கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 13, 2015

ஒரு சர்க்கஸுக்கு போவது அத்தனை எளிதானதல்ல…….

Rain-on-the-Way-Zippos-Circus-6x8

என்னுடைய பன்னிரண்டு வயதில் ஒரு சர்க்கஸைப் பார்ப்பது மிக எளிதானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருந்தது, அப்போது வண்ண வண்ண ஆடைகளை அணிந்து, வித விதமான வித்தைகளைக் காண்பிக்கிற ஆண்களும், பெண்களும் மிக அழகானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் தெரிந்தார்கள். நேற்று மாலையில் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம், பிழைப்புக்காக செய்யப்படும் மனித சாகசங்களை ரசிக்கும் மனநிலை எனைவிட்டு நீங்கிப் போய் வெகுநாட்களாகி இருந்தது. ஆனாலும் குழந்தைகளுக்காக நாம் இன்னமும் சர்க்கஸ் பார்க்க வேண்டியிருக்கிறது

மேலடுக்கில் அமர்ந்து இசைக்கும் குழுவில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிய இசையில் அத்தனை உயிரில்லை, வண்ணம் இற்றுப் போன ஒரு ட்ரம் செட்டும், அழுக்குத் துணி ஒன்றினால் சுற்றப்பட்ட பியானோவும் ஒரு பாடலின் உடலை இசைத்துக் கொண்டிருந்தன, ஒரு பாடலின் உயிர் அதை இசைக்கிற மனிதனின் ஆன்மத்தொடு தொடர்புடையதாக இருக்கிறது, ஆன்மம் எப்போதும் பொருளோடும், இருத்தலோடும் தொடர்பு கொண்டு விசும்புகிறது.

சர்க்கஸ் துவங்கி ஒரு பத்து நிமிடங்கள் ஆகி இருக்கலாம், பெரும் காற்றோடு மழை சுழற்றி அடிக்கத் துவங்கியது, சர்க்கஸ் கூடாரம் தனியே ஒரு சர்க்கஸ் காட்டிக் கொண்டிருந்ததையும், கூடாரத்தின் ஓட்டைகள் வழியே மழை நீர் சொட்டுவதையும் பார்த்துக் கொண்டிருந்தேன், மழையின் தீவிரத்தில், இரைச்சலின் நடுவே கூடாரத்தின் நடுக்கம்பத்தின் அருகே அப்போது ஒரு மழை மனிதனைப் பார்த்தேன், அவனுக்கு  எனதைப் போலவே இரண்டு கால்களும், கைகளும் இருந்ததைப் பார்த்தேன், உயரமான  கூடாரத்தின் மிக ஆபத்தான மழை நேரத்தில் அவன்  மேலிருந்தான், அவனது கைகளில் வெண்ணிறப் பிளாஸ்டிக் உறைகள் இருந்தன, கூடாரத்தின் கம்பங்களைக் குறித்த நிறையத் தெரிந்திருக்கும் மனிதனாக  அவன் இருக்கக் கூடும்.

சரியாக அவனுக்குக் கீழே உருளை  ஒன்றின் மீது பலகை வைத்து  அதன் மீது கால்களை லாவகமாய் நகர்த்தியபடி விளையாடிக் கொண்டிருந்தான் இன்னொரு மனிதன், ஆனால், கூடாரத்தின் மீதிருந்த மழை மனிதனின் கால்களோ மந்திரக் கால்களைப் போல ஒவ்வொரு அடியையும் மிக அற்புதமாக நகர்த்திக் கொண்டிருந்தன, சர்க்கஸ் நிகழ்த்தப்படும் அந்த அரங்கின் மீது ஒழுகிக் கொண்டிருந்த நீரை அடைப்பது அந்த மழை மனிதனின் வேலை, அவனது உடல் முழுதும் நனைந்து கிடந்தது, கூடாரத்தின் மீது ஒட்டிக் கொண்டிருந்த அழுக்கின் வீக்கத்தைப் போல அவன் அங்கே ஊர்ந்து கொண்டிருந்தான், சொட்டும் மழைத்துளிகள் தங்கள் குழந்தைகளின் மீது விழாதவாறு கீழிருந்த மனிதர்கள் சர்க்கஸ் செய்து கொண்டிருந்தார்கள், மேலிருந்த மழை மனிதனையும் ஒருநாள் அவனது பெற்றோர் சர்க்கஸுக்கு அழைத்துப் போயிருப்பார்களா? என்றொரு மடத்தனமான கேள்வி அந்த நேரத்தில் எனக்குள் எழுந்தது.

பிறகு அந்த மழை மனிதனுக்கு என்னைப் போலவே ஒரு மகள் இருக்கக் கூடுமென்றால் அவள் எங்கே இருப்பாள், மழை நீர் ஒழுகாமல் சர்க்கஸ் கூடாரத்தின் ஓட்டைகளை அடைக்கும் தந்தையின் வருகைக்காகவோ, அழைப்புக்காகவோ அவள் புவிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கக் கூடும். திரும்ப ஒருமுறை நிறைமொழியைப் பார்த்தேன், அரங்குக்குள் நுழைந்த சில நிமிடங்களில் "அப்பா, இங்கே ஏ சி எல்லாம் இருக்குமென்று நினைத்தேன்" என்று அவள் சொன்ன சொற்களை நினைவூட்டியபடி மீண்டும் மழை மனிதனைப் பார்த்தேன்.

அப்போது அரங்கில் ஒரு சின்னஞ்சிறிய பெண் கயிற்றை வாயில் கவ்விப் பிடித்தபடி ஒரு மின்விசிறியை விட வேகமாய் அந்தரத்தில் சுற்றிக்  கீழே இறங்கிக் கொண்டிருந்தாள், கூட்டம் ஆர்ப்பரித்துச் சிரித்தது. கயிற்றைப் பிடித்து மீண்டும் மேலேறும்  ஒரு கணத்தில் அந்தச் சின்னஞ்சிறிய பெண் தடுமாறினாள், அவளது கால்கள் நிலை குலைந்து பிடி இழந்தன, பிறகு மீண்டும் பிடியை இறுக்கிக் கொண்டு ஒரு உயிர்க் காற்று நிரம்பிய பலூனைப் போல மேலேறிக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையாக இருந்த போது ஒருநாள் தடுமாறிச் சரிகையில் விழாமல் பிடித்துக் கொள்ள அவளருகே இருந்த மனிதர்கள் இப்போது எங்கே இருப்பார்கள், செல்ல மகளின் பிஞ்சுக் கால்கள் பிடியிழந்து அந்தரத்தில் தடுமாறிய அந்தக் கணங்களை அவள் தந்தை  இந்த அரங்கில் எங்கேனும் நின்று பார்த்துத் துடித்திருப்பானோ?

2013011614313500

மழை மனிதன் கண்களில் இருந்து மறைந்து போனான், மழையில் சொட்டிய ஆயிரம் நீர்த்துளிகளில் அவனது கண்ணீர்த்துளி ஒன்றும் கலந்து கிடக்கக் கூடும். பிறகு பூஜை செய்வதற்காக அங்கு அழைத்து வரப்பட்ட யானைகள் சிலவற்றைப் பார்த்தேன், ஒல்லியான மனிதர்களையும், உடல் வற்றிப் போன நாய்களையும், பூனைகளையும் பார்த்திருக்கிறேன், ஒல்லியான, உடல் வற்றிப் போன யானையை அங்குதான் பார்த்தேன், வினோதமான மனித இருத்தலின் வித்தைகளை அந்த யானைகள்  செய்து கொண்டிருந்தன, கைதட்டலுக்கும், மனித அடிமைத்தனங்களுக்கும் அந்த யானைகள் பழகிப் போயிருந்தன போலும், அவசர அவசரமாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் மிட்டாய் திருடித் தின்னும் ஒரு குழந்தையைப் போல பூஜைக்காக உடைக்கப்பட்ட தேங்காய்த்துண்டு  ஒன்றை அங்கிருந்த குட்டி யானை ஒன்று தின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன், அதற்காக அந்தக் குட்டி யானை அரங்கின் கண்களில் இருந்து  மறைகிற போது தண்டிக்கப்படுமோ என்கிற கவலை  மழை நீரின் ஒழுகளைப் போல மனதின் ஒரு ஓரத்தில் கசிந்து கொண்டிருந்ததை அங்கிருப்பவர் யாரரிவார்கள்?

 

மழை மனிதன் இப்போது கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பான், மழை கொஞ்சம்  குறைந்திருந்தது, அப்போது வெண்ணிற மிதிவண்டிகளை அழுத்தியபடி நான்கைந்து பெண்கள் அங்கே வட்டமிட்டார்கள், இரண்டாவதாக வந்த நடுவயதுப் பெண்ணின் மேல்சட்டை சரியாகப் பொருந்தாமல் உறுத்திக்  கொண்டிருக்க வேண்டும், சரி செய்ய முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள், ஆயிரம் கண்களின் ஊடே பிழைப்புக்கான சாகசம் செய்வதில் தான் எத்தனை வலி இருக்கும், பொருந்தாத அந்தப் பெண்ணின் மேல்சட்டை குறித்து யார் தான் கவலை கொள்வார்கள்.  பிறகு அங்கே பஞ்சவர்ணக் கிளிகள் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருந்தன, சில அழகான வெள்ளை நாய்கள் உருளைகளை உருட்டியபடி ஓடின, பிறகு குள்ளர்கள் ஒருவரை ஒருவர் கட்டைகளால் அடித்துக் கொண்டு கூட்டத்தை சிரிக்க வைத்தார்கள், பஞ்சவர்ணக் கிளிகள் குட்டி சைக்கிள் ஓட்டுவதைக் கண்டு மனிதர்கள் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும், குட்டி நாய்கள் ஏன் உருளைகளை  உருட்ட வேண்டும், குள்ள மனிதர்கள் ஒருவரை ஒருவரை அடித்துக் கொண்டால் நாம் ஏன் சிரிக்க வேண்டும்.

சர்க்கஸ் முடிந்து வெளியே வரும் போது  கண்கள் மழை மனிதனைத் தேடின, கூடாரத்தின் மீது அவன் ஊர்ந்து போன பாதையைப் போலவே மழை முடிந்த கருமேகங்கள் திட்டுத் திட்டாய் வானில் கிடந்தன. என்னுடைய பன்னிரண்டு வயதில் ஒரு சர்க்கஸைப் பார்ப்பது உண்மையில் எளிமையானதாகவும் , மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. இப்போது நான் ஒரு மழை மனிதனையும், இன்னும் சில மனித உடலின் இருத்தல் குறித்த வலிகளையும் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டியவனாய் வளர்ந்திருக்கிறேன். ஒரு சர்க்கஸைப் பார்ப்பது அத்தனை எளிதானதல்ல.

 

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: