கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 20, 2015

கொஞ்சம் இசை, நிறையக் காதல்………

nice-music-quote

போதி இலக்கியக் கூட்டம் நிகழவிருந்த ஒரு மாலைப் பொழுதில் வேலைகள் ஏதுமற்ற ஒரு ஏகாந்த இடைவெளி கிடைத்தது, நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தத் தெருவைக் கடக்க வேண்டியிருந்தது, என்னைப் போலவே அந்த வீதியும் நினைவுகளைச் சுமந்து அசை போடுகிற ஒரு உயிர்க் கலவையாக இல்லை, எனது வருகை குறித்த எந்த வியப்பும், பிரக்ஞையும் இல்லாமல் அது சூரியக் கதிர்களை மேற்கிலிருந்து தன்னில் பரப்பிக் கிடந்தது, பள்ளி இறுதி வகுப்புக் காலங்களில் மிக நெருக்கமான வீதியாக இருந்தது அது.
 
தெரு விளக்குகளின் புகை படிந்து கிடக்க விளக்குப் பூச்சிகள் ஒழுங்கற்ற வட்டங்களைக் காற்றில் வரைந்து கொண்டிருக்கும், இரவு வானத்தின் நீள் சதுரப் பாதையை இருமருங்கிலும் வீடுகள் கரை போலத் தடுக்க, இரவின் காற்றோடு பேசியபடி விண்மீன்களைப் பார்த்துக் கொண்டே நடப்பது வாழ்க்கையின் அதி உன்னதமான ஒரு தருணம், டாக்டர் மாத்தூர் வீட்டின் உள்ளறைகளில் இருந்து கசியும் உன்னதமான இசை முகப்பில் படர்ந்து கிடக்கும் மாமரக் கிளைகளின் ஊடாக எனது உயிரை வந்தடையும்.

மனிதனுக்கு வயது 80 இருக்கும், ஆனால், அவனது அறையில் இருந்து பாடல்களோ மீண்டும் உங்களைக் குழந்தையாக்கும், அத்தனையும் காதல், "நா தும் ஜானோ நா ஹம்", "தோ தில் மில்ரஹி ஹே" "நா கஜ்ரே கே பால்" "ஹோ கயா துஜ்கோ தோ ப்யார் சஜ்னா" என்று அந்த இரவுகளை அவர் மிக அற்புதமான உணர்வுகளின் கலவையாக்கித் தந்திருக்கிறார்,  பிறகு ஒரு கல்லூரி நாளின் மாலையில் அவர் இறந்து போனது குறித்து அறிந்தேன், அந்த வீட்டின் முன்பு வெகுநேரம் அவரது முகத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன், அவருக்கும் எனக்கும் வேறு எந்த உறவுமில்லை, அவரை நான் ஒருநாள் கூட அருகில் நின்று பார்த்ததில்லை, ஆனால், இசையை அவருக்கும் எனக்குமான தொடர்பு இசை மட்டும்தான்.

இரவுகளில் அவரது செவிகளை நிரப்பி எஞ்சி வழியும் அந்த இசையை நான் ஆசை தீரப் பருகி இருக்கிறேன், இரவுகளுக்கும் இசைக்கும் எனக்குமான மூலத் தொடர்புகளை அவரே உருவாக்கினார், அது என்ன மாதிரியான உறவு என்று எனக்குத் தெரியாது, ஆனால், இப்போதும் ஒரு மிகச்சிறந்த இசையை அல்லது இசைக் குறிப்பைக் கேட்க நேர்ந்தால் எனக்கு டாக்டர் மாத்தூர் நினைவில் வந்து விடுவார்.

அப்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை நான் காதலித்துக் கொண்டிருந்தேன், அப்போது காதல் என்பது ஒரு தியான அனுபவத்தைப் போன்றது, இப்போதிருக்கும் இளைய தலைமுறைக்குக் கிடைத்ததைப் போல அலைபேசிகளோ, நெருக்கமான சந்திப்புகளோ வாய்க்கப் பெறாத சாபம் பெற்றவர்கள் நாங்கள், கடக்கும் போது நேர்கோட்டில் சந்திக்கிற கண்களின் நேர்கோடுகளும், அதிராத புன்னகைப் பரிமாற்றங்களும் அலாதியான சுவை கூட்டுபவை, மாத்தூரின் இசை பல நாட்களில் காதலின் பசிக்கு அள்ளி வழங்குகிற "கற்பகதரு", கற்றையாய் அவர் தெளித்த இசை ஓவியங்கள் ஒவ்வொருமுறையும் காதலிக்கத் தூண்டும் ஆற்றல் கொண்டவை. 

ஒன்றிரண்டு வாரங்களில் மீண்டும் அந்த வீதியின் கடைக்கோடியில் இருக்கும் கற்குவியல் அருகில் போய் நின்று கொண்டிருந்தேன், தெளிந்த வானம், சிதறிக் கிடக்கும் விண்மீன்கள், எப்போதாவது கடக்கும் ஊர்திகள், பூமாயி இல்லத்தில் இருந்து வெளியே எப்போதாவது எட்டிப் பார்க்கும் குட்டிப் பெண்,  ஆனால், டாக்டர் மாத்தூர் வீடு பூட்டப்பட்டிருந்தது, அங்கிருந்து வழியும் இசையும் இறந்து போனதைப் போல ஒரு அமைதி, அங்கு நிற்கவே பிடிக்காமல் வேகமாக நடந்து விடுதிக்குத் திரும்பி வந்தேன், பிறகு ஏனோ அந்த வீதிக்குத் திரும்ப ஒருமுறை செல்வது குறித்து நான் சிந்திக்கவே இல்லை.

ஒற்றைக் காதலில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருக்கவில்லை, மனித உயிர்கள் யாவும் ஒற்றைக் காதலில் சுற்றிச் சுழலும் என்று யாரேனும் சொன்னால் புன்னகைப்பதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை, இசையைக் கொண்டாடுகிற பெண்கள் பலரை நான் காதலித்திருக்கிறேன், இசை குறித்து நுட்பமான உரையாடல் செய்கிற பல பெண்கள் இப்போதும் ரகசியத் தோழியராய் இருக்கிறார்கள், ஆனால், ஒருபோதும் உடல் குறித்த உரையாடல்களை அவர்களோடு நிகழ்த்த நான் விரும்பியதில்லை, அவர்களைக் காதலிக்க எனக்கு உடலைத் தவிர்த்த பல்வேறு விஷயங்கள் இருந்தன, பெண்களின் அரசியல், சமூக அமைப்பில் அவர்களுக்கான இடம், கல்வி, பொருளாதார விடுதலை, காதல், இசை, இலக்கியம் என்று மணிக்கணக்கான உரையாடல்களை அவர்களோடு செய்திருக்கிறேன்.

பல நேரங்களில் டாக்டர் மாத்தூரும் அவரது இசையும் ஒற்றை இரவில் காணமல் போனதைப் போல பெண்களும் காணாமல் போய்விடுவார்கள், அவர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் பின்னதாக திறந்த நுட்பமான உரையாடலை விரும்பினாலும் யாரோடும் நிகழ்த்த முடியாது, பெண்களோடு சண்டையிடுவதைக் காட்டிலும் அவர்களைக் காதலிப்பது எனக்கு எளிதான வேலை, உடலைத் தவிர்த்துப் பெண்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு ஆணாய் ஆயிரமாயிரம் காரணிகள் கொட்டிக் கிடக்கிறது, பெண்கள் ஆண்களை விட இசை, இலக்கியம் போன்ற அழகியல் சார்ந்த விஷயங்களில் மிக நுட்பமானவர்கள், பக்கம் பக்கமாக நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை சொல்வதற்குத் தடுமாறும் போது ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் பக்கங்களைச் சொல்லி முடித்து விடுவார்கள்.

இப்போது மீண்டும் டாக்டர் மாத்தூருக்கு வருவோம், மாத்தூருக்கும் எனது காதலிகளுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது, சரியாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு நட்சத்திரங்கள் சுற்றிக் கிடந்த பிறை நிலா இரவில் அதே வீதியில் நடக்க வேண்டியிருந்தது, நம்பவே இயலாதபடி டாக்டர் மாத்தூரின் முற்றத்து மாமரங்களின் வழியாக இசை, இசையே தான், பெருகி வழிகிறது, இம்முறை "ஹோட்டல் கலிபோர்னியா" வறண்டு போன உயிரின் பசிக்கு அள்ளி அள்ளி வழங்கும் கிடார் இசையோடு குழைத்து "On a dark desert Highway, Cool wind in my Hair" என்று சொற்கள் வீழும் போது உயிர் கொள்ளும் துடிப்பை இப்போது எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.

பெரும்பாலும் மேற்கத்திய இசை, எப்போதாவது ஹிந்தி என்று அந்த வீதிக்கு மீண்டும் உயிர் வந்து விட்டது, இசைக்கு நடுவே ஒருநாள்  டாக்டர் மாத்தூரின் பேத்தி ஒரு தேவதையைப் போல அந்த இரவின் வெளியில் தோற்றம் கொண்டாள். அவளையும் காதலிக்க வேண்டியதாயிற்று, உண்மையில் பக்கத்தில் அந்த வீட்டின் முகப்பில் அமர்ந்திருக்கிற காவலாளியைக் கூட அந்தப் பெண்ணால் தெளிவாகப் பார்க்க முடியாது, ஆனாலும், தொலைவுகளையும், காலத்தையும், மலைகளையும், பெருங்கடல்களையும் விழுங்கி உயிருக்கு நெருக்கத்தில் காதலியைக் கொண்டு சேர்க்கும் காதலுக்கு முன்பு நமக்கென்ன கவலை, விடுதிக் காலம் முடிகிற வரைக்கும் மாத்தூரின் பேத்தியைக் காதலித்தேன், பிறகு காலம் வேறு சில பாடல்களையும், காதலிகளையும் அறிமுகம் செய்ய அந்த வீதியை விட்டுப் பிரிய வேண்டியிருந்தது.

அதே உயிர்ப்போடும், அதே அசட்டையோடும் அந்த வீதி அப்படியே தானிருக்கிறது, இப்போதும் எங்கேனும் ஒரு வீட்டுக்குள் இருந்து இசை வரக்கூடும், காதலைத் தேக்கியபடி இன்னொரு இளம் மனிதன் இரவுகளில் அங்கே சுற்றித் திரியக்கூடும், உயிர்ப்பு இருக்கும் வரை இசையும், காதலும் என்கூடத் தொடர்ந்து வர வேண்டும், இவை இரண்டும் தீர்ந்து போகாத ஒரு இரவில் இறப்பும் வர வேண்டும். வலிகளையும், சுமைகளையும் தாண்டி வாழ்க்கை எத்தனை அற்புதமானது என்று இவை இரண்டும் தான் வரலாறு முழுக்க மனிதனுக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

 

************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: