கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 22, 2014

நாம் தமிழரின் “சுங்கச்சாவடி” அரசியல்….

imagesCAWMR8CD

இந்திய தேசமெங்கும் ஏறத்தாழ 42.36 கிலோமீட்டர் தொலைவு சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலைப் போக்குவரத்து இணைப்பாக மாறி இருக்கும் இந்திய சாலைகள் NHAI – எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பயனரால் நேரடியாகச் சுங்க வரி செலுத்தப்பட்டுப் பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் இயல்பான அரசு எந்திரங்களால் நிர்வகிக்கப்படும் சாலைகள் இரண்டுக்குமான வேறுபாட்டை நாம் அனைவருமே அறிவோம்,

சுங்க வரி என்பது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் திடீரென்று வந்து இடைமறித்து நம்மிடம் வரி வசூல் செய்கிறது போன்ற ஒரு தோற்றத்தை நாம் தமிழர் கட்சியினர் உருவாக்க முனைகிறார்கள், ஆனால், உண்மையில் சுங்க வரி வசூலிப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் ஒரு தற்காலிகக் குத்தகை முறையிலேயே பணிபுரிகின்றன, ஐம்பது விழுக்காட்டுக்கு மேலான சுங்க வரி இந்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ நேரடியாகச் சென்று சேர்கிறது.

பெரும்பாலான உலக நாடுகளில் சாலைப் பயன்பாட்டு வரி அல்லது சுங்க வரி என்பது ஒரு பொதுவான நடைமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு முதலீட்டு வழிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வேளையில் இத்தகைய போராட்டங்கள் தெளிவான புரிதலோடும், திட்டமிடுதலோடும் நடத்தப்பட்டிருக்க வேண்டும், மாறாக தனிப்பட்ட ஒரு கட்சியின் தலைவர் பயணிக்கும் வழியில் சுங்க வரி கேட்டார்கள் என்கிற மிக வெளிப்படையான காரணத்துக்காக சுங்க வரி எதிர்ப்பு போராட்டம் என்று கிளம்பிச் செல்வது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை எந்த வகையில் உயர்த்தும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நாம் செலுத்துகிற சுங்க வரி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்கோ ஒரு மூலையில் இருக்கிற இந்திய மலைக் கிராமத்துக்கான சாலையாகவோ, பழங்குடி மக்களின் பிள்ளைகள் நடந்து போகிற பாலமாகவோ உருமாற்றம் பெறுகிறது. இந்திய அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகளின் நமக்கு நம்பிக்கை இல்லைதான், சுங்க வரி சாமானிய மக்கள் செலுத்த இயலாத அளவுக்கு அதிகரித்திருப்பது உண்மைதான், அதற்காக நாம் நேரடியாக சுங்கச் சாவடிகளை அடித்து உடைப்பதும், அங்கிருக்கும் ஊழியர்களின் மீது தாக்குதல் நடத்துவதும் முதிர்ச்சியான அரசியல் அல்ல.

ஏனைய வரிகளைப் போலவே சாலைகளுக்கான சுங்க வரியும் மக்களாட்சியின் ஒரு அங்கம், சாலைக்கான சுங்க வரியால் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக நலன்கள் மக்களுக்குக் கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். முறைப்படுத்தப்பட்ட சாலைப் போக்குவரத்து ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாத தேவையாகி இருக்கும் காலத்தில் சுங்க வரி வசூலிக்கப்படும் சாலைகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது.

1) நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள் சேமிக்கும் எரிபொருளோடு ஒப்பிட்டால் சுங்க வரி ஒரு பெரிய இழப்பாக இருக்க வாய்ப்பே இல்லை.

2) பராமரிக்கப்பட்ட சாலைகளில் பயணிக்கிற ஊர்திகள் மிக வேகமாகப் பழுதடையும் நிலையில் இருந்து தடுக்கப்படுகிறது.

3) பராமரிக்கப்பட்ட சாலைகளில் பயணிக்கிற ஊர்திகளால் பெரிய அளவில் சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவதில்லை.

4) தேசிய மற்றும் மாநில சுங்கச்க் சாலைகளில் முறைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதி, விபத்துக் கால ஊர்தி வசதி, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள் குத்தகைதாரர்களால் வழங்கப்படுகிறது.

5) சுங்க வரியின் மூலம் நேரடியாக வசூல் செய்யப்படும் பணம் நாட்டின் பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீடாக பெருமளவில் ஈட்டப்படுகிறது.

6) நன்கு பராமரிக்கப்படுகிற சாலைகளின் வளர்ச்சி என்பது ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.

இவற்றை எல்லாம் தாண்டி சுங்க வரி சுமையாகவும், அதிகமாகவும் நமக்குத் தோன்றுகிற நிலையில் அமைப்புகள் மூலமாக மக்களைத் திரட்டி முறையான எதிர்ப்பைத் தெரிவித்து போராட வேண்டியது நமது கடமை. அதுமட்டுமல்லாமல் முறைப்படுத்தப்படாத பல்வேறு வரிகள் மற்றும் விலை நிர்ணய உரிமைகள் குறித்துக் கேள்வி எழுப்பி தனியார் நிறுவனங்களும், முதலாளிகளும் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிற பல்வேறு துறைகளையும் கேள்வி கேட்டு நாம் போராட வேண்டியிருக்கிறது.

அண்ணன் சீமானும் அவரது தொண்டர்களும் ஒரு மாநாடு முடிந்து திரும்பிச் செல்லும் வழியில் சுங்க வரிக்கு எதிரான திடீர்ப் புரட்சியை முன்னெடுத்தது கேள்விக்குரியதாகிறது. ஒரு அரசியல் கட்சியாக வளர்கிற நாம் தமிழர் இயக்கம் இது போன்ற முன்னறிவிப்பில்லாத பொதுமக்களின் நேரடிப் பயன்பாட்டில் இயங்கும் இடங்களில் தகராறு அரசியல் செய்வது அவர்களின் வளர்ச்சியை எந்த விதத்திலும் முன்னிறுத்தாது.

 

untitled

மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சியைப் போலவே தோற்றமளிக்கும் இந்த நாடகம் உண்மையில் எந்த நன்மையையும் தரப்போவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. அண்ணன் சீமான் தனது தனிப்பட்ட பயணமாக இதே சாலையில் பலமுறை சென்று வந்திருக்கிறார், இதே அளவு கட்டணத்தைச் செலுத்தி பயணம் செய்து வந்த அண்ணன் சீமான் அமைதியாக வழிநடத்த வேண்டிய தனது தொண்டர்களை சுங்கக் சாவடியில் அத்து மீற எப்படி அனுமதித்தார். தொடர்ந்து சுங்கச்சாவடிகளின் மீதான தாக்குதலை தம் கட்சிக்காரர்கள் செய்வதை எப்படிப் புரிந்து கொள்கிறார்? ,

தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய சமூகச் சிக்கல்களும், அடிப்படைத் தேவைகளும் பெருகிக் கிடக்கிற காலத்தில் "மஞ்சுவிரட்டு நடத்து, மாட்டப் புடி" என்பதற்கெல்லாம் மாநாடு நடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் சீமான் வட மாவட்டங்களில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு மாநாட்டையும், மின்வெட்டுக்கு எதிரான ஒரு புரட்சிகர மாநாட்டையும் நடத்துவாரா? என்கிற கேள்வியை நாம் அவர்களிடமே விட்டு விடுவோம், அவ்வளவு வேண்டாம், சிவகங்கை மாவட்டத்தில் நெடுங்காலமாக சாதிய அடக்குமுறையின் அடையாளமாக இருக்கும் கண்டதேவித் தேரை என் தமிழன் பறையனும், பள்ளனும் இழுக்க வைப்பேன் என்று வீர முழக்கமிட்டு ஒரு சின்னப் பொதுக் கூட்டத்தை அண்ணன் சீமான் நடத்தி விட்டால் அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களை நாமே ஒன்று திரட்டி நாம் தமிழர் கட்சியில் இணைந்து விடலாம்.

எண்ணெய் நிறுவங்களுக்கான அரசின் சலுகைகளையும், கொள்ளையடிக்கப்படும் பல்வேறு துறை ரீதியான ஊழல்களையும் விடுத்து அரசுக்கு நேரடியாக முதலீட்டு வருமானமீட்டும் ஒரு துறை மீது அதுவும் தன்னிடம் வரி கேட்டு விட்டான் என்பதற்காக போராடிப் புரட்சி செய்வதெல்லாம் விளம்பரமயப்பட்ட வழக்கமான தமிழக அரசியல் என்பதை அண்ணனும் அவரது உணர்வு வயப்பட்ட தம்பிகளும் புரிந்து கொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அடிப்படை வசதிகளற்ற எண்ணற்ற தமிழகக் கிராமங்களில் குடிதண்ணீர் வசதியை வழங்கக் கோரியும், சாலை வசதியை வழங்கக் கோரியும், எண்ணற்ற கிராமங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுக்கக் கோரியும் அண்ணன் சீமானின் கட்சியினர் ஒருபோதும் போராட்டங்கள் செய்ததில்லை, இனி செய்யப் போவதுமில்லை.

பெரும்பாலான நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் அல்லது அமைப்பாளர்கள் ஒடுக்கப்பட்ட உழைக்கும் எளிய மக்களுக்கு விரோதமான ஒரு போக்கையே கையாளுகிறார்கள், சமூக இணைய தளங்களில் இயங்கும் பேரறிவு கொண்ட சமூகங்களே நேரடியாக அவதூறுகளையும், கடுஞ்சொற்களையும் வீசித் தாக்குதல் தொடுப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை ஏக வசனங்களில் பேசி மகிழ்வதும் அண்ணன் சீமானின் முழு அனுமதியோடுதான் நடக்கிறதோ என்கிற ஐயத்தையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை.

பார்ப்பனர்களையும், பார்ப்பனீயத்தையும் முழு வீச்சில் எதிர்ப்பதாக மேடைக்கு மேடை முழங்கும் அண்ணன் சீமான் ஆதிக்க இடைநிலைச் சாதியினரின் ஒடுக்குமுறைகளையும், சாதிய வெறியையும் "எங்க ஐயா, எங்க அப்பா" என்று முட்டுக் கொடுத்து ஆதரிப்பது நேர்மையான அரசியலா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

imagesCA647Z2I

காலம் காலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான தலித் மக்களின் அமைப்புகளையும், தலைவர்களையும் சாதிக் கட்சித் தலைவர்கள் என்கிற குடுவையில் அடைத்து அவர்களை இழிவு செய்யும் அரசியலில் இருந்து நாம் தமிழர் கட்சி உடனடியாக வெளியேறி வருவதே அவர்களின் முதிர்ச்சியான அரசியலாகப் புரிந்து கொள்ளப்படும்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல், திராவிட எதிர்ப்பு அரசியல், ஜெயலலிதா அதரவு அரசியல், ஈழ ஆதரவு அரசியல், சீமான் துதி பாடும் அரசியல், "டோல்கேட்" சர்வாதிகார அரசியல் மாதிரியான சார்பு அரசியல் பாதைகளில் பயணிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி விட்டு ஆக்கப்பூர்வமான மண் சார்ந்த அரசியல் மற்றும் தேவைகளுக்கான போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி எப்போது பயணிக்கும் என்று கேள்வி எழுகிறது.

தமிழக அரசியல் இயக்கங்களில் மிக இளமையான, கவர்ச்சியான தோற்றப் பொலிவோடு எண்ணற்ற இளைஞர்களைத் தன் பக்கமாகத் திருப்பி இருக்கும் இயக்கம் "நாம் தமிழர்" இயக்கம் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  நமது கவலை எல்லாம், வழக்கமான வெறும் உணர்ச்சி அரசியலின் தேக்க நிலையிலேயே இத்தகைய இயக்கங்கள் நின்று விடுமா அல்லது பல்வேறு சமூகச் சிக்கல்களை உள்வாங்கி தனது மண்ணின் மக்களுக்கான போராட்டங்களைக் கையிலெடுத்து தமிழ் மக்களுக்கான அறிவு சார் அரசியல் இயக்கங்களாக உருமாற்றம் பெறுமா என்பதுதான். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.

 

***********

Advertisements

Responses

  1. இந்திய அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகளின் நமக்கு நம்பிக்கை இல்லைதான், சுங்க வரி சாமானிய மக்கள் செலுத்த இயலாத அளவுக்கு அதிகரித்திருப்பது உண்மைதான், அதற்காக நாம் நேரடியாக சுங்கச் சாவடிகளை அடித்து உடைப்பதும், அங்கிருக்கும் ஊழியர்களின் மீது தாக்குதல் நடத்துவதும் முதிர்ச்சியான அரசியல் அல்ல = அருமையான பதிவு. நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: