கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 9, 2015

மீரா கதிரவன்

maxresdefault

திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு சினிமாக் கனவுகளோடு வந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் ஒரு அழிந்து கொண்டிருக்கும் தொன்மக் கலையை மையமாக வைத்துத் திரைப்படம் எடுப்பது என்பதை இரண்டு வரிகளில் என்னால் சொல்ல முடிகிறது, ஆனால், அதற்குப் பின்னிருக்கும் உண்மை அத்தனை எளிதானதல்ல, மீரா கதிரவன் ஒரு இலக்கியவாதி, இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தவர், கணையாழியில் "அழகி" என்கிற கதையை அவர் எழுதியபோதுதான் அவரது சினிமாக் கனவு உயிர் பெற்றிருக்கக் கூடும்.

மீரா கதிரவனை "அவள் பெயர் தமிழரசி"யின் வெற்றிக்குப் பின்னான ஒரு மாலையில் நான் சந்தித்தேன், சினிமாக்காரர்களுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் ஒளிவட்டம் இல்லாத ஒரு எளிய நண்பனை அப்போது சந்திக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது, பெங்களூரில் உணவகம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் அவரது சகோதரரின் இடத்தில் தான் அவரை நான் சந்தித்தேன், முதலில் மீரா செய்தது என்ன தெரியுமா?, அவரது சகோதரரிடம் என்னை அறிமுகம் செய்தது தான், அதில் ஒன்றும் புதுமை இல்லை, ஆனால், அந்தச் சகோதரர் அத்தனை பணிச்சுமை மிகுந்த மாலையிலும் எழுந்து வெளியேறி கையைப் பிடித்து இழுக்காத குறையாக என்னை ஏதாவது சாப்பிடச் சொன்ன பண்பு மீராவின் அன்பையும், வாழ்க்கை முறையையும் எனக்குச் சொல்லாமல் சொன்னது.

அதற்குப் பிறகு ஒருமுறை அவருடைய சகோதரரின் கடைக்கு நான் சென்றபோது உறுதியாக அவர் என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார் என்று எதிர்பாக்கவில்லை, அதே அன்பும், அதே ஆர்வமும் கொண்டவராக இம்முறை அமரவைத்துப் பரிமாறினார். சகோதரனின் கனவுகளை தனது கனவாகக் கருதும் ஒரு பாசமிகுந்த தந்தையின் அன்பை அவரிடம் நான் கண்டேன். ஒரு இயக்குனர் என்ன மாதிரியான பணிச் சூழலில் இருப்பாரோ என்கிற தயக்கத்தோடு அவரோடு தொடர்பு கொள்ளாத பல நேரங்களில் வாஞ்சையோடும் ஒரு நெருங்கிய நண்பனின் நேசத்தோடும் மீரா கதிரவன் "அறிவு எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்கத் தவறியதே இல்லை, திரைப்பட உலகில் இருக்கும் சில மனிதர்களின் உண்மை முகத்தை அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட போதெல்லாம் வணிக சினிமாவைத் தாண்டி சமூகத்தின் கவலைகளைக் குறித்து சிந்திக்கும் ஒரு இளம் எழுத்தாளனைப் போலவே கவிதையாகப் பேசுவார்.

"விழித்திரு" திரைப்படப் படப்பிடிப்புகளில் மிக மும்முரமாக அவரிருந்த ஒரு நாளில் நான் சென்னை வருகிற செய்தியை அவரிடம் சொன்னேன், மனிதர் சளைக்கவே இல்லை, அலுவலக முகவரியை அனுப்பி விட்டு வேறொரு அலைபேசி எண்ணையும் கொடுத்துக் கண்டிப்பாக நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னபோது உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது, எனக்குத் தெரியும் படப்பிடிப்பு முடிகிற தருவாயில் ஒரு இயக்குனரின் பணிகள்  எத்தனை உளச்சிக்கல் மிகுந்தது என்கிற உண்மை, அவரது அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருந்தும் நான் அவரை அன்று சந்திக்கவில்லை.  "அவள் பெயர் தமிழரசி" வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படம், ஏனெனில் அவர் பேச முனைந்தது ஒரு அழியப் போகிற தொன்மக் கலை குறித்து மட்டுமல்ல, அந்தக் கலையை நம்பி வாழுகிற குடும்பங்களில் நிலவும் வறுமையையும், இருப்பின் சிக்கல்களையும் சேர்த்துத்தான்.

இப்போது உண்மையிலேயே ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று உளப்பூர்வமாக நான் விரும்புகிற திரைப்படம் மீரா கதிரவனின் "விழித்திரு", மீராவின் அன்பும், நெருக்கமும் நிரம்பிய இதயத்துக்காக மட்டுமில்லை, அவரைப் போன்ற எளிமையான வாழ்க்கைக்கு உண்மையான, மனிதர்களின் தொய்வற்ற மனநிலைக்கும் சேர்த்துத்தான். பாரதிதாசனின் கவிதையை ஒரு மேற்கத்திய இசையோடு குழைத்துத் தர வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியிலேயே அவரது மொழியின் மீதான காதலையும், சமூக ஈடுபாட்டையும் யாரும் அறிந்து கொள்ளலாம். மீராவிடம் "அவள் பெயர் தமிழரசி"யைப் போல பல படங்கள் ஒளிந்து கிடக்கிறது, ஆனால், அவையெல்லாம் திரையில் ஒளிர வேண்டுமென்றால் "விழித்திரு" மகத்தான வெற்றிபெற வேண்டும், எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலைக் காட்டிப் பணம் பண்ணும் கலையை அவர் அறிந்திருக்கவில்லை, மாறாக அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்து உண்மையான அக்கறையுள்ளவர் மீரா.

நண்பனின் திரைப்படம் வெற்றி பெறுமேயானால், அது அவனது வெற்றி மட்டுமல்ல, அவனைப் போல நேர்மையான சினிமாக் கனவுகளோடு சென்னையின் வீதிகளில் சுற்றித் திரியும் எண்ணற்ற இளைஞர்களின் வெற்றியும் கூட. வாழ்த்துக்கள் நண்பா….உனது கலைப்பயணம் இன்னும் உயரங்களை அடைய வேண்டும், மிக நுட்பமான, செவிப்பறைகளைக் கிழிக்காத அழகு தமிழ்ப் பாடல்களை வழங்கி இருக்கும் சத்யன் மகாலிங்கத்துக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் அன்பும், வாழ்த்தும்.

 

**********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: