கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 1, 2014

மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 2

evolution111

சரி, உயிரியல், மொழியியல் மற்றும் புவியியல் தகவமைப்புகளைத் தாண்டி எந்த மனித இனமும் உளவியல் தன்மையில் உயர்ந்தது என்கிற கோட்பாடு ஏன் முன்னெடுக்கப்படுகிறது, அப்படியான கோட்பாட்டினால் என்ன நன்மைகள் விளையக்கூடும் என்கிற ஒரு எளிமையான ஒரு கேள்வி இப்போது உங்களுக்கு வரக்கூடும். அது ஒரு முக்கியமான கேள்வியும் கூட.

இந்தக் கேள்விக்கான விடைக்கு முன்னதாக ஒரு எளிய இந்திய எடுத்துக்காட்டை உங்களுக்குச் சொல்ல வேண்டும், இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன் எல்லா மாநிலங்களிலும் நகர்ப்புறம், ஊரகம் என்கிற வேறுபாடு இல்லாமல் ஒரு சொல்லாடலைக் கடந்து வந்திருக்கிறேன், அந்தச் சொல்லாடல்

"என்ன இருந்தாலும் பிராமணன் அல்லவா? பிறவி அறிவும், ஒழுங்கும் கிடைக்கப் பெற்றவன் அல்லவா?"

படித்தவர்கள், கல்வியாளர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், சக அலுவலர்கள் என்று பல்வேறு தரப்பினர் மேற்சொன்ன சொல்லாடலை ஏதேனும் ஒரு கணத்தில் என்னிடத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஒருவனுடைய தனித்திறன், அறிவு, கல்வி, ஒழுக்கம், பண்புகள் எல்லாவற்றையும் கடந்து பிறவியினால் அவன் உயர்ந்தவன் என்கிற இலவசத் தகுதியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவனுக்கு வழங்குகிற அந்த நம்பிக்கை, இனங்கள் உளவியல் தன்மைகளோடு தொடர்பு கொண்டவை என்கிற பொய்யான பல நூற்றாண்டு கால ஆரியப் புனைவை ஒட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த சொல்லாடல் எத்தனை கொடுமையானது? வாய்ப்புகளைத் தடுத்துப் பல்லாண்டுகளாய் அடிமைகள் என்று சொல்லி உழைப்பைச் சுரண்டி உண்டு கொளுத்த ஒரு கூட்டம் இன்னமும் திட்டமிட்டு அந்தப் புனைவை மக்களின் மனங்களில் எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்றிக் கொண்டே இருக்கிறது. வேறுபாடுகள் இல்லாமல், ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனும் அந்தப் பதங்களை அதன் ஆபத்துகள் ஏதுமறியாமல் உச்சரிக்கிற போது பல நேரங்களில் சாதியக் கட்டமைப்பின் கொடுமையான பிணைப்பில் இருந்து இந்த தேசம் விழிக்க இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ என்கிற ஆதங்கம் மனம் கனக்கச் செய்து விடுகிறது.

Charles-Darwin-1

சக மனிதனின் ஏழ்மையை, சக மனிதனின் உழைப்பு ஏளனமாக நகையாடப்படுவதை, சக மனிதனின் மீதான அடக்குமுறைகளை நியாயம் செய்யவும், முதலாளித்துவத்தின் சுவடுகளில் படிந்திருக்கும் செருக்கை முட்டுக் கொடுக்கவும்,, நாட்டினங்களின் மீதான போர்களை நியாயம் செய்து கொண்டு அத்தகைய நிலைப்பாட்டின் மீது பாதுகாப்புக் கேடயங்களை வைத்துக் கொள்ளவும், மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான தங்கள் ஆளுமையை மெருகேற்றிக் கொள்ளவும், இன்றைய முதலாளித்துவ உலகின் ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இயல்பானவை என்று நிறுவிக் கொள்ளவும் மனித இனங்களில் பிறவியிலேயே உயர்ந்த தாழ்ந்த இனங்கள் உண்டு என்கிற இனகொள்கையை முன்னெடுக்கிறார்கள் நியோ நாசிக் கோட்பாட்டின் காவலர்களான ஆரியர்கள்.

ஸ்வீடன் நாட்டு உயிரியல் ஆய்வாளரும், இயற்கை விஞ்ஞானியுமான கார்லோஸ் வின்னேயஸ் (1707-1778) பல்வேறு மனித இனங்களை அவற்றின் உடல் தகவமைப்புத் தன்மைகள் மற்றும் உடற்கூறியல் ரீதியாக வகைப்படுத்திய கையோடு மறக்காமல் ஒவ்வொரு இனத்தவனுக்குமான உளவியல் பண்புகள் என்றொரு நம்பிக்கையின் அடிப்படையிலான பட்டியலைப் போட்டார்.

ஆசிய மனிதன் கொடுமைக்காரன், பிடிவாதக்காரன், அடிமை மனோபாவம் கொண்டவன் என்றும், ஆப்ரிக்கன் வன்முறையும், சோம்பலும் கொண்டவன், றிவற்றவன் என்றும், மாறாக ஐரோப்பியன் மிகுந்த அறிவாற்றலும், புனைவு ஆற்றலும், சுறுசுறுப்பும் கொண்டவன் என்று நம்பினார்.

இத்தகைய நம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியான பல்வேறு தரவுகளை டார்வின் அள்ளிக் கொடுத்தார், உளவியல் பண்புகளுக்கும், உயிரியல் சார்ந்த மனித இனங்களுக்கும் தொடர்பில்லை என்பதை அவர் தனது பல்வேறு ஆய்வுகளின் மூலம் வலுவாக உறுதி செய்தார், அவருடைய ஆய்வுகளுக்குப் பிறகே அந்த ஐரோப்பிய உயர் உளவியல் கோட்பாடு தகர்க்கப்பட்டது. தென் அமெரிக்காவின் டோரா டெல் பியூகோ ஏரிக்கரைப் பழங்குடியினர் குறித்த சில ஆய்வுகளை டார்வின் மேற்கொண்டார், ஓனா மற்றும் ஹவுஷ் என்கிற இந்த நிலப்பரப்பின் பழங்குடிகள் ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகள் என்றும் மனித வேட்டையாடுபவர்கள் என்றும் சொல்லப்பட்டனர், இவர்களில் மூன்று மனிதர்கள் பியூகில் என்கிற கப்பலில் பணிகளுக்காக ஏற்றிக் கொள்ளப்பட்டுப் பின்பு இங்கிலாந்தின் குடியேற்றப் பகுதியில் வசித்தார்கள், கலப்பு எதுமன்றித் தனித்த குடும்பங்களாக அவர்கள் வளர்ந்த பின்பு மூன்றாம் தலைமுறை மனிதர்கள் அறிவுத் திறன், தனி மனித ஒழுங்குகள் மற்றும் நுண்கலைகளில் மிகச் சிறந்த மனிதர்களாய் மாறினார்கள், பின்பு இங்கிலாந்தின் பூர்வ குடிமக்களாய் அடையாளம் செய்யப்பட்டார்கள்.

image006

நிக்லாஇவிச் மிக்லூகா மக்ளாய் என்கிற ருஷ்ய மானுடவியலாளர் ஒஷானியாவின் மக்கள் திரள் பண்புகளை ஆய்வு செய்யும் போது ஒஷானியாவின் மிகப்பெரும் பழங்குடி இனமான பாப்புவான்களின் உளப்பாங்கு மற்றும் அறிவுத்திறன் குறித்த எதிர் மறை நம்பிக்கைகளை உடைக்கும் பல்வேறு நிகழ்வுகளை தனது ஆய்வுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறார், வரைபடங்கள் குறித்த எந்த முன்னறிவும் இல்லாத ஒரு வயதான பாப்புவான் நிக்லாஇவிச் மிக்லூகா மக்ளாயின் பல தவறுகளைத் திருத்தி நிலப்பரப்பு வரைபடம் வரைவதற்கான உதவிகளைச் செய்ததையும், ஐரோப்பிய வெள்ளையினத்துக்கும், மங்கோலிய மஞ்சளினத்துக்கும் கொஞ்சமும் குறைவில்லாத உளவியல் பண்புகளையும், நுட்பமான அறிவுக் கூர்மையையும் பாப்புவான்கள் கொண்டிருந்ததையும் தனது பல்லாண்டு கால ஆய்வுகளின் மூலம் நிக்லாஇவிச் நிறுவினார்.

இன்றைய நாகரிக மனிதனின் முதல் குடும்பமான ஹோமோசெபியன்ஸ்களின் உணவுக்கும், இருப்புக்குமான உழைப்பே கைகளை மிகுந்த செயலூக்கம் நிரம்பிய உயிரியல் உறுப்பாக மாற்ற உதவியது, காடுகள், மலைகள், கடற்கரை, பாலைவனம் என்று சுற்றி அலைந்து எல்லா இடங்களிலும் தனது உயரிய உழைப்பினால் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகைப் படைத்திருக்கிறான் ஆதி மனிதனின் பேரன்.

ஒற்றைச் செல் அமீபாக்களில் இருந்து கூட்டுச் செல் பாசிகளில் துவங்கி முதன்மைப் ப்ரைமேட்டுகளின் இருப்புக்கான போரும், தகவமைப்பு மாற்றத்துக்கான உழைப்பும் நமது மூதாதையர்களான நியாண்டெர்தெல் மனிதர்களின் உடலியல் பண்புகளையும் அறிவுத் திறனையும், உளவியல் பண்புகளையும் முடிவு செய்கிற காரணிகளாக இருக்கும் அறிவியல் உண்மையை வசதியாக மறைத்து விட்டு ஒரு மனித இனக்குழு அல்லது சமூகம் பிறவியில் உயர்ந்தது என்று சொல்கிற இனக்கொள்கையைத்தான் ஆரியம் என்று உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

பிறவிப் பெருமைகளும், உளவியல் உயர் பண்புகளும் ஒரு இனத்துக்குச் சொந்தமானது என்கிற அறிவியலுக்குப் புறம்பான கோட்பாட்டின் ஆழமான நம்பிக்கையை வேதங்கள், புராணக் கதைகள், நம்பிக்கைகள், கோவில்கள், விழாக்கள் என்று பல்வேறு வலிமையான சமூக இயங்கியல் தளங்களில் ஒரு குறிப்பிட்ட சாரார் தொடர்ந்து கட்டமைத்தார்கள், அந்தக் கட்டமைப்பு உயர் நாகரிக அறிவியல் மனிதனின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிற ஒரு காரணியாக இன்றும் இருக்கிறது என்கிற உண்மையை மறந்து விட்டு நம்மால் சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதோ, சமூக நீதியை நிலைநாட்டுவதோ இயலாது.

Race

மனித இனக்குழு வரலாற்றையும், பல்லாயிரம் ஆண்டு கால உயிரினங்களின் உழைப்பையும் ஆரியம் பிறவித் தகுதி என்கிற ஒற்றை இழையில் வெற்றி கொண்டு ஏனைய உயிர்களின் உழைப்பைச் சுரண்டி வசதியாக வாழ நினைக்கிறது, அத்தகைய உளவியல் சண்டித்தனத்துக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு உருவாக்கப்படவும், பழைய குருட்டு நம்பிக்கைகளும் அழிக்கப்பட வேண்டுமென்றால் ஆசியப் பகுதியில் வாழ்கிற உயிரியல், மொழியியல் மற்றும் நாட்டின அரசியல் குறித்த சில குறிப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சுருக்கமான புவியியல் இனக்குழுக்களின் வரலாற்றினையும், ஆசியப் பகுதியின் இனக்குழு வரலாற்றினையும் அறிந்து கொள்வது வலுவான ஆரிய அல்லது பார்ப்பனீய உயர் உளவியல் இனக்குழுக் கோட்பாட்டினை உடைப்பதற்கான முதல் ஆயுதம்,

நன்றி – உண்மை மாதமிருமுறை இதழ்.

தொடர்வோம்……….

 

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: