கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 8, 2015

கோகுல்ராஜ் படுகொலையும், சமூக அரசியலும்.

Dalit%20Youth

கோகுல்ராஜ் அல்லது இளவரசன் இருவரும் தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும் கூட அது ஒருவகையில் சமூகப் படுகொலை தான், இளவரசனின் கதை உண்மையிலேயே யாருக்கும் தெரியாது, ஆனால், கோகுல்ராஜ் மரணத்தைப்  பொருத்தவரை கூர்மையான ஆயுதங்களால் அவரது கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறது என்று உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, நமது காவல்துறையோ, அரசுகளோ அத்தனை எளிதாக ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்தைப் படுகொலை என்று ஒப்புக் கொள்வதோ வழக்கை மாற்றி எழுதுவதோ வரலாற்றில் இல்லை, ஆக, இது படுகொலை என்று உறுதியாக அவர்கள் நம்பிய பிறகும், அதற்கான எல்லா முகாந்திரங்களும், சாட்சிகளும் இருக்கும் போது தான் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

சீமான் இதனைத் தற்கொலை என்று சொல்லிவிட்டார் அல்லது கொங்கு அரசியல் சங்கங்கள் சாதியப் படுகொலைகளை ஆதரிக்கின்றன, ஊடகங்களில் அவர்களது தலைவர்கள் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கிறார்கள் என்கிற இயல்பான விஷயங்களை எல்லாம் தாண்டி, தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கங்களான அதிமுகவும், திமுகவும் இந்த நிகழ்வில் காட்டும் கள்ள மௌனம் மிக ஆபத்தானதும், கண்டனத்துக்குரியதுமாகும். சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதிக்காகத் துவங்கப்பட்டதாகத் தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த இரண்டு இயக்கங்களும் மிகத் தெளிவாகக்  கொங்கு வேளாளர் அல்லது வன்னியர் வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் ஒரு மேம்போக்கான அரசியல் நகர்வுகளை இந்தப் படுகொலை விவகாரத்தில் செய்தன என்பதைத் தான் மிகத் தீவிரமாக நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. தொடர்ந்து இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் தலைமையிடங்களிலும், மாவட்டப் பொறுப்புகளிலும் ஆதிக்க வெறுப்புணர்வைத் தூண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர்கள் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள், இன்னும் தொடர்ந்து செய்யப்படுவார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை ஒரே இயக்கத்தால் அல்லது கட்சியால் தலைமை ஏற்று முன்னகர்த்த இயலாத சமூகப் பொருளாதாரக் காரணிகள் இங்கு நிறையவே இருக்கின்றன, பொருளாதார அழுத்தங்கள் அல்லது சமூக அழுத்தங்கள் அவர்களை அப்படி ஒன்றிணைய இயலாமல் தடுக்கின்றன, ஆகவே திராவிடப் பெருங்கட்சிகள் இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ஆதிக்க சாதிப் பெருமைகளைத் தக்க வைப்பதில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பொதுப்புத்தியை உருவாக்குவதில் நமது இருபெரும் திராவிடக் கட்சிகளும், பார்ப்பன ஊடகங்களும் மட்டுமன்றி நுட்பமான கலை வடிவங்களிலும் சாதிய வெறுப்புணர்வும், ஆதிக்க சாதியுணர்வும் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன, தேவர் மகன் திரைப்படத்தின் "போற்றிப் பாடடி பெண்ணே" பாடல் காற்றில் ஒலிபரப்பான பின்பு தென் மாவட்டங்களின் பல்வேறு ஊர்களின் விழாக்களில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடின. ஒரு கிளர்ச்சியான கூட்டு சமூகப் பெருமையை இயன்ற அளவுக்கு ஊக்குவிக்கும் பாடலாக அது இன்றளவும் மையம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதிப் பெருமை பேசும் திரைப்படமும், நடிகர்களும் குறைந்தது ஒரு பத்துப் பதினைந்து மோதல்களை உருவாக்குவதில் இங்கே வெற்றி கண்டிருக்கிறார்கள். சினிமா மோகமும், குடி வெறியும் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் எல்லாச் சாதி மக்களும் அவரவர் சார்ந்த சாதி ஆதிக்க வெறி உணர்வுக்கு அடிமைகளாய் இருப்பதில் பெருமையுடையவர்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளும் பல்வேறு சாதிய மோதல்களைத் தூண்டும் விழாக்களை தொடர்ந்து ஊக்குவித்திருக்கின்றன, ஆதிக்க சாதிப் பெருமைகளைப் பேசும், ஒருங்கிணைக்கும் கட்சிகளோடு அல்லது தலைவர்களோடு வாக்கு வங்கி அரசியலுக்காகவும், அதிகாரக் கைப்பற்றலுக்காகவும் அவை இணக்கத்தோடு செயல்படவே விரும்புகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்களை தங்களுடைய  தலித் அதரவு நிலைப்பாட்டுக்கான ஒரு விளம்பரக் குறியீடாகவே அவை பயன்படுத்திக் கொண்டன. உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்த அரசியலை இந்த இரண்டு இயக்கங்களும் நம்பி இருக்குமேயானால் தங்களோடு கூட்டணியில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வை அவை வழங்கி இருக்கக் கூடும். ஆனால், அப்படியான எந்தவொரு சமூக அக்கறையும் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இதுவரை இல்லை.

Ilavarasan_body_PTI

தொடர்ந்து இருபெரும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் இயக்கங்கள் அதன் தலைவர்கள் திராவிடக் கட்சிகளின் இந்த வாக்கு வங்கி அரசியலைக் குலைக்கும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை, மாறாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் தலைவர்களுக்குக் காவடி எடுக்கும் அடிமைகளாகவே இருந்து பழகிப் போனார்கள். இப்போது வலிமையான திராவிட இயக்க ஆதிக்க சாதி அரசியலையும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் நின்று கொண்டிருக்கின்றன, வலுவான எதிர்ப்புணர்வும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு வியூகங்களும் வகுக்கப்பட வேண்டியிருக்கிறது.

தென் மாவட்டங்களில் இன்றைக்கு ஓரளவு ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதலுக்கு அஞ்சுகிறார்கள் என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் பதில் தாக்குதல் உறுதி என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், தலைக்குத் தலை என்கிற கணக்கீட்டுக்குள் அவர்கள் வலிந்து உள்ளீடு செய்யப்பட்டார்கள். ஆகவே, சமூக நீதியை நோக்கி மனித இனம் பயணிக்கும் போது சில இழப்புகளை நாம் சந்திக்கவே நேரிடுகிறது, அந்த இழப்புகள் நமது குழந்தைகளின் விடுதலையைக் கொண்டு வருமாயின் அதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்வது குற்றமாகாது.

எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட சூழலில் சாதி வெறி கொண்டலையும், எமது குழந்தைகளின் தலையை அறுக்கும் இந்தக் காட்டுமிராண்டி சமூகத்தில் நாம் இனி ஆயுதங்களை வைத்துக் கொள்ளச் சொல்லிப் பழக்குவதுதான் அடுத்த சிறந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் நகர்வாக இருக்கும் போலிருக்கிறது. உயிர்ப் பாதுகாப்புக்காகவும், மானமிழப்பில் இருந்து தப்பிக்கவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது இந்திய சட்டங்களின்படி குற்றமா என்ன?

 

*********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: