கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 4, 2015

கொம்பனும், சமூக அறமும்.

cinemaparadiso-watchingmovies

"கொம்பன்" மாதிரியான திரைப்படங்கள் நகரமயமாதலிலும், கல்வி மற்றும் பொருளாதார நாகரீக மாற்றங்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துக் கொண்டிருக்கிற பெரும்பான்மை ஆதிக்க சாதி அரசியலின் வெம்மையில் இழந்த பழம்பெருமைகளை மீட்டி சமூகங்களுக்கு இடையிலான மோதலை உருவாக்கிப் பொருளீட்டும் கருவிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முக்குலத்தோர் சமூக வாழ்வியலில் தமிழரின் மிகச் சிறந்த பண்பாட்டுக் கூறுகளான விருந்தோம்பல், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, நிலத்தின் மீதான அவர்களின் அளவற்ற பிடிப்பு போன்ற எத்தனையோ அழகியல் சார்ந்த காட்சிப் படிமங்கள் பெருகிக் கிடக்கிறது, ஆனாலும், தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு அந்த சமூகத்தின் கற்காலப் பண்பான வன்முறையும், கொலைவெறியும் மட்டுமே கண்களுக்குத் தெரிவது ஒன்றும் இயல்பான ஒன்றல்ல, சொந்த சாதி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் அவர்களின் முதிர்வற்ற அரசியல் நிலைப்பாடுகளும், ஒரு சமூகத்தின் வன்முறையை விற்றுக் காசாக்கும் அறமற்ற வணிக நோக்கமுமே இதற்கான மிக முக்கியக் காரணங்கள்.

ஆதிக்க சாதியினர் என்றும், ஆண்ட பரம்பரை என்றும் உசுப்பேற்றி விடப்படும் பல்வேறு சமூகத்தின் மக்கள் திரளில் அன்றாடம் காணி கரைகளில் உழைத்து தேய்ந்து கொண்டிருக்கும் மக்களோ ஏராளம், எனக்குத் தெரிந்து தென் மாவட்டங்களில் வறுமையில் வாடுகிற, தினக் கூலிகளாக இருக்கிற எண்ணற்ற முக்குலத்து மனிதர்கள் இருக்கிறார்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கி மிக நெருக்கடியான ஒரு சூழலில் வாழும் இவர்களின் வாழ்நிலையை ஓரளவு வசதியோடும், ஆதிக்கத் திமிரோடும் இருக்கிற அதே சாதி மக்கள் அழுத்திச் சிதைக்கிறார்கள், எடுத்துக்காட்டாக, திருமணங்களின் போது ஓரளவு வசதி படைத்த குடும்பங்கள் பெரிய அளவில்   நகைக் கண்காட்சி நடத்தி, குறைந்த பட்சம் ஒரு முக்குலத்துப் பெண்ணுக்கு இவ்வளவு நகை போடப்பட வேண்டும்  என்கிற மறைமுக நெருக்கடியை உருவாக்குகிறார்கள், இத்தகைய போலிக் கௌரவத் திருமணங்களால் கடன்பட்டு மொத்த வாழ்க்கையையும் இழந்து தெருவில் அலைகிற முக்குலத்து குடும்பத் தலைவர்களையும் எனக்குத் தெரியும்.

முக்குலத்து இளைஞர்கள் எல்லாம் ஏதோ வாழ்க்கை முழுதும் அரிவாள், துப்பாக்கிகளோடு சாதி வெறி பிடித்து கொம்பண்டா, வம்பண்டா, சொம்பண்டா என்று சுற்றிக் கொண்டிருப்பதைப் போல நமது இயக்குனர்கள் சித்தரிப்பதும், காலம் காலமாகப் படம் எடுப்பதும் அவர்களின் வணிக அரிப்புக்கு வேண்டுமானால் மருந்தாக இருக்கக் கூடும், சமூக நீதிக்கும், அறத்துக்கும் அல்ல என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முக்குலத்து சமூக மக்களை வன்முறையாளர்களாகவும், சாதிப் பிடிமானம் காரணமாக எந்த விதமான கொடுஞ்செயல் செய்யவும் தயாராக இருக்கும் காட்டுமிராண்டிகள் போலவும் காட்சிப்படுத்துவதன் மூலம் இவர்கள் சமூக அரசியல் இயங்கியலில் அழிக்கப்படுகிற சாதிக் குறியீடுகளை இன்னும் வீரியமாக சமூகத்துக்குள் திணிக்க முற்படுகிறார்கள், தொடர்ந்து இந்த மாதிரியான திரைப்படங்களை எடுப்பதன் மூலம் இவர்கள் சார்ந்த திரைத்துறைக்கும் நேர்மையாக இல்லாமல் களங்கம் செய்வது மட்டுமன்றி, சமூக அறம் குறித்த எந்த முதிர்ச்சியான சிந்தனைகளையும் வெளிப்படுத்தத் தவறுகிறார்கள்.

தொடர்ந்து இரு பெரும் சமூகங்களுக்கு இடையே நிலையான அமைதியைக் குலைக்க முயலும் இத்தகைய இயக்குனர்கள் பாலியல் வக்கிரம் நிரம்பிய நீலப்படம் எடுத்தால் இன்னும் நிறையப் பணமீட்ட முடியும். நீலப்படம் எடுப்பதற்கும், சமூக அமைதிக்கு நிலையான சாவு மணி அடிக்கும் சாதிய வன்முறையைத் தூண்டும் திரைப்படங்களை எடுப்பதற்கும் பெரிய அளவில் வேறுபாடு ஏதுமில்லை.

இவற்றை எல்லாம் தாண்டி, சமூக நீதி அல்லது சமூக அறம் என்றால் என்ன என்று புரியாத, புரிந்து கொள்ள விரும்பாத பழைய சினிமாக்காரரும் தற்கால தமிழ் சினிமாவின் நாட்டாமையுமாகிய சீமான் மற்றும் வெற்றிமாறன் போன்ற அரசியல் அரைவேக்காடுகள் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு பாடம் எடுக்கும் தமிழ் சொற்கள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதும் படைப்பாளிகளின் சுதந்திரம் குறித்துப் பேசுவதும் வணிக நோக்கங்களைத் தாண்டி எந்த வகையிலும் நியாயமற்றது.

திரைப்படத்தை ஆயுதமாகக் கொண்டு ஹிட்லரின் கொடுங்கோன்மையை நையாண்டி செய்தான் "சார்லி சாப்ளின்", மனித வாழ்க்கையின் நுட்பங்களை, அவலங்களை திரைப்படத்தில் ஏற்றி உலகம் முழுக்க மனித வாழ்வின் மேன்மையை உயிர்ப்பித்தான் "அகிரா குரசோவா", பன்றி மேய்ப்பவர்களின் வாழ்க்கையை காதலோடு கலந்து சொல்லி சாதிய சமூகத்தின் மீது கல்லெறிந்தான் "நாக்ராஜ் மஞ்சுலே", போருக்கு ஏன் இத்தனை செலவிடுகிறாய் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தனது படங்களால் நெஞ்சுரத்தோடு கேள்வி கேட்டான் "யூஜீன் ஜெரக்கி".

திரைப்படத்தை வைத்து ஆதிக்க சாதிப் பெருமை பேசி சாதிய வன்முறை மனதை அழியாமல் பாதுகாத்தார், தொடர்ந்து சமூகங்களுக்கு இடையிலான காழ்ப்புக்கு வணிகத் தீனி போட்டு வளர்க்க அரும்பாடுபட்டார் ஐயா "முத்தையா" என்றும், அதற்கு வக்காலத்து வாங்கி பஞ்சாயத்துப் பண்ணி தனது கூறு கேட்ட அரசியல் அறிவை போட்டுடைத்தார் ஐயா தமிழ்க் குத்தகைதாரர் "சீமான்" என்றும் உங்கள் பெயர்கள் வரலாற்றில் குறிக்கப்படும்.

*****************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: