கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 15, 2015

மங்கிய ஊதாப் புள்ளி.

25

"அப்பா, இந்த பூமி எத்தனை பெரியது?"  நாம் வானத்தில் பூமியைப் பார்க்க முடியாதா? இரவு உணவின் போது பிறகு நிறைமொழி கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதில் வேறு சில இரவுகளும், காட்சிகளும் நினைவில் அலையடித்தன. அந்த இரவுகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, உதயபூரிலிருந்து ஏறத்தாழ நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பாலைவனப் பகுதியில் நான்  வேலை செய்த நிறுவனம் ஒரு திட்டப் பணிக்காக என்னை அனுப்பி இருந்தது, பகல் பொழுது முழுவதும் பணியாளர்களோடு சரியாக இருக்கும், இரவு மிக நீண்டது, கடும்குளிர்க் காற்று மணலை அள்ளி இறைத்தபடி கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் புகுந்து ஓசை எழுப்பியபடி தனிமையில் அலைந்து திரியும், தற்காலிகமாகப் பொருத்தப்பட்ட தகரக் கூரைகளைச் சில நேரம் தூக்கி கொண்டு போய்விடுமோ என்று அஞ்சியபடி கம்பளிக்குள் படுத்தபடி காற்றின் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

சுற்றிலும் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு மனிதக் குரலைக் கேட்க முடியாது, என்னோடு துணைக்கு ஒரு சீருடை அணிந்த காவலாளி இருந்தார், அவர் பெயர் யோகிந்தர், மிக உயரமான சாந்தமான முகம் கொண்ட ஒரு நாயை அவர் எப்போதும் கூடவே வைத்திருப்பார், அது இருபக்கங்களிலும் முகர்ந்தபடி எப்போதும் தொலைந்த ஏதோ ஒன்றைத் தேடித் திரிவதைப் போலவே எப்போதும் இருக்கும், யோகிந்தர் ஓய்வறைக்கு வந்து தனது படுக்கையில் நிலைகொள்ளும் வரையில் அந்த நாய் அமைதியற்று இருக்கும், பிறகு அவரை நோக்கி முகத்தைக் கால்களுக்கு இடையே புதைத்தபடி கண்களை உருட்டிக் கொண்டு படுத்திருக்கும், எப்போதாவது எழுந்து வெளியே வருகிற போது அதுவும் எழுந்து கொண்டு கைதிகளைப் பார்வையிடுகிற ஒரு சிறை அதிகாரியைப் போல நின்றிருக்கும், யோகிந்தர் சில நேரங்களில் எங்கே போவார் என்று தெரியாது, அவரோடு எப்போதும் வருகிற நாயின் குரைப்பொலி வெகு தொலைவில் எங்காவது கேட்கும் போது அவர் இங்கேதான் பக்கத்தில் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

எப்போதாவது காற்றின் ஓலம் இல்லாத முன்னிரவில் உள் விளக்குகளையும் அணைத்து விட்டு சிமெண்ட் கற்களால் ஆன மேடையில் மல்லாந்து படுத்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன், விண்மீன்களைக் கடந்து மினுக்கும் விளக்குகளோடு எப்போதாவது அரிதாகப் பயணிக்கும் வானூர்தியின் நகர்வு கண்ணில் இருந்து மறையும் வரை பின்தொடர்வேன், அந்தச் சின்ன ஒளிப்புள்ளிக்குள் நிறைய மனிதர்கள் இருப்பார்கள், பிழைப்பின் நிமித்தம் வீட்டிலிருந்து வெளியேறி வெகுகாலம் குழந்தைகளைப் பிரிந்து மீண்டும் வீட்டுக்குப் போகிற ஒரு தந்தை அதற்குள் இருக்கக் கூடும், வானூர்தியில் முதன்முறையாகப் பயணிக்கும் ஒருவனும், ஏமாற்றங்களும், சுமைகளும் நிரம்பிய ஒரு பெண்ணும், இரண்டாம் முறை காதலியைப் பார்க்கப் போகிற காதலனும் இருக்கக் கூடும், தொலைதூரத்தில் மங்கலான ஒளியை உமிழ்ந்தபடி படுத்திருக்கும் அந்த உதயபூரின் அரண்மனையை அவர்களால் பார்க்க முடியுமா? அப்பாவும் அம்மாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள், இதே ஒளிரும் விண்மீன்களை அவர்களால் பார்க்க முடியுமா? என்றெல்லாம் ஏதேதோ யோசித்தபடி அந்த இரவுகளை நான் கடந்திருக்கிறேன்.

Mihir-Garh-(2)-arial_940_529_80_s_c1

ஒளி மாசு படியாத அத்தகைய இருளைப் பார்ப்பதே  இப்போதெல்லாம் அரிதாகப் போன நிகழ்வாகி விட்டது இப்போது, தெளிந்த வானில் ஒளிரும் வண்ண விண்மீன்களை நீங்கள் பார்த்து எத்தனை காலம் ஆகிறது என்று யோசித்துப் பாருங்கள்? நம்மைச் சுற்றி இருக்கும் விளக்குகளும் நமது கண்களுக்குப் பழகிப் போன ஒளியின் அளவும் சேர்ந்து அப்படி ஒரு தெளிந்த ஒளிரும் விண்மீன்களைக் கொண்ட வானத்தின் காட்சி அனுபவத்தை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு விட்டதோ என்று தோன்றுமளவுக்கு நாமும் வானத்திடம் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோம்.

பிறகு அதிகாலையில் இருந்தே சில பெண்களும், சிறுமிகளும் நீர் பிடிப்பதற்காக அந்த இடத்தைக் கடந்து போவார்கள், சிறுமிகளில் சிலர் நாங்கள் இருந்த இடத்துக்கு மிக அருகில் வந்து கூண்டுப் புலியைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள், இரவு முழுக்க ஒரு மூக்கு விடைத்த காவலாளியாய் இருந்த யோகிந்தரின் நாய் அவர்களைப் பார்த்தவுடன் வெகு இயல்பாக பழக்கமான மனிதர்களிடம் ஆசுவாசம் கொள்கிற விருந்தாளியைப் போல வாலைக் குழைத்தபடி கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் எரிச்சல் வரும், ஆனாலும் மனித சஞ்சாரமற்ற இரவுப் பொழுதுக்குள் இருந்து வெளியேறி அத்தகைய காட்சிகளையும், சிரிக்கும் மனித முகங்களையும் பார்ப்பது ஒரு மனதுக்கு நெருக்கமான அனுபவமாகவே இருந்தது.

நெருக்கமான வீடுகளையும், எப்போதும் நிகழும் ஏதோ ஒரு உரையாடலையும் பார்த்துக் கேட்டுப் பழகிப் போன எனது கண்களுக்கு மங்கிய விளக்குகளோடும், வரலாற்றின் மிச்சம்  போலவும் ஒட்டகங்களின் விசித்திரக் கனைப்போடும்  நீண்டு படிந்து கிடந்த பாலைவனத்தின் காட்சி கலவையான  உணர்வுகளையும், வாழ்க்கை பற்றிய ஏதோ ஒரு  புரிதலையும் உருவாக்கியது. மனிதன் முதலில் தனது இயல்புணர்வுகளை ஒரு மிகப்பெரிய இயக்கமாகக் கொள்கிறான், அவையே இந்த உலகின் காட்சிகளை நகர்த்துவதாக நம்புகிறான், பிறகு தன்னைச் சுற்றி இருக்கும் தனது குடும்பத்தை நோக்கி ஓரடி நகர்கிறான், அவைதான் காட்சிகளையும் காலத்தையும் மீட்டுவதாகத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான்.

shapeimage_2

பிறகு ஊர், நகரம், மொழி, நாடு என்று பெருங்கடல் கடந்தும், மலைகளைக் கடந்தும் பயணிக்கிறான். நான் இன்னும் பெரியவன், எனது பயண அனுபவங்களும், காட்சி அனுபவங்களும் மிகப்பெரிய இந்த உலகத்தை எனக்குக் காட்டி இருக்கிறது, அவைதான் உலகைக் கட்டமைக்கின்றன என்கிறான், பிறகு நான்  குவித்த பொருளால் இந்த உலகின் உயர் நாகரீகங்களை வெல்வேன் என்று கூச்சலிடுகிறான், தனது ஆயுதங்களைக் கொண்டு சக மனிதனின் உயிரை அழிக்கிறான், வரலாறு முழுக்கக் கொல்லப்பட்ட மனித உடல்களைக் குவித்து அதன் மீது ஏறி நின்று கெக்கலிக்கிறான், எனதே உயர்ந்தது, நானே ஆகச் சிறந்தவன் என்றெல்லாம் வரட்டுக் கூச்சலிடுகிறான், எனது சாதியைத் தெரியுமா? எனது குலத்தின் பெருமையைத் தெரியுமா? எனது பெண்ணையா தொட்டாய்? எனது ஆணிடமா புணர்வு கொண்டாய்? என்றெல்லாம் உளறியபடி  கழுத்தறுக்கிறான், குருதி குடிக்கிறான்.

இரவு உணவு முடிந்த பிறகு மடிக்கணினியின் பக்கத்தில் நிறைமொழியை அமர்த்தியபடி அவளுக்கு ஒரு படத்தைக் காட்டினேன், மங்கிய ஊதாப் புள்ளி (Pale Blue Dot) என்று அழைக்கப்படுகிற உலகின் மிக அழகான புகைப்படங்களில் ஒன்று அது, பூமிக்கு வெளியே 6 பில்லியன் தொலைவில் இருந்து வாயேஜர் விண்கலத்தால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் (ஜூலை 14, 1990) எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம் மனித குல இருப்பைக் குறித்த பல புதிய சிந்தனைகளை வழங்கியது.

maxresdefault

“அம்மா, பார், இதுதான் பூமி, அளவற்ற பெருவெளியில் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத “மங்கிய ஊதாப் புள்ளிதான் இந்த பூமி, இங்கு தான் நாம் இருக்கிறோம், உனது  பள்ளி, எனது அலுவலகம், நமது வீடு, நகரம், முன்னோர்களின்  கல்லறை, புதிய குழந்தைகள்  எண்ணற்ற மருத்துவமனைகள், கடவுளைத் தேடித் பயணித்துக் கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று இறந்து போன ஆறேழு குழந்தைகள், அரசுகள், சிறைச்சாலைகள், பெரு நாகரீகங்கள், மனித இனக்குழுக்கள், ஏழை, பணக்காரன், உயர்சாதிக்காரனின் அதே நாற்றமெடுக்கும் மலம், நாகரீகத்தின் அழியாச் சின்னமான காதலுக்காகக் கழுத்தை இழந்து தண்டவாளத்தில் கிடக்கிற ஒடுக்கப்பட்ட மனிதனின் உடல் இன்னும் எல்லாம் புதைந்து கிடக்கிற பெரும்பூமி தானம்மா இது, பேரண்டத்தின் நிறையில் ஒரு தூசியைப் போல மங்கலாய்த் தெரியும் இந்தப் புள்ளியில் தான் நாம் இருக்கிறோம், நாமிருக்கும் பூமி அத்தனை சிறியது. ஆனாலும், சக மனிதர்கள்  மீதும், உயிர்களின் மீதும் நாம் காட்டுகிற அன்பும், பரிவும் தானம்மா நமது இந்தச் சின்னஞ்சிறு மங்கிய ஊதாப் புள்ளியை ஒளியும், பேராற்றலும் நிரம்பிய அறிவுச் சுடர் ததும்பும் பெருங்கோலமாக மாற்றி இருக்கிறது”.

அப்பா, இந்தத் தரையில் இருந்து இந்த மின்விசிறி வரைக்கும் இருக்குமா? குழந்தைகளுக்கே உரிய அளவுகளோடு மீண்டும் கேட்கிறாள் மகள்.

கைகளைப் பின்னால் அகல விரித்து விரித்து இன்னும் கொஞ்சம் பெரிதாக என்று சிரிக்கிறேன், அவளும் சிரிக்கிறாள், மங்கிய ஊதாப் புள்ளிக்குள் இருந்து….. 

 

************

Advertisements

Responses

  1. செம வெளக்கம்!

  2. அருமை.

  3. படிக்கும் போதே தலை சுற்றுகின்றது. பிரபஞ்சம் பற்றி படிக்கும் எமக்கே இவ்வாறு என்றால், விண்வெளி வீரர்களுக்கு எவ்வாறு இருக்கும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: