கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 26, 2014

பிசாசு – மிஷ்கினின் உளவியல் தோல்வி.

Pisasu

மிஷ்கின் நிறைய முயற்சி பண்ணிப் பாத்தாரு, சில அழகான "Presentation Template" எல்லாம் குடுத்துப் பாத்தாரு, பயபுள்ளைக என்ன பாட்டு இல்ல, பைட்டு இல்லன்னு பழைய ராகத்தையே பாடி அவர இன்னொரு "ராகவா லாரன்ஸ்" ஆக்கிப் புட்டாங்கே, அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியாப் பேய்ப் படம் பண்ண வச்சுட்டாங்கே,  இருந்தாலும் அவரு மனம் தளரல, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேய்களுக்கும் மனுஷங்களுக்கும் இடையில இருக்குற அந்த இடைவெளிய குறைக்கத் தன்னால ஆன வரைக்கும் முயற்சி பண்ணி இருக்காரு, ஆனாங்காட்டி இது தலையெல்லாம் படிய வாரிச் சீவி வெள்ளைச்சாயம் பூசுன வெள்ளைக்காரப் பேய் மாதிரி இல்லாம சாட்ச்சாத் இந்தியப் பேய் மாறியே தலையெல்லாம் சீவாம, கால் கீழ படாம செத்தப்ப போட்ட கௌனையே போட்டுட்டு இருக்கு.

கத இன்னான்னா, ஒரு செவத்தப் புள்ள பவானி, ஸ்கூட்டில போகும் போது கார் மோதி ரோட்ல ரத்த வெள்ளத்துல விழுந்து கெடக்குது, நம்ப கதாநாயகன் சித்தார்த் அந்தப் புள்ளையத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போறாரு, அவ்வளவு சீரியஸா இருக்கும் போதும் அந்தப் புள்ளைக்கு நம்மாளு மேல லவ் வந்துருச்சு, கையக் குடுத்துட்டு செத்துப் போய்டுச்சு, சோகத்தோடு நாயகன் வீட்டுக்குப் போறாரு, கூடவே அந்தப் புள்ள பவானிப் பேயும் இவரு வீட்டுக்கு வந்துருச்சு, ஆனா, பாருங்க, இது நல்ல பேயி, பொதுவாவே நம்ம இந்திய சினிமால வர்ற பேய்ங்க எல்லாம் நல்ல பேய்ங்க தான் பாத்துக்கோங்க.

வெள்ளைக்காரப் பேய்ங்க மாதிரி உலகத்த அழிக்கிறது, ஊரப் பயமுறுத்துறது மாதிரி வேலையெல்லாம் நம்ம பேய்ங்க செய்யாதுங்க, மிஞ்சி மிஞ்சிப் போனா தன்ன வல்லுறவு செஞ்சு கொலை பண்ணின கும்பலைத் தொரத்தி தொரத்தி கொலை பண்றது, அவங்கள டார்ச்சர் பண்றது, அப்பப்ப இடைல கிராஸ் பண்ற ஆட்களையும் வேற வழி இல்லாம லைட்டா பயமுறுத்துறது மட்டும் தான். இந்த நல்ல பேயி நம்ம கதாநாயகனுக்கு உதவி பண்ணுது, அவர பீர் குடிக்க விடாம சாவிய ஒளிச்சு வைக்குது, அப்பறம், மனநலம் சரியில்லாத தம்பி கூடப் பந்து விளையாடுது, அபார்ட்மெண்ட் ஞானி பிளேட்டோ கதாநாயகன் வீட்டுல திருடப் போறப்போ அவரு குண்டில கத்திய சொருகி வுற்றுது, அப்புறமா கதாநாயகன் அம்மாவ கீழ தள்ளி விட்ட ரவுடிய போட்டு அடி தொவைக்குது, பாத்ரூம்ல வழுக்கு விழுந்த அவுங்கள காப்பாத்தி ஒளிஞ்சுக்குது. அப்பால பேய எப்டி நம்மாளு சமாளிக்கிறாரு, பேய் எப்டி சாந்தி அடைஞ்சு படம் முடியுது ன்னு நமக்கு காட்றாரு மிஷ்கின்.

தமிழ் சினிமாவுல எந்திரிக்க வேற வழியே இல்லைங்கிற நிலைம வந்தா தப்பிக்க ஒரு வழி இருக்கு, ராஜ காளி அம்மன், இல்லைன்னா மந்திரி காளி அம்மன்  படம் எடுக்கலாம், இல்ல ஒரு நல்ல பேய்ப்படம் எடுக்கலாம், மிஷ்கின் ரெண்டையும் கலந்து, பொதுவாவே நம்ம எல்லாம் நினைக்கிற மாதிரி பேய்ங்க அவ்வளவு கெட்டது இல்லைன்னு நிறுவ முயற்சி செஞ்சுருக்காரு, பதினஞ்சு இருவது வயசு வரைக்கும் நம்ம சமூகத்துல புள்ளைகளுக்கு இருக்குற ஒருவிதமான பேய்ப் பயத்த போக்கத்தான் மிஷ்கின் இவ்வளவு மெனக்கெட்டுப்  படம் எடுத்திருக்காருன்னு உங்களுக்கு இப்பப் புரியாது. இன்னொரு மோசமான அகோரப் பேய்ப் படம் பாக்கும் போது தான் "ஆகா, அந்த பவானிப் பேய் மாதிரியே மிஷ்கின் எவ்வளவு நல்லவருன்னு" நீங்க நினைப்பீங்க.

1478661_orig

பேய் அலங்கோலமா வந்து சிகரட் பாக்கட் எடுக்கும் போது அப்பறமா அங்கிட்டு இங்கிட்டு தரைல இழுத்துட்டுப் போற போது மிஷ்கின் என்கிற நல்ல திரைப்படக் கலைஞன் நொந்து நூடுல்ஸ் ஆகி நம்ம முன்னாடி கண்ணாடி இல்லாம நிக்கிற மாறியே இருக்கு, மைக் மோகன் பேய்ப் படம் எடுத்து அவரோட ஓய்வ அறிவிச்ச மாதிரி மிஷ்கின் கத முடியக் கூடாதுன்னு நாம எல்லாரும் ஒரு கூட்டுப் பிராத்தன செய்வோம். கூட வந்த பையன் சொன்னான், "மாப்ள, தமிழ் வாத்தியாரு, கெப்ளர் சோதனைய விளக்கின மாதிரி ஒரு பீலிங்குடா" ன்னான்.

வழக்கம் போல, கதை சொல்லும் நேர்த்தியில், திரைக்கதை நுட்பத்தில் மிஷ்கின் கொஞ்சம் கூட மாறல, கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாம கதை சொல்ற அந்த மிஷ்கினோட திறமை தான் தியேட்டர்ல நம்மள உக்கார வைக்குது, இன்னொரு முக்கியமான விஷயம் இசை, மிஷ்கினோட பெரிய கறுப்புக் கண்ணாடி மாதிரி கவுன்ட்டர்லேயே குடுத்தாங்கன்னா போட்டுக்கிட்டு இசையைக் கேட்டுட்டு ஓடி வந்துரலாம், அவ்வளவு ஈர்ப்பு அருளோட இசைல, மிஷ்கினோட காட்சி அமைப்புகளே ஒரு இசை மாதிரி, அதுலயும் இவ்வளவு நுட்பமான இசைய கோர்த்து வுட்டுட்டா, டபுள் ட்ரீட் தான் போங்க. ஒளிப்பதிவாளர் ரவி ராயின் கோணங்களும், வண்ணங்களும் அற்புதமான காட்சி அனுபவம் தருபவை என்பதை மறுக்க முடியாது.

நிறைய கதாபாத்திரங்கள், கண் தெரியாத சுரங்கப் பாதைப் பிச்சைக்காரர்கள், அவர்களிடம் பிடுங்கித் தின்கிற ரவுடிகள், பவானிப் பேய் அவர்களில் ஒருவனையும் அடித்து நொறுக்கித் தனது காதலை உறுதிப்படுத்துகிறது. பிற்பாதி முழுக்க பவானிப் பேயின் அப்பாவாக வரும் ராதாரவி திரையைக் கைப்பற்றி விடுகிறார், அம்மா, சாமி, பவானி என்று தவழ்ந்து தவழ்ந்து பவானிப் பேயை அவர் வீட்டுக்குக் கூப்பிடுவது முதல் எம்புள்ள பிஞ்சுக் கைய நான் இப்பிடியா பாக்கனும்னு கதறி அழுகுறது வரைக்கும் மனுஷன் நடிப்பில் தன்னை ஒரு அசைக்க முடியாத ஜாம்பவான் என்று நிரூபிக்கிறார்.

மிஷ்கின் சார், இந்த சமூகம் ஏற்கனவே முனியையா, கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக் காட்டேரி, மோகினிப் பிசாசு, குட்டிசாத்தான், பில்லி, சூனியம், மந்திரவாதி, சுடுகாடு, குடுகுடுப்பைன்னு  பல பேய்களோடும், பேய்கள் பற்றிய இனம் புரியாத பயத்துலையும் வாழ்க்கைல பாதி நாளைக் கழிச்சு மீண்டு வருது, இந்தப் படத்தின் மூலமா பவானின்னு ஒரு புதுப் பேயை தமிழ் சமூகத்துக்கு நீங்க கொடையளிச்சிருக்கீங்க. அதைத் தவிர வேற என்ன பெரிசா இந்தப் படம் சாதிக்கப் போகுதுன்னு தெரியல, படம் பெரிய விசுவல் ட்ரீட், மியூசிக்கல் ட்ரீட் ஆ இருந்து ஒரு புண்ணியமும் கிடையாது மிஷ்கின் சார், குருட்டு நம்பிக்கைகளையும், வழக்கமான கிராமத்து குளத்தங்கரைப் பேய்களையும் தமிழ்நாடு முழுக்கப் பரப்பி விடுற இராம.நாராயணன் அண்ணாச்சிக்கும் உங்களுக்கும் இப்போ ஒரே ஒரு வேறுபாடு தான், அவரு தொப்பி போடுவாரு, நீங்க கண்ணாடி போடுறீங்க.

எந்தக் கலையாக இருந்தாலும், அது நிகழ்காலத்தில் வாழும் சமூகத்திடம் என்ன தாக்கங்களை விளைவிக்கிறது என்பதை வைத்தே அதன் தரத்தை நிறுவ முடிகிறது, அறிவியல் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இதே படத்தில் வரும் "ஆவி அமலா" பிக் பாக்கெட் அடிக்கிற மாதிரி, பத்துப் பவுன்ல தங்கத் தொட்டி செய்யச் சொல்லி ஆட்டயப் போடுற மாதிரி நீங்க ஒரு தலைமுறையோட மனநிலையில் பிசாசுகள் குறித்த பல நூற்றாண்டுக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

Pisasu Movie Press Meet Photos

சினிமா என்கிற அற்புதமான கலையின் மூலமாக நீங்கள் முற்போக்கு சிந்தனைகளைக் கூட விதைக்க வேண்டாம், ஆனா, இந்த மாதிரிப் பேய்ப் படம் எடுக்காம இருந்தாப் போதும். மிஷ்கினின் திரையுலகப் பயணத்தில் "பிசாசு" ஒரு வெற்றிப் படமாக இருக்கலாம், பெரிய விசுவல் ட்ரீட் ஆக இருக்கலாம், ஆனால், இது ஒரு மறுக்க முடியாத கோட்பாட்டுத் தோல்வி "Strategical Failure". ஒரு நல்ல அறிவியல் திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்திருக்கலாம், ஒரு வானவியல் தொடர்பான முதல் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்திருக்கலாம். இன்னும் வரலாறு, புவியியல், சமூகவியல் என்று பலவற்றைச் சிந்தித்திருக்கலாம், ஆனா, உங்களையும் பவானிப் பேயைப் பற்றி சிந்திக்க வைத்து ஒப்பேத்திய எமது தமிழ்ச் சமூகத்தின் ரசிகர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.

**************

Advertisements

Responses

  1. அசத்தலான உண்மை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: