கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 20, 2015

மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 7

terra_amata

அறிவியல் மனித இனக்குழுக்களைக் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் என்ன சொல்கிறது என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. 1950 ஆம் ஆண்டு “UNESCO” ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கையின் சாரம், மானுட வரலாற்றில் இனக்குழுக்கள் என்பது ஒரு கற்பனைக் கதை, உண்மையில்லை” என்று உரக்கச் சொன்னது. இந்த அறிக்கை ஒன்றும் பிள்ளையாருக்கு யானை மூக்கு வெட்டித் தைக்கப்பட்டதால் நாமே “பிளாஸ்டிக் சர்ஜரி” யின் முன்னோடிகள் மாதிரியான மோடி மஸ்தான்களின் அறிக்கை அல்ல, மாறாக உலகளாவிய அளவில் மானுடவியல் குறித்துப் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வரும் உயிரியல் வல்லுனர்கள், உளவியல் விஞ்ஞானிகள், உடலியல் விஞ்ஞானிகள், மூலக்கூறு ஆய்வாளர்கள் என்று பரந்த ஆய்வுக் களத்தில் செயல்பட்ட குழுவின் முடிவான அறிக்கை.

ஐ. நா மன்றம் எதற்காக இது மாதிரியான ஒரு ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டது, என்று ஒரு கேள்வி நமக்கு முன்னால் வருகிற போது வரலாற்றின் கொடு நிழல் உங்கள் மனக்கண்ணில் படிய வேண்டியிருக்கும், புதிய நிலப்பகுதிகளைத் தேடித் திரிந்த பிரித்தானியர்களும் ஏனைய ஐரோப்பியர்களும் அமெரிக்காவைக் கண்டடைந்த பிறகு அங்கிருக்கும் பூர்வ குடி சிவப்பிந்தியர்களைக் கூட்டம் கூட்டமாக விலங்குகளை வேட்டையாடியதைப் போல அழித்தார்கள், நாசிசக் கொள்கையின் பெயரில் ஹிட்லரும் அவனது தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடினார்கள், ஆப்ரிக்க பெருங்குடி மக்களை கடந்த நூற்றாண்டு வரைக்கும் மனிதனாக ஏற்றுக் கொள்ளக் கூட மறுத்தார்கள்,

இப்போதும், இனங்களின் பெயரால், சாதியின் பெயரால் பிறவியில் உயர்ந்தவன் என்கிற கோட்பாட்டை நம்புகிற அறிவியலுக்கு எதிரான நவீன பார்ப்பனர்கள் ஏனைய உழைக்கும் மக்களை ஏளனமாகப் பார்ப்பதும், கெக்கெலிப்பதும் தொடர்ந்து எங்காவது ஒரு தளத்தில் முன்னெடுக்கப்படுகிறது. வரலாற்றின் நெடுகிலும் எந்த நிலப்பரப்பும் எந்த இனக்குழுவுக்கும் சொந்தமானதல்ல என்கிற எளிய மனித வரலாற்று உண்மையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புவியெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்தலுக்கான இடப்பெயர்வு ஒரு தொடர் மனித இயக்கம், இனக்குழுக்களும், ஏனைய குழு நிலைப்பாடுகளும் தொடர்ந்து நிகழ்கிற பழக்கங்களிலும், அடையாளங்களிலும் தங்களை உள்ளீடு செய்து அடைகிற தற்காலிக மகிழ்ச்சிக்குப் பெயர் தான் தேசியங்கள்.

உடல் மற்றும் மன ரீதியிலான பாதுகாப்பு உணர்வே உடைமைகளைத் தேடி அடையும் நிலையை மனிதன் என்கிற சமூக விலங்கிற்கு வழங்கி இருக்கிறது. எனது மண், எனது ஊர், எனது வீடு என்கிற எல்லாச் சொல்லாடல்களும் ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை மனிதனுக்கு வழங்குகிறது. ஒரு எல்லை வரையில் இந்தப் பாதுகாப்பு உணர்வு தேவையாகவும், உரிமையாகவும் இருந்து தனது கிளைகளை விரிக்கிறது. பிறிதொரு கட்டத்தில் அதுவே ஏனைய மனிதக் குழுக்களை அச்சுறுத்தும் காரணியாக மாறத் துவங்குகிறது.

இன மோதல்களாகவும், குழுச் சண்டைகளாகவும் தொடர்ந்து இந்த மோதல் காலம் காலமாய் நீடித்து வருகிறது, நாகரீகத்தை நோக்கிய அடுத்த நகர்வில் மனிதன் கண்டடைய வேண்டிய மிக முக்கியமான தீர்வு இந்த இன மோதல்களுக்கான ஒரு முடிவே என்பதை முதிர்ந்த அறிவுள்ள எந்த இனக்குழுவின் மனிதனும் ஒப்புக் கொள்வான். மனித இனம் தனது மூதாதைகளிடம் இருந்து விலகித் தங்கள் குடும்பங்களை உருவாக்கத் துவங்கி ஏறத்தாழ 1,50,000 ஆண்டுகள் ஆகி விட்டது, ஏறத்தாழ ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராக “ஹோமோ எரக்டஸ்” என்கிற குரங்குகளின் சற்றுப் பிந்தைய இனம் ஆப்ரிக்கக் காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற நிலப் பகுதிகளில் வசிக்கத் துவங்கியதாக ஒரு சாரரும், ஆசியாவிலிருந்து நகர்ந்து ஏனைய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாக மற்றொரு சாரரும் சொல்லிக் கொண்டிருக்கையில் நவீன உலகின் மனிதன் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறான், மனிதனின் இடப்பெயர்வு பல்வேறு புற மற்றும் அகக் காரணிகளால் நிகழ்கிறது, அவற்றில் பொருள் ஒரு இன்றியமையாத காரணியாகவும், போர், காலநிலை மாற்றங்கள் மற்றும் ஏனைய காரணிகள் இரண்டாம் நிலைக் காரணிகளாகவும் காணக் கிடைக்கின்றன.

மானுட வரலாறு குறித்த உண்மைகளையும், இனக்குழு வாதம் மானுட வரலாற்றில் தாக்கங்களையும் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் உயிர்களின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த அடிப்படைப் புரிதலோடு தான் துவங்க வேண்டியிருக்கிறது, ஒற்றைச் செல் உயிரிகளின் தோற்றம் எவ்வாறு அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை மற்றும் மின்னணு ஏற்றத்தோடு பிணைந்து உயிர் வாழ்க்கையை உருவாக்கக் கூடும் என்பதை பல உயிரியல் அறிஞர்கள் சோதனைகளில் நிறுவி இருக்கிறார்கள், குறிப்பாக 1953 ஆம் ஆண்டு ஸ்டான்லி மில்லர் மற்றும் ஹரோல்ட் உரே ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகள்

ஒரு சோதனையைக் செய்தார்கள், அடைக்கப்பட்ட ஒரு செயற்கை வளி மண்டலத்தை உருவாக்கி சில குறிப்பிட்ட வேதிப் பொருட்களை அதனுள் உள்ளீடு செய்து மின்னணு ஏற்றம் செய்து பார்த்தபோது வியக்கத்தக்க வகையில் பல்வேறு அமினோ அமில வகைகளை அந்த செயற்கை வெளியில் அவர்கள் கண்டறிந்தார்கள். அமினோ அமிலங்கள் உயிர்ப் பொருட்களின் தோற்றுவாயாக அடிப்படையாக இருப்பதை நீங்கள் அறிவீர்களேயானால் புவியில் உயிர்களின் தோற்றம் குறித்த கடவுள் புனைவுகளை மறந்து அறிவின் வழியிலான ஒரு மானுட வரலாற்று தரிசனத்தை நீங்கள் உணர முடியும்.

henri-de-lumley-presentera-ce-vendredi-les-restes-d-arago_283653_510x255

பிறகு அமினோ அமிலங்களின் கூட்டு சேர்க்கையால் உருவான பாக்டீரியாக்கள், அமீபாக்கள், அவற்றில் இருந்து பரவிய பூச்சிகள், பின்பு மீன்கள், மீன்களில் இருந்து தவளைகள், தவளைகளில் இருந்து பறந்து போன முதல் பறவைகள், பறவைகளில் இருந்து முன்னும் பின்னுமாய் மாறிய விலங்குகள், பாலூட்டிகள், முதுகெலும்பு உள்ள விலங்குகள், தட்டையான மூக்கைக் கொண்ட அணில்கள், அவற்றில் இருந்து மருவிய அணில் குரங்குகள், கைகளை நன்கு பயன்படுத்தத் துவங்கிய குரங்குகள், பிறகு மனிதக் குரங்குகள், மனிதக் குரங்குகளில் இருந்து தனித்துப் பிரிந்த “ஹோமோ ஹெபிலிஸ் (Homo – Habilis)” வகை மனித முன்னோடிகள், ஹோமோ ஹெபிலிஸ் வகை உயிரியல் இனம் கைகளை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்த முன்னோடி மனித இனம் சொல்லலாம், ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஆப்ரிக்க மண்ணில் இருந்து கிளைத்துப் பரவத் துவங்கிய இந்த வகை உயிரியல் இனமே நாகரிக மனிதனின் முதல் ஆதித் தாத்தன், ஏனெனில் இவனே கூர்மையான கற்களைப் பயன்படுத்தி இறைச்சியை வெட்டத் துவங்கினான்.

அடுத்ததாக முதன் முதலில் கைகளை ஊன்றாமல் நடக்கத் துவங்கிய “ஹோமோ எரெக்டஸ்” வகை, இந்த வகையினரின் உடல் படிமப் புதைவுகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டிருக்கின்றன, குறிப்பாக ஜாவா தீவுகளில் ட்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிமங்கள் ஹோமோ எரெக்டஸ் வகை மனித முன்னோடிநமக்குக் கூட்டத்தின் சொல்லித் தந்தது, இந்த வகையே மானுட வரலாற்றை உலகெங்கும் நகர்த்திய பெருமைக்குரியது, சீனாவின் பெக்கிங் மற்றும் அல்ஜீரியாவின் டெர்னிபைன், ஐரோப்பிய நாடுகள் என்று பல்வேறு இடங்களில் இவற்றின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டன. இந்த வகை மனித முன்னோடிகளே நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாள் நெருப்பை மூட்டி இறைச்சியைச் சுட்டு கூட்டமாக அமர்ந்து மனித நாகரீகத்தின் வேர்களை அவர்களே நிலைத்து ஊன்றினார்கள்.

1966 ஆம் ஆண்டு டி லும்லே என்கிற தொல்லியல் ஆய்வாளர் பிரெஞ்ச் ரிவேரியாவுக்கு அருகில் “டெர்ரா அமட்டா” என்னும் இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடையே ஒரு தொன்மக் கடற்கரையைக் கண்டறிந்தார், கடற்கரையில் அவருக்கு ஏராளமான ஹோமோ எரெக்டஸ் வகை மனித முன்னோடிகளின் தொன்மப் படிமங்கள் கிடைத்தன, நெருப்பைப் பயன்படுத்தி உணவைப் பதம் செய்கிற அடுப்பு மாதிரியான அமைப்போடு விலங்குகளின் தோலைப் பயன்படுத்தியும் கட்டப்பட்டிருந்த கூடங்களைப் போன்ற அமைப்புகளை சில மாதங்கள் கடும்பணி புரிந்து அவர் உலகுக்குக் காட்டினார், அவருடைய கண்டுபிடிப்புகளின் காலம் ஏறத்தாழ கி.மு 3,80,000 ஆண்டு. 20 முதல் 40 மனிதர்கள் வரை கூடி இருக்கும் அளவுக்கான கூடங்கள் அவை. “ஹோமோ செப்பியன்ஸ்” மனிதர்களின் முன்னோடிகள் இவர்கள்.

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: