கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 21, 2014

நான் கண்ட மருத்துவர்கள்.

imagesCAUZYCNM

ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைவு, ஊரில் உறவினர் ஒருவருக்கு மாரடைப்பு, அப்போதெல்லாம் மிதிவண்டி தான் உடனடி ஊர்தி, என்னிடத்தில் ஒரு சிவப்பு நிற அரை மிதிவண்டி இருந்தது, அதில் பின்புறமாக அவரை அமர்த்திக் கொண்டு என்னை அணைத்துப் பிடித்துக் கொள்ளச் சொன்னேன், அவர் அரை மயக்க நிலையில் மிகவும் பயந்த நிலையில் இருந்தார், அவருக்கு நம்பிக்கையூட்டியபடி வண்டியை மிதிக்கத் துவங்கினேன், டாக்டர் என்றால் சண்முகவேல் என்று பக்கத்துக் கிராமங்களில் ஒரு நம்பிக்கை இருந்த காலம், மனிதர் அத்தனை அன்பும், எளிமையும் ஆனவர். ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொண்டு "யம்மா, ஊருக்குப் போகக் காசு வச்சிருக்கியா?" என்று கேட்பார்.  கடும் காய்ச்சலில் ஒருமுறை சென்ற போது சோதனை எல்லாம் முடித்து ஊசியும் போட்டு விட்டு மாத்திரைகளுக்காக காத்திருக்கச் சொன்னார், மாத்திரை வருவதற்குள் தூங்கி விட்டார், அப்பா எழுப்பிய போது ரெண்டு நாளாத் தூங்கவே இல்லை, அதான்….என்று சிரித்தார். நினைவுகள் மலர்ந்து சிரித்தன.

டாக்டர் சண்முகவேல் மருத்துவமனைக்கு முன்னாள் வண்டியைச் சாத்தி நிறுத்தி விட்டு கைத்தாங்கலாக நோயாளரை அழைத்துக் கொண்டு உள்ளே போனேன், செவிலியர்கள் இருந்தார்கள், "நெஞ்சு வலி, டாக்டர் கிட்ட காட்டனும்" என்றவுடன் முதலில் உள்ளே படுக்க வையுங்கள் என்று படுக்கையில் கிடத்தினார்கள். வேறு சில உறவினர்களும் வந்து விட்டார்கள். செவிலியர் ஒருவர் வந்து எங்களிடம் டாக்டர் இப்பத்தான் வீட்டுக்குப் போனாரு, நாங்க போயிக் கூப்பிட முடியாது நீங்களே போயிக் கூட்டிட்டு வாங்க என்றார்கள், மருத்துவமனைக்குப் பின்னே தான் டாக்டரின் வீடு, செல்வண்ணனும் நானும் தான் வீட்டுக்குப் போனோம்.

imagesCAH3HEC1

கதவைத் இரண்டு மூன்று முறை தட்டிய பிறகும் ஓசை இல்லை, டாக்டர், டாக்டர் என்று செல்வண்ணன் குரல் எழுப்பினார். இரவு 11.30 மணி இருக்கலாம், அது ஒரு சிறிய வீடுதான். டாக்டர் வந்து கதவைத் திறந்தார். டாக்டரின் துணைவியார் உடைகளைச் சரி செய்து கொண்டிருந்தார், அன்றைய நாளில் அந்த இரவு குறித்துப் பெரிய சிந்தனைகள் எல்லாம் இல்லை, ஆனால், இன்று நினைத்துப் பார்க்கிற போது அது நீண்ட காலத்துக்குப் பின்னான ஒரு ஊடல் இரவு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், டாக்டர் சட்டையைப் போட்டபடி எங்களைப் பார்த்துச் சிரித்தார், நீங்க போங்க, உடை மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார்,சொன்னது போலவே வந்தார்.

அடுத்த இரண்டு மணி நேரம் கூடவே இருந்து அந்தக் குடும்பத்தின் கவலைகளைக் களைந்தார். அந்த ஒரு ஊடல் இரவை ஒருவேளை அவர் இழந்திருக்கக்  கூடும். அந்த ஒரு இரவை மட்டுமல்ல, இன்னும் எத்தனை எத்தனை இரவுகளையோ அவர் இழந்தவர். அருகிலிருக்கும் பல்வேறு கிராமங்களில் இன்றைக்கும் காய்ச்சல் என்று சொல்லிப் பாருங்கள், சண்முகவேல் கிட்டப் போங்க என்று வெகு இயல்பாகச் சொல்வார்கள். தனது சமூகம், தனது மக்கள் என்று எல்லாச் சமூக மக்களையும் தனது கரங்களில் மீட்டெடுக்கிற ஒரு மீட்பர். குறைந்த மருத்துவமும் நிறைந்த நம்பிக்கையும் கொடுக்கிற ஒரு நேர்மையான மருத்துவர்.

சித்தி செச்சாரே என்கிற ஒரு மராட்டியக் குழந்தையின் அறுவை மருத்துவத்துக்காக நாராயணா இதய மருத்துவமனையில் சுற்றித் திரிந்தபோது டாக்டர் கொலின் ஜானும், டாக்டர் கௌரவ் ஷெட்டியும் கருணையின் வடிவோடு தங்கள் கட்டணத்தை வழங்கினார்கள், கலங்கிய மனதோடும், உணர்வுப் பெருக்கோடும் டாக்டர் கௌரவ் செட்டியிடம் நன்றி சொல்ல அவரது அறைக்குப் போனபோது அவர் சொன்னார், "எனக்கும் இதே வயதில் ஒரு குழந்தை இருக்கிறது நண்பா, ஒரு தந்தையின் வலியை நன்கறிந்தவன் நான்". ஒன்றும் பேசத் தோன்றவில்லை. கலங்கிய கண்களோடு கைகளைக் கூப்பியபடி வந்து விட்டேன். மாநகரின்

imagesCAMB4KUN

மூன்று நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் கடைப்பிள்ளை  அறங்கிழார் மூக்குக்குள் ஒரு பெரிய கறிவேப்பிலை இலையை நுழைத்து விட்டார், மூக்குத் துளையில் இருந்து கொஞ்சம் மேலேறி அது எந்த நேரமும் நுரையீரலுக்குள் பயணிக்கும் ஆபத்தான வாய்ப்பு இருந்தது, குழந்தை எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கிறான், ஆனாலும் நமக்கோ உயிர் வலிக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போனால், இது ENT சிறப்பு மருத்துவர் கையாள வேண்டிய விஷயம், அழைக்கிறேன் என்கிறார் மருத்துவர். ஒருமுறை அழைத்ததோடு நிற்காமல் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த அழைத்தார், 

அழைத்த அடுத்த பத்து நிமிடத்தில் ஓடோடி வந்தார் அந்தப் பெயர் தெரியாத மருத்துவர், நானும் இரண்டு மருத்துவர்களையும் வெகு நுட்பமாகக் கவனிக்க ஆரம்பித்தேன், வந்த சிறப்பு மருத்துவரோ பணம் பார்க்கக் ஓடிய பல வாய்ப்புகள் இருந்தும் நேர்மையாக இதை எடுப்பதற்க்கான வழிகளைக் குறித்து எங்களிடமே விளக்கம் சொன்னார், வழக்கமான சிறு கருவிகளின் துணை கொண்டு எடுப்பது, முடியாமல் போகிற போது பிள்ளையை உறங்க(மயக்க நிலைக்குக் கொண்டு சென்று) வைத்து  எடுப்பது என்று உண்மையான கவலையோடும், அக்கறையோடும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே விளக்கினார், பணமோ, வேறெந்த செயற்கையான உணர்வுகளோ அந்த இரண்டு மருத்துவர்களிடமும் இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒருமுறை NIMHANS எனப்படும் மூளை நரம்பியல் மருத்துவமனைக்கு ஒரு குழந்தையின் சிகிச்சைக்காகச் சென்ற போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல்வேறு குழந்தைகளைப் பார்த்தேன், ஒரு மருத்துவரின் ஆலோசனை அறைக்கு அருகே அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தது. அங்கிருந்த ஒரு குழந்தை கொஞ்ச நேரம் அமைதியாகச் சிரிக்கிறது, பிறகு கொஞ்ச நேரம் தொடர்ந்து கூக்குரலிட்டுத் தலையைப் பிடித்தபடி அழுகிறது. பல்வேறு ஆலோசனைகளை உறுதியாக வழங்கியபடி அவர்களை அனுப்பிய அந்த இளம் பெண் மருத்துவர் தனது கைக்குட்டையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.  அந்தக் குழந்தையின் நோய் குறித்த அறிவும், தெளிவான கல்வியும் கொண்ட அந்தப் பெண் அங்கே ஒரு மருத்துவராக இல்லை, சக உயிரின் வலி கண்டு கலங்கித் துடிக்கிற ஒரு சக உயிராக அழுது தீர்க்கிறார்.

imagesCA9DWYRU

இதுதான் உலகம், இதுதான் எனது கண்களின் முன்னே இருக்கிற நிஜமான மருத்துவர்களின் உலகம், இங்கே திருடர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால், மேலே சொன்ன மருத்துவர்களைப் போல ஆயிரமாயிரம் மருத்துவர்கள் இந்த தேசத்தில் வாழ்கிறார்கள். மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் இறுக்கமாய் அமர்ந்திருக்கும் நோயாளிகளின் துயரமும், வலியும் மருத்துவரின் அறைகளுக்குள் புகுந்தவுடன் பாதியாகக் குறைகிறது, நம்பிக்கையின் கைகளால் துயரங்கள் தளர்த்தப்படுகின்றன, மருத்துவர்களின் கரங்கள் நோயாளிகளின் துயரங்களைக் களையும் என்று மனிதர்கள் தொடர்ச்சியாக நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையே பெரும்பாலான மருத்துவர்களின் பொருள் பற்றிய துயரங்களைக் களைகிறது. மருத்துவர்களின் நம்பிக்கையான வார்த்தைகள் மருந்துகளின் வீரியத்தை விழுங்கி அவற்றின் துணையின்றியே பல நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் நிரம்பியவை.

ஆகவே தான் மருத்துவர்களை எங்கு பார்த்தாலும் நான் எழுந்து நிற்கிறேன், அவர்களை வணங்குகிறேன். தெரியாத மருத்துவர்களாக இருந்தாலும்…… 

 

************

Advertisements

Responses

 1. பல்வேறு ஆலோசனைகளை உறுதியாக வழங்கியபடி அவர்களை அனுப்பிய அந்த இளம் பெண் மருத்துவர் தனது கைக்குட்டையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். அந்தக் குழந்தையின் நோய் குறித்த அறிவும், தெளிவான கல்வியும் கொண்ட அந்தப் பெண் அங்கே ஒரு மருத்துவராக இல்லை, சக உயிரின் வலி கண்டு கலங்கித் துடிக்கிற ஒரு சக உயிராக அழுது தீர்க்கிறார்.= ஆகவே தான் மருத்துவர்களை எங்கு பார்த்தாலும் நான் எழுந்து நிற்கிறேன், அவர்களை வணங்குகிறேன். தெரியாத மருத்துவர்களாக இருந்தாலும்……= கை.அறிவழகன் = அழுது விட்டேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கை.அறிவழகன்

 2. பல்வேறு ஆலோசனைகளை உறுதியாக வழங்கியபடி அவர்களை அனுப்பிய அந்த இளம் பெண்
  மருத்துவர் தனது கைக்குட்டையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு குலுங்கிக்
  குலுங்கி அழுதார். அந்தக் குழந்தையின் நோய் குறித்த அறிவும், தெளிவான
  கல்வியும் கொண்ட அந்தப் பெண் அங்கே ஒரு மருத்துவராக இல்லை, சக உயிரின் வலி
  கண்டு கலங்கித் துடிக்கிற ஒரு சக உயிராக அழுது தீர்க்கிறார்.= ஆகவே தான்
  மருத்துவர்களை எங்கு பார்த்தாலும் நான் எழுந்து நிற்கிறேன், அவர்களை
  வணங்குகிறேன். தெரியாத மருத்துவர்களாக இருந்தாலும்……= கை.அறிவழகன் = அழுது
  விட்டேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கை.அறிவழகன்

 3. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: