் மனமும், உடலும் மதிக்கப்படுகிற ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல நாம் தலைவர்களை எதிர் நோக்கி இருக்கிறோம், நம் கண்ணுக்கு முன்னே நகர்ந்து உயிர்ப்போடு இருக்கும் இதே சமூகத்தின் வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டப்படும் தொட்டிலில் ஏதோ ஒன்றில் இருந்து தான் நமக்கான தலைவர்கள் பிறக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மையை மறந்து விட்டு………

 

***********


Responses

 1. வருந்த வைக்கும் நிகழ்வுகள்…

 2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  அன்புடன் DD

 3. பெண்ணின் மனமும், உடலும் = கை.அறிவழகன் எழுதிய பதிவு.
  பதிவில் ஒரு பகுதி:
  பெண்ணின் மனமும், உடலும் மதிக்கப்படுகிற, ஒடுக்கப்பட்டவனின் மனமும், உடலும் மதிக்கப்படுகிற ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல நாம் தலைவர்களை எதிர் நோக்கி இருக்கிறோம், நம் கண்ணுக்கு முன்னே நகர்ந்து உயிர்ப்போடு இருக்கும் இதே சமூகத்தின் வீடுகளின் தாழ்வாரங்களில் கட்டப்படும் தொட்டிலில் ஏதோ ஒன்றில் இருந்து தான் நமக்கான தலைவர்கள் பிறக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மையை மறந்து விட்டு…

  எனது பக்கத்தில் பகிர்கிறேன். குடியின் கொடுமை, தீண்டாமையின் அவலம் – பற்றி மிகவும் கலங்க வைக்கும் பதிவு. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு கை.அறிவழகன்.

 4. padikaatha penkal ithuthan vaazhkaiyenru yetrukollavum allathu vaarthaiku vaarthai pesividavo elithakirathu. paditha penkal pesinal velaiku pohum thimir enra otrai vaarthaiyal aval tharapu nyaayamey nasukapattu vidukirathu….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: