கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 2, 2014

இளையராஜா – பேரண்டம் பிழிந்த இசைச்சாறு.

untitled

விடுமுறைக் காலமொன்றில் தாழ்ந்த வேலிக்கருவை மரங்கள் வோட்டு வீட்டின் தாழ்வாரங்களில் உரசி வினோதமான ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும், நானும் அத்தை மகன்களும் செங்கற்களை உரசித் தேய்த்து வண்டிகள் செய்து வீடுகட்டக் கொட்டப்பட்டிருந்த மணல் வெளிகளில் விளையாடிக் கொண்டிருப்போம், சுற்றிலும் பசுமையான வயற்காடுகள், முட்டி ஐயாவின் தென்னந்தோப்பில் இருந்து சிற்றருவியைப் போலக் கொட்டிக் கொண்டிருக்கும், அப்போதைக்குப் பருந்து பிடிக்கிற நரிக்குறவர்களான காசியும், எமிலியும் பேசுகிற மொழி என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாது, ஆனால், அவர்கள் வைத்திருக்கிற தோல்பை உறை அணிவிக்கப்பட்ட வானொலியிலிருந்து

“ஏதோ மோகம், ஏதோ தாகம், நேத்துவரை நினைக்கலையே, ஆசை விதை முளைக்கலையே………”

என்று பரந்த ஏகாந்த வெளியில் தெளித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைக் குறித்த அளப்பரிய கற்பனைகள் நிலை கொண்டிருந்தன.

மாலை நேர அடுப்புகள் வெண்புகையோடு மனித வாழ்க்கையின் அற்புதமான கணங்களைச் சமைத்துக் கொண்டிருக்கும் போது தங்கமணி திரையரங்கத்தின் “ரிகார்ட் குழாய்கள்” ஒலிக்கத் துவங்கும், இருள் சூழத்துவங்கும் இன்னொரு நாளில் மேற்கிலிருந்து செங்கதிர் செலுத்தும் ஒளிக்கதிர் ஒரு சரிந்த தூணைப் போல சாளரத்தின் வழியே பரவி நெருக்கமான மனிதர்கள் வசிக்கிற அந்த வீட்டில் எங்கள் அன்பு சுற்றி இருக்கிற நெற்பயிராய் விட செழிப்பாய் வளர்ந்து கிடக்கும், நான் சாளரங்களின் அருகே அமர்ந்து கொண்டு உரையாடலின் ஊடே தங்கமணி திரையரங்கின் ரிகார்ட் குழாய்களில் இருந்து ஏற்ற இரக்கமாய்க் காதில் சேரும் பாடல்களைக் கேட்பதில் கவனமாய் இருப்பேன், அப்படி ஒரு மழைக்கால மாலையில் சாளரங்களில் இருந்து மலையடிவாரத்தில் தன்னிச்சையாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக் குளம்படிகளைப் போல டக் டக் டக் டக் டக் என்கிற ஓசைக்குப் பின்னே அந்தப் பாடல் ஒலிக்கத் துவங்கும்,

“பருவமே, புதிய பாடல் பாடு………..இளமையின்………….”

என்ன கருவிகள் என்றெல்லாம் தெரியாத இசையை அறிவோடு கலந்து குழப்பி ரசிக்கத் தெரியாத ஒரு ரசனையின் வளர்பிறைக் காலம் அது. அந்த மாலையை அத்தனை அழகான ஒரு மாலையாக மாற்றிக் காட்டிய மனிதன் அவன். எனக்கென்றில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனின் மறக்க முடியாத மாலைக்குள்ளும் இளையராஜா என்கிற அந்த மனிதனின் செரித்து விட முடியாத இசை உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது.

1970 களுக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகத்திலிருந்து இளையராஜாவின் இசையை நீக்கி விட்டால் எப்படி இருக்கும் என்று ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். மிகக்கொடுமையான தனிமைச் சிறை குறித்த கற்பனை அது. நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று ஒவ்வொரு நொடியின் வெறுமைக்குள்ளும் அவனது இசை ஊடுருவி இருக்கிறது.

மெலிதாக மீசை அரும்புவதற்கு முன்னதாக பதின் பருவங்களில் படர்கிற தமிழக இளைஞர்களின் பெரும்பாலான காதல் கனவுகளை, ஏக்கங்களை, இழப்புகளை, மகிழ்ச்சியான தழுவல்களை, முத்தங்களை, உடலை, உயிரை இன்னும் எல்லாவற்றையும் ஆட்கொண்டு அமைதி கொள்ள வைக்கிற மிகப்பெரிய இசை வேள்வியை இளையராஜா செய்திருக்கிறார்.

இசையை முழுமையாக ஒரு இனக்குழுவுக்குச் சொந்தமானது என்று பலர் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் தான் நிகழ்ந்தது இளையராஜாவின் வரவு, உழவும், தொழிலுமாய், வியர்வையும், சேறுமாய் வாழ்ந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களின் இசையை சபாக்களில் அமர்ந்து நீட்டி முழக்குகிற இலக்கணம் செறிந்த சில கனவான்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்த சிக்கலான காலத்தில், கன்னங்கள் ஒட்டி, சென்னையின் மாநகராட்சிக் குழாய்களில் நீரும், கோவில் பிரசாதங்களில் உணவுமாக வாழ்க்கையை எதிர் கொண்ட ஒரு அடிப்படை இசையறிவு இல்லாத இளைஞன் தனது மக்களுக்கான இசையைத் தன்னால் வழங்க முடியுமென்று நம்பினான். அன்னக்கிளியின் “ஆரிராரிராரோ………..மச்சானப் பாத்தீங்களா……..”

என்கிற அந்த நாட்டுப் புறப்பாடல் ஒலிப்பதிவு முடிந்து பேரண்ட வெளிகளில் வீசி எறியப்பட்டபோது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு தமிழ்ச் சமூகத்தின் இசை வரலாற்றை நகர்த்தப் போகிறவன் இவன்தான் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

images

என்னுடைய கல்லூரிப் படிப்புக் காலம் என்று நினைக்கிறேன், பணம் கேட்டுக் கணவன் நடத்திய கொடுமைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்க நினைத்துத் தீக்குளித்து மரணப் படுக்கையில் படுத்திருந்த ஒரு சகோதரியின் அருகிலிருக்கும் அவலம் கிடைத்தது, எண்பது விழுக்காட்டுத் தீக்காயம் இனிப் பிழைக்க வழியில்லை என்று மருத்துவர்கள் சொல்லி ஆறு நாட்கள் அவள் உயிரோடிருந்தாள்.

நெருப்பு தின்று மிச்சம் வைத்திருந்த அந்த முகத்தைக் காண உறவுகளும் அஞ்சிக் கிடந்த அந்த மூன்றாவது நாள் இரவில் வலியின் முனகலோடு

“அண்ணா” என்றவளின் அருகில் போனேன்,

“என்னம்மா?”

“கொஞ்சம் தண்ணி தரீங்களா?” கொடுத்தேன்.

“நாளைக்கு வரும்போது வீட்ல இருந்து டேப் ரெகார்டர் எடுத்துட்டு வரீங்களா? மறக்காம அந்த மெல்லத்திறந்தது கதவு கேசட்டும்…..”

அத்தனை வலியிலும், வேதனையிலும் மறுநாள் இரவில் “வா வெண்ணிலா, உன்னைத்தானே வானம் தேடுதே, மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போகுதே……..”

என்கிற பாடலை அந்தக் கருகிப் போன உடலுக்கு உள்ளிருந்த ஆன்மா கேட்டு ரசித்ததைப் பார்த்த போது உன்னதமான மனதை உருக்கும் இசை மரணத்தை வென்று நிற்கிற அதிசயத்தை ஒரு வாழ்கிற சாட்சியாய் என்னால் உணர முடிந்தது. அவளைப் போலவே வாழ்வின் அடக்குமுறைகளையும், வன்மம் தோய்ந்த சொற்களையும் எதிர் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ முடியாத ஊரகப் பெண்களின் ரணமாகிப் போன இதயச் சுவர்களில் இளையராஜா என்கிற கலைஞனின் மென்மையான சிறகுகள் அவர்கள் கண்டிராத அன்பையும், அரவணைப்பையும் காலகாலத்துக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரே வரியையோ அல்லது ஒரே ஒரு இசைக்கருவியின் துனுக்கையோ திரும்பத் திரும்பப் பல முறை கேட்க வைக்கிற மந்திரங்களை நான் இளையராஜாவிடம் கண்டிருக்கிறேன், சின்ன மாப்பிள்ளை படத்தில் வருகிற “வந்தாயே நீயோர் ஓவியப் பாவை” என்கிற ஒரு வரியை விட்டுக் கடந்து வருவதற்கு எனக்கு ஏறத்தாழ 15-20 நாட்களுக்கு மேலானது, அனேகமாக அந்த வரிகள் உண்டாக்கிய வெற்றிடத்தில் எனது உயிரை நிரப்பிக் கொண்டு பேரானந்த நிலைக்குச் சென்றேன் எனச் சொல்லலாம்.

பத்தாண்டுகளுக்கு மேலாக கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டு அதன் ஏற்ற இறக்கங்களை, நுட்பங்களை நினைத்து நினைத்து பெருமிதம் கொள்கிற காலகட்டத்தில் கூட இளையராஜா ஒரு பாடலின் ஒரே ஒரு வரியிலோ அல்லது ஒரு இசைத்துணுக்கிளோ அந்தப் பெருமித உணர்வைத் தூக்கிப் போட்டு உடைத்து விடுவார்.

“நானுனை நீங்க மாட்டேன்……..” என்று மெல்லிய கீற்றாகப் பின்புலத்தில் அவர் வழிய விடுகிற வயலின் பௌதீக வாழ்க்கையின் கணங்களை அடித்துச் செல்லும் வல்லமை கொண்டது. உலகின் பலவகையான இசை வடிவங்களைக் கேட்டுப் பழகியாயிற்று, இசைக் கருவிகள் சிலவற்றை வாசிக்கக் கற்றுக் கொண்டாயிற்று, இசையின் நுட்பங்களை அதன் இலக்கண வடிவங்களை இன்னும் எல்லாவற்றையும் கடந்து வந்தாயிற்று, ஆனாலும், இளையராஜாவின் இசை தாய்ப்பாலின் சுவையோடும், கதகதப்போடும் இன்று வரை நம்மைச் சுற்றி இருக்கிறது.

நமது மகிழ்ச்சியில், நமது துயரங்களில், நமது சராசரி நாட்களில் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அவரது இசை நம்மை மீட்டெடுக்கிற ஒரு தேவகானமாய் எங்காவது ஒழித்துக் கொண்டே இருக்கிறது.

தனது கட்டற்ற இசைக்குள் நமது மொழியைச் செலுத்தி நமது மொழிக்கு இசை மகுடங்களைச் சூட்டிய ஒரு அற்புதமான மனிதர் என்று அவரைச் சொல்லலாம்.

imagesCAH9UUI5

தமிழ்ச் சமூகத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனாய்ப் பிறந்து அனேகமாக உலக இசைக்கலைஞர்கள், இசை விமர்சகர்கள், வல்லுனர்கள், தலைவர்கள், ஆண்டைகள், அடிமைகள் என்று எந்த வேருபாடுமின்றித் தனது இசையை ரசிக்க வைக்க அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவரது “கடவுள்” மந்திரங்களை எல்லாம் மறந்து அவர் முன்னெடுத்த அந்த கற்றல் மற்றும் முயற்சி வடிவங்களை மட்டுமே இங்கு நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

உங்களால் சொல்ல முடியாத சொற்களையும், உங்களால் மறைக்கவே முடியாத மௌனத்தையும் அவரது இசை நீண்ட காலமாகப் பட்டிதொட்டியெங்கும் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

நமது அறிவாற்றலையும், நமது தத்துவங்களையும் உடைத்து நொறுக்கி ஒரு எளிய மனித உயிராய் வாழ்க்கையை அழகியல் சார்ந்த அற்புத அனுபவமாக வாழ வைப்பதில் இசைக்கு அளப்பரிய பங்கிருக்கிறது என்று சொன்னால், இளையராஜா எனது வாழ்க்கையில், உயிரோடு கலந்திருக்கிற மிக நெருங்கிய உயிர் என்று சொல்வேன். அவரது இசை எனது ஏகாந்த வெளிகளை நிரப்பியபடி குருதி நாளங்கள் எங்கும் பயணித்தபடி இருக்கிறது.

காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத் தேடுது………..மாதிரியான அவரது ஏதாவது ஒரு பாடல் வரியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது மரணம் நிகழுமேயானால் இயல்பாக இறப்பைச் சந்திக்கிற ஒரு பேறுபெற்ற மனிதனாக நான் மரணிப்பேன்.

எங்கள் வாழ்க்கையின் துயரங்களை, எங்கள் வாழ்க்கையின் கொண்டாட்டங்களை எல்லாம் உங்கள் இசையால் தோய்த்து இலகுவான ஒரு இருப்பை இன்னும் நீண்ட காலம் எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்கிற சுயநலமான பேராசையைத் தவிர உங்கள் பிறந்த நாளில் பெரிதாய் என்ன கேட்டு விடப் போகிறோம்.

imagesCAVKUZO4

வாழ்க பல்லாண்டுகள், இசையே……..

(நீண்ட காலத்துக்குப் பிறகு இன்று என்னோடு உரையாடிய யாரோ ஒருவருக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

மகிழ்ச்சி அவரது உயிரை எப்போதும் நனைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்)

 

 

 

 

 

Advertisements

Responses

  1. சிறந்த பகிர்வு

  2. அருமையான கட்டுரை. நீங்கள் பிழிந்த அந்த இசைச் சாற்றில் தூசில்லை-துரும்பில்லை-கொட்டை இல்லை. நிர்மலமானது. அவருடைய , தேவாரத் திருவாசக முழக்கங்களை உயர்ந்த தமிழ் முழக்கமாக உங்களால் ஏற்க முடியாமற்போனது, தவிர்க்க முடியாதது. உயர் சாதி அடையாளமாக அவருடைய தெய்வ பக்தியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுதான் இன்று உலக மக்கள் தொகையினரின் எல்லா சாதியினரையும் ஆட்டி வைக்கும் ஆலகாலம். அதுவே இன்றைய மக்களின் இன்றியமையாத தேவை யாகிவிட்டது! இளையராஜாவே ஒரு இசைத் தெய்வமாகக் கருதப்பட்டவர்.அவருடைய உழைப்பின் எழுச்சி, தமிழரின் வாழ்வுப் பாதையில் தங்க ஒளி சிந்தச் செய்தது என்ற தங்களின் முத்தாய்ப்பில் சந்தேகமே கிடையாது.
    -. ஏ.பி.ராமன்.

  3. மதிப்பிற்குரிய ஐயா ஏ.பி. ராமன் அவர்களே, உண்மையில் நீங்கள் சொல்கிற அந்த தேவாரமும், திருவாசகமும் இந்தக் கட்டுரையில் இருந்து விடுபட்டுப் போனது வருந்தற்குரியதுதான். அதைப் போலவே எண்ணற்ற அற்புத இசைக்கோர்வைகள் விடுபட்டிருக்கிறது, அவரது தனித்த இசைத்தட்டுக்களான “Nothing But Wind”, “How to Name It” போன்றவை கூட செறிந்த திறன் கொண்டவை.

    உங்கள் சுட்டலுக்கு நன்றி, அவை எதிர்காலத்தில் சிலவற்றை மேம்படுத்த எனக்கு உதவும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: