கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 6, 2014

வெண்முரசு…..

Page-1

ஜெயமோகனின் "வெண்முரசு" மகாபாரத நாவல் வரிசை சென்னையில் வெளியாகிறது, நடிகர் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, மூத்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். எழும்பூர், மியூசியம் தியேட்டர் ஹாலில் வருகிற ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு இந்த விழா நிகழவிருக்கிறது. திரைப்படம் சாராத ஒரு இலக்கிய விழாவுக்கு திரைத்துறையின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் வருகை தருவது உண்மையில் ஜெயமோகனுக்கு வெற்றியோ இல்லையோ, நலிந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு வயிற்றெரிச்சலும், நம்பிக்கையும் தரக்கூடிய ஒரு வினோத நிகழ்வு என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

ஜெயமோகனின் மனம் தழுவிக் கொண்டிருக்கிற மதக் கோட்பாடுகளும், அரசியலும் எனக்கு முற்றிலும் மாறானவை, ஆனாலும், ஒருபோதும் ஜெயமோகனை வாசிப்பதை நான் நிறுத்தியதில்லை. ஏனெனில் அவரது எழுத்தில் பெரும்பாலான நேரங்களில் அவர் அறிந்த உண்மையும், நேர்மையும் எப்போதும் இருக்கும். தனக்குப் பிடித்தவற்றைப் பிடித்திருக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றும் வெளிப்படையாக மறுக்கிற மனத்துணிவு அவரிடம் எப்போதும் இருக்கும்.

இவை எல்லாம் தாண்டி எனக்குப் பிடித்த இன்னொரு பண்பு அவரிடம் உண்டு, அவருடைய "நிலக்கால்" அணுகுமுறை, அவரது கால்களை நான் நன்கு கவனித்திருக்கிறேன், அவை எப்போதும் நிலத்தில் இருக்கும், அவர் நிலத்திலிருந்து வெகு உயரமான இடங்களில் அமரும் போதெல்லாம் கூட ஏதோ ஒரு கருவியின் துணையோடு தனது பாதங்கள் நிலத்தில் ஊன்றிக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்வார்.

மூன்று மணி நேரம் ஒரு அரசியல் ஆற்றல் நிரம்பிய மனிதரைச் சந்தித்து அப்போது தான் உரையாடி வந்திருப்பார், அல்லது கனவுலகைக் கட்டமைக்கிற திரை நாயகர் யாரோ ஒருவருடன் நெடுநேரம் செலவிட்டு வந்திருப்பார், வெளியே அவரது புதிய வாசகனைச் சந்தித்து விட்டால் ஒரு குழந்தையைப் போல அவரது புதிய சிறுகதையையும் அவனது வாழ்க்கையையும், தெருமுனைத் தேனீர்க் கடையில் நின்றபடி திகட்டத் திகட்ட ஐந்து மணிநேரம் பேசுவார்.

தெருவில், டிவியில் "கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்" வீட்டில் மனதில் "கேபிடலிஸ்ட், பாசிஸ்ட்" என்று பன்முகம் காட்டும் நமது தமிழ் எழுத்தாள சமூகங்களிடையே ஜெயமோகன் எப்போதும் அணுகுவதற்கும், விவாதிப்பதற்கும் ஒரு எளிய மனிதர் என்கிற புள்ளியே அவர் மீது ஒரு நெருக்கத்தையும், மதிப்பையும் எப்போதும் கூட்டுகிறது.

வெண்முரசு பல ஆயிரம் பக்கங்கள் என்று பெருமூச்செறியும் பலரையும் காணமுடிகிறது, அவரை அப்படி எல்லாம் சொல்லி நிறுத்தி விட முடியாது, வேறெந்தப் பழக்கங்களும் இல்லாத காரணத்தால் அவர் எழுதுவதற்கு அடிமையாகி விட்டார், ஜெயமோகனைத் தண்டிக்க வேண்டும் என்று யாரேனும் விரும்பினால் மிக எளிமையான வழி அவரது கைகளைக் கட்டி விடுவதுதான், அதுவும் குறுகிய காலம் மட்டுமே பயன் தரக்கூடும், இடைப்பட்ட காலத்தில் ராமாயணத்தை பத்துப் பன்னிரண்டு தொகுதிகளில் இரண்டு லட்சம் பக்கங்களில் அவர் கால்களால் எழுதப் பழகிக் கொண்டு விடுவார். அவரைப் பொருத்தவரை சமகால எழுத்தாளன் என்பவன் நிறைய எழுதிக் கொண்டிருப்பவன் என்று முழுமையாக நம்புபவர், ஆகவே அவரே அதனைச் செய்யாமல் இருக்க முடியாது.

மந்தநிலையில் கிடக்கும் தமிழ் எழுத்துலகை தொடர்ந்து அவர் பல்லாயிரம் பக்கங்களால் உயிர்ப்பிக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அவரது வெண்முரசை எதிர்த்து குறுகிய காலத்தில் "கறுமுரசு" என்று ஒரு நாவல் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நூல்களை வாங்கிப் படிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இவ்வளவு நீண்ட காலம் அவர் எழுத்தாளராக இருப்பதே என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய சாதனைதான்.

நாவலின் எல்லாப் பக்கங்களையும் படித்து ஒரு உண்மையான இலக்கிய விமர்சகன் அது குறித்த மிகத் தகுதியான ஒரு விமர்சனத்தை எழுதி முடிக்கும் காலத்துக்கு வெகுகாலம் முன்பாகவே அவர் இரண்டாம் பதிப்புக்குப் போய்விடுவார். ஏனென்றால் தமிழின் பெரும்பாலான நாவல்களுக்கு நண்பர்கள் மார்க்கெட்டிங் செய்வார்கள், ஜெயமோகனின் சின்ன இணையக் கட்டுரைக்குக் கூட மார்க்கெட்டிங் செய்வது அவரது நண்பர்கள் அல்ல, அவரது எதிரிகள்.

Page-31

எழுத்தையும், வணிகத்தையும் சமவிகிதத்தில் வெற்றிகரமான தொழிலாகச் செய்வதற்கு ஜெயமோகனிடம் நமது ஆல் இன் ஆல், டிவி புகழ் தமிழ் எழுத்துச் சமூகம் ஒரு பயிற்சிப் பட்டறை "ட்ரைனிங்" எடுத்துக் கொண்டால் நல்லது.

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார். வெண்முரசு போலவே பல வண்ணங்களில் பச்சை பைபிள், சிவப்புக் குரான் வரைக்கும் எழுதி நீங்கள் உலகப் புகழ் பெற வேண்டும்.

 

********

Advertisements

Responses

  1. மகாபாரதத்தை செவிவழி கேட்கவாவது கொடுத்து வைத்த நம் தலைமுறை… அடுத்த தலைமுறைக்கு அதுவும் கிட்டாது… சீரியல் பாட்டி தாத்தா கதை எங்கே சொல்வது??
    இத்தனை எளிய மொழிநடையில் ஜெமோ வின் பாரதம்… பயனுள்ள பொக்கிஷம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: