கை.அறிவழகன் எழுதியவை | ஜூன் 7, 2015

மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 9

4847485580_The20Family20Tree20small_answer_2_xlarge

இயற்கையின் பாதிப்பு தாக்கம் மானுட வரலாற்றில் மிகப்பெரிய மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது, நியாண்டெர்தெல் இனங்களில் அல்லது அதற்கு முந்தைய பண்டைக்கால இனங்களில் இயற்கையின் பாதிப்பு  மிக அதிக அளவில் இருந்திருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு. இன அடையாளங்கள் உண்டாவதில் புவியியல் மற்றும் சூழல் காரணிகள் பெரிதும் காரணமாய் அமைந்தன, குறிப்பாக தோல் நிறமிகளின் வேறுபாடுகளில் புவியியல் சார்ந்த மாற்றங்கள் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது, உலக நிலப்பரப்பில் மனித இனம் தோன்றிப் பரவிய போது வெவ்வேறான புவியியல் சூழலில் வாழ்ந்தார்கள்,  காலப்போக்கில் அவர்கள் இயற்கையை மேலும் மேலும் அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கினார்கள்,  கூட்டு சமூக உழைப்பின் மூலமும், அறிவாற்றலின் மூலமும் அவர்கள் இயற்கையை மாற்றி அமைத்தார்கள், இயற்கை அவர்கள் மீது தொடர்ந்து உருவாக்கிய தாக்கங்களை முறியடித்து பொதுவான ஒரு சமூக வாழ்க்கை நிலைக்குத் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள்.

சமூகம், தொழில் நுட்பம், பொருளாதாரம் ஆகிய காரணிகளின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க இயற்கைத் தேர்வின் பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபடத் துவங்கினார்கள்,  துவக்க காலத்தில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்த முற்றிலும் மாறுபட்ட இனங்களாக இருந்த மானுட இனக்குழுக்கள், பிறகு பெருகத் துவங்கிய காலத்தில் தீவிரத் தொடர்பு நிலைக்கு உள்ளானார்கள், கலப்பு அதிகரிக்கத் துவங்கியது, தனித்த ஒதுக்க நிலையில் வாழ்வைத் துவங்கிய பல்வேறு இனக்குழுக்கள் இனப்பெருக்கம் காரணமாக வெவ்வேறு இடங்களில் குடியேறத் துவங்கிய போது கலப்பு தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் நிகழத் துவங்கியது. தனித்த பண்புகள் கொண்ட இனக்குழுக்கள் காலப்போக்கில் பல்வேறு கலப்புப் பண்புகள் கொண்ட குழுக்களாக மாறத் துவங்கியது கலப்பு மக்கள் இனங்களும், இனக்குழுக்களும் உலகமெங்கும் இன்று பரவி இருக்கிறது.

மெக்சிக்கோ வின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 63 % அமெரிக்க இந்தியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் நிகழ்ந்த கலப்பால் உருவானவர்கள், கொலம்பியாவில் இதே போன்ற கலப்பின மக்கள் ஏறத்தாழ 42 % பேர் இருக்கிறார்கள், இன்றைய உலகில் வெவ்வேறு இன மக்களின் கலப்பு உடலியல் தடைகள் ஏதும் இல்லாமல் மிக எளிதான ஒன்றாக நிகழ்கிறது, ஐரோப்பியர்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் இடையிலான கலப்பு உலக அளவில் மிகப்பெரிதானது, ஐரோப்பியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும், ஏனைய இனக்குழுக்களுக்கும் பரவலாக நிகழ்ந்த கலப்பும் பிறகு உலகளாவிய புதிய இனக்குழுக்களை உருவாக்கி பெரிய இனக்குழுத் தொகுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியது.

DNA-Photo-by-Christoph-Bock-450x337

இன்றைய உலக மக்கள் தொகையின் சரிபாதி இன அடிப்படையில் கலப்பானதே ஆகும்,  கலப்பு, மானுட வரலாற்றில் ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கிறது, வெவ்வேறு மனித இனக்குழுக்கள் குருதி வழியான தொடர்பு கொள்ளும் நிலையிலும் உடலியல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஏதுமின்றி அடுத்த தலைமுறையை உருவாக்க எத்தகைய தடையும் இல்லை. உடலியல் அல்லது உளவியல் வழியிலான இனக்குழுக்களின் தனித்தன்மையை உடைத்து இனக் கொள்கை என்கிற பிற்போக்குச் சிந்தனையை உடைக்கும் மிகப்பெரிய காரணியாகவே கலப்பை நாம் அடையாளம்  வேண்டியிருக்கிறது. எனவே தான் ஆரியம் உலகமெங்கும் தொடர்ந்து கலப்பை எதிர்க்கும் கோட்பாடாக நிலை கொண்டிருக்கிறது. பிறப்பிலேயே உயர்ந்தவன் என்கிற இலவசத் தகுதியை அடையப் பெறுகிறவன் சமூகத்தில் பல்வேறு சிறப்புச் சலுகைகளைப் பெறுபவனாக இருப்பதால் ஆரியம் அந்தப் பிறவித் தகுதியை இழக்க விரும்புவதில்லை. சாதிப் படிநிலைகளின் மூலமாக அத்தகைய பிறப்பு சார்ந்த வர்ண அமைப்பு இந்தியா மற்றும் சில தெற்காசிய நாடுகளில் மத நிறுவனங்களின் துணையோடு  அரசியல் அமைப்புகளோடு இணைந்து பாதுகாக்க முயற்சி செய்கிறது.

"ஜோர்னல் சயின்ஸ்" (Journal science) என்கிற மானுடவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இதழில் 2002 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகள் குறித்த மிக முக்கியமான கட்டுரை வெளியானது, இந்த ஆய்வுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியபடி ஏறத்தாழ உலகெங்கும் வாழும் 2000 மனித இனக்குழுக்களின் மரபணு மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது, அதன் முடிவுகள் மண்டையோடு தோல் நிறமி வேறுபாடு தவிர்த்த வேறெந்த வேறுபாடுகளையும் அடையாளம் செய்யவில்லை, குறிப்பாக உளவியல் மற்றும் உடலியல் அமைப்புகளிலும் 99.9 % மரபணு வழியாக ஒரே மாதிரியாக இருப்பதை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உறுதி செய்தது, இதே ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு இணையாக தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Technology) போன்ற பார்ப்பனீய இந்துத்துவ அடிப்படைவாத நிறுவனங்கள் அம்பேத்கர், பெரியார் போன்ற சொற்களையே தடை செய்யும் அளவிலான பிற்போக்கு நிலையைப் பின்பற்றுவதை நான் இங்கு  நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

கல்வியும், கல்விக் கூடங்களும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கான பல்வேறு காரணிகளில் மிக முக்கியமானவை,  மனித குலம், பல்வேறு இனக்குழுக்களைக் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்ளவும், மானுட குலத்துக்கு உள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவும் கல்வி மிக முக்கியமான கருவி. கல்வித் திட்டங்களைத் தொடர்ந்து காவி மயமாக்கும் முந்தைய காங்கிரஸ் மற்றும் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சிகளின் ஆட்சியில் நிகழும் வர்ணச் சிந்தனைகளை புறந்தள்ளி மனித இனத்தின் ஒருமை குறித்தும்,  உயிரியல் மற்றும் உளவியல் வழியாக மனிதர்களுக்கு இடையில் வேறுபாடுகள் இல்லை என்பதையும் குறித்த அறிவியல் உண்மைகளை, ஆய்வுகளை நமது பாடத்திட்டங்களில் சேர்க்கும் முயற்சியில் சமூக நிறுவனங்களும், கல்வியாளர்களும் அரசுகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

040312-national-commentary-black-white-kids-race-optimism

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிகழும் இன ஒடுக்குமுறை அல்லது சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக அறிவியல் மற்றும் ஆய்வுப்பூர்வமான பாடத்திட்டங்களை அறிமுகம் செய்து மானுட வேறுபாடுகளைக் களையும் வேலைத்திட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நிறுவனங்கள் ஈடுபட வேண்டியது மிக முக்கியமான கடமை. வரலாற்றுக் காரணங்கள் எதுவாக இருப்பினும் மனித இனக்குழுக்களில் ஏதேனும் ஒன்று பொருளாதாரத்திலோ, கல்வியிலோ, ஏனைய சமூக இயக்கங்களிலோ பின்தங்கி இருக்குமேயானால் அந்தக் குழுக்களை இனங்கண்டு அவற்றின் முன்னேற்றத்தையும், சமூக நீதியையும் உறுதி செய்ய வேண்டியது முதிர்ச்சி அடைந்த மானுட குலத்தின் தேவையும், அவசியமுமாகிறது.

கல்வி, பொருளாதார, சமூக நிலைகளில் பல்வேறு கற்பிதங்களால் உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட சக மானுடக் குழுக்களின் மேம்பாடு குறித்த உரத்த தெளிந்த சிந்தனைகளை எதிரொலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிச் சிந்தனைகளை இன்னும் ஆழமாக நமது மாணவர்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வகை செய்யும் சமூகக் கல்வித் திட்டங்கள் கல்விக் கூடங்களில் அறிமுகம் செய்யப்பட வேண்டும், இனங்களும்,  இன வேறுபாடுகளும் நிலையானவையோ, மாறாதவையோ அல்லது இயல்பானவையோ அல்ல. மனித உடலிலும், மனித மனதிலும் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சமூகப் பழக்கங்களோ அல்லது குறிப்பிட்ட இனக்குழுக்களின் வாழ்க்கை முறையோ ஒருபோதும் நிலைத்தன்மை கொண்டதாக அறியப்பட முடியாது.

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: