கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 7, 2014

ஒற்றைத் தொகுதியில் ஊசலாடும் சமூக நீதி.

imagesCAOX973F
நள்ளிரவில் அடித்து எழுப்பினாலும் "சமூக நீதி, சமூக நீதி" என்று கூவிக் கொண்டே எழும் ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்கள் எல்லாம் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தை மேசைகளில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள.

சமூக நீதியைக் குத்தகைக்கு எடுத்தவரும், மதவாத மற்றும் சாதிய வாத ஆற்றல்களுக்கு எதிராக மாவீரன் நெப்போலியனைப் போல களமாடுகிற தலைவர் என்று நம்பப்படுகிற அல்லது நம்ப வைக்கப்படுகிற கருணாநிதி தனது வழக்கமான ராஜதந்திரப் புன்னகையோடு கூட்டணிக் கட்சிக்கான தொகுதிக் குறிப்பை திருமாவளவனிடம் கையளிக்கிறார்.

நம்ப இயலாத அந்தக் காட்சியை ஒரு கேலிப் புன்னகையோடு தமிழக அரசியல் வரலாற்றில், தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னொரு அநீதி என்று அமைதியாகப் படம் பிடிக்கின்றன சுற்றி இருக்கும் ஊடகங்கள்.

சமூக நீதி கண்ணுக்கு எதிராகத் தோற்றுப் போனது குறித்து எந்தச் சலனமும் இன்றி சமூக நீதியை வாய் கிழிய மேடைகளில் பேசும் அனைவரும் அங்கே "திருமாவளவன்" என்கிற பெயரில் நின்று கொண்டிருக்கும் ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் ஆட்சி அதிகாரக் கனவுகளில் ஆசிட் அடித்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் தலித் மக்களின் கடந்த பத்தாண்டு கால அரசியல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு அது.

10007509_750121988333342_822527104_n

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் ஒரு கூட்டணிக் கட்சியாக மட்டுமன்றி முரசொலி மாறனுக்குப் பிறகு கருணாநிதியின் மனசாட்சியாக, அவர் பேச நினைத்ததைப் இசை அமைத்துப் பாடுகிற ஒரு பின்பாட்டு வித்துவானாக இத்தனை காலம் அறிவாலயத்தின் இன்னொரு கதவாக இருந்து வந்த திருமாவளவனுக்கு அரச பரிவாரத்தின் முன்பாக தளபதி அடித்த அற்புதமான ஆப்பு அது என்றும் சொல்லலாம். ஏனென்றால் இம்முறை வேட்பாளர் தேர்வில் துவங்கி அண்ணன் தம்பிகளுக்கு ஆப்பு அடிப்பது வரை எல்லாமே தளபதியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இன்றைய கணக்குகளின் படி ஏறத்தாழ தமிழகத்தில் வாழும் 45 % தலித் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களிக்கக் காத்திருக்கிறார்கள், எஞ்சி இருக்கும் மக்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு (அ. தி. மு. க, தே. மு. தி. க, காங்கிரஸ், இடதுசாரிகள்) வாக்களிக்கிறார்கள். இந்த மகத்தான வாக்கு வங்கியை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை நோக்கி திசை திருப்பிய பெரும்பணி முழுவதும் திருமாவளவனால் கடந்த பத்தாண்டுகளில் செய்யப்பட்டது.

இதற்காக அவர் செய்த தியாகங்களும், பட்ட அவமானங்களும் சொல்லி மாளாதவை, ஒரு பக்கம் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்தே ஈழத் தமிழர்களுக்காக அவர்களின் நியாயமான அரசியல் தீர்வுகளுக்காக உழைத்தவராக இருந்த போதிலும் கருணாநிதியின் தேவைகளுக்காகவும், தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவும் அந்த நற்பெயரை இழந்தவர்.

தமிழ் தேசியக் கட்சிகளால் கருணாநிதியுடன் சேர்ந்து இருப்பதற்காகவே தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர். தலித் மக்களை ஒரு அமைப்பாகத் திரட்டுதல் என்கிற கடினமான அண்ணல் அம்பேத்கரின் கனவை தமிழ் மண்ணில் ஏறத்தாழ நனவாக்கிக் காட்டியவர் என்று சொல்லலாம்.

ஒருதலைப் பட்சமாக திரைக் கவர்ச்சியை மட்டுமே நம்பி எம்.ஜி.யாரின் கனவுப் பிம்பங்களில் மூழ்கிப் போயிருந்த எண்ணற்ற தலித் மக்களின் பெருந்திரளை அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை நோக்கி நகர்த்தி ஒரு அமைப்பாக்கிய பிறகு அவருடைய அரசியல் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தனது கடுமையான உழைப்பாலும், அறிவாலும் மாற்று சமூக மக்களின் தலைவர்களிடத்தும் நன்மதிப்பைப் பெறுகிறார்.

எந்த ஒரு தனி மனிதரையும் தாக்கிப் பேசும் அநாகரீகமான போக்கை அவர் மேடைகளிலும் சரி, நேரிலும் சரி கடைபிடிப்பதில்லை, மொத்தத்தில் அரசியலில், சமூகத்தில் பண்பாட்டு விழுமியங்களுக்கும், முதிர்வான சமூக அமைதிக்கும் ஒரு அடையாளமாக அவர் இருக்கிறார்.

வாக்கு வங்கி அரசியல் சதுரங்கத்தில் அதீத நம்பகத்தன்மையும், நேர்மையும் மட்டுமே வெற்றிக்கான வழிகள் இல்லை என்பதை அவர் நேற்றைய வெட்டி வீழ்த்துதளுக்குப் பிறகும் உணர்ந்தது போல் தெரியவில்லை, இடதுசாரிகள் தி. மு. க கூட்டணிக்கு வர வேண்டும் என்கிற கருணாநிதியின் ஊமை மனசாட்சியை ஊடகங்களில் ஒப்பாரி வைத்து விட்டுத்தான் வெளியேறுகிறார்.

அரசியலில் அமைப்பாக்குதல் என்கிற ஒரு பயணத்தில் இந்திய அரசியல் வழிமுறைகளைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரமே இறுதித் தீர்வாக இருக்கிறது, தலித் மக்கள் எதிர் கொள்கிற பல்வேறு நெருக்கடிகள் இன்று ஆட்சி அதிகாரத்தின் மூலமே வருகிறது என்ற போதிலும், தீர்வும் அதற்குள் தான் கண்டடையப்பட வேண்டும்.

protest-againt-sri-lankan-presidents-visit-to-india

இதயத்திலும், நுரையீரல்களிலும் கொடுக்கப்படும் இடங்களை வைத்துக் கொண்டு எந்தக் கூட்டணியிலும் அரசியல் ஆட்சி அதிகாரத்தை நோக்கிப் பயணிக்க முடியாது என்கிற எளிய உண்மை தெரிந்த ஒருவரால் இன்று ஒட்டு மொத்த தலித் மக்களும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறார்கள். தளபதிகளால் பரிசளிக்கப்பட்ட இந்த கூர் மழுங்கிய மொன்னை வாளால் கடிக்க வருகிற் ஒரு கொசுவைக் கூட அடிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

விடுதலைச் சிறுத்தைகளும் அதன் தலைமையும் அதன் நம்பகத்தன்மையை இன்று கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். எல்லாத் தொகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருக்கும், ஏறத்தாழ எழுபது லட்சம் அடிப்படை உறுப்பினர்களை வைத்திருக்கும் அமைப்பாக வளர்ந்து ஏற்கனவே பெற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கூடப் பெற முடியாத அரசியல் அடிமைகளாக விடுதலைச் சிறுத்தைகள் தோற்றுப் போனதை தமிழகத்தின் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனும் தலை கவிழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இது வெறும் விடுதலைச் சிறுத்தைகளும், திருமாவளவனும் அடைந்த தோல்வியா என்றால் உறுதியாக இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அதன் புதிய தளபதிகளின் மீதும் நம்பிக்கை வைத்துக் கொண்டு காத்திருந்த எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தோல்வி, சமூக நீதியின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற இயக்கம் என்று சொல்லப்பட்ட தி. மு. க வின் நேர்மைக்கும், நம்பகத்தன்மைக்கும் விழுந்த அடி.

காலம் காலமாக நம்பகமான தோழனாக இருக்கிற ஒரு கூட்டணிக் கட்சி பேரம் பேசத் தெரியாத தலைவனைக் கொண்டிருக்கிறது என்கிற ஒற்றைக் காரணத்தால் ஏறி மிதிக்கிற பண்பாட்டைத் தான் தி. மு. கழகம் கழகம் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை அதன் தொண்டர்களே இப்போது ஒப்புக் கொள்வது மிகையானதல்ல

ஆ. ராசாவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிற யாரும் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள், ஆ.ராசாவை நீலகிரி தனித் தொகுதியில் இருந்து தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள், பொதுத் தொகுதிகளில் இருந்து அல்ல.

இப்போதும் நீங்கள் அறிவிக்கப் போகும் எந்தப் பொதுத் தொகுதியிலும் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தும் நேர்மையோ, சமூக நீதியோ உங்களில் யாருக்கும் இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை, ஆ.ராசா நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அமைச்சரானதற்கும் நீங்கள் கட்டிய பட்டுக் குஞ்சங்கள் மட்டும் காரணமில்லை, அவருடைய முதுநிலை சட்டக் கல்வி, அயராத உழைப்பு என்று ஏராளமான காரணிகள் உண்டு.

1901169_749286071750267_1865271122_n

அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றும் திருமாவளவனின் (தலித் மக்களின்) கடுமையான உழைப்பும், பயணமும் இன்று ஒரு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சொற்களிலேயே சொல்வதென்றால் "அமைப்பாக மாறிக் கொண்டிருக்கும் தலித் மக்களின் கூட்டு சமூக மனத்தை கருணாநிதியின் தனி மனமோ, இல்லை ஸ்டாலினின் தனி மனமோ தங்களின் அரசியல் சுய நோக்கங்களுக்காகக் கடுமையாக சேதப்படுத்தி இருக்கிறது."

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து, தமிழ் தேசிய அமைப்புகளின் இளைய உறுப்பினர்கள் வரை "கருணாநிதியால் உங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி" என்று பொருமுகிறார்கள், அப்படி அவர்கள் உணரத் துவங்கி இருப்பது சமூக உளவியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் தான், அந்த மாற்றத்துக்கான விலை ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனின் காலடியில் சமர்பிக்க வேண்டியது, நீங்களோ அதைக் கருணாநிதியின் குடும்பத்திற்குப் பட்டயம் போடுகிறீர்கள்.

சொந்த மக்களின் சின்னச் சின்ன நலன்களையும், ஆட்சி அதிகாரக் கனவுகளையும் முன்னகர்த்த முடியாத தலைவனால் பெரிய இலக்குகளை நோக்கிப் பயணம் செய்வது இயலாத ஒன்று, உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலுக்கு உங்களைத் தள்ளிய கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் ஒரு வகையில் நன்றி சொல்ல வேண்டும்.

ஏனெனில் சில நேரங்களில் அவமானங்களும், தோல்விகளுமே மிகப்பெரிய மாற்றங்களை நோக்கி மனிதர்களைத் தள்ளுகிறது. அந்த மாற்றங்களையும், சீற்றத்தையுமே எமது எளிய மக்கள் உங்கள் வழியாக எப்போதும் அரசியலில் உள்ளீடு செய்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

*************

Advertisements

Responses

  1. அருமையான நேர்மையான பதிவு. பல்லாயிரம் மக்களின் குமுறல்களின் வார்த்தை வடிவம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: