கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 15, 2014

அகோரிகளின் பண்பாட்டுக் கூச்சல்.

imagesCAWBS9UF

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் பெண்கள் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து செல்லக் கூடாது, திருச்செந்தூர் மற்றும் சிதம்பரம் கோவில்களில் ஆண்கள் மேல்சட்டை அணிந்து செல்ல முடியாது, காலப்போக்கில் கடவுளின் பெயரால் ஒட்டுத் துணி கூட இல்லாமல் தான் கோவிலுக்குள் வர வேண்டும் என்று "சாமிகள்" சட்டம் போட்டாலும் நமது பண்பாட்டுக் காவலர்கள் வளைந்து கும்பிட்டு விட்டு வலிக்காத மாதிரியே போய் விடுவார்கள்.

ஒரு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர் கோவிலுக்குள் செல்ல வேண்டுமென்றாலும், பரவும் தொற்றுத் தோல் நோய் இருக்கக் கூடிய ஒருவர் கோவிலுக்குள் செல்ல விரும்பினாலும் சட்டையைக் கழட்டச் சொல்கிற சமூகம் தான் நாகரீகமான பண்பாட்டைக் காக்கிற சமூகம் என்று நீங்கள் சொன்னால், ஒரு தனியாருக்குச் சொந்தமான க்ளப்புக்குள் அவன் சொல்கிற விதிப்படி போவதுதானே நியாயம்.

பண்பாடும், விதிகளும் எப்போதும் வர்க்கப் பிரிவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது, மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒரு நீதிபதிக்கான ஊடக மற்றும் அரசியல் தர்மங்களும், நாட்டின் கடைக்கோடியில் வலிந்து ஆடை களையப்படுகிற ஒரு ஒடுக்கப்பட்ட எளிய விவசாயிக்குமான நியாயங்களும் வேறு வேறானவை. ஒரு போலிப் பண்பாட்டுக் காவலருக்கு சக சேரிக்காரன் அணிகிற வேட்டியில் ஒருபோதும் பண்பாடு நிலை கொள்வதில்லை.

பல தமிழகக் கிராமங்களில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மேல் சட்டை அணிவதைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள், படிக்கிற குழந்தைகள் தங்கள் தெருக்களின் வழியாகப் போகக் கூடாது என்று சொல்கிறார்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊருக்குள் இருக்கும் பள்ளிக்குள் விடாமல் பதினைந்து கிலோ மீட்டர்கள் துரத்தி அடிக்கிறார்கள், அரசுப் பணத்தில் கட்டப்பட்டிருக்கிற நீர்தேக்கத் தொட்டியில் நீர் பிடிக்க அனுமதி மறுக்கிறார்கள், ஊர்க்குளத்தில் இறங்கித் தண்ணீர் சேகரிக்கவும், கண்மாயில் இறங்கிக் குளிக்கவும் தடுக்கப்படுகிறார்கள்.

மலத்தைக் கரைத்து ஊற்றுகிறார்கள், கோவிலுக்குள் வராதே, தெருவுக்குள் நடக்காதே, செருப்பைத் தூக்கிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நட, பிணத்தை எனது வீதியின் வழியே கொண்டு செல்லாதே, சவரம் செய்து கொள்ளாதே, வேட்டியை மடித்துக் கட்டாதே, உனது பிள்ளையை எனது பிள்ளை படிக்கும் பள்ளியில் சேர்க்காதே தீண்டாமைச் சுவரைத் தாண்டாதே, பிணங்களின் ஆடையைத் துவைத்துக் கொடு என்றெல்லாம் அடிப்படை மனித உரிமையையே பெரும்பாலான இடங்களில் மீறிக் கொண்டிருக்கிற ஒரு சமூகம் வேட்டிக்காகவெல்லாம் பண்பாட்டைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிக்காக உரத்த குரல் எழுப்புகிற எமது அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் கட்டியிருக்கும் வேட்டியை உருவி விடும் ஆதிக்க ஆண்டைகளின் பண்பாட்டு உரிமைகளை எல்லா இடங்களிலும் பாதுகாப்பதை கண்கொள்ளாக் காட்சியாகக் காண முடியும். ஆளுங்கட்சியாகட்டும், எதிர்க்கட்சியாகட்டும் எந்த வேறுபாடுகளுமின்றி ஆதிக்கசாதி அய்யாமார்களின் அடக்குமுறைப் பண்பாட்டுக்கு மட்டும் வாயே திறக்க மாட்டார்கள். தமிழகக் கிராமங்கள் பலவற்றில் திராவிடக் கட்சிக்காரர்களே சாதி வன்கொடுமைகளை தீவிரமாகச் செய்யும் மனவலிமை படைத்தவர்கள், தமிழ்த் தேசியம் பேசும் புதிய கூட்டமோ ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அமைப்புகளையே சாதி அரசியல் செய்யும் கூட்டம் என்று வக்கணையாய்ப் புரிந்து கொண்டிருக்கும் அரசியல் தெளிவு பெற்றது, அவர்களுக்கு அடிக்கிறவனும் அப்பா, அடி வாங்குபவனும் அப்பா, அதாவது கொலை செய்தவன் அப்பா என்றால் "தமிழ் அப்பா" என்று வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

imagesCAR31BR2

பண்பாடு ஒரு சமூகத்தின் மனநிலை, கல்வியாலும், மனமுதிர்ச்சியாலும் அந்த சமூகத்தில் நிகழும் மிகப்பெரிய எழுச்சியும், மாற்றங்களுமே பண்பாட்டின் மூலம், சக மனிதனை இன்னும் சிறுமைப்படுத்தும் ஒரு கேவலமான பண்பாட்டை அடைகாக்கும் தமிழ்ச் சமூகம் வேட்டிக்கான உரிமை குறித்தெல்லாம் சட்டமன்றம் வரையில் சண்டையிட்டுக் கொள்வது நகைமுரண் மட்டுமில்லை எந்த அடிப்படை நேர்மையுமற்றது.

பண்பாடு குறித்த கூச்சல்களை எழுப்பும் எல்லா அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நிகழும் வன்கொடுமை, சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருக்குமேயானால் உலகின் மிகப்பெரிய பண்பாட்டு எழுச்சியை நாம் எப்போதோ பெற்றிருப்போம், ஆனால், நடப்பதோ நேர்மாறானது, பெரும்பாலான வெகுமக்கள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுமே ஊரகப் பகுதிகளின் வன்கொடுமைப் பண்பாட்டில் நேரடிப் பங்கு வகிக்கிறார்கள், மேடைகளில் தமிழ், தமிழர் என்றெல்லாம் முழங்கும் பல வேடதாரிகள் ஊருக்குள் மனவக்கிரம் படைத்த சாதி வெறியர்களாய் இருக்கிறார்கள்.

வேட்டிக்காக வரிந்து கட்டும் பல பண்பாட்டுக் காவலர்கள் பண்பாடு குறித்துப் பேசுவதற்கே அருகதையற்றவர்கள் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை. பண்பாடு அல்லது நாகரீகம் என்கிற சொல்லாடல் கல்வியாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், முதிர்ச்சியாலும் விளைந்த மனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து மேம்பாடுகளை நோக்கிய மாற்றங்களை உள்ளீடு செய்து கொள்கிற சமூகம் தனது பல்வேறு உறுப்புகளை அடிப்படை ஒழுங்கோடு நடத்துகிற ஒரு நிலைக்கு வரும்போது தான் அதன் பண்பாட்டு விழுமியங்கள் வளர்ச்சி அடைகின்றன.

ஒரு சமூகத்தின் பண்பாடு அதன் உடைகளிலும், உணவுப் பழக்கங்களிலும் இல்லை, மாறாக அந்த சமூகத்தின் நெறிகளில், அந்த சமூகத்து மனிதர்களின் மனங்களில் படிந்திருக்கிறது, இன்னும் சாதி மத மாச்சரியங்களைத் தீவிரமாகப் பின்பற்றுகிற நமது சமூகம் உடை மற்றும் உணவுகளில் இருக்கும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க விரைந்தோடி வருவது விநோதமானது.

தனி மனித ஒழுக்கமும், மதிப்பீடுகளும் உயரிய இடங்களில் இருக்கும் மனிதர்களுக்கு ஆடை ஒரு பொருட்டே இல்லை, ஆனால், தனது நிலத்தில் காலம் காலமாய் வாழும் சக மனித உயிரை உளவியல் ரீதியாக ஆண்டாண்டு காலமாய் வதைக்கும் நமது சமூகத்துக்கு ஆடையும் ஒரு கேடா என்கிற ஆத்திரமான கேள்வி எழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உயர் பண்பாடுகளில் இருந்து பல்வேறு சமூகக் கூறுகளில் நாம் பின் தங்கி இருக்கிறோம், அடிப்படை மனித நேயமே இன்னும் பயிற்றுவிக்கப்படாத ஒரு சமூகம் உடை குறித்த பண்பாட்டுக் காவலுக்கு எந்த வகையிலும் அருகதையற்றது. பண்பாடு என்கிற சொல்லாடலை பயன்படுத்த நாம் இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

imagesCA8HEP5I

                        

***********

Advertisements

Responses

  1. பயனுள்ள திறனாய்வுக் கருத்து

  2. அருமையான பதிவு.
    நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: