கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 9, 2015

ஒரு கதை எப்படி முடிகிறது?

10_Biorb_30_Black

இந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்வது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான், ஆனாலும் அதிலே ஒரு சிக்கல் இருக்கிறது, நான் இப்போது கதையின் கடைசிப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறேன், ஆகவே கடைசியில் இருந்தே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். உண்மையாகச் சொல்லப் போனால் கதைகள் ஒருபோதும் தொடங்குவதும், முடிவதும் இல்லை, தன் பாட்டில் நீண்டு கிளைத்துக் கிடைக்கிற இடைவெளிகளை எல்லாம் நிரப்பியபடி பயணிக்கும் கதைகளின் ஏதாவது ஒரு துண்டுப் பகுதியில் நாம் ஏறிக் கொண்டு விடுகிறோம் அல்லவா?

அப்படி ஒரு கதை நிகழ்கிற காலத்தில், நானும் என் மகன் அகத்தியனும் நகரத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிற எங்கள் சொந்த ஊரின் இந்த ஏரிக்கு வந்திருக்கிறோம், சதுர வயல்களில் விவசாயம் பார்த்தபடி மனிதர்கள் ஓய்வு நேரத்தின் போது திண்ணைகளில் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள், காலத்தின் நிழல் இந்த ஊரின் ஆன்மத்தில் படிந்து கிடக்கிறது, இந்த ஊரில் விறகுகளால் எரிக்கப்படும் அடுப்புகள் எந்த வீட்டிலாவது புகைந்து கொண்டே இருக்கிறது, அதன் கதகதப்பில் ஒரு தட்டை மடியில் வைத்துக் கொண்டு எரியும் சுவாலைகளின் நிழலைக் கண்களில் ஏந்தியபடி அன்பானவர்களின் அருகே அமர்ந்து  இரவு உணவு சாப்பிடுவதுதான் வாழ்க்கையை எத்தனை நெருக்கமாக உணரச்  செய்திருக்கிறது தெரியுமா? மரக்கிளைகளில் அடைந்து கிடக்கும் இருட்டுக் கதைகள், சுவர்க்கோழிகளின் ஓயாத பிதற்றல், மின்மினிப் பூச்சிகளின் அடர்த்தியான வெள்ளி நிற ஒளியில் இலையசைக்கும் வேப்ப மரக் காற்றின் வாசம்,    இந்தக் கதையைப் படிக்கும் பலருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, இந்த எரிக் கரையின் படித்துறைகளை ஒட்டியபடி   சில நீளக்கால் கொக்குகளும், பழுப்பு நிற மாடுகளும் நின்று கொண்டிருப்பதை எங்களால் இப்போதும் பார்க்க முடிகிறது.

பழுப்பு நிற மாடுகளைக் கண்டால் இப்போதும் எனக்குள் ஒரு விதமான நடுக்கம் தோன்றி மறைவதை என்னருகில் இருந்தால் உங்களால் பார்க்க முடியும், மிகச் சிறிய வயதில் இதே மாதிரியான ஒரு முரட்டுப் பழுப்பு மாடு எனது தாடையில் கொடுத்த உதையின் சுவடுகள் இன்னொரு கதையின் முதுகில் ஏறிப் பயணம் செய்யக்கூடும், ஏரியின் பரப்பில் சில நீர்க் காக்கைகள்  முக்குளித்து எழுவதும், அலைகளை உருவாக்குவதுமாய் இருந்ததை நான் என் மகனுக்குக் காட்டினேன், தொலைவில் திட்டுத் திட்டான மேகங்களைக் கடந்து வெகுநாட்களாய் அங்கேயே நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குடும்பத்தில் இருந்து விலகிப் போன மலைக் குன்று ஒன்றையும் நாங்கள் அகண்ட வானத்தின் அடிவாரத்தில் பார்க்க முடிந்தது, புளிய மரங்களின் கீழே சுதந்திரமாய் ஊர்ந்து போகிற சில அட்டைப் பூச்சிகள் அகத்தியனுக்கு அச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும், அவன் எனது கால்களோடு ஒட்டியபடி நடக்கத் துவங்கி இருந்தான்.

நான் அப்பாவோடு இப்படிப் பல முறை ஈரத் துண்டை இடுப்பில் சுற்றியபடி ஏரிக் கரைகளில் நடந்து போயிருக்கிறேன், இதே கருஞ்சிவப்பு அட்டைப் பூச்சிகள் என்னையும் பயமுறுத்தி இருக்கின்றன. காலம் ஒரு கண்டிப்பான ஆசிரியரின் வகுப்பறையைப் போல இரவும் பகலுமாய் மனித உடல்களைக் கடந்து உயிர்களின் இயக்கத்தை தளர வைத்து விடுகிறது பாருங்கள், அன்றைக்கு இளமையாக இருந்த அதே அப்பாதான், அதே நான்தான், ஆனாலும், நாங்கள் மீண்டும் அப்படி ஏரிக் கரைகளில் நடந்து போக முடியும்  என்று தோன்றவில்லை, மூப்பும், வயதும் மனிதனால் எந்தக் கணத்தில் உணர்ந்து கொள்ளப்படுகிறது என்கிற ரகசியத்தை இயற்கை மட்டுமே வேடிக்கை பார்த்தபடி  நின்று கொண்டிருக்கிறது.

சரி, இப்போது இந்த ஏரியைக் குறித்து உங்களுக்குச் சொல்ல வேண்டும், இந்த ஏரியின் பெயர் "பெரிய சுரண்டை", பெரிய சுரண்டைக்கு இந்தப் பெயர் வந்ததன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது, அப்பத்தாவோடு ஓரிதழ்த் தாமரை பறிக்க வந்த போது ஒருநாள் நான் இந்தக் ஏரிக்கு ஏன் இப்படிப் பெயர் வந்தது என்று அவரிடம் கேட்டேன், மனிதர்களின் தோலைச் சுரண்டி ரத்தம் உறிஞ்சும் சுரண்டை என்கிற பெரிய பெரிய அட்டைப் பூச்சிகள் இந்தக் கண்மாயில் நிறைய இருப்பதால் "பெரிய சுரண்டை" என்று பெயர் வந்ததாக அவர் சொன்னதைக் கேட்டதில் இருந்து குளிக்க வரும்போதெல்லாம் உடலைச் சுற்றிக் பாய்ச்சி கட்டி இருக்கும் கலங்கிய நீரின் பரப்பை ஊடுருவிப் பார்த்தபடியே இருப்பேன் நான்.

இப்போது நாங்கள் ஏன் இந்த எரிக் கரைக்கு வந்து நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய ஆவலாய் இருப்பீர்கள், அதோ அந்தப் படித்துறைக்கு அருகே இருக்கும் மதகடியில் ஒரு பிளாஸ்டிக் பை இருக்கிறது பாருங்கள், அதற்குள் சில மீன்களை நாங்கள் அடைத்து எடுத்து வந்திருக்கிறோம், அவற்றை நாங்கள் எங்கள் நகரத்து வீட்டின் முற்றத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம், புத்தம் புதிதாய் அகத்தியனால் தேடித் தேடி வாங்கப்பட்ட அந்த மீன் தொட்டியின் சுவர்களை உடைத்து வெளியேற முடியாத தங்க நிறக் குட்டி மீன்களை அவற்றின் வழக்கமான வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்புவது என்கிற முடிவில் என்னை விடவும் இப்போது அகத்தியன் உறுதியாக இருந்தான்.

நீண்ட காலமாக இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த அகத்தியன் மனமுவந்து ஒப்புக் கொண்டதற்குக் காரணம் இன்னொரு கதை தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை, ஆனாலும் உண்மை அதுதான்.  நாங்கள் இங்கு வருவதற்கு முன்னாள் சரியாக ஆறு நாட்களுக்கு முன்னொரு விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் அந்தக் கதையை நான் அகத்தியனுக்குச் சொன்னேன்.

அது ஒரு குட்டி மீனின் கதை, தனது தாயோடு மகிழ்ச்சியாக நீந்திக் களித்துக்கொண்டிருந்த அந்தத் தங்க நிறத்தான குட்டி மீன் பிடிக்கப்பட்டு ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அடைக்கப்பட்ட கதை, அகத்தியன் அந்தக் கதையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான், இடையிடையில் சில கேள்விகளையும் கேட்டபடி கதையின் முடிவில் ஒரு பெருமூச்செறிந்து அகத்தியன் இப்படிச் சொன்னான், "எனக்கு மீன் தொட்டி வேண்டாம் அப்பா, நாம் இந்த மீன்களை விடுதலை செய்து விடுவோம்".

சரி, இப்போது நீங்கள் அந்த மீனின் கதையைக் கேட்க ஆர்வமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இந்தக் கதையில் சிக்கல்கள் ஏதும் இல்லை, ஏனென்றால் வழக்கமாக நாம் கேட்கும் கதைகளைப் போலவே இந்தக் கதையும் ஒரு ஊரிலே என்று தான் துவங்கும், அது  ஒரு மிகப்பெரிய ஏரி, அடர்ந்த மரங்கள் சுற்றிலும் கிளைத்துக் கிடக்க, சூரியக் கதிர்கள் கொஞ்சமாய் உள்ளிறங்கி மிதமான சூட்டை நீருக்கு வழங்கி மீன்களின் வாழ்க்கையை நம்பிக்கை கொள்ள வைக்கும் காலநிலை அங்கு எப்போதும் நிலவியது.

Fish-11

ஒரு மழைக்காலத்தின் முன்பகலில் முட்டையிலிருந்து வெளியேறிய இந்த செந்நிறக் குட்டி மீன் முதன்முதலாகத் தனது தாயைத் தான் பார்த்தது, பிறகு தனக்கு முன்னாள் பிறந்த மீன் குஞ்சுகள் பலவற்றையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தது, அடர்ந்து வளர்ந்திருந்த தாயின் செதில்கள்  தனது புதிய குஞ்சுகளை வாஞ்சையோடு பார்த்தபடி வருடிக் கொடுத்தன, கடைக்குட்டி என்பதால் இந்தக் கதையின் நாயகியான தங்கநிற மீன்குஞ்சு கொஞ்சம் செல்லமாய் வளர ஆரம்பித்தது, அவர்களின் வீடு ஒரு கரும்பாறையின் அடிப்புறம் மண்டிக் கிடந்த நீர்ச் செடிகளுக்குப் பக்கத்தில் இருந்தது.

அதிகாலையில் எழுந்து அம்மா தனது குஞ்சுகளை எழுப்பி, நீந்துவதற்கு அழைத்துப் போகும், ஒருவரை ஒருவர் முட்டி மோதியபடி சிரிப்பும், பாட்டுமாய் அவர்கள் கிளம்பி நீருக்கு அடியில் இருக்கிற சுரங்க ஓடையைக் கடந்து  இரை தேடப் போவார்கள், நாள் முழுதும் மகிழ்ச்சியாக நீந்தியபடி இருந்த தனது குஞ்சுகளுக்கு முதல் முறையாக நீரின் மேற்பரப்பைத் தாய் மீன் காட்டிய போது கரையில் பழைய கதையின் நீளக் கால் கொக்குகளைப் போலவே சில நின்று கொண்டிருந்தன, அந்தப் பகுதிக்கெல்லாம் போகக் கூடாதென்றும், மீறிப் போனால் கொக்குகளுக்கு இரையாக நேரிடும் அல்லது மனிதர்களின் வலைக்குள் சிக்கி விட நேரிடும் என்றும் அம்மா கண்டிப்பான குரலில் தனது உடலைக் கருஞ்சிவப்பு நிறத்தில் மாற்றிக் கொண்டு சொன்னாள்.

அடங்காத சில அண்ணன்கள் மட்டும் எப்போதாவது கரையோரங்களுக்குப் போவதை ஒரு சாதனையாகச் சொல்லித் திரிந்தார்கள், கரையில் தாங்கள் பார்த்த பழுப்பு நிற நாரையின் கால்கள் நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் செடிகளின் தண்டுகளைப் போல இருந்ததாக அவர்கள் அம்மாவுக்குத் தெரியாமல் பேசிக் கொண்டார்கள், அம்மா தனது குழந்தைகளை மிகவும் நேசித்தாள், அவர்களின் இன்ப துன்பங்களுக்காகவே ஒவ்வொரு நாளும் நீந்தியபடி வாழ்ந்து வந்த அம்மாவின் வாழ்க்கை குறித்து மீன்குஞ்சுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட அவள் தனது குஞ்சுகளை நேசிப்பதை நிறுத்தவே இல்லை.

மழை பெருகி வாய்க்கால்களின் வழியாக ஏரிக்குள் நுழையும் காலங்களில் காலங்களில் எதிர்ப் புறமாய் நீந்தி மலைப்பாதையில் பயணம் செய்வது குறித்தும், பிறகு திரும்பி வருவது குறித்தும் அம்மா தனது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள், கதிரவனின் ஒளி நீருக்குள் விழுந்து வேர்பரப்பும் இடங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அவை மனிதர்கள் வாழும் கரைப் பகுதிக்குப் பக்கத்தில் இருக்கக் கூடும் என்றும் அம்மா பாடமாய்ப் படித்தாள். சில நேரங்களில்  அவளுடைய வயதான துடுப்புகளும், செதில்களும் களைத்துப் போய் வலியெடுக்கும் போதிலும் தனது குஞ்சுகளுக்காக உணவு தேடுவதையும், நன்மைகளைச் சொல்லிக் கொடுப்பதையும் அவள் நிறுத்தவே இல்லை, கடைக்குட்டியான இந்தக் கதையின் நாயகி அம்மாவுக்கு மிக நெருக்கமாக நீந்தி வளர்ந்து கொண்டிருந்தாள்.

அம்மா ஒரு முறை மலைப்பாதையின் வழியாக தனது மீன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு எதிர்த் திசையில் நீந்திக் கொண்டிருந்த போது மனிதர்களின் தூண்டில் முள்ளில் இருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்தாள், அன்று இரவு முழுவதும் மனிதர்கள் தங்கள் வாழிடங்களை ஆக்கிரமிப்பதாகவும், நம்மைப் போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் எல்லாம் அவர்களின் தேவைக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பது மட்டுமில்லை , அழகிய சின்னஞ்சிறு நாய்களை சங்கிலியால் பிணைத்துத் தங்கள் நடைப் பயிற்சியின் போது எதிர்ப்படும் மனிதர்களிடம் அந்த நாய்களின் ஜாதிப் பெயரை பெருமையோடு  உரக்கக் கூறுகிறார்கள், யானைகளைக் காது மடலில் குத்தி மண்டியிடச் செய்கிறார்கள், , கரடிகளை அவைகளுக்குத் தொடர்பே இல்லாத தெருக்களில் அழைத்துப் போய் தாயித்து விற்க வைக்கிறார்கள் என்று புலம்பித் தீர்த்தாள், தூண்டில் முள்ளில் இருந்து தப்பித்திருந்தாலும், அவளது வாயில் அது குத்தித் கிழித்து விட்டிருந்தது, அந்தக் கொலைகார மனிதர்கள் தாய் மீனைக் காயப்படுத்திய நிகழ்வுக்கு மறுநாள் தாவிக் குதித்து நீரைக் கலக்கி ஆபத்தான காலங்களில் எப்படித் தப்பிப்பது என்று அம்மா தனது குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள். கடைக்குட்டியான தங்க நிற மீன் குட்டி அம்மாவின் வாயில் இருந்து கசியும் குருதியைப் பார்த்தபடி பாடம் படித்தது.

கரும்பாறைத் திட்டின் இரண்டாவது அடுக்கில் எந்நேரமும் உறக்கத்தில் இருக்கும் நண்டு மாமாவுக்கு தாய் மீனின் இரைச்சல் மிகுந்த அந்தப் பயிற்சி எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும், மூன்று நாட்கள் அவர் வேறொரு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருந்தது. திரும்பி வந்த நண்டு மாமா, தாய் மீனிடம் இப்படிச் சொன்னார், ”அவர்கள் வளர்ந்தவுடன் உன்னை மறந்து விடுவார்கள், பார்த்தாயா என் பிள்ளைகளை, உன்னை விடவும் பல மடங்கு அதிகமான பயிற்சிகளையும், அன்பையும் நான் அவர்களுக்கு வழங்கினேன், ஆனால், இன்றைக்கு இந்த வயதான காலத்தில் என்னை அவர்கள் துரத்துகிறார்கள், எனக்கு குறைந்த பட்சம் அவர்களின் வேட்டையில் வீணாகும் உணவைக் கூடக் கொடுக்க மறுக்கிறார்கள்". தாய் மீன் நீண்ட நேரம் அமைதியாக இருந்து விட்டு இப்படிச் சொன்னது,  "நீ உன் வளைந்த கால்களை வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா!!! என் குழந்தைகள் உறங்கப் போகிறார்கள்". பற்களை நறநறவென்று கடித்தபடி பக்கவாட்டில் நகர்ந்து கொண்டார் நண்டு மாமா. அம்மாவைப் பொறுத்தவரை இறந்த காலம் என்பது நாங்கள் உறங்கிப் போகும் இரவுப் பொழுதாகவும், நிகழ் காலம் என்பது நாங்கள் விழித்திருந்து நீந்தும் பகல் பொழுதாகவும் மட்டுமே இருந்தது.

கடைக்குட்டியும், இந்தக் கதையின் நாயகியுமான மீன்குட்டி கொஞ்சம் வளர்ந்து பெரியவளான போது ஒருநாள் இரவில் நல்ல மழை பெய்து நீர் பெருகி இருந்தது, மறுநாள் காலையில் அவர்கள் வழக்கம் போலவே நீந்தப் போனார்கள், சுரங்க ஓடையைத் தாண்டி சல்லடை போல வளர்ந்திருந்த செடிகளுக்கு இடையே அவர்கள் கடந்து போன போது தான் அந்த நிகழக் கூடாத விபத்து நேர்ந்தது. நகரத்தின் ஓரத்தில் இருந்து வந்திருந்த மனிதர்கள் விரித்து வைத்திருந்த கரண்டி வலைக்குள் கடைக்குட்டி மாட்டிக் கொண்டு விட்டாள், கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்த அம்மாவின் கண்களில் கடைக்குட்டி தென்படவில்லை, வேகமாகத் திரும்பி நீந்திய அம்மாவின் காதில் கடைக்குட்டியின் அலறல் கேட்கத் துவங்கியது, “அம்மா, இங்கிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை, என்னை எப்படியாவது காப்பாற்று, காப்பாற்று” என்கிற கடைக்குட்டியின் அலறல் கேட்டுத் தாய் மீன் தவித்துத் துடித்தது, அதன் கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரில் ஏரித் தண்ணீர் மூழ்கி மூச்சுத் திணறியது.

கரண்டி வலையைச் சுற்றியபடி நீண்ட நேரம் நீந்திக் கொண்டிருந்த தாய் மீனின் அழுகையை உணரும் ஆற்றல் அந்த நகரத்து மனிதர்களுக்கு இருக்குமா என்ன, அவர்கள் இறுதியாக கரண்டி வலையை மேலே தூக்கி மீன்களை எண்ணத் துவங்கினார்கள். தாய் மீன் கரையோரத்தில் கிடந்த குப்பைகளுக்கு இடையே புகுந்து தனது உயிருக்குயிரான கடைக்குட்டியைக் கடைசியாக ஒருமுறை பார்க்க முயற்சி செய்தது, ஆனால் மனிதர்களோ மீன்களுக்கு எட்டாத ஒரு மலைப்பாதையில் நடக்கத் துவங்கி இருந்தார்கள்.

அந்த நகரத்து மனிதர்கள் கடைக்குட்டி மீனோடு சேர்த்து பதினாறு மீன்களைப் பிடித்து இருந்தார்கள், அவர்கள் புகை பிடித்தபடி அந்த மலைப் பாதையின் வழியாக நடந்து நகரத்தின் ஓரத்தில் இருந்த ஒரு வீட்டுக்கு வந்தார்கள், மீன்கள் அடைக்கப்பட்டிருந்த கூடையில் இருந்து சில பெரிய மீன்களை அவர்கள் வெளியே எடுத்துக் கொன்று பொறித்துத் தின்றார்கள்,  அந்த வீட்டில் தகிக்க முடியாத வெப்பம் சூழ்ந்திருந்தது, புகையும், கூச்சலும் நிரம்பிய அந்த வீட்டின் ஒரு மூலையில் அன்றைய இரவு முழுதையும் கடைக்குட்டி மீனோடு தப்பித்த இன்னும் சில மீன்களும் கழிக்க வேண்டியிருந்தது, வண்ண மீன்களாய் இருந்ததால் அவை தப்பிக்க முடிந்தது என்கிற உண்மையை கடைக்குட்டி மீன் அறிந்திருக்கவில்லை.

இறப்புக்கு வெகு அருகில் சேறு நிரம்பிய ஒரு கூடை நீரில் அந்த இரவைக் கழித்த போது கடைக்குட்டி மீனுக்கு அம்மாவின் நினைவுகள்  பொங்கி எழுந்தன, கரும்பாறைக்கு அடியில் பாதுகாப்பாக உறங்கும் போது கூட அம்மா பல முறை விழித்துத் தங்களைப் பார்த்துக் கொண்டதை கடைக்குட்டி நினைத்துக் கண்ணீர் விட்டது. "அம்மா எத்தனை அழகானவள், அம்மா நம்மை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டாள், அவளது செதிளுக்குள் ஒண்டியபடி நிலவொளி மெல்ல நீருக்குள் கசியும் விழுதுகளைப் பார்த்தபடி  எத்தனை இரவுகளை நாம் கடந்திருக்கிறோம்" என்று கடைக்குட்டி மீன் அழுதபடி உறங்கிப் போனது,

how-to-introduce-new-fish-into-a-tropical-fish-tank-525d583a87ba4

மறுநாள் காலையில் அவர்களில் ஒருவன் மீன் கூடையைச் சுமந்தபடி நகரத்துக்குள் நுழைந்தான், நகர மனிதர்கள் தங்கள் குழந்தைகளோடு பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள், தாயின் அணைப்பில் செல்லும் குழந்தைகள், குழந்தைகளின் சிரிப்பில் கரையும் பெண்கள், தொப்பியோடு விரைப்பான வணக்கத்தைத் தனது மேலதிகாரிக்குச் செலுத்தும் காவலர் என்று யாருக்கும் இந்தக் கூடையின் ஒரு மூலையில் ஒடுங்கியபடி நடுங்கிக் கொண்டும், அழுது கொண்டும் தாயைக் குறித்து கவலை கொள்ளும் கடைக்குட்டியின் குரல் கேட்கப் போவதில்லை. இந்த உலகத்தை அவர்கள் முற்றிலுமாகக் கைப்பற்றி விட்டார்கள், அவர்களிடம் அறிவும், மொழியும் இருக்கிறது, அவற்றின் உதவியோடு ஏனைய உயிர்கள் அனைத்தினது சுதந்திரத்தையும் அவர்கள் பறித்து எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நீண்ட தொலைவு நடந்து சென்று "அக்குவா வேர்ல்ட்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தான் அந்த மனிதன், கடைக்குட்டியோடு சேர்த்து ஏழு மீன்களை அந்தக் கடையின் முகப்பில் அமர்ந்திருந்த இன்னொரு மனிதனிடம் காட்டிப் பின் மீன்களை ஒரு பளபளப்பான கண்ணாடித் தொட்டியில் விட்டுப் பணம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான். ஒரு மிகப் பெரிய ஏரியில் இருந்து கடைக்குட்டியின் வாழ்க்கை இப்படித்தான் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இடம் மாறியது. காலத்தின் செதில்களால் இழைத்துச் செய்யப்பட்ட நகர மனிதர்களின் கண்ணாடிக் குடுவைக்குள் அந்தக் கடைக்குட்டி மீனும், பிரிவின் வலிகளால் நிரப்பப்பட்ட பெயர் தெரியாத ஏரியில் தாய் மீனும் அழுது தவிக்க மனிதர்களின் மகிழ்ச்சிக்கான காட்சிப் பொருட்களாக ஏனைய உயிர்கள்  சிறைக்குள் தள்ளப்பட்டன.

இந்தக் கதையைத் தான் நான் அகத்தியனுக்குச் சொன்னேன், இந்தக் கதையை நான் சொல்லி முடித்த போது அகத்தியனின் கண்கள் கலங்கி இருந்தன, அவன் ஏறக்குறைய அழுது கொண்டே என்னிடம் “நாம் தொட்டியில் இருந்து மீன்களை விடுதலை செய்து விடலாம்” என்று ஒப்புக் கொண்டான். இந்த மீனின் கதையை நான் அகத்தியனுக்குச் சொல்வதற்குச் சரியாக பதினைந்து நாட்களுக்கு முன்னாள் முன்னொரு ஞாயிற்றுக் கிழமையில் நாங்கள் ஒரு அழகான மீன் தொட்டியை வாங்குவதற்காகப் புறப்பட்டோம்,

அகத்தியன் ஒரு மீன் தொட்டியை வாங்கி விட வேண்டுமென்பதில் மிகுந்த பிடிவாதமாய் இருந்தான், அவனுடைய நண்பர்கள் பலரது வீட்டில் வகை வகையான மீன் தொட்டிகள் இருப்பதாகவும், அவர்கள் தினந்தோறும் வகுப்பறைகளில் மீன்களின் வகைகள் குறித்துப் பேசிக் கொள்வதாகவும் என்னிடம் அடிக்கடி சொல்வான், முதல் நாள் இரவில் அழுது அடம் பிடித்து மீன் தொட்டி வாங்குவதற்கான அனுமதியை என்னிடம் இருந்து பெற்று விட்டான்.,

அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமான மனநிலையில் இருந்த அகத்தியனின் முகம் எனக்குக் கவலை அளித்தது, மீன் தொட்டிகளை  விற்பனை செய்யும் அந்தக் கடையை நோக்கி என்னை அழைத்துப் போனான் அகத்தியன்,  ஓரிடத்தில் எனது கைகளை விடுத்து வேகமாக நடக்கத் துவங்கிய அகத்தியனின் கைகள் உயர்ந்து அந்தப் பெயர்ப் பலகையின் மீது எனது கவனத்தைக் குவிக்க முயன்றன, நிமிர்ந்து ஒரு முறை அந்த ஆங்கில எழுத்துக்களை நான் படித்தேன், "அக்குவா வேர்ல்ட்".

இனி நாம் கதையின் துவக்கப் பகுதிக்கு வர வேண்டும், ஏனெனில் கதைகளை முடித்து விட வேண்டும் என்பது ஒரு விதியாகவே இருக்கிறது. உண்மையில் எந்தக் கதையும் முடிந்து போவதே இல்லை, மீன் கதையை எடுத்துக் கொள்ளுங்களேன், தவித்துப் போன தாய் மீனின் கதை இன்னும் மீதமிருக்கிறது, மனிதர்கள் பிடித்துப் போன கடைக்குட்டி மீனின் கதை எங்கேனும் ஒரு தொட்டிக்குள் தொடரக் கூடும், ஆனாலும், கதைகளை முடித்து விட வேண்டும் என்பது மனிதர்களின் இலக்கியத்தில் ஒரு அடங்காத விதியாக இருக்கும் பட்சத்தில் என்னால் விதியை உடைக்க முடியாது. ஆகவே கதை என்கிற காலத்தின் சிறிய துண்டு ஒன்று இங்கே முடிவடைகிறது அல்லது உங்களால் வாசித்து முடிக்கப்படுகிறது.

 

******************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: