கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 23, 2014

நகரம் என்பது யாதெனில்?

marina-beach-www_thehindu_com_

ரெண்டு நாளா அப்பா ரொம்பப் பொறுமையா எனக்கு சொல்லிட்டே இருந்தாரு, நாம இப்போ மெட்ராஸ்ல தாம்ப்பா இருக்கோம், ஆனாலும் நான் நம்பவே இல்லை, என்னால நம்ப முடியல, ரொம்பவே வழக்கமான ஒரு குறுக்குச் சந்தும், அழுக்கடைந்த இந்தப் பழைய காற்றாடி சுற்றுகிற அறையும் தான் மெட்ராசா? இருக்காது….அப்பத்தா மலேசியாவுக்குக் கப்பலல்ல போயிட்டு திரும்பி வந்தாங்க, அவங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போறதுக்காகத் தான் நாங்க வந்திருந்தோம். மூணாவது நாள் என்னோட தொணப்பல் தாங்க முடியாமையா இல்ல அவருக்கே அந்தப் பிளான் இருந்துச்சான்னு தெரியல, எங்க எல்லாரையும் கூட்டிட்டு வெளில கிளம்பீட்டாரு……

என்னைய மாதிரியே அம்மாவுக்கும் மெட்ராஸ் புதுசு, எல்லாப் பக்கமும் பாத்துகிட்டே என்னையும் தங்கச்சியையும் கைல புடிச்சிகிட்டு அம்மா வந்தாங்க, மெதுவா மெயின் ரோட்டுக்கு வந்துட்டோம், சும்மா ஒரு ரவுண்டு அடிப்பமேன்னு திரும்பினா, செவப்புக் கலர்ல திருமயம் கோட்ட மாதிரி பெருசா ஒரு கட்டடம். இதாம்ப்பா சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், ரொம்பப் பிரமாதமா இப்ப இருக்குற அதே வெள்ளைக் கெடியாரம் சுத்தி நிக்கிற எல்லாருக்கும் மணி காட்டுச்சு. இப்பத்தான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு, மெட்ராஸ் வந்துருச்சுனு.

அடுத்தாப்ல நம்ம அண்ணா சமாதிக்குப் போயிட்டு மெரீனா பீச்சுக்குப் போவம்னு அப்பா சொன்னாரு, அப்பா ரொம்ப பஸ்ல ஏறி போயிட்டே இருந்தோம், தங்கச்சி அம்மா மடில உக்காந்து இருந்தா, நான் கீழ அப்பா கையப் புடிச்சுகிட்டு நின்னுட்டு இருந்தேன், அப்பா அம்மாகிட்ட குனிஞ்சு எதையோ கையக் காமிச்சு காட்டினாரு, தங்கச்சி அந்தப் பக்கமாப் பாத்துட்டு ஐயா, கடலு, கடலுன்னு கையத் தட்டி சிரிச்சா, எனக்கு ஒன்னும் தெரியல, அப்பா, நானும் பாக்கணும், நானும் பாக்கனும்னு விரல ஏதோ ஒரு தெசைல காட்டிட்டு தவ்விப் பாத்தேன். அப்பா, இப்ப அங்க தாண்டா போயிட்டு இருக்கோம், பொறுமையா இருன்னாரு. தங்கச்சி நமக்கு முன்னாடிப் பாத்துட்டாளேன்னு கொஞ்சம் வயித்தெரிச்சல் இருந்தாலும், சரி அதான் இப்பப் போய்ப் பாக்கப் போறமேன்னு சமாதானம் ஆயிட்டேன்.


ஒரு எடத்துல எறங்கி அப்பா பின்னாடியே நடந்தோம், பெரிய யானைத்தந்தம் மாதிரி  பளிங்கில செஞ்ச தூணு ரெண்டையும் கடந்து உள்ள போனா பெரிய கூட்டம், பாண்டி கோயில் மாதிரி விழுந்து கும்புடுறாங்கே, மழை அடிச்சாலும், புயல் அடிச்சாலும் எறிஞ்சுட்டே இருக்குற அணையா வெளக்கு ஒன்னு இருந்துச்சு, எனக்கு ஒன்னும் பெரிசா தெரியல, மெதுவா இருட்டிட்டு இருந்துச்சு, காத்து பையூர்ல ஆவாரங்காட்டுப் பொட்டல்ல இருந்து அடிக்கிற ஆடிக் காத்து மாரி காதுல ங்குய்ன்னு காத்து அடிச்சுகிட்டே இருந்துச்சு, அப்பா என்னைய தூக்கி வச்சுகிட்டாரு, அண்ணா சமாதில இருந்து வெளில வந்து நடக்க ஆரம்பிக்கும் போது அப்பா மடில உக்காந்துகிட்டே அண்ணாந்து பாத்தேன், வானம் நீலமும், கருப்பும் கலந்து மெட்ராசுக்கு மேல படர்ந்து கெடந்துச்சு.

Chennai_Skyline

படக்குன்னு ஒரு கட்டத்துல நாலஞ்சு வெள்ளக்காரங்க கைல கேமராவ வச்சுக்கிட்டு எதுத்த மாதிரி வந்தாங்க, மொத்தமா எல்லாரும் வெள்ளக்காரங்கேள பாத்துகிட்டே இருந்தோம், ஒன்னு ரெண்டு பேரு கையெல்லாம் குடுத்தாங்கே, அப்பா செரி செரி பாத்தாச்சா, வாங்க இருட்டீருச்சு சீக்கிரம் ரூமுக்குப் போகணும்னு சொல்லிகிட்டே நடந்து ஒரு பெரிய பொட்டலுக்குள்ள கூட்டிட்டுப் போனாரு, கலர் கலரா பலூன், குதிரைங்க, வண்டி வண்டியா பொம்ம பாசி மீனு விக்கிற ஆளுங்க, மணல் கொட்டிக் கிடக்கு, எனக்குக் கடலைப் பாத்துரனும்னு ஒரே ஆர்வம், எல்லாந்தாண்டி வெளிய வந்தப்ப அப்பா மேலே கையக் காட்டி இங்க பாருன்னு தலைய நிமித்தினாரு தட்டையா வெள்ளிக் கம்பி மாதிரி சர்க்கஸ் லைட் சுத்துச்சு, அப்டியே மெல்ல அது ஊசியா வெளிய வர்ற இடத்தைப் பாத்தா வேலையும், காவியும் கலந்த கலர்ல கோடு கோடா பெரிய ராட்சதத் தூணு நின்னுட்டு இருந்துச்சு.

இதாம்பா "லைட் ஹவுஸ்" ன்னு அப்பா சொன்னப்ப ரொம்ப நேரம் அண்ணாந்து பாத்துட்டே இருந்தேன், கடைந்கே மறச்சு வச்சுக்கிட்டு இருந்து இப்போக் கொஞ்சம் கொஞ்சமா கண்ணுல ஊதாக் கலர்ல பிரமாண்டமா ஆடிகிட்டு இருந்த மெட்ராஸ் கடலு பளிச்சுன்னு அந்தச் சாயுங்காலத்துல கண்ணுல தென்பட்டப்போ மெட்ராஸ் ரொம்பப் பெரிசுனு நான் நம்ப ஆரம்பிச்சேன்.

இன்னும் பல நூறு வருஷங்களுக்கு, பல கோடி மனுஷங்களுக்கு வேடிக்கை காட்ட அந்தக் கடல்கிட்ட நெறைய வித்தைங்க இருக்கும் போல, எல்லாருக்கும் கால நனைச்சு, கைய நனைச்சு, தள்ளி விட்டு, சங்கு பொறக்கிட்டு இருந்த சில பேர இழுத்து மெட்ராஸ் கடல் எல்லாரையும் சாப்டிருச்சு, கடலுக்கு முன்னாடி யாரு வந்து நின்னாலும் கடல்தான் ஹீரோ, அதோட பிரம்மாண்டம் நம்மள மாதிரி சின்ன அரைச் சொக்காய் போட்ட மனுஷங்கள கரை ஒதுங்கிக் கிடக்கிற சிப்பிகள மாதிரித் தான் காட்டுது.  கடல்ல ஆடி முடிச்சு, வெளிய வந்தா அப்பா பொரிச்ச மீனு, பலூன்லாம் வாங்கிக் குடுத்தாரு, என்னையும் தங்கச்சியையும் உக்கார வச்சு இருக்கப் புடிச்சுகிட்டு குதிரைல கூட்டிட்டுப் போனாரு, குதிர மாதிரி பல மடங்கு ஒசரமான டைனோசர்ல ஏத்திக் கூட்டிட்டுப் போனாலும் அப்பா பக்கத்துல இருந்தா பயம் கிடையாது. இப்போ மெட்ராசோட அந்தப் பெரிய கடற்கரை ரோட்டுல இருட்டு விழுந்து கிடந்துச்சு, காரு, பஸ்சுன்னு வெளிச்சப் புள்ளிகளா நகரம் நகர்ந்துகிட்டே இருந்துச்சு.

father

அப்பா, எங்களை எல்லாம் பத்திரமா திரும்ப ரூமுக்குக் கூட்டிட்டுப் போனாரு, ரூமுக்குள்ள போனதும், "ஐயாக்காள, மெட்ராஸ் பாத்துட்டியா, நல்லா இருந்துச்சா" ன்னு கேட்டு தூக்கி வழக்கமா அவரு குடுக்குற முத்தத்துல ஒன்னு குடுத்து இறக்கி விட்டாரு. அதுக்கப்பறம் நான் வளந்து, பெரியவனாகி, படிச்சு, சம்பாரிச்சு, பஸ்ல போயி,  ட்ரைன்ல போயி, கார்ல போயி, ஏரோ பிளான்ல போயி   என்னென்னவோ பண்ணிப் பாத்துருக்கேன், ஆனாலும், அப்பா கூடப் போயிப் பாத்த அந்த மெட்ராஸ் மட்டும் திரும்பப் பாக்க முடியாத அளவுக்கு வளந்துருச்சு.

அன்னைக்கு சாய்ங்காலம் அப்பாவோட நெஞ்சுக்குப் பக்கத்துல ரொம்ப நெருக்கமா கதகதப்பா சாஞ்சு படுத்துகிட்டு கண்ண உருட்டிப் பாத்தப்போ மெதுவா ஒரு பெரிய எண்ணைக் கப்பல் மாதிரி ஆடிகிட்டுக் கிடந்த கடல் தண்ணி போலத்தான் மெட்ராஸ். மெட்ராஸ்ங்குறது வெறும் பேரா, அங்க இருக்குற கட்டிடங்களா, இல்ல அங்க இருக்குற மனுஷங்களா, மெரீனா பீச்சா, சரியா சொல்லத் தெரியல, எவ்ளோ பெரிய நகரமா இருந்தா என்ன? நம்ம மேலே அன்பு செலுத்துற உயிருங்க இருக்குற சின்னக் குடிசையும், நெலமும் தான் பெரிசாவும், பிரமாண்டமாவும் நம்ம நெஞ்சக் குழிக்குள்ள அரபிக் கடல் மாதிரிக் கிடந்து அலையடிக்கிது….

 

***************

Advertisements

Responses

  1. நகரம் என்பது யாதெனில்? = Arivazhagan Kaivalyam = அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Arivazhagan Kaivalyam

    • நன்றி ஐயா. உங்கள் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்யத் தூண்டுகிறது உங்கள் சொற்கள் எப்போதும்….

  2. படித்து விட்டேன், அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  3. அறிவின் அற்புதங்களில் ஒன்றாக மிளிர்கிறது. வழக்கம்போல பாராட்ட மட்டும் எழுத இதைச சொல்லவில்லை. எழுத்தின் ஆற்றல் பறைசாற்றுகிறது. வளர்க. லட்சுமணன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: