கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 19, 2014

தனித்து விடப்பட்ட மாண்டலின்.

untitled

மூன்று பக்கமும் சூழ்ந்து கிடக்கிற கடல், பாறைகளில் மோதி நீர்த்திவலைகளை அள்ளித் தெளிக்கும் அலைகள், சேற்றுக்குள் ஓய்வெடுக்கிற யானையைப் போல பொன்னிறக் கதிரொளியை ஏந்தியபடி கண்ணில் தெரிகிற விவேகானந்தர் பாறை, மலைப்பாய் முதன்முறை கடலைப் பார்க்கிற குழந்தைகள்.

முத்திசையிலும் இருந்து சீறிப் பாயும் காற்று என்று புலனனைத்தும் நிரம்பிக் கிடந்த ஒரு மாலைப் பொழுதில் செவிகளை நிரப்பிய அந்த இசை எந்தக் கருவியில் இருந்து வருகிறது என்பதோ, அந்தக் கருவியின் தந்திகளை யார் மீட்டுகிறார்கள் என்பதோ எனக்கு…த் தெரியாது, ஆனாலும், அந்த இசை உயிர் வாழ்க்கையின் உறுத்தலான வலியை இலகுவாக்கும் ஒரு அற்புதமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது.

பிறகு ஒருநாள் மிக நெருக்கமாக அமர்ந்து மேடையில் வாசித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் இசையை கேட்க நேர்ந்த பொழுது இசையை விடவும் மனதில் தங்கிப் போனது அந்தக் கலைஞனின் உடல் அசைவுகள், தான் மீட்டுகிற கம்பிகளால் உயிரூட்டப்படும் இசையை வேறொருவரின் இசையைப் போலக் கொண்டாடி ரசிப்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கிற ஒரு வரம்.

மாண்டலின் சீனிவாஸ் எந்த மேடையிலும் சீனிவாஸ் ஒரு இசைக்கலைஞன் என்கிற பெருமிதத்தோடு வாசித்ததாக எனக்கு நினைவில்லை, எங்கேனும் அவர் கையில் அந்த இரட்டை மாண்டலின் என்கிற மரபிலிருந்து ஒரு புதிய ஒலியைப் பிறப்பிக்கும் கருவியைக் கொடுத்து விட்டால் நிறையப் பொம்மைகளை கொடுத்து விளையாடச் சொல்லும் ஒரு குழந்தையைப் போல அவர் இசைப்பார்.

கம்பிகளை மீட்டி நீங்கள் ஒரு ஸ்ருதியை எதிர்நோக்கி இருக்கும் போது அவர் அந்த ஸ்ருதியை இடைமறிப்பார், ஒரு புத்தம் புது இசைக்குறிப்பை மரபிலிருந்து மாறாமல் உருவாக்கி அந்த இசையை உள்வாங்கி அவரே ஒரு புன்னகையைப் பரிசாக்கிக் கொள்வார். அந்தக் கருவியில் இருந்து இசையை பெருகி வழிய விட்டுப் பின்பு தனது தேவைகளுக்கு ஏற்ப அதனை காற்றில் வரையப்படும் ஓவியங்களைப் போல செதுக்கிப் பார்வையாளனை திகைப்பில் ஆழ்த்தும் இசைக் கலைஞர்களில் சீனிவாஸ் ஒரு முன்னோடி.

அடிநாத ஒலிக்கும், உச்சநாத ஒலிக்கும் இடையில் மத்திம நிலைகளில் நின்று அவர் விளையாடும் இசை விளையாட்டை உலகம் உய்த்திருக்கிற வரைக்கும் நிலைத்திருக்கும். சீனிவாஸ் போன்ற இசைக் கலைஞர்கள் சாதாரண மனிதர்களைப் போல ஒரு நாள் இறந்து போய் விடுவார்கள் என்று நம்புவதுதான் மிகக் கடினமாக இருக்கிறது, பல தருணங்களில் சீனிவாசின் இசை இருப்பின் வலியைப் போக்கும் அற்புத மருந்தாய் என்னைப் போலவே பலருக்கும் வாய்த்திருக்கக் கூடும்.

மாண்டலின் சீனிவாஸ் இனி நம்மை மீட்ட வரப்போவதில்லை என்று அறியாமல் அவர் வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கும் அந்த கருஞ்சிவப்பு வண்ண மாண்டலின்களிடம் யாரும் அவர் இறந்து போன செய்தியைச் சொல்லி விடாதீர்கள், வாழ்நாள் முழுவதும் அந்த மாண்டலின் குழந்தைகளிடம் தான் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த மாண்டலின்களைப் போலவே கல்லீரலும், இதயமும் இல்லாத ஒரு நிலையான இசையாக அவர் இருந்திருக்கலாம் நெடுங்காலம் நம்மோடு…….

மாண்டலின் என்கிற இசைக் கருவியை முதன்முறையாக சீனிவாஸ் என்கிற அடைமொழி இல்லாமல் தனித்து விட்டுச் சென்றிருக்கிறீர்கள், ஒரு இசைக்கருவியின் பெயரை அதை வாசிக்கும் கலைஞனின் பேரோடு சேர்த்தே அறிய வைப்பதற்காக நீங்கள் வாழ்க்கை முழுக்கச் செய்த தியாகங்களும், உழைப்பும் பெருமைக்குரியவை. இசையின் மீது நீங்கள் காட்டிய ஈடுபாடு காலத்துக்கும் புதிதாய் வருகிற இளைஞர்களுக்கான நம்பிக்கை. சென்று வாருங்கள் சீனிவாஸ், உங்கள் வாழ்க்கை முழுமையானது. பேரண்டத்தின் வெளியில் இசையோடு உங்கள் புன்சிரிப்பு எப்போதும் கலந்திருக்கும்.

 

***************

Advertisements

Responses

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
    http://wp.me/pTOfc-bj


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: