கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 25, 2014

செந்தி வீட்டு முத்தம்…..

images

பத்து வருஷத்துக்குப் பிறகு அந்தத் தெருவுக்குள்ள இப்பத்தான் நுழையுறேன், ஒரு மாதிரிக் கலவையான உணர்வு, அந்தப் பெரிய சாக்கடை மட்டும் அப்படியே இருக்கு, மற்றபடி அகலமா அமானுஷ்யமா மனுஷங்க இல்லாத வீடுகளுக்கு நடுவே இருந்த ஒரு கருவைக் காட்டைத் தேடித் பார்த்தேன், அது இப்போ இல்ல, அந்த இடத்துல ரெண்டு மூண்டு கடைங்களோட புதுக் கட்டிடம் வந்திருக்கு, அந்தத் தெருவோட நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கருவை மரங்கள் தான் மனசுல வரும், அந்தத் தெருவுக்குன்னு ஒரு வாசன இருக்கும்.

ஒரு பழைய நகரத்தோட வாசன, பெரிய பெரிய வீடுங்கள்ல இருக்குற புறாக்களோட வாசன, மரமருக்குற மில்லில இருந்து வர்ற மரத்தூள் வாசன, எந்த வீட்லயாவது தாளிக்கிற ரசத்தோட வாசன, எல்லாங்கலந்து ஒரு புராதன நகரத்தோட வாசனை. அதுமட்டுமில்லாம அந்த பெரிய சீம ஓடு பாவிய மர வீடுகளுக்குள்ள யாருக்கும் தெரியாத பல கதைகள், வாழ்க்கை ரகசியங்கள் எப்பவும் நெறஞ்சு கெடக்கும்.

மெதுவா ஒவ்வொரு அடியையும் யோசிச்சு யோசிச்சு நடந்து தெருவோட நடுவுல நின்னேன், முருகண்ணன் டீக்கடை கொஞ்சம் கண்ணாடி எல்லாம் போட்டு பெரிசா ஒரு ஹோட்டல் மாதிரி அங்கேயே தான் இருந்துச்சு, இப்போ அந்த மர பெஞ்செல்லாம் கிடையாது, ஒரு டீ சொல்லீட்டு தட்டுல பரப்பி வச்சிருந்த ஆட்டுக்கால எடுத்துக் கடிச்சேன், முருகண்ணே கடைல இன்னும் ஆட்டுகால் விக்கிறத விடலைனு தெரிஞ்சதும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.  அங்கே இருக்குற யாருக்கும் என்னைய அடையாளம் தெரிய வாய்ப்பில்ல, அதுதான் நல்லதும்கூடன்னு தோணுச்சு. டீ குடிச்சுகிட்டே முன்னாடி இருந்த கட்டிடங்களா உத்துப் பாத்தேன்.

ஒரு தகரக் கேட்டுக்குப் பின்னாடி இருந்த லைன் வீடு இருந்த எடமே தெரியல, நாடு வீட்டுல ஒரு டியூஷன் சென்டர் இருந்துச்சு, அங்கேருந்து எப்பவும் பயலுகளும், புள்ளைகளும் போயிட்டு வந்துட்டே இருக்குங்க. ஒரு மாதிரி கலகலப்பான அரட்டைச் சத்தம் கேட்டுக் கிட்டே இருக்கும், இப்ப தெருவெல்லாம் சத்தம் கேட்டுது, ஆனாலும் ஏதோ தனிமைல இருந்த மாதிரி இருந்துச்சு. நடுவுல எங்கேயாவது செந்தி காம்பவுண்டு தெரியுதான்னு பாத்தேன், ஒன்னும் தெரியல, முருகண்ணே டீக்கடைல இருந்து எதுத்த மாதிரி மூணாவது மாடர்ன் டைலர் கடை, அதுக்கப்பறம் ஒரு கார் ஷெட்டு, அதுக்கடுத்து செந்தி வீடு. டீக்ளாஸ் கீழ வைக்கும் போது பாதிக்கு மேலே கம்பி வச்ச செந்தி வீட்டு கதவு மாதிரியே ஒரு வீட்ட்ல இருந்த கதவு கண்ணுல பட்டது.

செந்தி வீட்டப் பத்தி ஒங்களுக்குச் சொல்லணும், அப்போ செந்தியும் நானும் ஒண்ணாப் படிச்சோம், செந்தி வீடு ஒரு பெரிய சுத்துக் கட்டு வீடு, கதவைத் தேர்ந்த ஒடனே கெணத்தடி, பெரிய தொவைக்கிற கல்லு கெடக்கும், யாராச்சும் ஒருத்தவுங்க அங்கே எப்பயும் துணி தொவைச்சுகிட்டே இருப்பாங்க, வள்ளி ஆச்சி, இல்லன்னா தேனம்மைப் புள்ள, இல்லன்னா செந்தியோட அப்பா, சில நேரம் செந்தி, செந்தி தொவைக்கும் போது நாந்தண்ணி எரச்சுக் குடுப்பேன், இல்லன்னா கிணத்தோட கட்டுச் சொவத்துல ஏறி ஒக்காருவேன், தண்ணி ரொம்பப் பக்கத்துல தளும்பிக்கிட்டே தான் கிடக்கும், மழைகாலத்துல வாளிய அப்புடியே வுட்டு தண்ணி மோக்கலாம். அப்டியே கிணத்தடி வுட்டு உள்ள போனா ஒரு பெரிய வராந்தா, அங்கே பிளைவுட்டு வச்சு அடச்சு செந்திக்குன்னு ஒரு ரூமு இருக்கும், அதே மாறி செந்தி அண்ணனுக்கும் ஒரு ரூமு.

download

செந்தியோட அப்பா பெரும்பாலும் அந்த வராந்தாள தான் இருப்பாரு, பொதுவா எப்பயாச்சும் என்னையப் பாத்து சிரிப்பாரு, அதுவுட்டு அவரு யாரு கூடையும் பெரிசா பேசி நான் பாத்ததில்ல, வராந்தாவத் தாண்டி புதுசா வரவங்க யாரும் போக முடியாது, ஆனா, அங்கே இருக்குற எல்லாருக்கும் என்னையத் தெரியும், செந்தியோட ப்ரெண்டுன்னு என்னைய யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க, அதுக்காக நானும் அப்டியெல்லாம் வரந்தாவத் தாண்டி உள்ள போக மாட்டேன். எப்பயாச்சும் மழை நாள், இல்லன்னா பரிட்சை நாளுக்குப் படிக்க மட்டும் தான் உள்ள போவேன், ஒரு பெரிய முத்தம் நாலுபக்கமும் சுத்துக்கட்டு சரிஞ்சு முத்தத்துல இறங்கும், கொரங்கு, களவாணிப் பயலுக எறங்காம நெருக்கமா கம்பி வச்சுக் கட்டிக் கிடக்கும், சுத்தி நல்ல தேக்கு மரத்துல செஞ்ச தூணுங்க இன்னமும் பளபளப்பு மாறாம நிக்கும். 

மழை சோன்னு ஊத்துரப்ப நானும், செந்தியும் ஒவ்வொரு தூணுல சாஞ்சுகிட்டுப் படிப்போம், கொஞ்ச நேரம் படிக்கிறது, அப்பரும் எதாச்சும் கத பேசுறதுன்னு இடை இடைல மழைய வேடிக்கை பாப்போம், சுத்துக்கட்டுத் தண்ணி முத்தத்துல கொட்டி சாரலைக் கிளப்பும், அப்டியே முத்தக் கம்பி வழியா பாத்தா செந்தி வீட்டுத் தொடதுல இருக்குற தென்னைமரம் மழைக்காத்துல ஒடையுற மாதிரி ஆடும். வெள்ளிக் கம்பி உருகி ஒழுகுற மாதிரி முத்தம் பூரா தண்ணியோட ஆட்டம் பட்டயக் கிளப்பும். சுத்துக்கட்டு வராந்தாவுல ஒவ்வொரு பக்கமும், செந்தியோட சித்தப்பா, பெரியப்பா வீடு, அத்தை வீடு, வீடுன்னு ரொம்பவே உயிரோட்டமா இருக்கும், எல்லா வீட்டுலயும் குட்டிப் புள்ளைங்க இருக்கும்.

புள்ளைங்க எல்லாம் ஒன்னொட ஒன்னு பேசிக்கிடும், ஆனாப் பெரியவங்க சிலபேரு சில பேரோட பேசுறதில்ல, கேட்டா ஏதோ சொத்துப் பிரச்னைன்னு செந்தி சொல்லுவான், நானும் அதுக்கு மேலே கேக்குறதில்ல, ஆனா, எல்லா வீட்லயும் என்னோட பேசுவாங்க, அதுவும் அந்தத் தேனம்மைப் புள்ள எங்க கூடத் தான் படிச்சுது, அவுக வீட்ல எனக்கு டீக்காப்பி எல்லாம் குடுப்பாங்க, எப்பயாச்சும் சாய்ங்கால நேரத்துல போனா சீடைக்கா, முறுக்கு, அந்தரப்பம், கோவளம் எல்லாங் குடுப்பாங்க.

வெளில இருந்து பாத்தா செந்தி வீடு ஒரு சின்ன முட்டு வீடு மாதிரத் தான் தெரியும், ஆனா, உள்ள போய்ட்ட அது ஒரு தனி உலகம், அங்கே வாழ்க்கை நிறைய இருந்துச்சு. வெளில வரவே மனசு வராது, பேச்சு, பாட்டு, பூஜை, விளையாட்டு, சமையல் அது இதுன்னு வாழ்க்கை ரொம்ப அமர்க்களமா இருக்கும். ஒருநாள் அப்டித்தான் செந்தி வீட்டுக்கு ஒரு ஏழு எட்டு மணியாப்ள போனேன், கதவு உள்ள கொக்கி போட்ருக்கும், தெரிஞ்சவங்களா இருந்தா வெளில இருந்து தொறந்துடலாம், தொறந்தேன், செந்தியோட சைக்கிள் இருந்துச்சு, செந்தி செந்தினு கூப்டேன், யாரையும் கானம், வலது பக்கச் சுத்து வீட்ல மட்டும் வாசல்ல ஒரு குண்டு பல்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

மறுபடியும் செந்தியக் கூப்டுப் பாத்தேன், சத்தமே இல்ல, எப்பவும் நான் செந்தியக் கத்திக் கூப்பிட்டா வேற யாராச்சும் பதில் சொல்லுவாங்க, அன்னைக்கி யாரையும் காணும், தேனம்மைப் புள்ளையாச்சும் "செந்தி கோயிலுக்குப் போயிருக்காண்டா, ஒக்காரு, வந்துருவான்"னு கத்தும், இன்னைக்கு அதையும் காணம், கொஞ்ச நேரம் வராந்தாவுலேயே உக்காந்திருந்தேன், செந்தி வீட்ல லைட் எதுவும் எரியல, அப்பத்தான் கவனிச்சேன், மேலே மரப்பலகைல யாரோ நடக்குற சத்தம், வேறே எங்கயாச்சும் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு பேசாம இருந்தேன், ஆனா, இப்போ சத்தம் தெளிவா கேட்டுச்சு.

An old Chettiar lies outside his mansion in Kanadukathan.

டங்கு டங்குன்னு யாரோ கால தூக்கி தூக்கி நடக்குற சத்தம். ஒரு குறிப்பிட்ட எடத்துக்குப் போனதுக்கு அப்பறம் சத்தம் நிக்கும், சத்தம் நின்ன பின்னாடி கோயில் யானைச் சங்கிலி மாதிரி சங்கிலிச் சத்தம் கேட்டது, மறுபடியும் நடக்குற சத்தம், சங்கிலிச் சத்தம்…………எனக்கு ஒரு மாதிரித் திகிலடிச்சுருச்சு, வீட்ல வேற யாரையும் காணம், மெல்லமா எந்திரிச்சு வெளியே போகலாமான்னு யோசிச்சுப் பாத்தேன். அப்பம் பாத்து செந்தி வந்துட்டான், உள்ள இருந்துதான் வந்தான்.

"எங்கடா போனன்னு நான் கேட்டதுக்கு இங்கதான் இருந்தேன், சித்தப்பா வீட்ல படிச்சுட்டு இருந்தேன்னு பொய் சொன்னான், பொதுவாப் பொய் சொல்ல மாட்டான், சரின்னு நானும் வுட்டுட்டேன், ஆனா, பலகைல யாரோ நடக்குற மாதிரி சத்தம் கேட்டுச்சுடான்னு செந்திகிட்ட சொன்னேன், அதெல்லாம் ஒன்னும் இல்ல, எதாச்சும் பூனையா இருக்கும், வா, கடைக்குப் போவோம்னு என்னையக் கூட்டிட்டு வெளிய வந்துட்டான். நானும் மறந்துட்டேன், ஆனா, அன்னைக்கி வீட்ல ராத்திரி படுக்கும் போது  அந்த நடைச் சத்தமும், சங்கிலிச் சத்தமும் கேட்டுட்டே இருந்துச்சு, கொஞ்சம் பயத்தோடையே தூங்கிட்டேன். அதுக்கப்பறம் கொஞ்சம் செந்தி வீட்டுக்குப் போரதக் கொறைச்சிட்டேன், பரீட்சை வேற முடிஞ்சுருச்சு, லீவுக்கு ஒரு மாசம் ஊருக்குப் போயிட்டு திரும்ப வந்தேன்.

பள்ளிக்கொடம் ஆரம்பிச்சு ஒரு வாரத்துல மறுபடியும் ஒருநா ராத்திரில செந்தி வீட்டுக்குப் போனேன், அப்பயும் யாரும் இல்ல, கொண்டியத் தொறந்து பாத்தேன், கிணத்தடில எப்பவும் நிக்கிற செந்தியோட சைக்கிளைக் காணம், உள்ள போகலாமா, வேணாமான்னு யோசிச்சுகிட்டே ரெண்டு அடி எடுத்து வச்சேன், தேனம்மை முத்தத்துல உக்காந்து படிச்சுக்கிட்டு இருந்துச்சு, "ஏலே, செந்திப்பய எங்க, சைக்கிளையும் காணும்"ன்னு கேட்டதுக்கு, இங்கதான் கோயில் வீட்டுக்குப் படப்புக்குப் போயிருக்கான், ஒக்காரு வந்துருவான்னு சொல்லிட்டு படிசுகிட்டே இருந்துட்டு அப்புறம் உள்ள போயிருச்சு, படக்குன்னு கரண்ட்டு போயிருச்சு, வெளில எந்திருச்சுப் போற அளவுக்குக் கூட வெளிச்சம் பத்தாது.

கொஞ்ச நேரம் ஒருமாரியா அமானுஷ்ய அமைதியா இருந்துச்சு, சங்கிலிச் சத்தம், யாரோ சங்கிலில இருந்து விடுபடுரதுக்குப் போராடுற மாதிரி ஜலஜலன்னு இருட்டைத் தொலைச்சுகிட்டு சத்தம் மேலே இருந்து வருது, கொஞ்ச நேரத்துல வீல்னு ஒரு அலறல் சத்தம், எனக்கு ஈரக் கொலை நடுங்கிருச்சு, முத்தத்துல லண்டியன் வெளிச்சம் கொஞ்சமாச்சும் இருந்துச்சு, ஓடிப் போயி தேனம்மை வீட்டு வாசல்கிட்ட நின்னுட்டு "யாரோ கத்துறாங்க, மேலே யாரோ கத்துறாங்கன்னு" தேனம்மையோட அம்மாகிட்ட சொன்னேன், அதான் செந்தியோட அத்தை.

d436a50e2c3b0b35b8bb80789c7f0008_large

அவங்க ஒண்ணுமே சொல்லல, தேனம்மைப் புள்ளை மறுபடியும் வெளிய வந்து அதெல்லாம் ஒண்ணுமில்ல, இருட்டுல எதாச்சும் ஒனக்குத் திகிலடிச்சிருக்கும்னு சொல்லீட்டு மறுபடியும் உள்ள போயிருச்சு. அந்த அலறல் சத்தம் கேட்டுகிட்டே இருந்துச்சு, முத்தத்துல தென்னை மரம் பேய் மாதிரிக் காதுல ஆடிக்கிட்டுக் கிடந்தது வேற கண்ணுல பட்டு இன்னும் பயமுறுத்துது. ஒரு பதினஞ்சு நிமிஷம் அங்கேயே நின்னுகிட்டு இருந்தேன், கரண்ட்டு வந்ததுதான் தெரியும், ஒரே ஓட்டம், யாருகிட்டயும் சொல்லல.

ஆனா, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது, ஏதோ ஒரு ரகசியம் இருக்கு இந்த வீட்டுல, ஒன்னு பேயா இருக்கணும், இல்ல, வேறே ஏதோ சட்டவிரோதமா நடக்கனும்னு அந்த வயசுக்கு என்னென்ன கற்பனை வருமோ அதையெல்லாம் பண்ணிகிட்டே இருந்தேன். ஆனா, பொதுவா செந்தி வீட்டுக்குப் போறதா கம்மி பண்ணிட்டேன், போனாலும் வெளியேயே நின்னுகிட்டு நீ போயிட்டு சாப்டு வாடா, நான் இங்கேயே இருக்கேன், முருகண்ணே கடைல உக்காந்திருக்கேன் மாப்ள, நீ வந்துரு அது இதுன்னு சொல்லி ஓட்டினேன். செந்திக்கி என்னோட இந்தப் புதுப் பழக்கம் கொஞ்சம் சங்கடத்தை உண்டாக்கி இருக்கும்னு நினைக்கிறேன்.

“ஏண்டா மாப்ள ஒருமாரியாவே இருக்க, வீட்டுக்குள்ள எல்லாம் வரமாற்ற?” என்று செந்தி பரிதாமாகப் பலமுறை கேட்டான். நா ஒன்னுஞ் சொல்லல, இப்டியே போயிட்டிருந்தப்ப ஒருநாள், நானும் செந்தியும், முத்தாலம்மன் கோயில் கொளத்தங்கரைல உக்காந்து பேசிகிட்டு இருந்தோம். ரொம்ப ஆட்கள் யாரும் இல்ல, அமைதியா ஐயரு தேங்காய் எல்லாம் எடுத்து ஒரு சிமிண்டுப் பைல போட்டுக்கிட்டு இருந்தாரு, வாச்சுமேன் செலுவம் கேட்டுகிட்டே உக்காந்து பீடி குடிசுகிட்டு இருந்தான். கொளத்துல தவளைங்க தவ்வி விளையாடிகிட்டு இருந்துச்சு, அடர்ந்த தென்னை மரங்களுக்கு இடைல நெலா மேகதுக்குள்ள மறைஞ்சு பாதரசம் மாதிரிக் கிடந்துச்சு.  

நான் மெதுவா "செந்தி, ஒங்க வீட்டு வராந்தாவுக்கு மேலே என்னமோ சத்தம் கேக்குது மாப்ள, யாரோ நடக்குற மாரியே இருக்கு, சங்கிலிச் சத்தம் கேக்குது, அன்னைக்கு ஒருநா, யாரோ கத்தின சத்தம் கேட்டுச்சு, பொய் இல்லடா, சத்தியமா கேட்டுச்சு".

செந்தி எதுவுமே பேசல, அமைதியா இருந்தான், செந்தியோட கண்ணுல தண்ணி கட்ட ஆரம்பிச்சுருச்சு, செந்தி அவளோ சீக்கிரம் அழுவுற ஆள் கிடையாது. ஆனாலும், அந்த நெலமைக்கி அழுகுர மாதிரித்தான் தெரிஞ்சிச்சு, "ஏண்டா மாப்ள அழுவுற" மொள்ளமா அவன் தோளைப் புடிச்சு குலுக்கினேன்.

4955356883_208ae86716_z

செந்தி அப்டியே எந்திரிச்சான், வா வீட்டுக்குப் போவம்னு சொல்லிட்டு சைக்கிள் ஸ்டான்ட எடுத்து வுட்டு உருட்ட ஆரம்பிச்சான், கேட்டத்தாண்டி வெளிய போகும்போது செலுவம் செந்திகிட்ட, அப்புச்சி எங்கடா செந்தி படைப்புக்குக் கூட வரலன்னு கேட்டதுக்கு செந்தி தெரியலைண்ணேன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு ஏறி சைக்கிள ஓட்ட ஆரம்பிச்சான், கேரியர்ல ரெண்டு பக்கமும் காலப் போட்டுக்கிட்டு செந்தி முதுகப் பிடிச்சுகிட்டே போனோம்.

செந்தி வீட்டுக்குள்ள சைக்கிள நிப்பாட்டிட்டு "உள்ள வா மாப்ள" ன்னு கூப்டான். செந்தி இருக்குற தைரியத்துல நானும் உள்ள போனேன், வராந்தாவுல இருந்து வெளில வந்து முத்தத்தோட இடது கோடிக்குப் போய் நின்னு இரும்புக் கதவத் தொறந்துகிட்டே என்னையக் கூப்டான் செந்தி, அங்க ஒரு அகலமான மரப்படிக்கட்டு இருந்துச்சு. செந்தி சித்தப்பாவோட வீட்டு முன்னாடி எரியுற குண்டு பல்பு வெளிச்சம் ரெண்டு கோடா கம்பிக் கதவு வழியா படில விழுந்து கிடந்துச்சு.

நான் கொஞ்சம் தைரியத்தோட செந்திய நெருங்கினேன், செந்தி படில தொம் தொம்னு ஏறுற சத்தம் என்னோட நெஞ்சுக்குள்ள அடிக்கிற மாதிரி இருந்துச்சு, மேலே ஏறி நிக்கிறப்போ வெளிச்சம் இருந்துச்சு, வராந்தாவுக்கு மேலே இருக்குற பெரிய அகலமான பரண் மாடி அது, சட்டத்துல கம்பி கட்டி தொங்க விட்டிருந்த லண்டியன் மெல்லமா ஆடிக்கிட்டே இருந்துச்சு, அது மாதிரி ஒரு இடத்த நான் எங்கேயுமே பாத்ததில்ல, செந்தி எனக்கு முன்னாடி நடந்துகிட்டே இருந்தான், ஒரு கட்டத்துல செந்தியோட நிழல் ரொம்பப் பெரிசா கீழ விழுந்து கிடந்துச்சு, அந்தப் பரனோட கடைசில போயி ஒரு இடத்துல செந்தி நின்னுகிட்டான்.

நான் இப்போக் கூர்ந்து பார்த்தேன், அங்க ஒரு உருவம், சாட்ச்சாத் ஒரு பெண்ணுருவம், முடியெல்லாம் கலஞ்சு, பழைய அரக்குக் கலர் சேலையோட உக்காந்திருந்தாங்க, பக்கத்துல ஒரு தட்டுல சோறு, கிண்ணத்துல கொழம்பு, தண்ணி எல்லாம் இருந்தது.

courtyard-Dakshinachitra

“அம்மாடா, வா இங்க”ன்னு மறுபடி கூப்டான் செந்தி, எனக்கு ஒருபக்கம் பயம், ஒருபக்கம் ஒருமாதிரி கலக்கம், அந்த லண்டியன் வெளிச்சத்துல இருட்டு முழுசா மறையாம அலைக்கழிக்குது.

“அம்மாவுக்கு முடியலடா, அஞ்சாறு வருஷமா இப்படித்தான் இருக்காங்க, வைத்தியமெல்லாம் பண்ணிப் பாத்தாச்சு, அப்பா மெட்ராஸ்ல போயி கீழ்ப்பாக்கத்துலேயே ரெண்டு மாசம் இருந்து பாத்தாரு, ஒன்னும் குணமாகல. இங்க வந்தா வீட்டுக்கு வந்த ரெண்டு மூணு பேர ஒரு மாதிரியா மொரண்டு பண்ணி கடிச்செல்லாம் கலாட்டாப் பண்ணீட்டாங்க, அதான் வேறே வழியே இல்லாம மேலே கொண்டு வந்துட்டோம், வேளா வேளைக்கு சாப்பாடு குடுத்துருவோம், வெளிய போறதுக்கு விடிகாலைல அப்பா ஒருவாட்டி கூட்டு வருவாரு, வெளிச்சத்தைப் பாத்தாலே அம்மாவுக்குப் பிடிக்கிறதில்ல, சொல்லி விட்டு அம்மாவுக்குப் பக்கத்தில் உக்காந்தான்.

"யாரு, சாப்டேன், வெளக்க அமத்து, தூங்கப் போறேன். வெளக்க அமத்து, தூங்கப் போறேன். வெளக்க அமத்து, தூங்கப் போறேன்".

அனிச்சையாகப் பேசினார்கள் செந்தியின் அம்மா, அம்மா, என்னோட படிக்கிற பையன் வந்துருக்கான், சத்தம் போடாத என்ன, பேசியபடியே அம்மாவின் கைகளில் படிந்து கிடந்த காய்ந்த சோற்றுப் பருக்கைகளைத் துடைத்தான் செந்தி, அம்மா இப்போது எதுவும் பேசவில்லை. இன்னொரு கையையும் காட்டியபடி நிமிர்ந்து என்னைப் பார்த்தார்கள். செந்தி என்னைப் பக்கத்தில் கூப்பிட்டான், என்னோட வர்ற யாரையும் அம்மா எதுவும் பண்ணமாட்டாங்கடா, வா, பக்கத்துல வா.

எனக்கு இப்போது பயமில்லை, மெதுவாகப் போய் செந்திக்கு அருகில் அமர்ந்தேன், கையால் சுவற்றை உரசி எனது நெற்றியில் கையை வைத்து ஒருமுறை இழுத்தார்கள் செந்தியின் அம்மா. வெளக்க அமத்துங்க, தூங்கப் போறேன். வெளக்க அமத்துங்க தூங்கப் போறேன்.

செந்தி இப்போது எழுந்து நடக்க ஆரம்பித்தான், வா மாப்ள, டைம் ஆயிடுச்சு, போலாம். மறக்காமல் லண்டியன் வெளிச்சத்தை குறைத்து விட்டு, அம்மா தூங்கு, வேற போர்வ வச்சிருக்கேன்” சொல்லிக்கொண்டே மாடிப்படியில் இறங்கினான்.

ஒரு அரை மணிநேரத்தில் அந்த வீட்டின் தோற்றம் மாறிப் போனது, ஒரு தாயைச் சிறை வைத்துப் பாதுகாக்க வேண்டிய அத்தனை இறுக்கமான சூழலிலும் தான் செந்தியின் வாழ்க்கை புன்னகைக்கிறது, ஒரு தாய் சலனமற்றுக் கிடக்கிற எல்லாப் பொழுதுகளிலும் அந்த வீட்டில் படைப்பும், பூஜையும், பாட்டும், கூத்தும் இன்னும் எல்லாமுமாய் வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டே தான் இருக்கிறது.

images (1)

நினைவுகள் திரும்பி, மீண்டும் முருகண்ணன் கடை வாசலுக்கு வந்த போது “செந்தி இப்போது எங்கே இருப்பான்?, செந்தியின் அம்மா எங்கே இருப்பார்கள்?, அவர்கள் குணமாகி இருப்பார்களா? இல்லை காலத்தின் மடியில் உறங்கி இருப்பார்களா?” என்றெல்லாம் கேள்வி எழும்பியபடி இருந்தது.

தெருவிலிருந்து வெளியே வந்து முத்தாலம்மன் கோயில் மேடையில் நின்று கொண்டு பார்த்தேன், உயரமான அந்த மேடையிலிருந்து பார்க்கும் போது செந்தியின் வீட்டைத் தவிர அகலமான சீமை வோடுகள் வேயப்பட்ட வீடுகள் இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது. அவை ஒவ்வொன்றினுள்ளும் செந்தி வீட்டுக் கதையைப் போல எண்ணற்ற கதைகளோடு காலம் காற்றாட்டு வெள்ளம் போல அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறது.

 

**************


மறுவினைகள்

 1. செந்தி வீட்டு முத்தம்…..= ஒரு தாயைச் சிறை வைத்துப் பாதுகாக்க வேண்டிய அத்தனை இறுக்கமான சூழலிலும் தான் செந்தியின் வாழ்க்கை புன்னகைக்கிறது, ஒரு தாய் சலனமற்றுக் கிடக்கிற எல்லாப் பொழுதுகளிலும் அந்த வீட்டில் படைப்பும், பூஜையும், பாட்டும், கூத்தும் இன்னும் எல்லாமுமாய் வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டே தான் இருக்கிறது.= கை.அறிவழகன் = அருமையான எழுத்தாற்றல், படிப்பது போல் இல்லை. நம்முடன் கூட உட்கார்ந்து பேசுவது போல் இருக்கிறது. = எங்கள் அருமை ராம்குமாரின் வித்தியாசமான (variety of styles) எழுத்து நடைகளை நினைவுபடுத்துகிறது = எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்
  கை.அறிவழகன்

 2. செந்தி வீட்டு முத்தம்…..= ஒரு தாயைச் சிறை வைத்துப் பாதுகாக்க வேண்டிய அத்தனை
  இறுக்கமான சூழலிலும் தான் செந்தியின் வாழ்க்கை புன்னகைக்கிறது, ஒரு தாய்
  சலனமற்றுக் கிடக்கிற எல்லாப் பொழுதுகளிலும் அந்த வீட்டில் படைப்பும்,
  பூஜையும், பாட்டும், கூத்தும் இன்னும் எல்லாமுமாய் வாழ்க்கை அதன் போக்கில்
  போய்க் கொண்டே தான் இருக்கிறது.= கை.அறிவழகன் = அருமையான எழுத்தாற்றல்,
  படிப்பது போல் இல்லை. நம்முடன் கூட உட்கார்ந்து பேசுவது போல் இருக்கிறது. =
  எங்கள் அருமை ராம்குமாரின் வித்தியாசமான (variety of styles) எழுத்து நடைகளை
  நினைவுபடுத்துகிறது = எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்
  கை.அறிவழகன்

 3. சிறந்த பதிவு
  தொடருங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: