கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 18, 2015

ஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………

13-thirumavalavan5-600

அதிகாரப் பகிர்வு என்கிற கோட்பாட்டை "விடுதலைச் சிறுத்தைகள்" கட்சி தவறான நேரத்தில் எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது, மேலும் இந்த அதிகாரப் பகிர்வு என்கிற வாதமே ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் நகர்வை முன்னெடுக்கிற கட்சிகளின் மக்களின் சார்பாக "ஐயா சாமி, அதிகாரப் பிச்சை போடுங்க!!!" என்று கெஞ்சுகிற தொனியை உருவாக்குகிறதோ என்று கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கிறது, அதிகாரப் பகிர்வு குறித்து கோட்பாடுகளை முன்வைக்க வேண்டுமென்றால் சட்டத் திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறை சார்ந்த கருத்தியல் மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சட்டமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் அதிகாரப் பகிர்வு என்கிற எளிய மக்களுக்கான அரசியல் அதிகாரக் கனவை நோக்கியே உங்கள் கோட்பாடு முன் வைக்கப்பட்டாலும் தேர்தல் கூட்டணி பேரம் பேசுவதற்கான அல்லது அதிக இடங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டே இந்த அதிகாரப் பரவல் கோட்பாட்டு முழக்கம் என்று பெரிய கட்சிகளும், கூட்டு சமூகமும் ஏளனம் செய்யக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளிடம் இத்தகைய சட்ட வடிவம் அல்லாத அதிகாரப் பரவலைப் பெற்று என்ன பெரிதாய் சாதித்து விடப் போகிறீர்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோ, ஒருமித்த கருத்துடைய கட்சிகள் மற்றும் இயக்கங்களோடு மூன்றாவது அணி அமைத்தோ தமது கட்டமைப்பு வலிமையை நிறுவியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், அப்போதுதான் குறைந்தது வட மாவட்டங்களிலாவது குறிப்பிட்ட வாக்கு வங்கியை நிறுவிக் காட்டி வல்லாதிக்கக் கட்சிகளிடம்  வரும் காலங்களில் வலிமையான கூட்டணி பேரம் பேச முடியும், அதை விடுத்து இன்றைய சூழலில் அதிகாரப் பரவல் கோட்பாட்டை முன்வைக்கிறேன் என்று பேசுவதெல்லாம் மேடைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கக் கூடும், ஒரு போதும் தமிழக மக்களின் கூட்டு மனசாட்சியில் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. அதிகாரப் பரவல் அல்லது பகிர்வின் மூலமாகப் பெறப்படுகிற நாளைய  பதவிகளும், அதிகாரமும் கூட கலை பண்பாட்டு வளர்ச்சித் துறை, அறநிலையத் துறை, வெட்டி முறிக்கிற துறை மாதிரி முடக்கப்படுகிற அல்லது சூறையாடப்படுகிற வாய்ப்புகளே அதிகம்.

தமிழக அரசியல் சூழலோ, தமிழக மக்களின் கூட்டு மனசாட்சியோ சாதிய நிலைப்பாடுகளில் இருந்து வழுவி எளிய மக்களுக்கான அதிகார அரசியல் வாய்ப்புகளை வழங்கி விடுகிற முதிர்ச்சியில் இல்லை, சட்டப்பூர்வமான வாய்ப்புகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய  பல்வேறு துறைகளில் (காவல் துறை மற்றும் நீதித்துறை உட்பட)  கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கூட்டு மனநிலையும், ஆதிக்க வெறியும் நிலவுகிற ஒரு சமூகத்தில் அதிகாரப் பரவல் மாதிரியான முதிர்ச்சியான அரசியல் கோட்பாடுகளை எல்லாம் முன்வைப்பது விழலுக்கு இறைத்த நீர் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், துணிவான எதிர்கால அரசியல் பயணத்தையும் பணயம் வைக்கிற செயல் மாதிரியாகவே இருக்கிறது.

ஏறத்தாழ வன்னியர்களுக்கு இணையான மக்கள் தொகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாக்கு வலிமையை நிறுவி அதன் மூலமாகப் பெறுகிற அதிகாரத்தின் மூலமாக எளிய மக்களுக்கான அரசியல் பகிர்வை நோக்கி நகர்வதே இன்றைய சூழலில் ஒரு சுயமரியாதையுடன் கூடிய அரசியல் கோட்பாடாக இருக்க முடியும், மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே கூட இங்கே சாதிய அடையாளத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுகிற ஒரு சூழலில் கருத்தரங்குகளில் வேண்டுமானால் அவர்கள் ஒருமித்த நிலைப்பாடுகளைக் கொண்டவர்களைப் போலத் தோற்றமளிக்கக் கூடும்,  ஆனால்,உண்மையில் தேர்தல் அரசியலில் பங்கேற்கிற போது சாதி என்கிற அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளிருந்தே அவர்கள் செயல்படுவார்கள்.

9-9-2011-66-dr-krishnasamy-writes-cm-to-ce

ஏற்கனேவே ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கட்சிகளை அமைப்புகளை பெரிய அரசியல் கட்சிகள் தீண்டத்தகாத கட்சிகளைப் போலவும், தாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானவர்கள் என்கிற புறத்தோற்ற விளம்பரம் தேடும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தும் நிலையிலேயே இருக்கிறார்கள், அவர்களிடம் உங்கள் ஒற்றுமையையும், ஒருங்கிணைவையும் உறுதி செய்து வலிமையான உண்மையான அதிகாரப் பகிர்வையும், பரவலையும் நோக்கிப் போவதே சிறந்த முடிவாக இருக்கக் கூடும். ஒருவேளை இந்த கோட்பாட்டு முழக்கம் திராவிடக் கட்சிகளிடம் இருந்து விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நகர்வை திசை திருப்பி "அமித் ஷா"வின் புதிய அரசியல் திட்டங்களுக்கு வழி தேடித் தரக் கூடியதாக இருக்கும், ஆனால், ஒருநாளும், திராவிடக் கட்சிகளின் மனசாட்சியை உலுக்கி ஒரு உண்மையான அரசியல் பகிர்வுக்கான பாதையை உருவாக்கிக் கொடுக்காது என்பதே நிதர்சனமான உண்மை.

இருபது விழுக்காட்டுக்கு மேலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதில் அரசியல் ஆற்றலாக மாற்றும் முயற்சியில் தோல்வியுற்றுச் சோர்ந்திருக்கும் நிலையில் இன்னும் விவேகமான அரசியல் பகிர்வுக்கான வழிமுறைகளைக் குறித்து தமிழகத்தின் இரண்டு முக்கியமான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது.

பின்குறிப்பு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் குறித்த சுவரொட்டிகளையோ, விளம்பரங்களையோ விமர்சனம் செய்கிற தார்மீக உரிமை இல்லை என்று தோன்றுகிறது, சென்னையின் மூலை முடுக்கெல்லாம் அண்ணன் திருமாவின் படத்தைப் போட்டு "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்" என்கிற அளவுக்கெல்லாம் விளம்பரம் செய்து வைத்திருக்கிறார்கள், அன்புமணியின் தற்போதைய படத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுவர் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் நிரம்பி இருக்கும் ஒரு நிலையில் அன்புமணியை விமர்சனம் செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன தார்மீக உரிமை இருக்க முடியும். மேலும், இத்தகைய வீணான விளம்பர அரசியல் செய்யும் அளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரமும்,  பொருளாதாரக் கட்டமைப்பும் தமிழகத்தில் வலுப்பெற்று இருக்கிறதா என்ன? ஒரு அறிக்கையில் இத்தகைய விளம்பர அரசியல் வழிபாட்டை பெருமளவு தடுக்க முடியும் சூழலிலும் ஏன் அத்தகைய அறிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் இன்று வரை வெளியிடாமல் இருக்கிறது. இன்னும் ஒரு தொலைக்காட்சி ஊடக வலிமையைப் பெற முடியாத பல காலமாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிற அமைப்புக்கு லட்சக்கணக்கில் சுவரொட்டி மற்றும் விளம்பரத் தட்டி விரயங்கள் கண்ணில் படுவதில்லையே ஏன்? அத்தகைய விளம்பரங்களுக்குச் செய்யப்படும் பொருளை ஆக்கப் பூர்வமான ஊடகப் பணிகளுக்கும், தொலைக்காட்சிக் கட்டமைப்புக்கும் பயன்படுத்தலாமே???

 

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: