கை.அறிவழகன் எழுதியவை | ஜூலை 31, 2015

சசி பெருமாள் ஐயா செத்துட்டாரு மாப்ள, ஒரு “பீரப்” போடு……..

alcohol

மதுப்பழக்கம் மனித வாழ்வின் அவலங்களுக்கு ஒரு தற்காலிக மருந்து, மதுப்பழக்கம் நெடுங்காலமாக மனித வாழ்க்கையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி, மன அழுத்தத்தில் இருந்தும், பொருளாதாரச் சிக்கல்களில் இருந்தும் உடலின் வலிகளில் இருந்தும் குறைந்தபட்சமாக அதன் தீவிரத்தன்மை குறைகிற வரையில் மனிதனை விடுபட வைக்கிற ஒரு குறுகிய தீர்வு, மது பல மனிதர்களின் மனச்சிதைவுக்கும், மன அழுத்தத்துக்கும் ஒரு வடிகாலாக இருக்கிறது என்கிற உண்மையை யாரும் மறுத்து விட முடியாது, மனித வரலாற்றில் மது ஒரு முழுமையான சமூகக் குற்றமாக ஒருபோதும் பார்க்கப்படவில்லை. மது தனி மனிதப் பழக்கங்களின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுவதால், விருப்பு வெறுப்பு சார்ந்த தனி மனித உளவியலில் சக மனிதனுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத வரையில் அதனை குற்றமாகக் கொள்ள முடியாது.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த வரை மது ஒரு கொண்டாட்டமாகவோ, தற்காலிக மருந்தாகவோ பார்க்கப்பட்ட காலத்தைத் தாண்டி, ஒரு கூட்டுச் சமூக உளவியலோடு தொடர்புடைய உள்ளீடாக அது மாற்றம் கண்டிருக்கிறது, அந்த மாற்றத்துக்கான ஒரு மிக முக்கியமான காரணி காட்சி ஊடகங்கள் (குறிப்பாக திரைப்படங்கள்) தொடர்ந்து கடந்த மூன்று பதின் ஆண்டுகளில் அவை உருவாக்கிய பிம்பம், தேர்வுகளில் நிகழும் தோல்விகள், வாழ்க்கையின் அவமானங்கள், பொருளாதாரத் தோல்விகள், உளவியல் சிக்கல்கள், உறவுமுறை முரண்பாடுகள், பிறப்பின் அவலங்கள் என்று பதின்வயதில் இருந்து துவங்கி முதிர் பருவம் வரையில் வாழ்க்கையின் பல்வேறு தாக்கங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ மதுவை ஒரு தீர்வாக, கதாநாயகத் தோற்றத்தின் ஒரு அடையாளமாக அல்லது கழிவிரக்கத்தின் கடைசி முகமாகத் தொடர்ந்து காட்டினார்கள், காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மகிழ்ச்சியோ, கவலையோ, இரண்டையும் கொண்டாடும் ஒரு துணைப் பொருளாக பீர் பாட்டில்கள் மாறிப் போனது.

மதுக் குடிக்கிற இளைஞன் ஒரு பரிதாபத்துக்குரிய அப்பாவியாகத் தோற்றம் பெறுகிறான், கழிவிரக்கம் அவன் மீது அள்ளி வீசப்படுகிறது, மதுக் குடிக்கிற கதாநாயகர்கள் அதன் மூலமாகப் புனிதத் தோற்றம் கொண்டவர்களாக மாற்றப்படும் காட்சிகள் இளைஞர்களின் சமூக வாழ்வியலோடு ஒரு உயிரிணக்கம் பெற்ற வழிமுறையாக மாற்றம் பெறுகிறது. தொடர்ந்து அந்த இளைஞர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் மதுவை நுகர்வதற்கான ஒரு எளிய வாய்ப்பை மிக அருகில் இருக்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற கடையில் பெற்றுக் கொண்டார்கள், பிறகு அதுவே அரச சேவையாக மாறி இன்று ஒரு விழாக்காலத்தின் போது குடிக்காத ஒரு இளைஞனே குற்றவாளியைப் போலப் பார்க்கப்படுகிற நிலை உருவானது, பல குடும்பங்களில் அப்பாவின் நண்பர்கள் ஒரு பக்கமும், மகனின் நண்பர்கள் ஒரு பக்கமுமாய் ஒருவரை ஒருவர் ஒரு அதீத மன்னிப்பதிகாரத்துடன் ஒளிந்து கொண்டு குடும்ப ஒழுக்கத்தின் அறத்தைச் சிதைக்கத் துவங்கினார்கள். இளைஞர்கள் அல்லது மாணவர்களது இந்தப் புதிய ஒழுக்க முரணைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் இருந்த அன்னையரும் இளைஞர் கூட்டத்தின் இந்தப் பழக்கத்தை ஒரு கட்டத்தில் ஒருவிதமான வெட்கத்துடன் ஆமோதிக்க முற்றிலுமாகச் சிதைந்து முறிந்து போனது ஒரு சமூகத்தின் ஒழுக்கக் கோட்பாடு.

மதுவை முற்றிலுமாக ஒழிக்கவோ, மது விலக்கை ஒரு சட்ட வழிமுறையாக மாற்றுவதோ உடனடியாக தீர்வு தரக் கூடியது என்று என்னால் நம்ப முடியவில்லை, அரசும், அது சார்ந்த நிறுவனங்களும் குடியினால் உருவாகும் தீமைகளைக் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் அதே வேளையில், மது தயாரிப்பு நிறுவனங்களின் ஆல்கஹால் பயன்பாடு மற்றும் அளவுகள் குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது மிக அவசரமான தேவையும் கூட. ஆல்கஹால் அளவு குறைக்கப்பட்ட அல்லது பெரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்ட மது வகைகளை சட்ட ரீதியான வயதுக்குப் பின்னான ஒரு குறிப்பிட்ட வயது வரையில் அனுமதிப்பதும், அதற்கு அதிகமான அளவீடு கொண்ட மது வகைகளை அனுமதிக்க மறுப்பதும் கூட ஒரு வகையில் இந்த சமூகப் பழக்கத்தின் தீங்குகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் ஒரு காரணியாக மாற்றம் பெறக் கூடும். சமூக முரண்களும், முதலீட்டியமும் அடிப்படையாகக் கொடுக்கிற உளவியல் மற்றும் பொருளாதாரச் சிதைவு மதுவை நோக்கிய ஒரு உந்துதலை உழைக்கும் எளிய மனிதனிடத்தில் உருவாக்குகிறது, அதே உந்துதலை முதலீட்டியம் தனது வளர்ச்சிக்கும், கொள்ளைக்கும் பயன்படுத்திக் கொள்கிறது, உளவியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை மையமாக வைத்து ஒரு வெகு இயல்பான உணவுப் பழக்கத்தைப் போல மாற்றம் பெற்று வருகிற குடிப்பழக்கம் அரசின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக மாறி விடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

Alcohol

மதுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வையும், அது உடலுக்கும், மனதுக்கும் இழைக்கிற சுமைகளையும் மனதில் கொண்டு ஊடகங்கள் (குறிப்பாகத் திரைப்படங்கள்) ஒரு மாற்றுப் பாதையைத் தேர்வு செய்யும் அதே வேளையில் மதுப் பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளும் பயிற்சியையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, மதுப் பயன்பாட்டின் போது கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள், சுகாதாரம் தொடர்பான குறிப்புகள் என்று குடிப் பழக்கத்தின் எதிர்மறைத் தாக்கங்களை விலக்கிக் கொள்கிற ஒரு தன்முனைப்புப் பயிற்சியையும் நமது குடிமகன்கள் இளம் குடிமக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது கடமை.

மற்றபடி, ஐயா சசி பெருமாள் அவர்களின் மரணம் இப்போது எதிர்க் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஒரு தேர்தல் ஜாக்பாட் குறியீடு, இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி வாக்கு அறுவடை செய்யும் முயற்சியில் ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்யும். ஒரு காந்தியவாதியாக முன்னின்று இன்னும் பல ஆண்டுகளுக்கு பரப்புரையும் விழிப்புணர்வும் உருவாக்க வேண்டிய கடமை மிகுந்த பெரியவர் ஐயா சசி பெருமாள் அவர்கள் அலைபேசிக் கோபுரத்தின் மீதேறி இப்படி அநியாயமாகச் செத்துப் போயிருக்க வேண்டாம். அவரது இறப்பு வெறும் அரசியல் நாடகமாக பிறழ் தோற்றம் கொள்ளுமே ஒழிய, அவரது உண்மையான இலக்கை நோக்கி ஒரு அங்குலம் கூட நகராது என்பதுதான் வேதனையான உண்மை.

அரசையோ, அரசு அதிகாரிகளையோ, காவல்துறை நண்பர்களையோ, தீயணைப்புத் துறை அலுவலர்களையோ இந்த மரணத்தில் தூற்ற விரும்புபவர்கள் நிச்சயம் 2016 சட்டமன்றத் தேர்தலோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர்களாகவே இருப்பார்கள், மற்றபடி தொடர்ந்து ஐந்து மணிநேரமாகக் தொண்டை வலிக்கக் கீழே நின்று கத்திக் கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரியும் இந்த சமூகத்தில் வாழ்க்கைக்காகப் போராடும் ஒரு சக மனிதர் தான், உயிரைப் பணயம் வைத்து அந்தக் கோபுரத்தின் மீது கயிற்றைக் கட்டிக் கொண்டு ஏறிய தீயணைப்பு வீரரும் நமது அண்ணனோ தம்பியோ தான் என்பதை வசதியாக நாம் மறந்து விட முடியாது அல்லவா?

*************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: