கை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 2, 2014

ஜெயலலிதா கைதும், பொது சமூக மனநிலையும்.

Jeya

கடந்த 27 ஆம் தேதி அந்நாள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பொதுவெளியில் இருவேறு மனநிலை காணப்படுகிறது, முதலாவது மிகப்பெரிய வீழ்ச்சியை அல்லது கொடுமையான அளவுக்கதிகமான தண்டனை கொடுக்கப்பட்டது போலவும் அரற்றி அழும் மனநிலை, பெரும்பாலும் அவர் சார்ந்த கட்சித் தொண்டர்கள், பொது சமூக வெளியில் வசிக்கும் பாமர மக்கள், தனி மனித ஆதாயங்களுக்காக அப்படிச் செய்தாக வேண்டிய ஊடகங்கள் என்று பல்வேறு குழுக்கள் இந்த முதல் நிலையில் பங்கு வகிக்கிறார்கள்.

இரண்டாவதாக எங்கள் ஒரே அரசியல் எதிரியான அந்தப் பெண் சிறையில் தள்ளப்பட்டார், ஊழல் செய்தவருக்கான தண்டனை வழங்கப்பட்டுவிட்டது, இந்த தேசத்தில் சாமான்ய மனிதனும், அரசியல் அதிகாரம், பணபலம், படைபலம் என்று செல்வாக்குப் பெற்ற மனிதனுக்கும் நீதி ஒன்றுதான் என்று உறுதி செய்யப்பட்டு விட்டது என்று கொண்டாடுகிற மனநிலை, இந்தக் கொண்டாட்ட மனநிலையில் வெகுவாக திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக சிறையில் தள்ளப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள் என்று பல்வேறு குழுக்கள் இந்த இரண்டாம் நிலையில் பங்கு வகிக்கிறார்கள்.

இவை தவிர்த்து இவ்விரண்டு குழுக்களிலும் பங்குபெறாத ஒரு நடுநிலைக் குழு இருக்கிறது, தேசியக் கட்சியைச் சார்ந்தவர்களாகவோ, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களோ அல்லது அரசியல் தங்களைப் போன்ற புனித மனிதர்களால் பங்கு வகிக்க இயலாத பெருஞ்சாக்கடை என்று முழக்கமிடுகிற நடுநிலை? வாதிகள்.

உணர்வு வயப்பட்ட நிலையில் முதலிரண்டு குழுக்களும் தங்களால் இயன்ற இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்க மௌனமாக இந்த மூன்றாம் தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், அல்லது முதலிரண்டு குழுக்களிடையே நிகழும் அந்த அரசியல் நெருப்பை இயன்ற வரைக்கும் அணைய விடாமல் பாதுகாக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும். இவை எல்லாம் காலம் காலமாக மனிதக் குழுக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இயல்பான நிகழ்வுகள் தான் என்றாலும், இத்தகைய நிகழ்வுகளை எதிர் கொள்ளும் முதிர்ச்சியான மனநிலையை நமது அரசியலும், கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறதா என்கிற கேள்வியே ஆகப்பெரியதாக நிற்கிறது. சட்டத்தின் எல்லா மூலைகளிலும், கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி காலம் கடத்திய இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஏறத்தாழ 18 ஆண்டுகள் இந்திய தேசத்தின் நீதித் துறையை அலைக்கழித்தார்கள்.

Sasi

சட்டத்துக்குப் புறம்பாக சொத்துக் குவித்து ஆடம்பரத் திருமணங்களையும், வாழ்க்கையையும் வாழ்ந்தார்கள், அரசு ஊழியராக அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக இருக்கும் மாநிலத்தின் முதல்வர் வழக்கமான நிகழ்வுகளுக்கு முரணாக ஒருவரைத் தத்தெடுத்து அவருக்குத் திருமணம் செய்து அழகு பார்த்தார்கள், அரசு இயந்திரம் முதற்கொண்டு காவல்துறை வரையில் இந்தத் திருமணத்துக்கு ஏவல் புரிகிற பணியைச் செய்தது. மேலும் வழக்கின் இண்டு இடுக்கெல்லாம் தங்களுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களை பயன்படுத்தி முடித்திருந்த போதும் அவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் தண்டனைக்குள்ளாக வேண்டியிருந்தது என்பதே இந்த வழக்கைத் துவக்கத்தில் இருந்து கவனித்து வரும் எவரும் அறிந்த விஷயம்.

இந்த வழக்கின் துவக்கத்தில் இருந்தே ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வந்தன, முன்னாள் முதல்வரின் கருணைப் பார்வை கிடைக்க வேண்டும், சமூக மற்றும் வர்ண ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் அவரது புனிதத் தன்மை பாதிப்படையக் கூடாது என்று ஊடகத்தின் ஒரு தரப்பும், அவருடைய ஆட்சி அதிகாரத்தின் வணிக நலன்களை இழந்து விடக் கூடாது என்கிற ஊடகத்தின் இன்னொரு தரப்பும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டின, அல்லது இந்த வழக்கை சமூகத்தின் நிழலில் இருந்து மறைக்க முயன்றன. கடைசி நாள் வரையில் அரசியல் ரீதியாக இந்த வழக்குக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தமிழக ஊடகங்களில் இருந்து தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்தத் தவறு ஆட்சியாளர்களை ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை நோக்கி நகர்த்தியது, இந்த வழக்கின் தீர்ப்பு நாளன்று கூட இந்த தேசத்தின் நீதி நம்மை ஒன்றும் செய்துவிடாது, நாம் பாதுகாப்பாக பகல் உணவுக்குத் திரும்பி விடுவோம் என்று நம்ப வைத்தது. இவ்வளவு கலவரங்களுக்கு இடையிலும் இன்றும் பல தமிழக ஊடகங்கள் இந்த வழக்கின் உண்மைத் தன்மையையோ, வழக்கில் உறுதி செய்யப்பட்டிருக்கும் சொத்துக்கள் குறித்த விவரங்களையோ வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றன அது மட்டுமில்லாது நீதித் துறை ஏதோ மிகப்பெரிய குற்றம் புரிந்தது போலவும் பிழையாகக் காட்ட முயற்சி செய்வது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இந்த நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, மற்றும் 100 கோடி ரூபாய் அபராதத் தொகை என்பது நீதியின் பால் நம்பிக்கை கொண்ட பலருக்கு மகிழ்ச்சி அளிக்கலாம், அவரது அரசியல் எதிர்காலமே முடங்கிப் போனது என்று கொக்கரிக்கலாம், ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி நாம் சில முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசியாக வேண்டும்.

imagesCAEW3M84

இந்த வழக்கில் தொடர்புடையவர், குற்றம் சட்டப்பட்டுத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பவர் ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் மட்டுமில்லை, ஏறத்தாழ 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே கொண்ட தேசத்தின் செல்வாக்கு மிக்க தலைவர், முதல் நிமிடம் வரைக்கும் முதல்வராக இருந்தவரை அடுத்த நிமிடம் குற்றவாளி என்றும், அலுவலகப் பூர்வமான எந்தச் செயல்பாடுகளையும் செய்ய முடியாத ஒரு எளிய மனிதர் என்றும் மாற்றி விடுவது தேசத்தின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அத்தனை உகந்த ஒரு செயல்பாடாக இருக்குமா என்கிற கேள்வியையும் நாம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

முன்பொருமுறை நமது கல்லூரிக் குழந்தைகளையே பேருந்தில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர்கள் நிரம்பிய தேசம் நமது தேசம், ஆக, நீதித் துறை மட்டுமல்ல, நமது அரசியல் பிரதிநிதிகளும் இத்தகைய சிக்கலான வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகளின் போது அதற்கான ஒரு நெகிழ்வான வெளியை உருவாக்க வேண்டும், ஒரு மாநிலத்தின் முதல்வரை நமது நீதித்துறை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்போது அவருக்கான பொறுப்புகள், அவர் மடை மாற்ற வேண்டிய செயல்பாடுகள், அரசியல் வழிமுறைகளை வேறொருவருக்கு வழங்கும் கால வாய்ப்புகள் என்று பல்வேறு கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தின் அமைச்சர் பெருமக்கள், குடிமைப் பணியில் இருக்கும் அலுவலர்கள் நீதி மன்ற வளாகங்களிலோ, சிறை வளாகங்களிலோ காவல்துறை மற்றும் அதிகாரம் கொண்டவர்களால் குறிப்பாக வேறு மாநிலங்களில் அவமதிக்கப்படுவது  போன்றவற்றைத் தவிர்க்க வரும் காலங்களில் நீதித்துறையும், அரசும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமான சொத்துச் சேர்ப்பது என்பதையே நமது இன்றைய கல்விமுறையும், சமூக அறிவியலும் மறைமுகமாகக் கற்றுக் கொடுக்கிறது, முதல்வர் பதவியில் இருப்பவர் அவருடைய தகுதிக்கு ஏற்ற சொத்துக்களைக் குவித்திருக்கிறார், கவுன்சிலராக இருப்பவர் அவருடைய வாய்ப்புகளுக்கும், தகுதிகளுக்கும் ஏற்ற சொத்துக்களைக் குவிக்கிறார்.

இன்றைய பொது சமூக மனநிலை என்பது வெற்றிகரமான வணிகனாக எப்படி இருப்பது, அல்லது வெற்றிகரமான வணிகனுக்கு எந்த வகையில் அடிமைச் சேவகம் புரிந்து பொருளீட்டுவது என்கிற குறியீடுகளையே நோக்கி நகர்கிறது. இந்த அடிப்படை முரண்பாடுகளை வைத்துக் கொண்டு ஊழலற்ற சமூகத்தைப் படைக்கப் போகிறேன், சாமான்யனுக்கு வழங்கப்பட்ட நீதி என்றெல்லாம் போரிப்படைவது எந்த வகையிலும் சமூகத்தை உண்மையான நீதியை நோக்கி நகர்த்தப் போவதில்லை. அடிப்படை அறமற்ற ஒரு சமூகத்தில் ஒரு பெரும்பதவியில் இருப்பவருக்கு வழங்கப்படும் தண்டனை எந்த மாற்றத்தையும் நமக்கு வழங்கப் போவதில்லை என்பது தான் உண்மை.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டிருக்கும் சூழல் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய அரசியல் சூழலாக இல்லை, அவர் அசைக்க முடியாத அரசியல் ஆற்றலாக வளர்ந்து வரும் சூழலில் இந்தக் கைது நிகழ்ந்திருக்கிறது, திராவிட மற்றும் தமிழ்த் தேசிய அரசியலின் பாதுகாப்பு அரணாக தெரிந்தோ தெரியாமலோ ஜெயலலிதா இருந்திருக்கிறார், தமிழகத்தின் இன்றைய பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் நிகழ்ந்த அரசியல் தாக்கங்களில் தொடர்புடையவர்கள்.

je

பல்வேறு அடிப்படைவாதக் குழுக்கள், குறிப்பாக இந்துத்துவாவின் மறைமுக அமர்வுகள் திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்காகக் கழுகாய்க் காத்திருக்கும் ஒரு சூழலில் இந்த வெற்றிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது தமிழ்த் தேசிய இயக்கங்களோ பெருமகிழ்ச்சி கொள்ளும் ஒரு நிகழ்வாக இது இல்லை என்பதே குறிப்பாகக் கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இந்த வெற்றிடத்தை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி தனக்குக் கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் நிலவுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா என்கிற குறியீடு இன்றைய இந்திய அரசியல் களத்தில் ஒரு தனி மனித அடையாளம் மட்டுமில்லை, கோடிக்கணக்கான உழைக்கும் எளிய மக்களின் உணர்வும் தேர்வும். ஆகவே இந்த நிகழ்வை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பது வரலாற்றில் மிக முக்கியமான காலமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழக எதிர்க் கட்சிகளும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஏனைய சட்டமன்றக் கட்சிகள் அனைத்தும் உணர்வு வயப்பட்ட முடிவுகளைக் கைவிட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குப் பக்க பலமாக நின்று ஜனநாயகப் பண்புகளைக் காக்க முற்பட வேண்டிய காலமிது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை இந்த தேசத்தின் எளிய உழைக்கும் மக்களின் நீதியின் பாலான நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அதே நீதி வெகு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில முதல்வருக்கு வேண்டிய கால இடைவெளியை வழங்கவில்லையோ என்று தோன்றுகிறது. மிகபெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சியை ஓரிரவில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் பறித்துக் கொண்டு தங்கள் அரசியல் விளையாட்டுக்களை நிகழ்த்தி நெடுங்கால அரசியல் இயக்கங்களை அழிக்கும் ஒரு குறுக்கு வழியாக மாற்றம் அடைவதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் நாம் கண்டறிய வேண்டியிருக்கிறது.

imagesCAM2OOQ0

ஆட்சி அதிகாரத்துக்கு வருகிற எளிய உழைக்கும் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்படுகிற மாநில முதல்வர் போன்ற பெரும் பதவிகளுக்கு வருபவர்கள் தங்கள் உடனிருக்கும் மனிதர்களையும் அவர்களின் நம்பகத் தன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை சசிகலா குடும்பத்தினரின் தலையீடு வெட்ட வெளிச்சமாய் எடுத்துச் சொல்லி இருக்கிறது. ஜெயலலிதாவின் இன்றைய அவல நிலைக்கு சசிகலாவுடன் அவருக்கு இருந்த நட்பு ஒரு மிகப்பெரிய காரணி என்பதை ஏனோ மக்களும் ஊடகங்களும் சுட்டிக் காட்டவே விரும்பவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உணர்வு வயப்பட்ட நேர்மறை எதிர்மறை நிலைப்பாடுகளைக் கைக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சியை நமது தலைமுறைகளுக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கருத்தியலிலும் நமது அரசியல் இயக்கங்களும், ஆட்சியாளர்களும், நீதித் துறையும் கவனம் செலுத்த வேண்டும்.

இறுதியாக அளவுக்கதிகமான முறையற்ற வழியில் சொத்துச் சேர்க்கும் ஒரு பெண்ணை நமது அரசியல் தலைவியாக்கி, அவரை நமது மாநிலத்தின் முதல்வராகவும் மாற்றி அழகு பார்த்ததிலும், இப்போது அழுது புரண்டு அநீதி என்று அடம் பிடிப்பதிலும் நமது பல்லாயிரமாண்டு கால அறம் நமது கரங்களாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது என்கிற மிகப்பெரிய உண்மையையும் நாம் உணரத்தான் வேண்டும். 

 

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: