கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 30, 2014

மெட்ராஸ் – வெகுமக்களின் வாழ்க்கை.

untitled

சென்னையின் திருவொற்றியூர், வேளேச்சேரி, திருமங்கலம் போன்ற இடங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், வெளியில் இருந்து வருகிற மக்கள் பார்க்கும் சென்னையின் பொதுமனம் எப்போதும் வேறானதாகவே இருக்கிறது, உண்மையில் அவர்கள் ஒருபோதும் சென்னையின் இதயத்தைப் பார்த்ததில்லை, சென்னையின் இதயம் அதன் உட்புறமான தெருக்களில், நெடிய உப்புக் காற்றடிக்கும் கடற்கரைக் குடிசைகளில், ஒன்று கூடி விளையாடும் பொதுவிடங்களில் என்று அலாதியானது.

சென்னையின் பூர்வீகக் குடிகளைப் போல அன்பானவர்கள் இந்த உலகத்தில் வேறெங்கும் இருக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், அவர்கள் வெள்ளந்தியாக உங்கள் மேல் அன்பு செலுத்துவார்கள், ஒரு கவளம் சோறு இருந்தால் பாதியாக்கி உங்களுக்கும் தருவார்கள், திளைக்கக் திளைக்க விருந்தோம்புவதில் அவர்களை விஞ்ச தமிழகத்தின் எந்த நிலப்பரப்பிலும் ஆட்கள் இல்லை என்பதை நான் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.

அந்த அற்புதமான நாட்களை இழந்து நெடுநாட்களுக்குப் பிறகு நேற்று "மெட்ராஸ்" திரைப்படத்தைப் பார்த்த போது அத்தகைய ஒரு உணர்வை மீட்டிப் பார்க்க முடிந்தது, அதே தெருக்கள், அதே ஒடுங்கிய குறுகலான ஆனால், நிறைய வாழ்க்கை இருக்கிற வீடுகள், அதிகாலைத் தண்ணீர்க் குழாய்கள், நியான் விளக்குகளில் படுத்திருக்கும் நாய்கள், அன்பு நிரம்பிய வெள்ளந்தியான மனிதர்கள் என்று சென்னையின் பூர்வீகக் குடிமக்களின் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

சென்னை மாதிரியான கலவையான மனிதர்கள் வசிக்கும் ஒரு மிகப்பெரிய நகரத்துக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது, அந்த அடையாளம் பேச்சு வழக்காகவும், உடல் மொழியாகவும் அடையாளம் காணப்படும், புதிதாகச் சென்னைக்குச் செல்பவர்கள் எவ்வளவுதான் முயன்று நடித்தாலும் அந்த அடையாளத்தை உங்களால் கையகப்படுத்த முடியாது. இந்தத் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அத்தகைய பேச்சு வழக்கையும், உடல் மொழியையும் கொஞ்சமேனும் மெருகேற்ற முயற்சி செய்கிறது என்பதை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

images

அன்பு, மேரி, ரோனால்டோ, ஜானி, அனில் மாதிரியான பல மனிதர்களை நான் சென்னையில் பார்த்திருக்கிறேன், ஆனால், மாரியைப் போல, ஒரு மனிதனையும் நான் சென்னையில் பார்க்கவில்லை,  நிஜமான சென்னையின் ஆழமான தெருக்களில் மாரியைப்போல வாழ்வது மிகக் கடினமான ஒரு வாழ்க்கை முறையாக இருக்கக் கூடும். குறிப்பாக வேளேச்சேரியின் அன்பில் தர்மலிங்கம் தெருவில் மெட்ராஸ் திரைப்படத்தின் அன்புவை விடப் பன்மடங்கு அன்பும், பண்புகளும் கொண்ட “பார்த்தசாரதி” என்றொரு நண்பன் இன்னமும் இருக்கிறான் எனக்கு.

இனித் திரைப்படத்துக்கு வருவோம், தங்களைச் சுற்றி நிகழ்கிற அரசியல் எப்படியெல்லாம் ஒரு எளிய சென்னை வாழ் இளைஞனின் வாழ்க்கையில் தாக்கம் விளைவிக்கிறது, கோட்பாட்டு ரீதியாக  அல்லது சமூகவியல் ரீதியாக எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத சுவர் விளம்பர அரசியல் எப்படி பல குடும்பங்களின் சமூகப் பொருளாதார இருப்பை வதம் செய்கிறது என்று அவரது பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 

imagesCAMNDX5C

வணிக நலன்களுக்காகவோ, அடையாளம் குறித்த சிக்கல்களுக்காகவோ காளி கதாபாத்திரத்தை ஒரு முழுமையான ஒடுக்கப்பட்ட மனிதனாக உருவகம் செய்வதில் பா.ரஞ்சித்துக்கு மனத்தடை இருந்திருக்க வேண்டும், ஆனால், ஒருவேளை அந்த மனத்தடையை அவர் கடந்திருந்தால் அழுத்தமான ஒரு புதிய வரலாற்றில் அவரது பெயர் குறிக்கப்பட்டிருக்கும். அரசல் புரசலாக பல இடங்களில் கதை நாயகனை ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனாக அவர் காட்ட முயற்சி செய்திருந்தாலும், அது முழுமையாக வெளிப்பட்டு வணிக வழியாக எதிர்மறை நிலையை அடைந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார்.

நாயகிக்கு வழக்கமாகக் காதலிப்பதை விடப் பெரிதாக வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை, கொடுத்த வேலையையும் அவ்வளவு சரியாகச் செய்தாரா? என்று ஒரு கேள்வி நிற்கிறது, ஜானி, அன்பு, மேரி, மாரி மாதிரியான கதாபாத்திரங்களோடு சென்னையின் இளம்பெண்களை அடையாளம் செய்யக் கிடைத்த அருமையான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார், இயக்குனர் ஒரு சென்னைப் பெண்ணையே கலையரசி கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ?

கேரளப் பெண்களின் மனப்பிம்பம், சென்னையில் வாழும் ஒரு பெண்ணின் பேச்சுவழக்கு மற்றும் உடல்மொழியை ஒத்திசைவது என்னைப் பொருத்தவரையில் மிகக் கடினமான பணி.

ஜானியாக வாழ்ந்திருக்கும் ஹரியின் உடல் மொழியும், திறனும் வியக்க வைக்கிறது, அனேகமாக எல்லாப் பாத்திரங்களையும் அவர் வென்று விட்டார் ஒரு நடிகனாக என்று தான் சொல்ல வேண்டும்.

G Murali

முதல் பாதியில் சென்னையின் நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கை முறையை அற்புதமாகப் படம் பிடித்திருக்கும் பா.ரஞ்சித் பிற்பாதியில் அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார், ஜி.முரளியின் ஒளிப்பதிவு இன்னும் எட்ட முடியாத உயரங்களுக்குப் போகும் வாய்ப்பிருக்கிறது, இரவு நேரச் சென்னையின் தெருக்கள், அதிகாலை மனிதர்களின் உடல், இயல்பான வீட்டுக்குள் நிகழ்கிற உரையாடல்களை அவர் படம் பிடித்திருக்கும் கோணம் என்று வியக்க வைக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசை கவனம் கொள்ள வைக்கிறது, குறிப்பாக காளி, கலையரசி காதலுக்குப் பின்னணியில் ஒலிக்கும் அவரது பியானோ இசை மனதுக்குள் நீங்காமல் இடம் பிடிக்கிறது, "ஆகாயம் தீப்பிடிச்சா நெலா தூங்குமா", "அன்பெனும் பறவை சிறகடித்து" போன்ற உயிரோட்டமான மண்ணின் இசையை உயிர்ப்பித்திருக்கிறார்.

காலம் காலமாக சமூக மனங்களில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை என்பதை ஒரு குறியீடாக சுவரை முன்னிறுத்தி காட்சிகளைக் கோர்த்த இயக்குனர், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை இன்னும் காட்டமாக வெளிப்படையாக வைத்திருக்கலாம் என்பது ஒரு ஆதங்கமாக இருக்கிறது.

ஆதிக்க அரசியலுக்கு எதிராக முன்னிறுத்தப்படும் ஒடுக்கப்பட்ட மனிதனின் உடல் அழிக்கப்படுகிறது அல்லது கல்வி, தத்துவம் போன்ற அமைதி வழிப் பாதையை நோக்கி நகர்த்தப்படுகிறது என்று எல்லா வழக்கமான இயக்குநர்களைப் போலவே பா.ரஞ்சித் சொல்லி இருக்கிறார். கடைசிக் காட்சியில் ஒரு பக்கம் காளி பள்ளியில் சமூக மாற்றம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது மாரியின் இடத்தில் இன்னொரு துரோகியை முன்வைத்து துரோகத்தின் வரலாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைமைப் பண்பை சித்தரிக்க முனைவது ஏன் என்கிற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

குறைகளைத் தாண்டி, இந்த சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அவர்களின் மொழியை, அவர்களின் உடலைப் படமாக்குவதில் சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி அடைய வைத்திருக்கும் பா.ரஞ்சித் பாராட்டுக்குரியவர்.  எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை "ஸ்டுடியோ கிரீன்" தயாரித்திருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

Santhosh

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவர்களின் பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய அன்பு, ஜானி, மேரி, காளி போன்ற கதாபாத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் இன்னும் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும், வெகு காலமாக உலவும் போலியான நிலபரப்புக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத கதை மாந்தர்கள் துரத்தி அடிக்கப்பட வேண்டும் என்கிற ஆழ்மனக் கிடக்கையை பா.ரஞ்சித் துவக்கி வைத்திருக்கிறார்.

மெட்ராஸ் – உண்மையில் ஒரு மாறுபட்ட முயற்சி. வாழ்த்துக்கள்.

 

*************

Advertisements

Responses

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
    http://wp.me/pTOfc-bj


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: