கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 23, 2014

தாமிரபரணி – சாதித் துயரத்தின் பேராறு.

8083_3592905660980_1334051068_n

கருணாநிதி ஆகட்டும், ஜெயலலிதாவாகட்டும், உயர் காவல் துறை அதிகாரி ஆகட்டும், உள்ளூர் ஏட்டையா ஆகட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் இளப்பம் தான், அவர்களின் உயிர் என்றால் அவர்களின் தோளில் கிடக்கிற துண்டு மாதிரி.

தாமிரபரணி ஆற்றுப் படுகொலைகள் ஆகட்டும், பரமக்குடி இனப் படுகொலை ஆகட்டும் நினைத்த மாத்திரத்தில் உத்தரவுகள் பறக்கும், கிடைக்கிற வாய்ப்பை ஆதிக்க சாதிக் காவலர்கள் தங்கள் சாதிவெறியையும், வன்மத்தையும் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

குறிப்பாக தமிழகக் காவல்துறை என்பது ஒரு மிகப்பெரிய அழுக்கடைந்த சாதிய நிறுவனம், உள்ளே நுழையும் போதே உங்கள் சாதியைக் கண்டறிவதில் மிகக் கவனமாக இருப்பார்கள், வர்க்கம் என்று கூடச் சொல்ல முடியாது, நீதி சாதிக் கணக்குகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் ஆனாலும் சரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆனாலும் சரி எம்.எல்.ஏ ஆனாலும் சரி எம். பி ஆனாலும் சரி நீங்கள் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதன் என்றால் உங்களுக்குக் தமிழகக் காவல் துறையிடம் இருந்து கிடைக்கும் மரியாதையின் அளவுகோல் வேறானது.

சப்பைக்கட்டுக்கு பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்கிற ஒழுக்கக் கோட்பாட்டை முன்னிறுத்தி விளையாடப் பார்ப்பார்கள், ஒரு பெருங்கூட்டத்தில் எந்த தமிழ்ச் சாதி ஒழுக்கக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் எந்தச் சாதியும் இங்கே ஒழுக்க நன்னெறி கொண்டது அல்ல.

பெண் காவலர்களின் உடலைச் சீண்டினார்கள் என்றால் அந்தக் குறிப்பிட்ட கும்பலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கவோ அல்லது சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கவோ நமது காவலர்களுக்கு உறுதியாக திறமை உண்டு. ஆனால், ஒடுக்கப்பட்டவனும், உழைக்கும் எளிய தாழ்த்தப்பட்டவனும் நடத்துகிற போராட்டம் அல்லவா கேட்பதற்கு ஆளில்லை என்கிற உயர் சாதித் திமிரும், வக்கிரமும் அன்றைய காவல்துறை உயர் அதிகாரிகள் முதற்கொண்டு முதல்வர் வரை இருந்திருக்கும்.

1

போட்டுத் தள்ளு சாகட்டும் கீழ் சாதி நாய்கள் என்கிற வழக்கமான ஆதிக்க இடைநிலைச்சாதியின் மனநிலை தான் எல்லாவிடத்திலும் இந்த சமூகத்தின் மனசாட்சிக்குள் உறங்கிக் கிடக்கிறது.

அன்றைய முதல்வர் கருணாநிதி, "காவல்துறை வன்முறையாளர்கள் மீது பதில் தாக்குதல் தான் நடத்தியது" என்று சொன்னார். அதாவது அவர் சொல்கிற கணக்குப்படி பதில் தாக்குதல் என்றால் காவலர்கள் பத்துப் பதினைந்து பேரை போராட்டக்காரர்கள் அதே தாமிரபரணி ஆற்றுக்குள் தள்ளிக் கொலை செய்த பின்பு நடந்திருக்க வேண்டும்.

ஆனால் நிகழ்ந்ததோ பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று எந்த வேறுபாடுமின்றி கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். ஆற்று நீருக்குள் தத்தளித்தவர்களை கரையேற விடாமல் சுற்றி வளைத்து அதுவும் பெண்களின் மீதும் தாக்குதல் நடத்துகிற அப்பட்டமான சாதி வெறித் தாக்குதலை அதற்கான காட்சி ஆதாரங்களோடு பார்த்த பின்னும் தனது கட்டுப்பாட்டின் கீழிருக்கும் காவல்துறையைப் பாதுகாக்கும் ஒரு வறட்டுத்தனமான அரசியல் தலைவராகவே அன்றைக்குக் கருணாநிதி காட்சி அளித்தார்.

பதினேழு மனித உயிர்கள் பலியான பிறகு முதல்வர் என்பதை விடுங்கள், ஒரு மனிதனாக அதற்கான கண்டனத்தையும், நடவடிக்கை எடுப்பதற்கான உறுதியையும் ஒரு மாநிலத்தின் முதல்வர் காட்டி இருக்க வேண்டாமா என்கிற கேள்வியெல்லாம் இறந்தது ஒடுக்கப்பட்ட கீழ் சாதிக்காரனாய் இருந்தால் எடுபடாது.

தாமிரபரணி இனப்படுகொலை நிகழ்ந்து ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் ஆகிறது, சரி இன்றைக்கு அப்போது மாதிரி எல்லாம் இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்கள் நினைப்பில் மண் விழ!!!! ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதன் தமிழகத்தில் தாக்குதலுக்கு ஆளாகிறான். அதில் பாதிக்குப் பாதி காவல்துறையினரின் தாக்குதல்.

இடைநிலைச் சாதியில் அதுவும் கொஞ்சம் சாதிப் பற்றுக் கொண்ட ஆய்வாளரோ, இணை ஆய்வாளரோ அந்தப் பகுதிக்கு வந்து விட்டால் போதும் அவருடைய அரசாட்சியில் வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் பாடு அதோகதி தான், ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் 3-5 வரை ஒடுக்கப்பட்ட மனிதன் படுகொலை செய்யப்படுகிறான், ஒரு வாரத்தில் சராசரியாக 3 ஒடுக்கப்பட்ட மனிதனின் குடிசை எரிக்கப்படுகிறது.

untitled

ஒவ்வொரு வாரத்திலும் நான்கு ஒடுக்கப்பட்ட மனிதன் காணாமல் போகிறான் அல்லது கடத்தப்படுகிறான், ஒரு வாரத்தில் சராசரியாக 10 ஒடுக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், தமிழகத்தின் ஐந்தில் ஒரு அரசுப் பள்ளியில் இன்னமும் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் தனியாகவே அமர வைக்கப்படுகிறார்கள்.

50 % தமிழகக் கிராமங்களில் நீர்நிலைகளில் மற்ற சமூகங்களைப் போல நீரெடுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. 60 % தமிழகக் கிராமங்களில் ஒடுக்கப்பட்டவனும், ஏனைய சமூகத்தவரும் ஒரே கடையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியாது. அட அவ்வளவு ஏங்க…….தமிழகத்தின் 17 % ஊரகக் காவல் நிலையங்களில் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியாது. இது எப்புடி இருக்கு…..

அரசுகள், கட்சிகள், அமைப்புகள், ஊர்கள், காவல் நிலையங்கள், உணவகங்கள், சாலைகள், ஆறு, குளம் எந்த வேறுபாடுகளுமின்றி ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனை வீழ்த்தி விடும் வன்மத்தோடு தொடர்ந்து நமது சமூகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, சாதிய வன்மம் என்பது ஒரு மனநோய், சாதிய வன்மம் என்பது நமது சமூகத்தை நெடுங்காலமாகப் பீடித்திருக்கும் ஒரு மிகக் கொடிய மன நோய், இந்த மன நோய் பிறப்பில் கிடைக்கிற இலவசத் தகுதி என்பதாலேயேயும், இந்தத் தகுதி இல்லையென்றால் தமக்குத் தரப்படுகிற சமூக உயர்நிலை கேள்விக்குள்ளாக்கப்படும் என்கிற அச்சத்தினாலும் தொடர்ந்து தங்கள் சமூகப் படிநிலையை உயர் மற்றும் இடை நிலையில் இருப்பவர்கள் தற்காத்துக் கொள்வதற்காகவே இந்த நெடுங்காலப் போர் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடுக்கப்படுகிறது.

காலம் காலமாய் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும், தங்கள் குழந்தைகளை ஒரு விடுதலை பெற்ற சமூகத்தில் வாழ வைப்பதற்கும் ஒவ்வொரு ஊரக ஒடுக்கப்பட்ட மனிதனும் போராடிக் கொண்டே இருக்கிறான், இந்தப் போராட்டம் ஒட்டு மொத்த உலக நாகரீகத்தின் விடுதலைக்கானது, சமூக நீதி என்கிற நாகரீக நகர்வை நோக்கி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிற ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனும் உறுதியான பங்களிப்பைச் செய்கிறான்.

அதாவது உங்கள் மீது படிந்திருக்கும் தீண்டாமை என்கிற அழுக்கின் கரையை நீக்குவதற்காக அவனே தொடர்ந்து போராடுகிறான், பல்வேறு தடைகளைத் தாண்டி எப்படித் தனது உழைப்பால் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இந்த நாகரீக உலகைச் சமைத்தானோ அதே போலவே சாதிய ஏற்ற தாழ்வுகள் அற்ற சமூகத்தை அவனே படைப்பான்.

விடுதலை என்பது காலம் காலமாக மனப் பழக்கத்தில் இருக்கும் மத மேலாதிக்க உணர்வையும், சாதி மேலாதிக்க உணர்வையும் வென்று உயிர் வாழ்க்கையின் ஒப்பற்ற இருப்பை ருசிக்கும் ஒரு அளப்பரிய கலை, அந்தக் கலையில் நாம் வல்லவர்களாய் மாறவே கல்வியும், இயக்கங்களும், அமைப்புகளும், அரசுகளும், தனி மனிதர்களும் இயங்க வேண்டும், மாறாக இவை அனைத்தும் அதே அடிமைத்தளைக்குள் நம்மை மீண்டும் மீண்டும் அழைத்துச் செல்லுமேயானால் நமது அடிப்படை அறம் தடம் புரண்டிருக்கிறது என்று பொருள்.

425052_3592855899736_1323939619_n

அந்த அடிப்படை அறத்தை மீட்டெடுக்கும் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது, தாமிரபரணி ஆற்றின் வரலாற்றுப் பயணத்தைப் போல இன்னும் பல நூறு மனித உயிர்களைக் காவு கொடுத்தேனும் அந்த அடிப்படை அறத்தை நாம் அடையத்தான் வேண்டும், இந்த நாளில் அதே காரணத்துக்காகத் தங்கள் உயிரைப் பலி கொடுத்த அந்தப் பதினேழு பேருக்கும், இன்னும் சாதிய வன்முறைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிரான இந்த நெடும்போரில் தொடர்ந்து போராடும் எல்லா உயிர்களுக்கும் சமூக நீதியின் மீது நின்று வீர வணக்கம்.

 

**************


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: