கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 16, 2015

ஒரு துரத்தப்பட்ட "ஓரிகாமி".

origami-flowers1

இந்த உலகம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியாத சொற்களால் கட்டப்பட்டிருக்கிறது, சொற்களின் பின்னே உயிர், உடல், படை, பொருள், அரசியல், வாழ்க்கை என்று எல்லாம் அணிவகுத்து அடிமைகளைப் போல நடப்பதை உங்களால் உணர முடியும், உறுதி கொடுக்கப்பட்ட சொற்கள் நம்பிக்கையையும், கழுவி விடப்பட்ட சொற்கள் துயரத்தையும் பரப்பியபடி அனிச்சையான காற்றில் மலரும் மலர்களைப் போல அலைவதைப் பார்த்திருக்கிறேன்.

காத்திருத்தலின் சொற்கள், காதலின் சொற்கள், போர்க்களத்தில் பாதி உச்சரிக்கப்பட்டு தோட்டாக்களால் விழுங்கப்பட்ட சொற்கள், அவமானத்தின் சொற்கள், பிரிவில் கருகிப் போன சொற்கள், மகிழ்ச்சியில் கண்ணீராய்த் திரளும் சொற்கள் என்று சொற்களின் கூர்மையான முனைகள் வளி மண்டலத்தின் வெளியில் கட்டப்பட்ட தோரணங்களைப் போல ஆடிக் கொண்டிருக்கின்றன. தன்னிடம் இருந்து பிரிந்து போன சொற்களின் பின்னே தான் மனிதனின் காலடித் தடங்கள் பயணம் செய்கிறது,

இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான ஒரு வழக்கை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அவர்கள் பேரண்டத்தின் வெளியில் சிதறடிக்கும் சொற்களை கருப்பு சிவப்பு வண்ணத்துப் பூச்சியின் பாதையில் தும்பைச் செடிகளோடு விரட்டி அலைந்து பிடித்திருக்கிறீர்களா? இருவருக்கும் நிறைவான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனடியாக அதைச் செய்து முடித்து விடுங்கள், உயிர்ப்பும், உற்சாகமும் நிரம்பிய மனிதர்களாய் வாழ ஒரு எளிய வழி இருக்கிறது, குழந்தைகளோடும் அவர்களின் வினோத உலகத்தோடும் நெருங்கி வாழ்வது.

பார்க்க முடியாத நிலப்பரப்புகளைப் பார்க்க நம்மிடம் இருக்கும் காதலைப் போல இதுவும் அற்புதமானது. நிறைமொழியை பள்ளியில் விட்டு விட்டு படிக்கட்டுகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன், வாசலில் வெள்ளை மீசையோடு பெரிய குச்சியைக் கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்த வாயிற் காக்கும் பெரியவர் சிரித்தார், தொடர்ந்து அவரது இயக்கத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன், அவர் குழந்தைகளை மிரட்டுவார், ஆனால், குழந்தைகள் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக இன்னும் நெருக்கமாக அவரிடம் போகிறார்கள், மாறிப் போன பென்சில்களையும், ரப்பர்களையும் குறித்த பஞ்சாயத்துக்களை அவரிடம் சில குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தீவிரமாக அந்தப் பஞ்சாயத்துக்கான தீர்வுகளை அவர் இருதரப்புக் குழந்தைகளிடமும் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் வாழ்வின் மிக முழுமையான காட்சியாக நான் உணர்கிறேன், தான் செய்கிற வேலையை முழுமையான ஈடுபாட்டோடும், குழந்தைத்தனமான அன்போடும் செய்கிற எவரையும் நமக்குப் பிடித்து விடுகிறது, அத்தகைய மனிதர்களிடம் குழந்தைகள் ஒட்டிக் கொண்டு விடுகிறார்கள்.

papier_vouwen_een_ware_kunst

நான்கு அல்லது ஐந்தாம் வகுப்புப் படிக்கிற போதென்று நினைவு சிவகங்கைத் தெப்பக்குளத்தில் கட்டுமான வேலைகளைச் செய்து முடித்துவிட்டுக் குளித்துக் கொண்டிருக்கிற மனிதர்களையும், களைத்த முகத்துடன் வாயோடு கட்டப்பட்டிருக்கும் புற்கள் நிரம்பிய சாக்கிலிருந்து வேண்டா வெறுப்பாக முதுகுக் கொசுக்களை வாலால் விரட்டியபடி நின்றிருக்கும் குதிரை வண்டிகளையும் வேடிக்கை பார்த்தபடி வீட்டுக்குத் திரும்பும் மாலைப் பொழுதுகள் நினைவில் வருகிறது.

அப்படி ஒரு மாலையில் நான் அந்தப் பெரியவரைப் பள்ளி வாயிலில் பார்த்தேன், வண்ணக் காகிதங்களை வெட்டியும், மடக்கியும் மலர்களைச் செய்து கொண்டிருந்தார், அவரது கண்களில் காகித மலர்களை விற்கிற ஆர்வத்தை விட நான் காகிதங்களை வெட்டியும் மடக்கியும் அழகிய பூக்களை உருவாக்குபவன் என்கிற பெருமை நிரம்பி இருந்தது, நாவல் பழங்களையும், சவ்வு மிட்டாயையும் கூடைகளில் வைத்து விற்கும் வழக்கமான மனிதர்களுக்கு இடையே இவர் காகித மலர்களைச் செய்து கொண்டிருந்தார்.

 

வாங்கும் கூட்டத்தை விட வேடிக்கை பார்க்கிற கூட்டம் அதிகம் அங்கே, அந்தக் காகித மலர்கள் என்னுடைய மனதையும் கொள்ளை கொள்ளப் போதுமான அழகு கொண்டவையாக இருந்தன, அப்பாவுக்குக் குழந்தைகளிடம் வாங்கித் தின்பதற்கான காசு கொடுக்கும் பழக்கம் அறவே இல்லை, எனக்கோ அந்த மலர்களில் ஒன்றை வாங்கி விட வேண்டும் என்கிற தீவிர ஆர்வம். வேடிக்கை பார்க்கிற சக மாணவர்களோடு அவருடைய கைகள் செய்யும் அற்புதங்களை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஜப்பானிய "ஓரிகாமி" வண்ண மலர்களைப் போல அவர் கரங்களில் இருந்து மலர்கள் பூத்துக் கொண்டிருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக மாலையின் கதிர்கள் ஆவாரம் பூக்களின் நிழலை நெடிதாகச் செம்மண்ணில் வீழ்த்திக் கொண்டிருந்த அந்த மாலையில் கடைசியாக நான் அவரிடம் போனேன், "ஐயா, நீங்கள் வீட்டுக்கு வர முடியுமா? நான் உங்களிடம் இருந்து ஒரு காகித மலரை வாங்க வேண்டும், ஆனால், என்னிடம் பணமில்லை, எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால் அப்பாவிடம் பணம் வாங்கி உங்களிடம் கொடுப்பேன்" என்று மெல்லிய குரலில் அவரிடம் வேண்டுகோள் வைத்தேன்.

"தம்பி உன் வீடு எங்கே இருக்கிறது?"

"என் வீடு NGO காலனியின் "பி" ப்ளாக்கில் இருக்கிறது, வீட்டு எண் "46""

உண்மையில் பள்ளியில் இருந்து வெகு தொலைவில் இருந்தது வீடு, சிவகங்கையின் கிழக்கு எல்லையின் முடிவில் ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த அரசு அலுவலர் குடியிருப்பு நீண்ட நெடுந்தொலைவு, ஏறத்தாழ 5-6 கிலோமீட்டர்கள் இருக்கலாம், ஒரு 25 பைசா விற்பனைக்காக எந்த வணிகரும் இவ்வளவு தொலைவைக் கடந்து வருவார் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அந்தப் பெரியவர்,

"சரி தம்பி, நான் வருகிறேன், நீ வீட்டுக்குப் போ" என்று சொன்னார்.

நம்பிக்கை கொஞ்சம் குறைவு தான், ஆனாலும் ஒரு எதிர்பார்ப்போடு வீட்டுக்கு ரிக்சாவில் வந்து சேர்ந்தோம், வீட்டில் அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, அப்பா வருவதற்கு எப்படியும் 7 மணி ஆகலாம், அம்மா, எங்கோ கடைக்குப் போயிருக்க வேண்டும், சாவி பக்கத்துக்கு வீட்டில் இருந்தது. பெரியவரை மறந்து விட்டு வேறு ஏதோ செய்து கொண்டிருந்தோம்.

ஆறு மணியிருக்கும், வலது கைகளில் காகித மலர்களைச் சுமந்தபடியும், நீலநிறத் தோல் பையில் இடது கையை நுழைத்தபடியும் திடுமெனப் படிகளுக்குக் கீழே காட்சி அளித்தார் ஓரிகாமிப் பெரியவர். எனக்கோ தூக்கி வாரிப் போட்டது. அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை, இந்த முதியவரோ இந்தச் சிறுவனின் பேச்சை நம்பி இத்தனை தூரம் வந்திருக்கிறார், அவரை ஒரு காகித மலர்கள் விற்கிற வணிகர் என்கிற மனநிலையைத் தாண்டி அவருடைய கலையை நேசிக்கும், அவருடைய கலையால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவனாக அப்போது நானிருந்தேன், அவர் வாசலிலேயே அமர்ந்து கொண்டார்.

origami-flowers-300x176

நேரம் கடந்து கொண்டே இருக்க அவரை வெகு நேரம் காக்க வைக்கிறோம் என்கிற குற்ற உணர்வில் மனம் பேதலிக்க, 25 பைசாவைத் தேட ஆரம்பித்தேன், வெண்கலத்தால் ஆன வழக்கத்தில் இருந்து அழிந்து போன பத்துப் பைசா நாணயங்கள் இரண்டு ஒரு டப்பாவில் இருந்தது, அவற்றை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வருவதற்கும், அம்மா படிகளில் ஏறி வருவதற்கும் சரியாக இருந்தது. அம்மாவுக்கு அநேகமாகக் குழப்பம், யார் இந்தப் பெரியவர், நான் என்ன கொடுக்கப் போகிறேன் என்கிற வினாக்களோடு பெரியவரைப் பார்த்தார்கள்.

பெரியவர், எழுந்து அம்மாவுக்கு வழி விட்டார், அம்மா, என்னிடம் நிகழ்ந்தவற்றைக் கேட்டறிந்து கொண்டார், என் கைகளில் இருந்த நாணயங்களைப் பிடுங்கிக் கொண்டார்.

 

"ஏய்யா, அவன்தான் சின்னப்பய, ஏதோ சொல்றான்னு, நீங்களும் வந்து இப்டி வீட்ல உக்காந்திருக்கீங்களே, கெளம்புங்கய்யா மொதல்ல" ஏறக்குறைய துரத்தல், பெரியவர் அவமானத்தால் குறுகியவரைப் போலிருந்தார், அவருடைய கைகளில் மலர்கிற காகித மலர்களை யாரோ கிழித்து எரிவதைப் போன்ற வலியோடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், அம்மாவின் கைகள் எனது முதுகில் வலுவாக இறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த வலியை விட அந்தப் பெரியவரை நான் அவமானப்படுத்தி அனுப்புகிறேன் அன்பது அதிக வலியூட்டுவதாக இருந்தது.

"அம்மா, புள்ளைய அடிக்காதீங்க" படிகளில் இறங்கிய போது காற்றைச் சலனம் செய்த அந்தப் பெரியவரின் சொற்கள் இன்னும் உயிர்ப்போடு எனக்குள் ஒரு நெருஞ்சி முள்ளின் கூரிய முனைகளைப் போல இருக்கிறது. அந்த வண்ணக் காகித மலர்கள் மாலைச் சூரியனின் கதிர்களை எதிரொலித்தபடி காற்றில் அசைந்து என் கண்களில் இருந்து மறையும் வரை நான் அந்தப் பெரியவர் போன பாதையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.வாழ்க்கையில் திரும்பச் சந்தித்து மன்னிப்புக் கேட்க விரும்புகிற பட்டியலில் எப்போதும் இந்த ஓரிகாமிப் பெரியவரின் காகித மலர்களுக்கு இடம் உண்டு.

origami-flower

"நீ வீட்டுக்குப் போ தம்பி, நான் வருகிறேன்" என்கிற அவரது சொற்களை அவர் காப்பாற்றி விட்டார்.

"ஒரு காகித மலரை வாங்கிக் கொள்கிறேன், வீட்டுக்கு வாருங்கள் ஐயா" என்கிற என்னுடைய சொற்கள் கேட்பாரற்ற அனாதைக் குழந்தையைப் போல அலைகிறது.

இப்படி எத்தனை எத்தனை கண்ணுக்குத் தெரியாத சொற்களால் நிரம்பி இருக்கிறது இந்த பிரபஞ்ச வெளி, சுற்றி அலைகிற நிறைவேறாத சொற்கள் பின்பொரு நாளில் உயர உயரப் பறந்து நிலைகொண்டு நட்சத்திரங்களாய் உருமாறிக் கண் சிமிட்டியபடி நம்மைக் கேலி செய்கின்றன, நாம் ஏதுமறியாதவர்களைப் போல நட்சத்திரங்களைப் பார்ப்பதை இப்போதெல்லாம் தவிர்த்து விடுகிறோம்.

 

**************

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: