கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 20, 2015

மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 8

Brain

மனித இனங்களின் உடற்கட்டமைப்பு மற்றும் சிறப்பியல்புகள் குறித்த பல வேறுபாடுகள், அவற்றின்  அடையாளங்களை நமக்குச் சொன்னது, ஆனால், அவை தவிர்த்த மிக நுட்பமான, சிறப்பான குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தனித்துக் காட்டிய சிறப்புக் கட்டமைப்பு உறுப்புகள் மூன்று.

1) மூளை

2) கைகள்

3) பாதங்கள்

மனிதனின் ஒலிக்குறிப்புகளும், அவற்றில் இருந்து உருவாக்கப்பட்ட மொழிகளும், மனித மூளையை வியப்பான வளர்ச்சி அடைய வைத்தன. பல்வேறு நுட்பமான வேலைகளைத் தொடர்ந்து பழகிய கைகள் தற்கால மனிதன் குரங்கின் இடத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள மிக முக்கியமான காரணியாக இருந்தது, கைகள் தொடர்ந்து மூளையோடு நெருக்கமான தொடர்பு கொள்ள உழைப்பு ஒரு அற்புதமான காரணியாக அமைந்தது மட்டுமன்றி இன்றைய வியத்தகு நவீன உலகை, மானுடத்தின் அளப்பரிய சாதனைகளை, ஒருகாலத்தில் மரக்கிளைகளில் தொற்றித் திரிந்த குரங்குகள் தங்கள் கடின உழைப்பால் கட்டமைத்தன என்கிற உண்மை மானுடவியல் வரலாற்றில் அளப்பரிய சாதனையாக இருக்கிறது.

தெளிவான ஒலிக்குறிப்புகளைக் கொண்ட சொற்களும், அவை கட்டுப்படுத்தப்படும் மூளையின் நுண்ணிய பகுதிகளும் மனிதனுக்கே உரிய இயல்பான பகுதிகளாக மாறி இருக்கின்றன, பேச்சும், உணர்வும் தொடர்ந்து அடைந்த வளர்ச்சி நிலைகளால் இந்த இரண்டாம் சங்கேத மண்டலப் பகுதி வேறெந்தக் கட்டமைப்பையும் விட மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்ததில் வியப்பொன்றுமில்லை. மானுட வளர்ச்சியின் அடிப்படைப் பண்புகளில் கைவிரல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் புரனிப் பகுதி மிக முக்கியமான இடம் பெறுகிறது, இது முன்புற மைய நெளிமடிப்பின் கீழ்ப்புறத்தில் ஒரு கூட்டு மண்டலச் செயலகமாகத் தொடர்ந்து இயங்குகிறது. மேலும், எல்லா மனித இனங்களின் மூளையிலும் ஒரே மாதிரியாகப் பெரிய இடத்தை நிறைக்கிறது. நவீன மனித இனங்களின் வரலாற்றில் தீவிர வளர்ச்சி அடைந்த மூளைப் பகுதிகளில் கைவிரக்ளைக் கட்டுப்படுத்தும் புறணிப் பகுதி மிக முக்கியமானது.

மனிதக் கைகள் வெறும் உழைப்புக்கான  உறுப்பு மட்டுமல்ல, மாறாக அவை உழைப்பினால் விளைந்த, தீவிர மாற்றங்களை அடைந்த உறுப்பும் கூட, மனிதக் கைகளின் தனித்தன்மையான பெருவிரல் வளர்ச்சி, ஏனைய நான்கு விரல்களுக்கும் எதிராக தீவிர வளர்ச்சியை அடைந்திருக்கிறது, ஒரு சிம்பன்சி குரங்கின் கைவிரல்களைக் கட்டுப்படுத்தும் புறணிப் பகுதியில் கூட்டுக் கட்டுப்பாட்டு இயக்கச் செயல்நிலைப் புறணி குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததைப் போல மனித இனக்குழுக்களில் உள்ளடங்கும் நவீன மனித மூளையில் ஒவ்வொரு விரலின் கட்டுப்பாட்டுக்கும் தனித்தனி இயக்கச் செயல்நிலைக் கட்டுப்பாட்டு மையங்கள் ஒரே மாதிரியான வேறுபாடுகளற்ற வளர்ச்சியை அடைந்திருக்கிறது. மிக முக்கியமான உயிரியல் அமைப்பான கைகளின் கட்டமைப்பில் எந்த வாழும் மனித இனமும் தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ இல்லை என்று உயிரியல் ஆய்வுகள் தொடர்ந்து உறுதி செய்கின்றன.

முதன்மை இயக்கப் புறணி (Primary Motor Cortex) என்கிற ஒரு பட்டையான நடுவரிப்பள்ளத்தின் அருகே இருக்கிற இயக்கப் புறணியே (Motor Cortex) மூளையின் கட்டளை பெற்று இயங்கக் கூடிய எல்லாத் தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இயக்குகிறது, நியாண்டெர்தெல் வகைகளில் ஒரு மந்தமான கூட்டுச் செயலியக்கப் புறணியாக (Compound Motor Cortex) இருந்த இந்த மூளையின் நரம்பு இழைகள் காலப்போக்கில் மனிதனின் உழைப்பு, அறிவுக் கூர்மை, கூர்ந்து நோக்கும் தன்மை போன்ற காரணங்களால் அளப்பரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன, செயல்பாட்டின் அளவுகளுக்கு ஏற்பவும், கட்டுப்பாட்டுச் சமிக்ஞைகளின் தீவிரத்தைப் பொருத்தும் மனித மூளையின் இயக்கப் புறணிகள் வளர்ச்சி பெற்றன, இன்றைய நவீன மனிதனின் முதுகுத் தண்டைக் கட்டுப்படுத்தும் இயக்கப் புறணிப் பகுதியின் நரம்பிழை அளவை விட மூளையைக் கட்டுப்படுத்தும் இயக்கப் புறணிப் பகுதியின் நரம்பிழை அளவு மூன்று மடங்கு பெரிதாக இருப்பதை இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

tumblr_menxc7qcq61ryin08o1_r1_1280

இன்னுமொரு நுட்பமான செய்தியை இந்த நேரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது,  ஒரு மனிதனின் தாய்மொழி அவனது மூளையின் ஒப்பு வரைவு ஒலிக்குறிப்பு இயக்கப் புறணியின் (Tonotopic Maps) மீது என்ன தாக்கம் விளைவிக்கிறது என்பதையும் அதன் தனித்தன்மைகளையும் இவ்விடத்தில் அறிவது பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மொழியின் சொற்களுக்கும் அகராதியில் காணக் கிடைக்கும் புறப் பொருளுக்கும் (Denotative Meaning) , சமூக அரசியல், பண்பாட்டு வழியிலான அகப் பொருள் (Connatative Meaning) ஒன்றுக்குமான வேறுபாட்டையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது, ஒரு சொல் பயன்படுத்தப்படும் போது அதன் வரி வடிவம் பயன்படுத்துகிற மனிதனின் உளவியலில் தன்னையும் அறியாமல் ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

அந்தச் சொல் இதுகாறும் அவனுடைய வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தருணங்கள், நிகழ்வுகள் என்று ஒரு உடலியல் சுழற்சியை வரிவடிவங்கள் உருவாக்கி விடுகிறது. மேலும் தாய் மொழியுடனான நம்முடைய தொடர்பு என்பது நாம் கருவில் இருக்கிற காலத்தில் இருந்தே துவங்கி விடுகிறது, தாயின் சொற்கள், தாயின் மொழி, தாயின் சொற்களுக்கான பொருள், அது தரும் அதிர்வுகள்  என்று கருவில் இருக்கும் குழந்தை மொழியைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறது, முதன்மை மொழி அல்லது தாயின் மொழி பெரும்பாலான "பிராகோ" (Brocha’s Area) பகுதியின் நியூரான்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது, பிறகு கற்றுக் கொள்ளப்படுகிற எந்த இரண்டாம் மொழியும், அதன் வரி வடிவங்களும் வெர்னிக்ஸ் (Werniche’s Area)  பகுதியின் நியூரான்களில் தங்கி இருந்து கட்டளைகளை உள்வாங்கிக் கொள்கிறது.

மிக முக்கியமாக இந்த இடத்தில் ஒரு உண்மையை நாம் உணர வேண்டியிருக்கிறது, மூளையின் செயலியக்கப் புறணியில் இருக்கும் சாம்பல் பொருளாகட்டும், நரம்பிழைகலாகட்டும் அளவாகட்டும்,  நாகரிக வளர்ச்சி அடைந்த எல்லா மனித இனக்குழுக்களிலும் இவற்றின் உயிரியல் அளவு (Biological Size & Weight) ஒன்றாகவே இருக்கிறது, ஒட்டு மொத்த மூளையின் அளவில் மாறுபாடுகள் இருந்தாலும் இந்த மாறுபாடு சூழல் அல்லது உயிரியல் அடிப்படைகளை வைத்தே உருவாகி இருக்கிறது. மூளையின் ஒட்டுமொத்த அளவை வைத்து ஒரு மனிதனின் அறிவாற்றலையோ செயல்திறனையோ நாம் கணக்கிட முயன்றால் உலகில் மிகுந்த அறிவாற்றல் உள்ளவர்களாக எஸ்கிமோக்களையே நாம் குறிப்பிட வேண்டியிருக்கும்.

ஆக பிறவியிலேயே அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்கிற ஒரு வகையே இங்கே கிடையாது, அறிவாற்றலையும், செயல்திறனையும் எல்லாத் தரப்பு இனக்குழுக்களும் உலகிற்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது, ஒடுக்கப்பட்டவனின் மூளை அறிவார்ந்த செயல்களைச் செய்வதற்குத் தகுதியற்றது, ஒரு பிராமணனின் மூளை பிறவியிலேயே அறிவார்ந்த செயல்களைக் கற்றுக் கொண்டு பூமிக்கு வருகிறது போன்ற கற்பிதங்கள் உண்மையில் அறிவியல் உண்மைகளுக்கு எதிரான புரட்டுக்கள்.

i_06_cr_mou_1a

தொடர்ந்து இந்திய சமூகத்தில் திட்டமிட்டுப் பரப்புரை செய்யப்பட்ட பிராமணன் அல்லது உயர் குலத்தோன் கல்வி மற்றும் சமூக நிலைப்பாடுகளில் பிறவித் தகுதி பெற்றவன் என்கிற கோட்பாடு ஒரு குற்றச் செயல், இத்தகைய பரப்புரைகளையும், நம்பிக்கைகளையும் இன்றும் நமது சமூகத்தில் புழக்கத்தில் வைத்திருக்கும் மதம் சார்ந்த பல்வேறு அடிப்படை நூல்களையும், கற்பிதங்களையும் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய அறிவார்ந்த ஏனைய சமூகங்கள் முன்வர வேண்டும். சக மனிதனை தன்னை விடப் பிறவியில் தாழ்ந்தவன் என்று சொல்கிற எந்தப் புராதான நம்பிக்கையையும் தீயிட்டுக் கொளுத்த அந்த நம்பிக்கைகளால் காலம் காலமாகப் பாதிப்படைந்த சமூகக் குழுக்கள் கிளர்ச்சி செய்தாக வேண்டும், கற்பிதங்களும், பிறவி உயர்வு தாழ்வு குறித்த நம்பிக்கை அடிப்படையிலான பிற்போக்கு வாதங்களும் எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் எவ்வளவு கொடுமையான உளவியல் தாக்கங்களை உருவாக்கி இருக்கின்றன என்று உணர்ந்து அறிவியலின் வழியே இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் சமமான அறிவாற்றலும், இயங்கு திறனும், வாழுரிமைகளும் கொண்டது என்று நமது இளைய சமூகத்துக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

 

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: