கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 25, 2015

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 3

f0692342871e94a0a63aad229d26144a

ஆசியப் பகுதியின் உயிரியல்  இனக்குழுக்-களைப் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் நிகழ்கால அரசியலை அறிந்து  கொள்வது வரையில் பயனளிக்கும்  தேவையாக இருக்கிறது, காக்கேசியன் (Caucasian or Europid) அல்லது அய்ரோப்பிய வகையினம் அல்லது நிறத்தை அடிப்படையாக வைத்து வெள்ளையினம் என்று அழைக்கப்படும் மனித இனக்குழு ஏறத்தாழ 55 விழுக்காட்டிற்கு மேலான ஒரு மிகப்பெரிய பொதுவினமாக பல்கிப் பெருகி அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தவிர்த்த நிலவியல் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்த இனக்குழுக்களின் பொதுவான வேர் இன்றைய அய்ரோப்பிய நாடுகளிலும், ஆசியா முழுமையிலும், வட ஆப்பிரிக்காவிலும் பெருமளவில் காணப்-படுவதை உயிரியலாளர்கள் உறுதி செய்கிறார்கள். 

இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டும் ஏறத்தாழ 70 கோடி இந்தியர்கள் இவ்வினத்தின் கூறுகளுக்குள் பொருந்தி வருகிறார்கள். இந்தப் பெரும்பான்மை தவிர்த்து மங்கோலிய மஞ்சள் இனத்தின் (Mangolids) குழுக்கள் ஆசியாவின் மய்யப்பகுதி, கிழக்குப் பகுதி  மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறார்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களின் மண்டையோட்டு அமைப்பு,  நெற்றிச் சாய்வு, தலைமுடியின் நிறம் மற்றும் உதட்டுப் புறத்தோற்றம் ஆகியவை மங்கோலியப் பேரினத்தின் தொடர்ச்சியாகவும், கிளைப் பிரிவுகளாகவும், கலப்பினங்களாகவும் அடையாளம் காணப்படுகிறது.

பெரும்பான்மை உயிரியல் ஆய்வாளர்களும், மானுடவியலாளர்களும் இந்தியத் துணைக்-கண்டத்தின் இனக்குழுக்களை அய்ரோப்பிய வெள்ளையின வகையாகவே உறுதி செய்கிறார்கள். அதாவது தோலின் நிறம் முழுமையான வெளுப்பு, மங்கிய வெளுப்பு அல்லது பழுப்பு, தலைமயிர் மென்மையானது, முகத்தின் மீது சிவப்பு நிறச் சாயல் (தெற்கு மற்றும் மய்யப் பகுதியின் தட்பவெப்பம் காரணமாக வேறுபாடும் முகத்தின் சிவப்புச் சாயலைத் தவிர்த்து) பொதுவாகக் கறுப்பு முடி, உடல் முழுக்கப் பரவலாக அடர்த்தியான அல்லது ஓரளவுக்கு அடர்த்தியான மயிர், நெற்றி பல கிளைக்குழுக்களுக்கு  நேரானதாகவும், சில கிளைக்குழுக்களுக்குக் கொஞ்சம் சரிவானதாகவும் இருக்கிறது.

மண்டையோட்டு வடிவம் ஏனைய பெரிய இனங்கள் அனைத்திலும் காணப்படும் பொதுவான குறுகிய மண்டையோடு, நடுத்தர மண்டை-யோடு மற்றும் நீள் மண்டையோட்டு அமைப்புகளையும் கொண்டிருக்கிறது. அய்ரோப்பிய வகையினக் குழுக்களின் இரண்டு பெரிய கிளைகளாக தெற்கு அல்லது இந்திய மத்தியத் தரைக்கடல்  வகையினமும்,  அட்லாண்டிக் பால்டிக் வகையினமும் அடையாளம் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மனிதக் குழுக்கள் முதல் தெற்கு வகையில் வகைப்படுத்தப்படுகிறது. அய்ரோப்பிய வகைப் பேரினத்தின் முதல் பெருங்கிளையான தெற்கு அல்லது இந்திய மத்தியத் தரைக்கடல் இனக்குழு வகையில் பெரும்பான்மையான இந்தியர்கள், தாஜிக்குகள், அரேபியர்கள், ஆர்மீனியர்கள், கிரேக்கர்கள், ஸ்பானியர்கள், இத்தாலியர்கள் ஆகியோர் அடங்குவார்கள்.

இரண்டாம் பெருங்கிளையான வடக்கு அல்லது அட்லாண்டிக் – பால்டிக் இனக்குழு வகையில் போலேருஷ்யர்கள், போலந்தியர்கள், நோர்வேக்காரர்கள், ரஷ்யர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் அடங்குவர். இங்கே மிக நுட்பமாக நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆங்கிலேயரோ, ஒரு ஜெர்மானியரோ ஒரு இந்தியப் பழங்குடி மனிதனைப் பார்த்து உயிரியல் மற்றும் உளவியல் வழியாக நான் உயர்வானவன் என்றோ, பிறவியில் நான் ஒரு வெள்ளையன் உயர் உளவியல் தன்மைகள் கொண்டவன் என்றோ சொல்வதற்கான எந்த அடிப்படை அறிவியல் முகாந்திரங்களும் இல்லை.

அடிப்படையில் ஒரு ஆங்கிலேயனும், ஜெர்மானியனும், இந்தியனும் ஒரே வகையான உயிரியல் தன்மைகள் கொண்டவன்.  தட்பவெப்ப தகவமைப்புகள் தவிர வேறு எந்தப்  பெரிய அளவிலான உயிரியல் மற்றும் உளவியல் வேறுபாடுகள் இந்த வகையான நிலவியல் கிளைப்பிரிவுகளுக்கு இல்லை என்பதே மிகப்பெரிய அறிவியல் உண்மை.  ஆக, அடிப்படையான ஒரு அறிவியல் உண்மையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியதும், நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் மிகப்பெரிய வரலாற்றுக் கடமை. ஓர் ஆங்கிலேயன், ஒரு ஜெர்மானியன் அல்லது ஒரு பழங்குடி இந்தியனுக்கும் உயிரியல் வழியாக எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிப்படையில் ஓர் ஆதி  மனித உயிர்க் குழுவிலிருந்தே இவர்கள் மூவரும் பிறக்கிறார்கள்.

பண்பாட்டு வழியிலான இயக்கங்களில் இருந்து இவர்கள் பேசுகிற மொழிக்குழுக்கள் தோற்றம் கொள்கின்றன. தங்கி நிலை கொண்ட நிலவியல் அவர்களின் நாட்டினங்களை வேறுபடுத்துகிறது. பிறப்பின் அடிப்படையில் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களின் வேர்களை அடையாளம் செய்யும் ஆரியக் கோட்பாடு எவ்வளவு போலியானது, நகைப்புக்குரியது என்கிற உண்மையை நாம் அறிவியலின் மூலமாகவே நிறுவ வேண்டியிருக்கிறது. அது அத்தனை கடினமானதும் அல்ல. பல்வேறு சூழல்களில் இங்கிருக்கிற இணைய மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் மனித சமூகக் குழுக்கள் பிறவியிலேயே ஒழுக்கம் மற்றும் தூய்மை குறித்த கூறுகளை கொள்கிறார்கள் என்று தொடர்ந்து பாடமெடுப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இத்தகைய பிறப்பின் அடிப்படையிலான இனக்குழு வகைகளை ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு தங்களின் பிழைப்புக்காக தொடர்ந்து முன்னிறுத்தியதும்,  அந்த முன்னிறுத்தலின் தொடர்ச்சியாக வேதங்களும், மனுதர்மங்களும் உயிரியல் வழியிலான மனித இனக்குழு வரலாற்றைச் சிதைக்கும் திட்டமிட்ட மறைமுக ஒழுங்குகளை நமது சமூக அறிவியலில் பரப்பி அரசியல் சட்ட வழிமுறைகள் வரைக்கும் ஒரு போலியான வரையறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் போலி வரையறைகளை உடைக்கவும், உண்மையான மனித இனக்குழுக்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் நமது கல்வி முறைகளில் இன்று வரை வெற்றிடமே காணப்படுகிறது.


உயிரியல் இனக்குழுக்களின் சமூகக் கட்டமைப்பில் ஜாதி என்கிற வலுவான கருவி இயங்குவதற்கும், அதன் மூலமாகப் பிறக்கும் போதே ஒரு சமூகக் குழு உயர்வான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்றும், இன்னொரு சமூகக் குழு தாழ்வான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்றும் பொய்யான பரப்புரையை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஆரிய நியோ நாசிசக் கோட்பாட்டை உடைப்பதும், நமது குழந்தைகளுக்கான அடிப்படை வாழ்வுரிமைகளையும், அறிவார்ந்த கல்வி செயல்திட்டங்களையும் உருவாக்க மனித இனக்குழுக்களின் வரலாறு மிக முக்கியமான கருவியாக இருக்கிறது.

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனும் தன்னுடைய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை, மாறாக இந்தச் சமூகத்தின் அறிவுப் பெருவெளியில் தங்கி இருக்கிற போலியான வேறுபாடுகளைக் களைந்து மிகுந்த நாகரிகமான ஒரு சூழலுக்கு மனித இனக்குழுக்களை நகர்த்திச் செல்வதற்கு அவனே அடிப்படைக் காரணியாக நெடுங்காலமாக இருந்து வருகிறான்.

உயிரியல் இனக்குழுக்களின் ஆசிய வரலாறு இவ்வாறு இருக்க, மொழி சார்ந்த இனக்குழுக்களின் வரலாற்றுப் புரிதல் சமகால அரசியலின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. தெற்காசியாவின் நிலவியல் தேசிய இனங்களாக அடையாளம் காணப்படுபவை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாக அடையாளம் செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இரண்டு மொழிசார் குழுக்கள் இயங்குகின்றன. ஒன்று இந்தோ – ஆரிய மொழியினம், மற்றொன்று திராவிட மொழிக்குடும்ப வகையினம்.

 

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: