கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 27, 2014

நெடுஞ்சாலை மெகஸ்தனிசின் குறிப்புகள்.

2048

இரு நகரங்களை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன், தகிக்கும் சூரியன் மெல்லச் சூடு தணிந்து தனது பொன்னிறக் கதிர்களை புவிப்பந்தின் மீது அள்ளித் தெளித்தபடி பக்கவாட்டில் மேகங்களை வண்ணமூட்டியபடி கிழக்கில் மிதக்கிறான், மலைக்குன்றுகள், அடர்ந்த பாக்கு மரங்கள், வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன், முற்றிலும் புதிய உலகமில்லை, இளமைக் காலத்தில் திரிந்தலைந்த அதே உலகம் தான், கண்ணுக்கெட்டிய தொலைவில் ஆட்டு மந்தைக் கூட்டமொன்றை அணைத்து  விரட்டியபடி நடந்து போகிற மனிதன், ஆடுகளின் அடர்த்தியான நிழல் நீண்டு பின்தொடர்கிறது, இருட்டு மரக்கிளைகளில் இருந்து அகப்படும் இடங்களில் எல்லாம் தாவிக் குதித்து வெளியை நிரப்பியபடி விளையாடிக் களிக்கிறது, அடையப் போகும் பறவைகள் எழுப்பும் அந்தியின் ஒலி பக்கத்து மழைக் குன்றில் பட்டுத் தெறித்து அந்த மாலையை ஏகாந்தமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு மேட்டில் ஏறி இறக்கும் கணத்தில் பச்சைப் பசிய வயல்களின் கதிர்கள் அரேபியக் குதிரையின் பிடரியைப் போல சிலிர்த்து மாலைக்காற்றில் ஆடியபடி நெல்மணியின் வாசனையைத் திரட்டலாய் உமிழ்ந்து கொண்டிருந்தன, வேடிக்கை பார்க்க வசதியான இடைவெளியில் இடது மூலையில் ஒரு கீற்று வீடு, வாசலில் புகையும் அடுப்பில் இரவுக்கான உணவு, நெடுஞ்சாலையின் அவசரத்துக்கு நடுவே தொட்டு விடுகிற தொலைவில்  எந்த அவசரமும் இல்லாமல் இயல்பாக இயங்கும் கிராமங்கள் நிறைய உண்டு, ஒரு முன்பனிக் காலத்தின் மாலையில் பள்ளி விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த போது அப்பத்தாவோடு களத்து மேட்டுக்குச் சென்று வைக்கோல் போரின் மீது அமர்ந்திருந்தேன், சுற்றிலும் அறுவடை நிலங்கள், மஞ்சளும் இல்லாமல், பச்சையும் இல்லாமல் படர்ந்து கிடந்த நிலங்களின் நடுவே மரங்களின் நிழல் நீண்டு கிடக்கும் மாலைப் பொழுது, தொலைவில் இருள், மெல்ல நடக்கும் பூனையின் கால்களைப் போல ஓசையின்றி படர்ந்து கொண்டிருக்கிறது.

கண்மாயைத் தாண்டி சின்னச் சின்ன வீடுகள், உள்ளேற்றப்பட்ட விளக்குகள் ஒளியைக் கசிந்து கொண்டிருக்கும், சாவகாசமாய் அன்றைய பொழுதின் வேலை முடித்த மாடுகள் முழங்கால்களை மடக்கிப் படுத்தபடி அசைபோட்டுக் கொண்டிருக்கும், இன்னும் அழியாமல் நினைவில் ததும்பும் "ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்"  என்கிற பாடலை இலங்கை வானொலியில் கேட்டபடி சேற்றுக் கால்களோடு களத்து மேட்டுப் பொருட்களை கூடையில் சேர்த்தபடி நின்றிருந்த ஐயாவின் உடல் இப்போது இல்லை, ஆனாலும் அவரது சொற்களும், உழைப்பும், அறிவும், நேசமும் அந்த மண்ணில் நிலைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.

இப்போது நான் நின்று கொண்டிருந்த இந்த நெடுஞ்சாலைக் கிராமத்தில் அதன் காற்றில் அதன் நெடிய அழுத்தமான மாலையின் நிழலில் காலம் ஒரு அழிக்க முடியாத சித்திரத்தைப் போலத் தேங்கிக் கிடக்கிறது. அந்தக் கிராமத்தின் காற்றோடு கலந்து உள்நுழைந்து ஒரு கயிற்றுக் கட்டிலில் உறவுகளோடு சுடச் சுட சமைக்கப்பட்ட உணவை உறவுகளோடு கூடி உண்டு களிக்கிற ஆசை பொங்கிப் பெருகுகிறது. ஆனாலும் அப்படிச் செய்து விட முடியாது, திரும்ப வேண்டும், நெடுஞ்சாலைக்குத் திரும்ப வேண்டும், நெடுஞ்சாலை அழைத்துச் செல்கிற நகரங்கள் வழமையான ஒரு நெருக்கடி மிகுந்த வாழ்க்கையோடு நமக்காகக் காத்திருக்கிறது. அந்த மாலை நான் கடந்து வந்த பல மாலைகளை நினைவூட்டும் ஒரு சுரப்பியைப்போல எனது நினைவுகளை மீட்டுகிறது, அந்த மாலையின் அழுத்தமான நிழல் இப்போது இன்னொரு இரவால் விழுங்கப்பட்டு விட்டது, ஓட்டுனர் பயந்திருக்க வேண்டும், "சார், எங்கே போயிட்டீங்க?, இதெல்லாம் ரொம்ப ஆபத்தான இடம்!!".

!Distant-Rice-field-cropped

உலகின் உணவுக்கான பயிர்களை விளைவித்துக் கொண்டு, பரந்த வானில் கூடு திரும்பும் பறவைகளின் நிழல் படியக் கிடை ஆடுகளை ஓட்டியபடி வீடு திரும்பும் விவசாயிகள் வாழும் மலையடிவாரக் கிராமங்கள் ஆபத்தான இடங்களாய் மாறிப்போன அவரது மனமே அந்தக் கணத்தில் மிக ஆபத்தானதாகத் தெரிந்தது எனக்கு.  மகிழுந்தில் அமர்ந்து மீளப் பெற முடியாத பல நூறு மாலைகளின் சித்திரங்களை மனதுக்குள் வரைகிறது நினைவக நியூரான்கள்.

இன்னொரு அழகிய மாலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தை ஒட்டிய வெளித்தாழ்வரத்தில் நின்று கொண்டிருந்தேன், பகலெல்லாம் தங்கப் பாளம் போல் உருகிக் கிடந்த மதுரையின் சூரியன் மெல்ல மெல்லத் தென்றலுக்கு வழிவிட்டு அமைதியாகிறான். வண்ண வண்ணமான மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளோடு தாழ்வாரத்தின் கற்களில் காலைச் சரட்டியபடி நடக்கிறார்கள், வரலாற்றின் நிழல் தூண்களில், சித்திரங்களில், தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் காணுமிடம் எல்லாம் பரவிக் கிடக்கிறது. காலவெளியில் இந்தத் தாழ்வாரம் தான் எத்தனை எத்தனை மன்னர்களை, மணிமகுடங்களை, செங்கோலின் வேலைப்பாடுகளை, வெற்றிகளை, தோல்விகளை, எண்ணற்ற மனிதர்களை கண்டு களித்தபடி நின்று கொண்டிருக்கிறது.

கிரேக்கப் வரலாற்றுப் பயணி மெகஸ்தனிஸ் இந்தத் தாழ்வாரத்தில் எனது கால்கள் தொடுகிற இதே கற்களில் கால் பதித்திருக்கிறான், கௌடில்யன் எனது கண்களில் பட்டுத் தெறிக்கிற இதே தெப்பக் குளத்தின் நீர்ச் சிதறலை குறித்திருக்கிறான், சங்கத் தமிழ் வளர்த்த முன்னைப் பாண்டியன் யாரேனும் இங்கே காவலர் புடை சூழ நடந்து சென்றிருக்கலாம், சோழனும், விஜயநகரப் பேரரசின் பேரழகிகளும், நாயக்க மன்னர்களின் போர்ப்படைத் தளபதிகளும் இன்னும் வரலாற்றினால் குறித்துக் கொள்ள இயலாத பல்லாயிரம் மனிதர்களும் நடந்து போன தடங்களில் நானும் நடக்கிறேன் என்கிற வரலாற்றுப் பெருமிதம் தான் எனது சின்னஞ்சிறு உயிரின் துடிப்பை எத்தனை பிரம்மாண்டமானதாய் மாற்றுகிறது. காற்றின் ஊடாக நடந்தபடி ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்கிறேன், எனது உயிர்க் கூட்டில் இருந்து வெளியில் பரவுகிற ஓசையின் விழுதுகளைப்போல இங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எண்ணற்ற மனிதர்களின் உயிர்ப்பரப்பில் இருந்து துடித்தெழுந்து கரைந்து போன ஒலிக்குறிப்புகள் சுற்றிலும் இருக்கிற கற்தூண்களில் படிந்து கிடக்கிறது.

வரலாற்றின் பெருங்கண்களை நெற்றியில் பொருத்திக் கொண்டவர்கள் அந்த ஒலிக்குறிப்புகளை மீட்டுப் பார்க்கலாம், தீண்டிப் பார்க்கலாம், முடிந்தால் கொஞ்சம் நினைவுகளில் தேக்கிக் கொள்ளலாம். நடை முடிவடைந்து இருட்டில் கற்சித்திரங்களை ஒளித்தபடி கிடக்கும் அந்த நெடிய தாழ்வாரத்தின் பின்னே பெருங்கூட்டமாய் மக்கள் ஆர்ப்பரிக்கும் ஓசை எழுகிறது, பெருங்கட்டான ஊஞ்சலில் மீனாட்சியின் சிலையை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள், 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊஞ்சல் மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துப் புன்னகைத்து இங்கொரு மூலையில் நின்றிருந்த ராணி மங்கம்மாவின் பேரொளி வீசும் மஞ்சள் முகம் நிழலாடுகிறத.

1024px-01MaduraiMeenakshiAmmanTempleIndoorCorridorView

இதோ இங்கே தான் உலக வரலாற்றின் பக்கங்களில் தமிழ் மன்னர்களின் முடியாட்சியில் வெற்றித்திருமகளாய் ஒற்றைப் பெண்மணியாய் சுடரொளி வீசிப் படை திரட்டிய பெருமங்கை கட்டிக் கொடுத்த ஊஞ்சல் மண்டபம் இது என்கிற வரலாற்றின் உண்மையை இங்கே ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருப்பவர்கள் அறிவார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த மாபெரும் ஆலயத்தின் ஒவ்வொரு கற்களின் பின்னும் ராணி மங்கம்மாவைப் போல, நாயக்க மன்னர்களின் புரவிகளை வளர்த்த கள்ளர்களைப் போல, பாண்டிய மன்னர்களின் பரந்த மார்பைப் போல எண்ணற்ற மனிதர்களின் நிழல் மதுரையின் கோபுரங்களை விடவும் உயரமாய் வரலாற்றின் சுவடுகளில் நிலைத்திருக்கிறது.

நெடுஞ்சாலை முடிந்து நகரத்தின் நியான் விளக்குகள் சாளரங்களின் வழியாக கண்சிமிட்டுகின்றன, வரலாற்றின் சாட்சியாக உடல் பயணிக்கிறது. நினைவோ எல்லாம் கடந்து மெகஸ்தனிசின் எழுத்தாணியைப் போல காலவெளியைக் கிண்டியபடி நிலைத்திருக்கிறது.

*************

Advertisements

Responses

 1. நெடுஞ்சாலை மெகஸ்தனிசின் குறிப்புகள். =
  கை.அறிவழகன் = அற்புதமான எழுத்தாற்றல். திரு
  கை.அறிவழகன் அவர்களின் இன்னொரு விதமான எழுத்து நடை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு
  கை.அறிவழகன்

 2. […] […]

 3. நெடுஞ்சாலை மெகஸ்தனிசின் குறிப்புகள். =
  கை.அறிவழகன் = அற்புதமான எழுத்தாற்றல். திரு
  கை.அறிவழகன் அவர்களின் இன்னொரு விதமான எழுத்து நடை. எனது பக்கத்தில்
  பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு
  கை.அறிவழகன்

 4. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: