கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 24, 2015

ஒரு தவளையின் வீடு குறித்து அறிதல்……

hallucinogenic-frog-1

நீங்கள் ஒரு தவளையை எப்போது கடைசியாகச் சந்தித்தீர்கள்?  அதனோடு பேசுவதற்கு எப்போதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு பெரிய தவளையைப் பார்த்தேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தவளையைப் பார்த்ததில் நிறைய மகிழ்ச்சி,  உன் வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டேன், தவளை தலையைத் திருப்பி என்னை ஒருமுறை பார்த்தது, பிறகு வேகமாக அங்கிருந்து நகரத் துவங்கியது.

கடக்கும் மாடுகளோடு, நாய்களோடு, தேசியப் பூங்காக்களில் சந்திக்கிற யானைகளோடு ஒரு இயல்பான ஒருபக்க உரையாடலை நிகழ்த்த என்னால் எப்போதும் முடிந்திருக்கிறது, பன்னருகட்டாவில் தனித்து விடப்பட்ட ஒரு வரிக்குதிரையின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன், அதன் தனிமை, முதுமையில் வீடுகளையும், பிள்ளைகளையும் விட்டுத் துரத்தி அடிக்கப்படும் மனித உயிர்களின் துயருற்ற மனம் போலிருந்தது.

வரிக்குதிரைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை, பெருங்கூட்டமாய் நிலைத்த விடுதலையோடு வாழுகிற ஒரு வரிக்குதிரையை வேலிகளில் அடைத்து வாளியில் நீர் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்தபோது வரிக்குதிரையின் துயரம் காற்றில் குளிர் காலக் காலையொன்றின் ஈரம் பொதிந்த விறகடுப்பின் புகையைப் போல கசிந்து கொண்டிருந்தது.

அந்த வரிக்குதிரையின் தடித்த கருப்பு  கோடுகளைப் போலப் ஆன்மத்தின் சுவர்களில் பெருங்காயங்களோடு தனிமையின் சுவர்களில் அறையப்பட்டிருக்கிற நிறையப் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன், சொற்களுக்காகாகவும், உரையாடல்களுக்காகவும் ஏங்கிக் கிடக்கிற மனிதர்கள் தனிமையின் அமைதியில் கரைந்து கொண்டிருப்பார்கள், முதிர்ந்த மரங்களைப் போல காற்றோடு பேசிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை உங்களால் அத்தனை எளிதாகக் கடந்து சென்று விட முடியுமா?

அந்த முதிர்ந்த தவளையைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது எனக்கு, நிராகரிக்கப்பட்ட அல்லது பொருள் உலகினால் கைவிடப்பட்ட ஒரு முதிர்ந்த  சுருங்கிப் போன மனிதனைப் போலவே இருந்தது அந்தத் தவளை, நீர்நிலைகளும், தாவரங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உலகில் இருந்து விடைபெற்றுச் செல்லும் துறவியைப் போல இருந்தது அந்தத் தவளை, தாவிச் செல்லும் அதன் வேகத்தில் முன்னிருந்த அச்சமோ, தேடலோ இல்லை, வெகு நிதானமாக ஒரு பௌத்தத் துறவியின் பயணத்தைப் போல, மனிதனைக் கண்டு எந்தக் கவலைகளும் இன்றிப் புன்னகைக்கிற தும்பைச் செடியின் மலரைப் போல நகர்ந்து மறைந்து போனது அந்தத் தவளை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பயணத்தின் போது பேருந்தில் வயது முதிர்ந்த மனிதர் ஒருவரை ஏற்ற முயன்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரைப் பார்த்தேன், முதியவர் நடக்க இயலாத அளவுக்குச் சோர்வுடன் முதுமையின் நோய்களால் பீடிக்கப்பட்டவராக இருந்தார், அவருடைய பார்வை மிக மங்கலாக இருந்திருக்க வேண்டும், கம்பிகளைத் தேடினார், இளைஞர் மகனாக இருக்க வேண்டும், வண்டி நகரத் துவங்கிய கணத்தில் தடுமாறிய முதியவரை "சாக மாட்டாம, உயிர எடுக்கிறியே" என்று உரக்கச் சொன்னார், மொழி வேறாக இருந்தாலும் சொற்களின் வலி ஒன்றாகத்தானே இருக்கிறது.

சுருக்கென்று குண்டூசியால் இதய நாளங்களில் கீறியது போன்றொரு வலி, முதியவரின் முகத்தைப் பார்த்தேன், ஒரு முதிர்ந்த தந்தையால் அந்தச் சொற்களை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது முகம் சலனமற்று இருந்தது, அந்த முகம் பல்வேறு சொற்களைக் கடந்து இன்றைய நாளுக்கு வந்திருக்க வேண்டும், தனக்குப் பொது வெளியில் நிகழ்கிற அவமானத்தை விடப் பிள்ளைக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்கிற கவனம் கொண்டவராக இருந்தார் அந்த முதியவர்….. 

நிறுத்தங்களில் ஏறுவது, இறங்குவது அலைபேசிகளில் உரக்கப் பேசுவது,  இயல்புக்கு மாறான ஏதும் பக்கத்தில் நிகழாததைப் போல உலகம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டே இருந்தது, பிறகு ஒரு நிறுத்தத்தில் இறங்கியபோது அந்தப் பெரியவரின் முகத்தை மீண்டும் பார்த்தேன், ஒரு ஏகாந்தமான புன்னகை அவரது முகத்தில் ஒட்டிக் கிடந்தது, வெகு  நாட்களுக்குப்  பிறகு நான் சந்தித்த முதிய தவளையைப் போல இந்த உலகின் துயரங்களைக் கண்டு பழகிப் போன ஒரு விடைபெறுகிற பயணியின் புன்னகையைப் போல துயரத்தின் விதைகளைக் காற்றில் தூவியபடி அவர் கண்களின் எல்லையில் இருந்து மறைந்து போனார்.

114224-india-gang-rape-ram-singh-mother

ஒரு வங்கி அலுவலராகவும், இன்னொரு வருமான வரித் துறை அலுவலராகவும் இரண்டு மகன்களைப் பெற்ற, இளமைக் காலத்திலேயே கணவரை இழந்து போன ஒரு தாயை அந்த இரண்டு மகன் கனவான்களும் நடத்திய விதத்தைக் கண்டு அலைமோதி இருக்கிறேன், வீடு நிறைந்த பேரன்களும், பேத்திகளும், மனிதர்கள் நிரம்பிய பெரிய தோட்ட வீடுகளுமாய் இருந்தாலும், பெற்ற தாயின் இருப்பை ஒரு மாதத்துக்கு என்று எல்லை வகுத்து வைத்திருந்தார்கள் இரு மகன்களும்…..

சோற்றுக்கு நாள் கணக்கிட்டு வாழ்கிற கொடுமையான தண்டனையைப் பெற்றோருக்கு வழங்குவதை விடப் பெரிதாக உயிர்வதை செய்ய இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, சோற்றுக்காக நாட்கள் மாறுகிற அந்தப் பயணம் தான் எத்தனை கொடுமையானதாக இருந்திருக்கும், அவமானமும், அழுகையும் கொண்ட அந்தப் பயணங்கள் நாகரீக மனிதர்களின் வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது, அந்தக் கண்ணீரில் இருந்து பரவும் துயரம் தான் பன்னருகட்டாவின் ஒற்றை வரிக்குதிரையின் கண்ணீர்.

சோற்றுக்காக வீட்டு வாசலுக்கு வரும் வெள்ளை நாய் ஒன்றோடு எப்போதும் உரையாடுவேன், "நீ ஏன் மரக்கறி உணவு கொடுத்தால் உண்ண மறுக்கிறாய்?", "உனக்கான உணவுக்குக் கொஞ்ச நேரம் ஆகலாம், அமைதியாகப் படுத்திரு" என்று அதன் கண்களோடு நேர்கோட்டில் உரையாடும் போது , தலையை உயர்த்தி, நாக்கைச் சுழற்றி இரண்டு கால்களையும் முன்னகர்த்தி ஏதோ சொல்ல முயலும் அதன்  கண்களில் ஒரு மகிழ்ச்சியை உணர முடியும், அப்படியான மகிழ்ச்சியைக் கூட வழங்க முடியாத தட்டில் உணவை வைத்துத் தள்ளி விடுகிற பெற்றோர்கள் நம்மோடு வாழ்கிறார்கள் என்று உணர்கிற தருணங்களில் ஒரு முதிர்ந்த தவளையைப் போல சலனமின்றித் தான் வாழ்க்கையைக் கடக்க வேண்டியிருக்கிறது.

நிறையப் பெண் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, தனிமையில் ஊர்ப்புறங்களில் வாழும் பெண் குழந்தைகளின் பெற்றோர் நிலையை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், நமக்கு வாரி வழங்குகிற அட்சய பாத்திரங்களாய் மட்டும் தான் அவர்களை நமக்குத் தெரியும், வயது முதிர்ந்து தனிமையில் இன்னுமும்  கூலி வேலைக்குப் போய்ப் பிழைக்கிற பெற்றோர்களின் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட நிறைவேற்ற இயலாத அடிமைகளாய், ஆற்றாமையில் வலியோடு நம்மோடு வாழுகிற சக மனுஷிகள் ஏறத்தாழ பன்னருகட்டாவின் வரிக்குதிரைகளைப் போலவும், நேற்றுப் பார்த்த முதிர்ந்த தவளையைப் போலவும் தான் துயரத்தோடு புன்னகைக்கிறார்கள். கடந்து போகிறார்கள்.

நீங்கள் கடைசியாக ஒரு தவளையை எப்போது சந்தித்தீர்கள்?? நீங்கள் தனிமையில் அழுகிற ஒரு வரிக்குதிரையின் கண்ணீரை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா??

**********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: