கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 24, 2015

மார்க் லூபர்கன்.

slide2

நேற்றைய இரவு ஒரு உன்னதமான இரவு, பெங்களூரின் லே கிராண்டே விடுதியின் முகப்பில் நெடிய புல்வெளியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன், குளிர் காற்று வீசும் உடலை மெல்ல ஊடுருவி நடுங்க வைக்கிற அந்த முன்னிரவில் நான்கைந்து வட இந்தியக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், தென் ஆப்ரிக்க எழுத்தாளர் "மார்க் லூபர்கன்" அவர்களை இன்னும் சிறிது நேரத்தில் சந்தித்து உரையாடப் போகிறோம் என்கிற நினைவு ஒரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது, பெரிய அளவில் மேற்குலகால் அறியப்படாத ஊரக எழுத்தாளர் என்றாலும் அவரது கூர்மையான வெளிப்படையான மனநிலையை நான் அறிந்திருக்கிறேன். பத்தாவது நிமிடத்தின் முடிவில் பெரிய புன்னகை என்று கூடச் சொல்ல முடியாது, பாதிச் சிரிப்பும், பாதிக் குழந்தைத்தனமும் வழிய வருகிறார். உடைந்த ஆங்கிலம் தான் ஆனால் உடையாத அன்பு.

இனி அவருடன் நிகழ்ந்த உரையாடலின் தமிழாக்கம்:

நான் : மார்க் வணக்கம், இந்தியாவுக்கு இதுதான் முதன்முறையா? எப்படி உணர்கிறீர்கள்?

மார்க் : வணக்கம் "ஆறிவாஜாகான்".
 
நான் : மார்க் நீங்கள் என்னை ஹாரி அன்றோ ஹரி என்றோ சுருக்கமாக அழைக்கலாம்.

மார்க் : ஓ நன்றி, ஹரி,  இந்தியாவுக்கு நான் வருவது மூன்றாவது முறை, ஆனால் பெங்களூருக்கு இதுதான் முதல் முறை, ஒரு முறை சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றிலும், டெல்லியில் நடந்த விழா ஒன்றிலும் கலந்து கொண்டிருக்கிறேன். பெங்களூரின் சூழல்  அற்புதமாக இருக்கிறது, ஆனால், சென்னையின் மக்களை நான் நேசிக்கிறேன், அவர்களின் கண்களில் ஒரு நேசத்தை நான் உணர்ந்தேன், எப்போதும் எங்கு சென்றாலும் ஒரு திறந்த புன்னகையை அவர்கள் எனக்காக வைத்திருந்தார்கள். சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் நான் சந்தித்த மீனவர்கள் என்னை ஒரு விருந்தாளியைப் போல அன்பு செய்தார்கள், இலவசமாக என்னைக் கடலுக்குள் அழைத்துச் சென்றார்கள், பொரித்த மீன் கொடுத்தார்கள், மீனவக் குழந்தைகள் எனது சுருட்டை முடி குறித்து மெல்லிய குரலில் கிண்டல் செய்து சிரித்தார்கள். ஒரு சிறுவன் எனது தலைமுடியைத் தடவிப் பார்க்க வேண்டும் என்று கேட்டான், மறக்க முடியாத மக்கள்.

நான் : உங்கள் குடும்பம் குறித்து நான் தெரிந்து கொள்ளலாமா மார்க்…….

நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், என் தந்தையார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், அவர் என்னை ஒரு மனவளம் மிகுந்த மரியாதை நிரம்பிய மனிதனாக வாழப் பழக்கினார், அவர் என்னிடம் ஒருபோதும் பொருள் சேர்க்க வேண்டும் என்று சொன்னதே இல்லை, உன் மகன் ஒரு பணக்காரன் என்று யாரும் என்னிடம் சொல்வதைக் காட்டிலும் நீ ஒரு அறிவாளி என்று யாரேனும் என்னிடம் சொன்னால் நான் மிகவும் மகிழ்வேன், குறிப்பாக வெள்ளையன் ஒருவன் என்னிடம் அப்படிச் சொன்னால் என்னுடைய வாழ்வு நிறைவு பெற்றதாகி விடும் என்று அடிக்கடி என்னிடம் சொல்வார் அப்பா, எனது தாயார் கனிவையும், உணவையும் ஊட்டி வளர்த்தவர், தனது ஆறு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதில் அப்பாவை விட அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொண்டவர், அப்பா ஒரு நாள் முழுக்க எனக்குச் சொல்லிக் கொடுக்க முனைந்த பாடங்களை அம்மா இரவு உணவின் போது சொல்லி முடித்து விடுவார், அப்பாவின் குழப்பங்களுக்கு எப்போதும் அம்மா தீர்வாக இருந்தார். வழக்கமான மகிழ்ச்சி நிரம்பிய சகோதர சகோதரிகளுடனான வாழ்க்கை. ஒரு பெண்ணோடு கொஞ்ச காலம் இணைந்து வாழ்ந்தேன், பிறகு என்னை விட ஒரு அழகான பணக்காரக் காதலன் அவளுக்குக் கிடைத்தான், ஒரு இரவில் மூன்று பேரும் சேர்ந்து வயிறு முட்ட நல்ல சிவப்பு வைன் குடித்தோம், மகிழ்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டோம், என்னுடன் வாழ்ந்த நாட்களில் எனக்கு ஒரு நல்ல இணையாக அவர் இருந்தார், வெளிப்படையான, அன்பான துணையாக இருந்தார், நானும் பெரிதாக அவரைத் தொல்லை செய்ததில்லை, எனது எழுத்துக்களை பிழை திருத்துவது, நல்ல கதைகளைப் பாராட்டி சிலாகிப்பது என்று நல்ல நினைவுகளை எனக்கு அவர் கொடுத்திருக்கிறார், இப்போது காதலிக்க நேரமில்லை, ஆனால், எழுதிக் கொண்டிருக்கும் நாவலை முடித்த பிறகு மீண்டும் காதலிக்க வேண்டும், காதல் ஒரு அற்புதமான மனநிலை, காதல் இல்லையென்றால் மனித குலம் நாகரீகம் அடைந்திருக்காது, இப்போதும் இன வேறுபாடுகளையும், நிற வேறுபாடுகளையும் களையும் ஒரே நம்பிக்கையாக நான் கருதுவது காதலைத்தான், கட்டுப்பாடுகளற்ற காதல் மனித மனதைப் பண்படுத்துகிறது, உலகின் இன்றைய நாகரிகத்தை மனிதனுக்குக் கொடையளித்தது அவனது இயல்புனர்ச்சியான காதல் தான். காதலின் மீது தான் பெரும் சாம்ராஜ்யங்கள் கட்டப்பட்டிருக்கிறது, காதலால் தான் பெரும் சாம்ராஜ்யங்களின் கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன, காதலே மனித இனத்தின் கடவுள், அதுவே நம்மை வழிநடத்துகிறது, அதுவே நம்மை மென்மேலும் பண்பட்ட ஒரு உயிர்ப் பொருளாக மாற்றியபடி இருக்கிறது.

images

நான் : (அமைதியாகக் கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு) மார்க் நீங்கள் எழுத வேண்டும் என்று உங்களுக்கு எப்போது தோன்றியது? நீங்கள் எழுத வந்ததன் காரணம் ஏதேனும் உண்டா?

என்னைப் பற்றி இந்த உலகம் ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிய முதல் நாளில் நான் எழுத வேண்டும் என்கிற எண்ணம் வந்தது, வகுப்பறையில் ஒருமுறை சக மாணவனின் கட்டுரையை தலைமை ஆசிரியர் கூட்டு வழிபாட்டு நேரத்தில் பாராட்டிப் பேசியபோது எனக்கும் அப்படி ஒரு பாராட்டைப் பெற வேண்டும் என்கிற தன்முனைப்பு உருவானது, தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்ததன் பயனாக சில பயிற்சி முறையிலான கட்டுரைகளை என்னால் எழுத முடிந்தது, வழக்கமான அங்கீகாரம் அல்லது புகழ்ச்சி என்கிற மனிதனின் தற்குறித்தனத்தை விட வேறு என்ன அவனை முன் செலுத்தப் போகிறது, எனக்கும் அதே ஆசை தான், புகழ்பெற்ற அந்தப் புகழால் கிடைக்கும் அதிகாரம் நிரம்பிய வாழ்க்கையை ருசிக்க வேண்டும் என்கிற முனைப்புத் தான் என்னை எழுதச் சொன்னது, பிறகு ஒருமுறை எந்தை கதை ஒன்றைப் படித்து விட்டு என் வீட்டுக்கு வந்த ஒரு வயதான தாய் என்னைப் பார்த்து நீதான் எனது மகன், நான் உன்னை நேசிக்கிறேன் என்று கட்டியணைத்துக் கொண்டார்கள், அது எனக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கியது, நான் தன்முனைப்பாகப் புகழ் பெற வேண்டும் என்கிற நோக்கத்துக்காக எழுதுகிற எழுத்து சக மனிதனின் மனதை இத்தனை மகிழ்ச்சியும் நிறைவும் கொள்ள வைக்கிறது என்று சொன்னால் எனது எழுத்தை நான் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. சமூக அறம் அல்லது மானுட மனம் மேம்பாடு கொள்வதற்கான எழுத்தை என்னால் வழங்க முடியும் என்று நான் நம்பத் துவங்கினேன்.

ஆனாலும், ஹரி, எனது எழுத்து நான் என்கிற இந்த உடல் அல்ல, எனது எழுத்து என்னை வாசிப்பவனிடத்தில் ஒரு மாயையை உருவாக்குகிறது, அந்த எழுத்தின் உள்ளார்ந்த அறமே மார்க் லூபர் என்கிற மனிதனின் மனசாட்சி என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால், அது உண்மையல்ல, எனது உடல் எனது ஆன்மத்தில் இருந்து வேறுபட்டது, எனது ஆன்மம் என்ன நினைக்கிறது என்பதை உடல் பொருட்படுத்துவதில்லை, அதற்கான தேவைகளோடு அது அலைகிறது, எனது ஆன்மம் உடலுக்குள் கட்டுப்படாத எல்லைகளற்ற ஒரு பெருவெளியை இருக்கிறது, ஆனால், உடல் ஆன்மத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக ஒரு தடையாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது, உடலுக்கும், ஆன்மத்துக்குமான இந்தப் போரில் ஒருநாள் உடல் தோற்று வீழ்ந்து விடுகிறது. நிலைத்த பெருவெளியாய் அப்போது நான் என்கிற எனது உள்ளார்ந்த அறம் வெற்றி கொள்கிறது. விடுதலை பெறுகிறது.

நான் : நீங்கள் ஒரு தற்பெருமை கொண்டவர், திமிர் பிடித்தவர் என்று சொல்கிறார்களே? இதனை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

மார்க் : (உரக்கச் சிரிக்கிறார்), என்னிடம் நேரடியாகவே இதனைப் பலர் சொல்லி இருக்கிறார்கள் ஹரி, அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான், நான் கொஞ்சமல்ல நிறையவே தற்பெருமை கொண்டவன், திமிர் பிடித்தவன், ஆனால், எனது தற்பெருமையும், திமிரும் ஒருபோதும் சக மனிதனைக் காயம் செய்யுமளவுக்குக் கூடுதலானது அல்ல, இது ஒரு படைப்பாளிக்கே இருக்கிற இயல்பு, நான் யாருக்காகவும் காத்திருக்க விரும்புவதில்லை, நான் யாரிடமும் கைகட்டி நிற்பதில்லை, ஊடகங்களில் போய் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தபடி மத்தளம் அடிக்கிறவன் இல்லை, எனது எழுத்துக்களுக்கு மானுட குலத்தின் நம்பிக்கைகளை மேம்படுத்துகிற ஆற்றலும் உள்ளீடுகளும் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன், எல்லாவற்றுக்கும் மேலாக என்னிடம் ஒரு தீவிரமான நம்பிக்கையும் பண்பும் இருக்கிறது, நான் கதாபாத்திரங்களை உருவாக்குகிறவன், அந்தக் கதாபாத்திரங்களுக்கு உள்ளார்ந்த ஒரு ஆன்ம வலிமையைக் கொடுக்கிறவன் என்கிற படைப்பாளிக்கே இருக்கிற இயல்புணர்வு என்னிடம் கொஞ்சம் மிதமிஞ்சி இருக்கிறது. நான் சொல்கிறபடியும், எழுதுகிறபடியும் மானுடர்களை நான் படைக்கிறேன், நான் அவர்களை உறங்க வைக்கிறேன், அவர்களுக்குப் பிறப்பளிக்கிறேன், அவர்களுக்கு உணவூட்டுகிறேன், அவர்களின் காதலை வழி நடத்துகிறேன், அவர்களை கொல்லவும் கூட அதிகாரம் நிரம்பியவனாக இருக்கிறேன். கடவுள் என்று சொல்லப்படுகிற சர்வ வல்லமையும் பொருந்திய அதிகார மையத்தை விடவும் நான் வலிமை வாய்ந்தவனாக உணர்கிறேன், மதங்களை, வேறுபாடுகளை எல்லாம் துடைத்தெறியும் மலக்காகிதம் என்று கிண்டல் செய்கிறேன். மானுடத்தினும் வல்லமை கொண்டது ஏதுமில்லை என்று திமிராகச் சொல்கிறேன், நான் முடியாது என்கிறேன், ஏசுவே சர்வ வல்லமை கொண்டவர் என்று என்னை நம்பவும், எழுதவும் சொல்கிறார்கள், நான் இயேசுவின் வாழ்க்கையையே மாற்றி எழுதும் பேரண்ட வல்லமை கொண்ட எழுத்தாளன் என்று அவர்களிடம் சொல்கிறேன், அவர்கள் என்னை தற்பெருமை கொண்டவன் என்றும் திமிர் பிடித்தவன் என்றும் சொல்கிறார்கள். (மீண்டும் சிரிக்கிறார்).

Nobel-Prize

நான் : நோபெல் பரிசு குறித்து ஏதேனும்  சிந்தனை இருக்கிறதா?

மார்க் : எழுதுகிற மனிதர்கள் எல்லோரும் வாழ்வின் ஒருமுறையாவது கனவு காண்கிற பரிசு குறித்து எனக்கு ஏன் சிந்தனைகள் இருக்கக் கூடாது ஹரி….ஆனால், ஒரு மாற்றுச் சிந்தனை மட்டும் எப்போதும் எனக்கு உண்டு, நோபெல் என்பது பூகோள ரீதியில் வகைப்படுத்தப்பட்ட ஒரு பரிசாக மாற்றம் பெற வேண்டும், மேற்குலகின்  பண்பாட்டு வெளிகளில் அல்லது சிந்தனைத் தளங்களில் தாக்கத்தை உண்டாக்காத ஊராக எழுத்துக்கள் நோபெல் பரிசு பெரும் கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் கலை கலாச்சார பண்பாட்டு வெளிகளின் ஆழத்தை ஒரு இந்தியனால் மட்டுமே புரிந்து கொண்டு வாசிக்க முடியும், அவனுடைய வாழ்க்கை முறையோடு தொடர்பு கொண்ட எழுத்தும், மொழியுமே அவனது மூளையின் சகல நியூரான்களையும் தாக்கி அவனைப் பரவசம் கொள்ள வைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு மொழிக்குமான ஒரு நோபெல் உட்பிரிவை நாம் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது ஒவ்வொரு மொழியின் செழுமையையும், ஆற்றலையும் மேம்படுத்தும் கருவியாக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருவியாக இருக்கும்.

நான் : நீங்கள் ஏன் மொழிபெயர்ப்பாளர்களின் மீது கடுமையான நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள்? அவர்களை நீங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகச் சொல்கிறார்களே?

மொழிபெயர்ப்பாளர்கள் எனது கதைகளை, எனது கதாபாத்திரங்களை பல நேரங்களில் காயப்படுத்தி விடுகிறார்கள், எனது கதைகளையும், கதைக் களங்களையும் நான் நேசிக்கிறேன், அவற்றின் சிறு கற்களையும், மலைகளையும் யாரும் அலட்சியம் செய்வதை நான் விரும்புவதில்லை, எனது கதாபாத்திரங்களின் உரையாடல்களை மென்மையான குழந்தைகளின் கரங்களைப் போல மொழிபெயர்ப்பாளர்கள் கையாள வேண்டும் என்று விரும்புகிறேன், மேலும் மொழிபெயர்ப்பாளர்கள் எனது ஆழமான உள்ளுணர்வுக்குள் பயணம் செய்ய முனைகிற எனது இலக்கியம் உற்பத்தியாகிற மூலக் கண்களைப் பார்க்க நினைக்கும் வேற்று மனிதராக என்னை அச்சமும் பதட்டமும் கொள்ள வைக்கிறார்கள். அந்தப் பதட்டம் ஒரு அமைதியான நட்பார்ந்த சூழலை அவர்களோடு உருவாக்காமல் இருக்கிறது, ஆனால், சக மனிதனாக அவர்களை நேசிக்கிறேன், அவர்களோடு தேநீர் குடித்தபடி வாழ்க்கையின் சுவாரசியங்களைக் குறித்து உரையாடவே விரும்புகிறேன்.

நான் : இந்திய இலக்கியத்தில் உங்களைக் கவர்ந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல முடியுமா?

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் "பங்கிம் சந்திர சட்டபோத்யாயா" வின் "கபல்குந்தலா" இந்திய ஊரகப் பெண்களின் மனநிலையை அல்லது வாழ்க்கை நிலையை அறியச் செய்தது, நதிக்கரையோர மக்களின் வாழ்க்கையை இந்திய சமூகத்தின் பண்புகளைக் குறித்து ஒரு அறிமுகம் செய்தது. பஷீரின் பால்யகால சகி ரத்தம் கசியும் எளிய மனிதனின் காதலை சொன்ன விதம் ஒரு மலைப்பை உருவாக்கியது, வாழ்க்கை மனிதர்களை எப்படி அலைக்கழிக்கிறது என்பதை சின்னச் சின்ன உரையாடல்களில் அவர் சொல்வது ஒரு மேம்பட்ட எழுது முறை என்று நான் உணர்ந்தேன், இன்னும் நிறைய இந்திய இலக்கியங்களை நான் படிக்க வேண்டும், இந்தியாவின் சிறந்த படைப்புகளை எனக்கு நீங்கள் சொல்வீர்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றைப் படிப்பேன்.

நான் : உலக இலக்கியத்தில்?

விளாடிமீர் நபாக்கொவின் "லோலிட்டா" என்னை எப்போதும் ஆட்கொள்ளும் நாவல், மனித இயல்புணர்வுகளையும், பாலியல் ஏக்கங்களையும் கலந்து மானுடத்தின் பரிமாணத்தை ஒருவிதமான பதட்டத்தோடு படிக்க வைத்த நாவல், பிறகு லியோ டால்ஸ்டாயின் நாவல்கள் உலகை அவரது படைப்பாகவும், பாத்திரங்களாகவும் சிந்திக்க வைத்தன, டால்ஸ்டாயின் படைப்புலகோடு எனது ஆன்மத்தை ஒரு இணை கோட்டில் நகர்த்திய காலங்கள் உண்மையில் ரம்மியமானவை, அவற்றின் ரம்மியத்தொடு தான் இன்னும் உலகைக் காதலோடு பார்க்கிறேன், பாப்லோ நெரூடாவின் உருக்கும் காதல், ஷேக்ஸ்பியரின் ஏதாவது ஒரு வரி உண்டாக்கும் கலவரம், ஆப்ரிக்காவின் கவிஞர்கள் வோலே சொயின்க்கா, துமி மோல்க்கனே என்று எழுத்து ஒரு வற்றாத பேராற்றைப் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இலக்கியத்தை எனக்குள் ஊற்ற ஊற்ற நான் வளர்கிறேன், எனது உடலின் மரணத்தை இலக்கியம் துல்லியமாக நிரவி என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற ஒரு விசித்திரமான சூழலை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

16118.storieshouse5

நான் : வாழ்க்கையைக் குறித்து என்ன சொல்வீர்கள்?

(நிமிர்ந்து பார்க்கிறார்) யாருடைய வாழ்க்கையை? எனது வாழ்க்கையைக் குறித்து மட்டும் தான் நான் சொல்ல முடியும், எனது கதைகளும், பாத்திரங்களும் கூட எனக்கு நிகழ்ந்த விஷயங்களைக் குறித்தே பெரும்பாலும் பேசுகின்றன, வேறொருவருடைய வாழ்க்கையைக் குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது. உங்கள் வாழ்க்கையைக் குறித்து நீங்களும், அந்த ஓட்டுனரின் வாழ்க்கையைக் குறித்து அவருமே சொல்ல முடியும்.

(பிறகு நெடுநேரம் வாழ்நாட்கள் இரண்டு வெவ்வேறு மனித உயிர்களுக்கு வழங்கிய அனுபவங்களைக் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டோம், விடை பெற்றோம். இனி ஒருமுறை மார்க்கை நான் சந்திக்க முடியுமா என்று தெரியாது ஆனால், மார்க்கின் சொற்கள் இப்போது உங்களிடமும் இருக்கக் கூடும்.)

***************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: