கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 10, 2015

கசியும் வானம்….நனைந்த பூமி.

banner9

பெங்களூரின் போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையைக் கடந்து கொண்டிருக்கிறேன், மழை தூறிக் கொண்டிருக்கிறது, உயரமான ஒரு அடர் மரத்தின் மேலிருந்து வெளிர் ஊதா நிறத்தில் மூப்படைந்த ஒரு மலர் வட்டமடித்தபடி பூமியை நோக்கி வீழும் இந்தக் கணத்தில் மனிதர்கள் மழைக்காக ஒதுங்க இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள், கடலை வண்டிக்காரச் சிறுவன் ஒரு குடையை விரித்தபடி வானத்தை வெறித்துப் பார்க்கிறான், நடைமேடையில் கால்கள் இரண்டும் வலுவிழந்த போலியோவால் நசிந்து போயிருக்கிற இளைஞன் ஒருவன் அமர்ந்திருக்கிறான், அவனுடைய அழுக்கடைந்த சட்டையின் மேல் மழைத்துளிகள் எந்தச் சலனனும் இன்றி வீழ்ந்து கொண்டே இருக்கின்றன அவனுடைய கண்கள் சிரிப்பையோ, மலர்ச்சியையோ கண்டு வெகு நாட்களானதைப் போலிருக்கிறது.

இக்கணத்தின் மழையை விடவும் வலுவான கவலைகளும், சுமைகளும் அவனுக்கு இருக்கக் கூடும். மழையில் நனைவதில் இருந்து தப்பிக்க நினைக்கும் மனிதனாக அவன் இல்லை, அவனுடைய கைகள் அதே சீரான வேகத்தில் மேலும் கீழுமாக ஆடியபடி யாசகத்தில் ஆழ்ந்திருக்கிறது, வருகிற போகிற மனிதர்களின் முகங்களை நோக்கிக் குவிந்திருக்கிறது, ஏதாவது ஒரு கருணையின் கைகள் தனது பக்கமாய்த் திரும்பிவிடும் என்று நம்புகிறான், பக்கத்தில் நிற்கிற ஒரு மரத்தின் அடித்தண்டைக் கடப்பது போலவே பல மனிதர்கள் அந்த மனிதனைக் கடந்து போகிறார்கள்.

பள்ளிக் காலத்தில் முருகன் என்றொரு தோழன் இருந்தான் எனக்கு. இந்த மாலைப் பொழுது ஏனோ அவனை எனக்கு நினைவுபடுத்துகிறது, அவனது கால்கள் எப்போதும் புழுதி படிந்து காய்த்துப் போயிருக்கும், நாங்கள் கிரிக்கெட்டோ கால்பந்தோ விளையாடிக் கொண்டிருக்கும் மாலைப் பொழுதுகளில் எல்லைக் கோட்டின் அருகே அவன் அமர்ந்திருப்பான், பந்து அந்தப் பக்கமாக வருகிற போது அவன் எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைவான், தனது கால்களைத் தேய்த்தபடி அந்தப் பந்தை விரட்டிப் பிடித்து விளையாட்டுத் திடலுக்குள் ஒருவிதமான வெற்றிக் களிப்போடு தூக்கி எறிவான், பிறகு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு தனது அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருப்பான்.

திடலின் உள்ளிருந்து சில நேரங்களில் "நொண்டி, அந்தப் பந்த எடுத்துப் போடுடா” போன்ற சொற்கள் காற்றில் பரவும் போது கூட அவனது ஆர்வம் பந்தைப் பிடிப்பதில் இருக்குமே ஒழிய கடுங்காயம் உருவாக்குகிற அந்தச் சொற்களை நோக்கி இருக்காது. முருகனின் இயலாமையை விடக் கொடுமையானதும், வெட்கம் கொள்ள வேண்டியதும் அவனை நோக்கி சக மனிதர்கள் உதிர்த்த சொற்கள் தான் என்று நான் உறுதியாக நம்பினேன். அவனுக்கு நசிந்த கால்கள் தானே ஒழிய ஒருபோதும் குரல் எழுப்பியவர்களைப் போல நசிந்த மனமில்லை. உறுதியும், வேகமும் கொண்ட ஒரு விளையாட்டு வீரனைப் போலவே அவன் ஒவ்வொருமுறையும் பந்தை விரட்டிப் பிடித்தான். திடலுக்குள் எறிந்தான்.எல்லாக் குடும்பங்களின் குழந்தைப் பிறப்பைப் போலவே இவன் பிறப்பையும் எதிர் நோக்கி இருந்திருப்பார்கள், ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியும், வெற்றியும் அந்தக் குடும்பத்தின் குழந்தைப் பிறப்பின் போதிலிருந்து துவங்குகிறது அல்லவா?

முருகனின் அப்பா முருகனின் கால்களைத் தனது தோல்வியாகப் பார்த்தார், உடல் இயலாமைகளோடு பிறக்கிற குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரையில் தங்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று அறியாமலேயே வளர்கிறார்கள், வழக்கமான குழந்தைகளின் அழகான புன்சிரிப்போடு தான் தாய்ப்பால் குடித்து வளர்கிறார்கள், ஆனால், முருகனுடைய நசிந்த கால்கள் அவனுடைய அப்பாவுக்கு மன அழுத்தத்தையும், இயலாமையையும், சமூக இழிவையும் உண்டாக்கி விட்டதாக அவர் நம்பினார், அவருடைய முறையும் கூட மாறிப் போனது, தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லையென்றால் முருகன் எப்போதோ இறந்திருப்பான் என்றுதான் நினைக்கிறேன், சொந்த வீட்டில் அத்தனை அவமானனங்களையும் ஏற்றுக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனிதனைப் போல அவன் சில நேரங்களில் சிரிப்பான்.

பிறகொருநாள் முருகனின் அப்பா பேருந்து நிறுத்தத்தின் பூவரச மரத்தின் கீழாகக் குடித்துவிட்டு "அவனுக்கு மருத்துவ வசதிகளையோ, சிறப்புப் பள்ளியிலோ சேர்க்க முடியாத ஏழையாகி இருக்கிறேனே முருகா, முருகா" என்று அழுவதைப் பார்த்தேன், ஒரு தந்தையின் ஆழ்மனம் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பகல் பொழுதின் கணங்கள் மிகக் கொடுமையானவை. உறவினர் வீடுகளுக்கோ, நண்பர்களின் வீடுகளுக்கோ அடிக்கடி பயணம் செய்து கொண்டிருந்த முருகனின் குடும்பம் பிறகு ஓரிடத்தில் நிலைக்கத் துவங்கி இருந்தது.

முருகன் பள்ளியில் ஒரு விளையாட்டுப் பொருளாகப் பலருக்கு இருந்தான், ஆசிரியர் வராத கூச்சல் மிகுந்த வகுப்பறைகளில் சில நேரம் "நொண்டி முருகா" என்று யாராவது ஒருவன் கத்தி விடுவான், முருகனின் நெஞ்சுப் பகுதி மிக வேகமாக ஏறி இறங்கி மூச்சிரைக்க ஏதாவது வெறித்தனமாகக் கத்துவான், சில நேரங்களில் கண்கள் பணிக்க ஏதும் செய்ய இயலாத ஒரு பொம்மையைப் போல அமர்ந்து விடுவான், அப்போது அவனுடைய கண்கள் தனது நசிந்த கால்களை கழிவிரக்கத்தின் எல்லையை விட்டுத் தாண்டி வெறுப்பின் எல்லைக்குள் நுழையும், பிறகு சில காலம் முருகனோடு நெருங்கிய நண்பனாய் நானிருந்தேன்,

கல்வியை விடவும், வகுப்பறைகளை விடவும், ஓடியாடி விளையாடும் விளையாட்டுத் திடல்கள் மீதும், அவனது கால்கள் சுழன்று அலையும் சாலைகளின் மீதுமே அவனுக்கு அதிக ஆர்வமிருந்தது. முருகனுக்கு பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிப்பது பிடிக்காது, எல்லா மாணவர்களுக்கும் இருக்கும் கழிப்பறையில் வெகு அரிதாக அவன் சிறுநீர் கழித்து விட்டு வரும்போது அவன் கால்களில் ஈரம் படிந்திருக்கும், புழுதி படிந்த அந்த நசிந்த கால்களில் ஈரம் படிந்திருக்கும் பகுதிகளை ஒரு சிறு துணியால் வெகு நேரம் துடைத்தபடி அமர்ந்திருக்கும் முருகனைப் பார்க்கும் போதெல்லாம் மனித வாழ்க்கையின் அவலமான பிறழ்வுகள் அலைக்கழிக்கும்.

சில காலங்களுக்குப் பிறகு முருகனின் குடும்பம் இருந்த ஒரு ஓட்டு வீட்டையும் விற்று விட்டு வேறெங்கோ குடி பெயர்ந்து போனது, ஒரு நீளமான சரக்கு லாரியின் பின்புறம் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்தபடி முருகன் அமர்ந்திருந்தான், அவனது கால்கள் சாலையின் ஏற்ற இறக்கங்களோடு தன்னிச்சையாய் காற்றோடு அசைந்து கொண்டிருந்தது. அவனுக்கு அது ஒரு மிக நீண்ட பயணமாக இருக்கக் கூடும். திரும்பவும் அந்த நடைபாதை இளைஞனைப் பார்த்தேன், இவனது குடும்பம் முருகனின் குடும்பத்தைப் போலவே வறுமையால் இவனைக் கைவிட்டிருக்கக் கூடும், மனிதனின் கடைசிப் புகலிடமான யாசகத்தை நோக்கி அவனைத் துரத்தி இருக்கக் கூடும்.

மழை வலுக்கத் துவங்குகிறது, பேருந்து நிறுத்தத்தின் பின்னிருக்கும் நடைமேடை மரத்தண்டின் கீழாக அந்த இளைஞன் தனது நசிந்த கால்களோடு ஒடுங்கியபடி வழியும் மழை நீரைத் துடைத்துக் கொள்கிறான், மரம் அவனை உள்வாங்கிக் கொள்வதைப் போல ஒரு முறை காற்றில் சிலிர்க்கிறது. இருபது வயதுக்கு மேலிருக்கும் இந்த மனிதனுக்குத் திருமணம் நிகழக் கூடுமா? வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இவனது புணர்ச்சி குறித்துக் கவலை கொள்ள யாரேனும் இருப்பார்களா? என்று கேள்விகளால் வீழ்த்தப்படும் ஒரு நசிந்த மனிதனைப் போல உடலை ஆட்டியபடி நானும் நடக்கத் துவங்குகிறேன். நியான் விளக்கொளியில் மழையின் சீவல்கள் "நொண்டி" என்று யாரோ வகுப்பறையில் உரக்கக் கூவியபோது கசிந்த முருகனின் கண்ணீர்த் துளிகளைப் போல உலகை நனைத்துக் கொண்டிருக்கிறது.

Image Courtesy : New Sankalp India Foundation.

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: