கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 11, 2015

ப்ரியகங்கா……

psd2470

மேற்குத் தொடர்ச்சி மலையின் குன்றுகளுக்கும், பொன்னிறத்தில் நிலவின் சுடர் ஒளி படிய ஓங்கிக் கிடந்த விஜயநகர அரண்மனைக்கும் இடையே கண்சிமிட்டும் விண்மீன்களை அனிச்சையாகப் பார்த்தபடி ததும்பிக் கொண்டிருந்தது கடல், பாண்டியன் நெடுவஞ்சியின் கண்கள் எங்கோ நிலைகுத்தி இருந்ததைத் தளபதி கவனித்திருந்தார்.

இலையுதிர்கால இரவுக் காற்றின் ஓலம் புரவிகளின் கணைப்பின் ஊடாகப் பயணித்து உறங்கும் வீரர்களைப் புரட்டியபடி அலைந்து திரிந்தது, "மேன்மைமிகு இளவரசரே, நீங்கள் உறங்கி மூன்று நாட்களாகிறது, போர் முடிந்து வெற்றியின் களிப்பில் இந்த பூமி குளிர்ந்து கிடக்கிறது, நீங்கள் உறக்கம் தொலைத்த காரணம் தெரியாது தவிக்கிறேன், உங்கள் உடலில் ஏதேனும் காயமுண்டாகி இருக்கிறதா?"

பெருமைக்குரிய பாண்டிய சாம்ராஜ்யத்தின் தளபதியாரே, எனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன், நாளை பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள், என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், அமைதியாக உறங்குங்கள்".

நெடுவஞ்சியின் குரல் அமைதியாகவும், உறுதியாகவும் இரவின் அமைதிக்குக் கட்டளை இட்டது, இனி உரையாடலைத் தொடர்வது பாண்டிய சாம்ராஜ்யத்தின் தளபதிக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது என்பது அவருக்குப் புரிந்திருக்கும். அமைதியாய் பந்தத்தின் சுடரைக் குறைத்து விட்டு உறங்கிப் போனார்.

ஹொய்சால நாட்டின் மீது படையெடுக்கும் ஆசை எல்லாம் எந்தப் பாண்டிய மன்னருக்கும் இருந்ததில்லை, பெருநிலங்கள் தாண்டி வங்கக் கடலை ஒட்டிய இந்த குறுநிலப் பரப்பை வெற்றியும் கொண்டாகி விட்டது, பாண்டியன் முத்துவஞ்சியின் முத்துக்கள் ஏற்றிச் சென்ற கப்பலுக்கு முதன் முறையாகக் கப்பம் கேட்டான் ஹொய்சால நாட்டின் சன்னப் புக்கன், முடியாது என்ற போது கப்பலைச் சிறைப்பிடித்தான், முத்துவஞ்சி, மகனின் போர்த்திறனை சோதிக்க விரும்பினான், சன்னப் புக்கன் இனி காலமெல்லாம் பாண்டிய சாம்ராஜ்யத்துக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று சொல்லி போர்க்களம் அனுப்பினான் நெடுவஞ்சியை.

தலைமை ஏற்கும் முதல் போர், நெடுவஞ்சியின் புரவி அவனது உயர்ந்த தோள்களின் கனம் தாங்காமல் தடுமாறியது, போர் விதிகளைத் துளியும் தாண்டாமல், கொலைத்தாண்டவம் கொள்ளாமல் சுற்றி வளைத்து ஒரு பெருமணல் ஓவியம் வரைகிற ஓவியனைப் போல இரண்டு நாட்களில் போரை வெற்றி கொண்டான் நெடுவஞ்சி.

இரண்டாம் நாளின் மாலைப் பொழுதில் அரண்மனையின் வாயிலில் கடைசியாய் நின்று போர் புரிந்த சன்னப் புக்கனின் தனி வீரர்கள் மண்டியிட தனது வெண்புரவியில் வங்கக் கடலின் காற்றைக் கிழித்தபடி முற்றத்தைச் சுற்றினான் நெடுவஞ்சி, தளபதி மந்தாரகனும், இன்னும் சில வீரர்களும் நெடுவஞ்சியின் வேகத்துக்கு ஈடு கொள்ளாமல் பின்தங்கி மெல்ல நிலைகொண்டார்கள். புரவியில் இருந்து குத்தித்து இறங்கினான் நெடுவஞ்சி, மாடங்களில் நிலைத்திருந்த அந்தப்புரப் பெண்களின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டவனாய் தலையை ஒரு கனம் சாய்த்துக் குனிந்தான், மந்தாரப் பூக்களும், ஜவ்வாதும் சிதறி நெற்றியில் வீழ புன்னகைத்தபடி தளபதியை அழைத்தான்.

Krishna_Pushkarani_-_Hampi_Ruins

இங்கிருக்கும் பெண்களும் குழந்தைகளும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், உங்கள் நாட்டுக்கு ஒரு நியமனத் தளபதியை விட்டுச் செல்வதைத் தவிர பாண்டியன் முத்துவஞ்சியின் சேனைகள் உங்கள் உயிருக்கோ, உடமைகளுக்கோ எந்தச் சேதமும் விளைவிக்காது என்றும் அவர்களின் மொழியில் விளக்கச் சொன்னான்.

முன்னகர்ந்து அரச மாடத்தின் படிக்கட்டுகளில் ஒரு சிறுத்தையைப் போல ஏறிக்கொண்டிருந்த நெடுவஞ்சியின் காதை உரசிச் சென்ற வாளின் வீச்சை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை, வாளை விடவும் அதன் மறு முனைகளில் ஒரு தாமரை மடல் போலப் படர்ந்து கிடந்த அந்தக் கரங்கள் அவனுக்கு வியப்பளித்தன, ஒருகணம் தடுமாறினான் நெடுவஞ்சி நிலைகுலைந்தபடி ஒருவழியாகத் தனது உடைவாளை உருவ முயன்று தோற்றான், இடைப்பட்ட நேரத்தில் குனிந்து வளைந்து காற்றில் சுழன்ற வாளின் வீச்சை வேடிக்கை பார்த்தபடி பக்கவாட்டில் நகர்ந்தான், இப்போது அவனது கண்களின் எதிரே அந்த அற்புதக் கணம் பரவத் துவங்கியது.

ரோமானியப் பெண்களின் நெடிய தோற்றம் பஞ்சுப் பொதி போல அவளது உடலைப் போர்த்தி இருந்தது, கிரேக்கத்தின் திராட்சை ரசக் குப்பியைப் போல மெலிந்திருந்த இடை, வெளிர்சிவப்பு நிறத்தில் தாழ்வாரத்தின் வழியாகக் கசியும் பொன்மஞ்சள் நிற மாலைச் சூரியனின் கதிர்கள் இளங்கதிர்களைப் போல அவள் உடலைச் சுற்றிலும் நீர்த்திவலைகளைப் போலப் பரவிக் கிடந்தன, அந்த இளம்பெண்ணின் கூரிய மலேயக் கிளிகளின் நாசியும், கனிந்த அத்திப் பழங்களைக் கீறிப் பரப்பிய இதழ்களும் நெடுவஞ்சியின் கண்களைப் பூஞ்சையடையச் செய்தன, நெடுவஞ்சி சிந்திக்கத் தெரியாத சிறுகுழந்தையைப் போலத் தடுமாறினான், அவனது கண்களால் தனக்கு முன்னாள் என்ன என்பதை அனுமானிக்க இயலவில்லை.

ஆவேசம் கொண்ட ஒரு தேவதையைப் போல அவள் வெளியெங்கும் பரவி இருந்தாள், இதழ்களின் நடுவே அவ்வப்போது ஒளிரும் அவளது பற்கள் அந்த மாலைக்கு மின்னலைக் கட்டிவிட்டதைப் போல முற்றமெங்கும் எதிரொளித்துக் கிடந்தது, இடைப்பட்ட நேரத்தில் மந்தாரகனும், சன்னப் புக்கனும் இளவரசியின் வாளைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள், இன்னும் சில அந்தப்புரப் பெண்களும், தோழிகளுமாய் இளவரசி பிரியகங்காவின் அசைவுகளைக் கட்டுப்படுத்தி அவளது இடையைச் சூழ்ந்து நின்றார்கள், பச்சை மரகதக் கல்லொன்றை காஷ்மீரப் பனிக் கட்டிகள் சூழ்ந்து மறைத்துக் கொண்டதைப் போல உணர்ந்தான் நெடுவஞ்ச.

ப்ரியகங்காவின் குரல் ஒரு பாடலைப் போல அரண்மனைகளின் சுவர்களில் பட்டுத் தெரித்தது, "பாண்டிய மன்னரின் வாள் இந்த ஹொய்சால இளவரசியின் வாள்வீச்சை எதிர் கொள்ளும் துணிவற்றது, துணிவற்றது" என்று இடைவிடாது ஒலித்த அந்தக் குரலைக் கண்டு நெடுவஞ்சி இப்போது அஞ்சத் துவங்கினான், ஒரு நாடகம் போல நிகழ்ந்து முடிந்த ப்ரியகங்காவின் அந்தப் போர் முடிவுற்ற ஒன்றைப் போல அவனுக்குத் தோன்றவில்லை. சன்ன புக்கன் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கோரினான், கண்டும் காணாதவனைப் போல நடக்கத் துவங்கிய நெடுவஞ்சியின் கால்கள் தரையில் ஊன்ற மறுத்தன.

Raja_Mahal,_Chandragiri

படிக்கட்டுகளில் இறங்குவதற்கு முன்பாக ஒருமுறை திரும்பி நின்று முழங்கினான் நெடுவஞ்சி, "நாளை காலை இரண்டாம் பொழுதில் இளவரசியின் வாளோடு இந்தப் பாண்டிய இளவரசனின் வாள் சண்டையிடட்டும், ஒருவேளை தோற்றுப் போனால் பாண்டிய சாம்ராஜ்யத்தின் முத்துக் கப்பல்கள் ஹோய்சால அரசன் சன்ன புக்கனுக்குக் கப்பம் கட்டட்டும், பாண்டியன் நெடுவஞ்சி வென்றால் என்ன செய்ய வேண்டுமென்று சன்ன புக்கர் முடிவு செய்யட்டும்". திரும்பிப் பார்க்கவில்லை நெடுவஞ்சி, போர்க்களம் தாண்டி நெடுவஞ்சியின் புரவி நெடுந்தூரம் புழுதி கிளம்பப் பயணித்தது. யாரும் பின்தொடர வேண்டாம் என்று சைகையால் சொல்லிவிட்டு பொன்னிற மாலையின் கதிர்களுக்குள் புழுதியைக் கிளப்பியபடி பயணித்தது நெடுவஞ்சியின் குதிரை.

நெடுவஞ்சியின் குதிரை வங்கக் கடலின் ஈரக் கரைகளில் குலம்படித் தடங்களைப் பதித்தபடி பாறைகளும், இருளும் சூழக் கிடந்த ஓரிடத்தில் நின்றது, குதிரையை விட்டுக் குதித்த நெடுவஞ்சியின் உயர்ந்த தோள்களில் தளர்வு தொற்றிக் கிடந்தது, நெடுவஞ்சியின் நினைவுகளில் இடைவிடாது ப்ரியகங்காவின் கண்ணிமை அசைவுகள் ஆட்டம் காட்டின, "பாண்டிய மன்னரின் வாள் இந்த ஹொய்சால இளவரசியின் வாள்வீச்சை எதிர் கொள்ளும் துணிவற்றது, துணிவற்றது" என்கிற இளவரசியின் குரல் ஒரு நெருஞ்சி முள்ளைப் போல அவனது செவிப்பறையில் தைத்துக் கிடந்தது. நெடுவஞ்சி, ஹொய்சால இளவரசியின் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து தவிக்கத் துவங்கினான்.

காதலும், அவளது சொற்களில் ஏற்றப்பட்ட அவமானமுமாய் மெல்ல கடலின் அலைகளில் மூழ்கி நீந்தத் துவங்கிய நெடுவஞ்சியைக் கரையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தது அவனது குதிரை. நீண்ட நேரம் நெடுவஞ்சி வங்கக் கடலின் அலைகளுக்குத் தனது தோளைக் கொடுத்து விட்டிருந்தான், எப்போதும் தளராத நெடுவஞ்சியின் உறுதியான தோள்கள் தளர்வோடு அலைகளுக்கிடையில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டன. மூழ்குவதும், பிறகு நீந்துவதும், கரையில் உருள்வதுமாய் விநோதமாய் நடந்து கொள்ளும் இளவரசனைக் கவலையோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் கண்ணுக்கெட்டாத தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார் பாண்டிய நாட்டின் நம்பிக்கைக்குரிய தளபதி மந்தாரகர்.

மறுநாள் விடியலில் இருந்தே அந்தப்புரத்தின் நடன மேடையில் இளவரசி வெறி கொண்டவளைப் போல வாளைச் சுழற்றியபடி இருந்தாள், முதலில் தனியாகவும் பிறகு சன்ன புக்கனின் பாதுகாப்பு வீரர்கள் சிலரோடும், தீவிரமாக வாள் பயிற்சியில் ஈடுபட்டாள் ப்ரியகங்கா, ப்ரியகங்கா ஆறு வயதில் பயிற்சி செய்பவள், எந்த ஆணுக்கும் குறையாத வாள் போர் நுட்பங்களை ஆசிரியர் மங்கவாரு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார், இளவரசி பதினைந்து வயது குமரிப் பெண்ணாக வளர்ந்து செழித்து நின்றபோது சன்ன புக்கன் வாள் பயிற்சி போன்ற கடும் உடல் விளையாட்டுக்களை இனி இளவரசிக்குப் பயிற்றுவிக்க வேண்டாம் என்று மங்கவாருவிடம் வேண்டுகோள் வைத்தார், ஆனாலும், இளவரசி தொடர்ந்து வாள் சண்டையின் மீது தீராத காதல் கொண்டவளாய் இருந்தாள், சன்ன புக்கனும் மகளின் ஆசையில் பெரிய அளவில் குறுக்கிட விரும்பவில்லை.

2479164_20121215065223

காலைப் பொழுதில் இருந்து மகளின் வெறி கொண்ட பயிற்சியைக் கண்டு சன்ன புக்கன் மலைத்துப் போனார், பிறகு என்ன நினைத்தாரோ நேராக மகளின் எதிராகப் போய் நின்றார், கைகளில் இன்னொரு வாளைக் கொடுக்கச் சொல்லி சுழற்றத் துவங்கினார், ஹொய்சால மன்னர்கள் வாள் பயிற்சியில் தலை சிறந்தவர்கள், இயற்கையில் வலுவான உடலமைப்பைக் கொண்டவர்கள் ஆதலால் மிகுந்த எடை கொண்ட இரும்பும் தாமிரமும் கலந்த வாட்களை அவர்கள் மிக எளிதாக கையாளத் தெரிந்திருந்தார்கள். அப்பாவும், மகளும் நெடுநேரம் அந்த நடன மேடையில் நின்று வாள் பயிற்சியில் ஈடுபட்டதை ஒரு திருவிழாக் கண்டதைப் போல அந்தப்புர மகளிரும், பாதுகாவலர்களும் ஒருவிதக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பகலவன் உச்சி வானுக்கு வருவதற்காய் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தான், அரண்மனையின் முற்றத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது, குறித்த நேரத்துக்கு முன்னதாகவே நெடுவஞ்சியின் குதிரை அரண்மனை முற்றத்துள் நுழைந்து ஒரு சுற்றுச் சுற்றிப் பின் ஓய்வு கொண்டது, மந்தாரகன் மற்றும் ஏனைய நெடுவஞ்சியின் பாதுகாவலர்கள் குழப்பம் கொண்டவர்களாய் சுற்றி நின்றபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள், வரலாற்றுச் சிறப்பும், அழியாத நினைவுகளுமாய் நிகழவிருக்கிற பாண்டிய இளவரசனுக்கும், ஹொய்சால இளவரசிக்குமான அந்த வாட்போரை காண சூரியனும், சில உச்சிப் பறவைகளும் வெளியில் நிலைத்திருந்தார்கள்.

மேருகுடி வம்சக் காளிக்கு வீர வணக்கம் சொன்னபடி இளவரசி ப்ரியகங்கா ஒரு தேவதைக்குப் போர்க்கோலம் கட்டியதைப் போல நின்று மங்கவாருவை வணங்கி மேடையேறினாள், பாண்டிய சாம்ராஜ்யத்தின் போர்க்குல ஐயனாரை வணங்கி மேடையேறினான் இளவரசன் நெடுவஞ்சி. இரண்டு சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான அந்த வினோதமான போர் துவங்கியது, அது ஒரு ஆணின் உடலுக்கும், பெண்ணின் உடலுக்கும் வீரப் பராக்கிரமங்களில் பெரிய வேற்றுமைகள் இல்லை என்று உறுதி செய்ய நிகழும் போரைப் போலிருந்தது.

காதல் ஒருபுறம் உடலை ஒடுக்கவும், வீரம் ஒருபுறம் உடலை முருக்கேற்றவுமாய் நெடுவஞ்சி தடுமாறினான், அவனால் முற்றிலும் வெறி கொண்ட ஒரு போர் வீரனாய் வாளைச் சுழற்ற இயலவில்லை, ஒரு இளம்பெண்ணின் வெறிகொண்ட வாள் சுழற்றளுக்குப் பதில் சொல்ல முடியாத கோழையாகவும் இருக்க முடியவில்லை, வாள் உயர்ந்து இளவரசியின் உடலைத் தீண்டத் தயாராகும் போதெல்லாம் ஒரு கணம் நடுங்கிப் பின்வாங்கி பிறகு மீண்டு எழுந்தான் நெடுவஞ்சி. ஆனால்,இளவரசியோ தயக்கம் ஏதும் இல்லாதவளாக மேருகுடிக் காளி உயிர்த்துத் தாண்டவம் ஆடியவளைப் போல ஆடித் தீர்த்தாள்.

நெடுவஞ்சியால் ஒருமனதாய் நிலைத்து நின்று போர்க்களத்தில் வாள் சுழற்றுவதைப் போலச் சண்டையிட இயலவில்லை, இளவரசியோ முழுத்திறனையும் நுட்பமாய் வாலில் செலுத்தி ஒரு உண்மையான ஹொய்சால வீராங்கனையைப் போல சுற்றிச் சுழன்றாள். நெடுவஞ்சி மனதால் தளர்ந்த ஒரு போர் வீரனைப் போல மேடையில் தடுமாறிக் கொண்டிருந்தான். சரியாகப் பதினேழாவது நிமிடத்தில் நெடுவஞ்சியின் வாளின் கூருடைத்து அதனை நிலத்தோடு வீழ்த்தினாள் ப்ரியகங்கா. நெடுவஞ்சி காதலும், வீரமும் அலைக்கழித்த மானுடப் பதராய் தோல்வியை ஒப்புக் கொண்டவனைப் போல நிலம் தொட்டு நின்றான், பிறகு என்ன நினைத்தானோ, தனது புரவியில் ஏறி வங்கக் கடலின் காற்றுக்குச் சவால் விடும் வேகத்தில் குதிரையில் பறந்தான்.

Lotus-Mahal-(12)_slider_main

சன்ன புக்கனும், மங்கவாருவும் இளவரசி ப்ரியகங்காவை அணைத்துக் கொண்டார்கள், சீற்றம் கொண்ட வேங்கையைப் போல தந்தையின் பெருமையையும், தனது சாம்ராஜ்யத்தின் மீதான அவளது காதலையும் ஒரு காவல் தெய்வம் போல அவள் காக்கத் தலைப்பட்டதை எண்ணி ஹொய்சால சாம்ராஜ்யத்தின் மக்கள் இளவரசியின் மீது மலர் மாரி பொழிந்தார்கள்.

மறுநாள் அதிகாலையில், சன்ன புக்கன், அரண்மனை வளாகத்தின் படைக் கள மண்டபத்துக்கு வந்து மந்தாரகனைப் பார்த்து வணங்கினான், "தளபதியாரே, பாண்டிய சாம்ராஜ்யத்தின் கப்பல்கள் இனி எப்போதும் இங்கு ஓய்வுக்காக வர வேண்டியதில்லை, உரிமையோடும், மாலை மரியாதையோடும், சன்ன புக்கனின் கடல் எல்லை முழுவதும் அவை சுற்றி வரட்டும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக எந்தப் போர்க்குற்றமும் செய்ய மாட்டோம் என்று வீழ்த்தப்பட்ட எதிரியின் கோட்டை வாயிலில் நின்று சொல்கிற உயர் பண்பாட்டு அரசொன்றுக்கு நானும் எமது மக்களும் அடிமைகளாய் இருப்பதிலும் என்ன தவறு இருக்கப் போகிறது, ஒரு தேவதையைப் போல வளர்த்த என் செல்ல மகளின் உடலில் ஒரு கீறல் கூட இல்லாமல் தட்டுத்தடுமாறி கடமைக்கு வாள் சுழற்றிய இந்த இளவரசனை விட இனி யாரொருவன் அவளை முழுமையாக அன்பு செய்பவனாய் இருப்பான். மன்னர் முத்து வஞ்சியிடத்தில் உடனடியாகப் பேசி என்னைப் பாண்டிய மன்னரின் அன்புக்குரியவனாய் மாற்றுங்கள், இளவரசரிடம் சொல்லுங்கள், ஹொய்சால மன்னன் சன்ன புக்கன் மகளான இளவரசி பிரியகங்காவை அவர் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று".

மதுரையின் அரண்மனையில் இறங்கிய தனது ஒற்றனோடு பேசிக் கொண்டிருந்தார் முத்துவஞ்சி, அவரது கையில் ஒரு முத்திரை ஓலையை வழகி அனுப்பி விட்டு, அரசியை அழைத்து வரச் சொன்னார், அரசவையின் ஆலோசனை மண்டபத்துக்கு அரசியை அழைத்ததில் குழம்பிப் போயிருந்த மாதவிப் பெருந்தேவியார், அவசர அவசரமாக அங்கே காட்சியளித்தார், மகனை முதன் முறையாய்ப் போர்க்களம் அனுப்பிய தாயுள்ளம் பெருந்தவிப்போடு அங்கு நின்ற போது மன்னர் மாதவிப் பெருந்தேவியின் கண்களைப் பார்த்தபடி சொன்னார். பாண்டிய சாம்ராஜ்யத்தின் மருமகள் ஹொய்சால தேசத்தில் இருந்து வரப் போகிறாள் மாதவி. இளவரசர் தனது முதல் போரில் வென்று காதல் போரில் தோற்றுப் போனதாய் மந்தாரகர் ஓலை அனுப்பி இருக்கிறார்.

மாதவிப் பெருந்தேவியார் மகிழ்ச்சியில் திளைத்தபடி மன்னரை அணைத்துக் கொண்டார்

நள்ளிரவில் வந்திறங்கிய மதுரையின் மீன்கொடி தாங்கிய முத்திரைத் தாளின் எழுத்துக்களை மந்தாரகர் வாசிக்கத் துவங்கினார்….

Prince

பெருமைக்குரிய பாண்டிய சாம்ராஜ்யத்தின் தளபதியும், எனது அன்புக்குரிய தமையனுமாகிய பாண்டியன் மந்தாரக வஞ்சியாருக்கு வணக்கம், நலம், நாடுவதும் அதுவே, உங்கள் திட்டங்களின் படி எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக நடத்தி இளவரசரை திருமண வாழ்வுக்கு ஒப்புக் கொள்ள வைத்தமைக்கு நன்றி, நாம் முதன் முதலாக இளவரசி ப்ரியகங்காவை சந்தித்த போதே அவளது பேரழுகும் வீரமும் குறித்து நீங்கள் எனக்குச் சொன்னீர்கள், இப்போது அதனை இளவரசரும் உணர்ந்திருப்பார், முறையாக நமது மாதவிப் பெருந்தேவியார் அரண்மனை மகளிர் மற்றும் மாமன்களோடு ஹொய்சால தேசத்துக்கு விரைவில் செல்வார்கள், நீங்கள் அனைவரும் நலமோடு விரைந்து நாடு திரும்ப வேண்டுகிறேன்………

வீடு திரும்பும் நாளில், மீண்டும் உயர்ந்து கிடந்த நெடுவஞ்சியின் தோளில் ஏதுமறியாத தேவதையைப் போல பொதிந்து கிடந்தாள் இளவரசி ப்ரியகங்கா. வங்கக் கடல் வெட்கம் கொண்டு தனது அலைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டது, ஹொய்சால தேசமும், பாண்டிய தேசமும் காதலில் வீழ்ந்து மண்டியிட்டுக் கிடந்ததை காலம் தனது பொன்னிற மாலையொன்றில் குறித்துக் கொண்டபோது, இளவரசியின் இதழ்கள் நெடுவஞ்சியின் கண்களை மூடிக் கொண்டது.

***********

Advertisements

Responses

  1. உங்க கைவண்ணம் ரொம்ப அழகு


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: