கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 3, 2015

பாலியல் இணையங்களுக்கான தடை – இன்னொரு "காவி" ஆய்வுக்களம்.

Censored-560x257

பாலியல் உறவு தொடர்பான இணையத்தளங்களை முடக்கும் ஆர்.எஸ்.எஸ் அரசின் முடிவு ஒன்றும் வியப்பான ஒன்றில்லை, இது இந்தியாவில் இணையம் அல்லது மற்ற ஊடகங்களில் வேறெந்த மாதிரியான தனிமனித உரிமைகளைப் பறிக்கலாம் என்பதற்கான ஒரு காவி ஆய்வுக் களம், அவ்வளவே, மற்றபடி இந்தத் தடையால் பெரிய சமூக மாற்றமோ, நன்மைகளோ விளையப் போவதில்லை, மாறாக ஆபத்துக்களே அதிகம். உலகின் பெரும்பாலான இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் பாலியல் உறவுகள் தொடர்பான மஞ்சள் நூல்களை, காட்சிகளை, இணையத் தளங்களைப் பார்வையிடுபவர்களாகவே இருக்கிறார்கள், மேலும் இது பெரிய குற்றமெல்லாம் இல்லை, பாலியல் உறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

கலாச்சாரம் அல்லது பண்பாட்டு விழுமியங்களின் பெயரில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் ஏவப்படும் பல்வேறு சாதி, மதம் சார்ந்த குற்றங்களை விட பாலியல் இணையங்களால் உருவாகும் குற்றம் ஒப்பீட்டு அளவில் குறைவானதே, இந்தியாவை உலுக்கிய "நிர்பயா" கொலை வழக்கில் குற்றவாளிகள் கலாச்சார விழுமியங்களை முன்வைத்தே அவ்வாறான செயலைச் செய்தோம் என்று சொல்வதற்கான உளவியலை எந்தப் பாலியல் இணையமும் உருவாக்கிக் கொடுக்கவில்லை,மாறாக மத நம்பிக்கைகளும், கலாச்சாரத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட போலி உருவகங்களுமே உண்டாக்கின.

 

 பாலியல் உறவு குறித்த காட்சிப் பதிவுகளோ, எழுத்துப் பதிவுகளோ காலம் காலமாக உலக வரலாற்றில் இயல்பாக இருக்கக் கூடிய ஒரு பழக்கம், தொடர்ந்து முன்னேறிய நாடுகள் பாலியல் உறவு குறித்த வெளிப்படையான நிலைப்பாடுகளையும், கல்வியையும் கொடுத்து வரும் வேளையில் இந்திய அரசின் இந்த முடிவு மேலும் ஒரு சிக்கலான நிலைக்கே நமது இளைஞர்களை எடுத்துச் செல்லுமே தவிர ஒரு பயனும் உண்டாகப் போவதில்லை. பாலியல் உறவு தொடர்பான ஊடக உள்ளீடு ஒரு உளவியல் தேவையாகவும் இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட வயதில் மனித உடல் இனப்பெருக்கத்துக்கான மாற்றங்களை அடைகிறது, அடிப்படைத் தேவையான உணவைப் போல இரண்டாம் நிலைத் தேவையான பாலுறவுத் தேவைகளை நோக்கியும் நகர்கிறது, ஆணோ, பெண்ணோ பாலியல் உறவுக்கான தேடலை நுட்பமான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த நிலைகளில் துவக்கி விடுகிறார்கள், தன்முனைப்பான பாலியல் பயிற்சிகளையோ, வேறு வடிவங்களிலான ஊடக வழி உள்ளீட்டுப் பயிற்சிகளையோ பெற்றுக் கொள்கிறார்கள்.

உடலின் பாலியல் தேவை இத்தகைய வடிவங்கள் மூலமாக சமநிலை பெறுகிறது, ஏனைய மனித இயக்கங்களுக்கான அமைதியான பயணத்தை இத்தகைய மாற்று வழிமுறைகள் வடிவமைத்துக் கொடுக்கின்றன, அதிக ஆபத்துக்கள் இல்லாத தனிப்பட்ட மனித மனதின் பாலியல் தீவிரத்தன்மைக்கு இத்தகைய உள்ளீடுகள் ஒரு மட்டுப்படுத்தும் காரணியாக இருக்கிறது, இயல்பான நுட்பமான மனித மனதின் ஈர்ப்புத் தன்மைகளை அவனே அறிந்து கொள்ளவும் இத்தகைய மாற்று வழிகள் பெரிய அளவில் மனிதர்களுக்கு உதவுகின்றன.

ஒரு மிகப்பெரிய மனிதத் திரளைக் கொண்ட இந்திய சமூகத்தில், பாலியல் தேடலுக்கான விழுக்காடு மிக அதிகம், வெவ்வேறு மாற்று வழிகளில் தங்கள் பாலியல் தேடலுக்கான விடைகளை இவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், பதின் வயது மனிதர்கள் அதிகம் வாழும் தேசத்தில் பாலியல் உறவு தொடர்பான வடிகால் ஊடகங்களாக இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த இணையத் தளங்கள் செயல்படுகின்றன, பாலியல் உறவு தொடர்பான முறைப்படுத்தப்படாத நூல்கள், முறைப்படுத்தப்படாத காட்சிப் பதிவுகள் நிழல் உலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தைத் தாண்டி இணையத்தின் வரவும் அது கொடுத்த வரைமுறையற்ற வாய்ப்புகளும் இந்தப் பெருந்திரள் இளைஞர் கூட்டத்துக்கான மிகப்பெரிய வடிகாலாக மாறியது, பெரிய அளவில் உடலியல் தேவைகளை ரகசியமாக அது முடித்துக் கொள்ள உதவியது, முறையற்ற உறவுகளையோ, உடல் வணிக விளையாட்டுக்களையோ நோக்கி நமது இளைஞர்களை செல்ல விடாமல் அது காப்பாற்றியது, குற்றங்களைக் குறைத்தது.

இவை தவிர ஒரு மிக நுட்பமான தனி மனித சுதந்திரத்தை இந்தத் தடை கேள்விக்குள்ளாக்குகிறது, உளவியலோடு தொடர்புடைய வேறு யாருக்கும் தீங்கு விளைக்காத நிலையில் பாலியல் உறவுக் காட்சிகளைப் பார்ப்பது அல்லது படிப்பது என்பது ஒரு தனி மனிதனின் முழு விருப்பம், வேறொரு உயிரை உடல் வழியாகவோ, உளவியல் வழியாகவோ எந்தவிதமான அழுத்தங்களுக்கும் ஆட்படுத்தாத இத்தகைய மாற்று வழிமுறைகளை தடுப்பது ஒருவகையில் அரசு தனிமனிதர்களுக்குள் நுழைந்து அவர்களது உளவியலை அல்லது மனப்பழக்கங்களை ஊடுருவும் ஒரு வன்முறை, நாளை, வேறொரு வகையில் தனி மனிதப் பழக்கங்களை பாதிக்கும் அல்லது குலைக்கும் முடிவுகளை அரசு எடுப்பதற்கான ஒரு முன்னோட்டம், (உதாரணமாக இன்னும் சில நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அரசு இறைச்சி உண்ணும் காட்சிகளைக் கொண்ட இணையங்களையோ, படங்களையோ தடை செய்யக் கூடும்).

பாலியல் உறவு தொடர்பான மாற்று ஊடகங்களின் செயல்பாடுகளை அரசு முறைப்படுத்தலாம், குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற காட்சித் தளங்களை முழுமையாகத் தடை செய்யலாம், வகுப்பறைகளில், கல்விக் கூடங்களில் பாலியல் உறவு தொடர்பான வெளிப்படையான கல்வியை, காட்சிகளை வழங்கி அதன் மூலம் பாலியல் உறவுகள் தேவைகள் தொடர்பான ஒரு முதிர்ச்சியான காலகட்டத்தை நோக்கி வளரும் நாடுகள் செல்லும் வேளையில் இந்தியா இப்படி ஒரு  முடிவின் மூலமாக ஓரடி பின்னோக்கி நகர்கிறது.

உளவியல் மற்றும் உடலியல் தேவைகளின் தீவிரத் தேடலுக்கு ஒரு மாற்று வழியாக இருக்கும் இத்தகைய ஊடகத் தடை என்பது பிற்போக்குத் தனமானது மட்டுமில்லை, மருத்துவ வழிகாட்டுதல்கள் இல்லாத ஒரு தான்தோன்றித்தனமான காவிச் சிந்தனை. குற்றங்களைக் குறைக்கவும், நிஜ உடலைத் தேடிச் செல்லும் இளைஞர்களின் பாலியல் நோய்களைக் காப்பதுமான இத்தகைய மாற்று வழிமுறைகளைத் தடை செய்வது இந்தியா மாதிரியான பெருந்திரள் வளரும் நாடுகளில் குற்றங்களை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

***********

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: