சமகாலத்தில் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய பல்வேறு பண்புகளோடு அரசியல் தலைவர்களும், வெற்றி பெற்ற மனிதர்களும், அறிவுச் சுடர் பொங்கும் பேராசிரியர்களும், பல்வேறு விருப்பத் துறை சார்ந்த தலைவர்களும் இருக்கிறார்கள், ஆனால், அவர்களை எல்லாம் விடுத்து எமது காலத்தில் வாழ்ந்திராத ஒரு கிழவரை, அவரது நூல்களை, அவரது சொற்களை, அவரது உரைகளை என்னைப் போலவே இன்னும் இங்கே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இளைஞர்களும், மாணவர்களும் படிக்கிறார்கள், தீவிரமாக நேசிக்கிறார்கள், கடைபிடிக்கிறார்கள், பின்தொடர்கிறார்கள் என்றால் அது ஒரு தற்செயலான, தாக்கங்கள் ஏதுமற்ற முக்கியத்துவம் இல்லாத நிகழ்வாக இருக்குமா?
சாதிப் பிரிவினைகளும், இந்திய தேசத்தின் வர்ண வேறுபாடுகளும் உண்மை என்று நம்ப வைப்பதற்கான எல்லா உள்ளீடுகளையும் நான் பெற்றிருந்த ஒரு காலம் அது, “பார்ப்பனர்கள் உயர் சாதியினர் என்றும், பறையர்கள் கீழ் சாதியினர்” என்றும் நான் நம்ப வைக்கப்பட்டிருந்தேன், பல்வேறு இடங்களில் அத்தகைய மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன், வகுப்பில் “ஒரு பிராமண மாணவனால் தான் கர்நாடக சங்கீதத்தைச் சரியாகப் புரிந்து பாட முடியும்” என்று சொன்ன ஆசிரியரைக் கடந்து வந்திருந்தேன், திருமணங்களுக்கு வந்துவிட்டுக் “கலர்” குடித்துச் செல்பவர்களை, சேரிக்குள் நுழையாமல், வேப்பமரத்தடியில் நின்று மாடு திறக்கும் அம்பலக்காரர்களை, கல்வி, பொருள், திறன்கள் எல்லாம் பெற்ற சக மாணவனாக இருந்தும் என்னோடு சேர்ந்து விளையாடக் கூடாது என்று சொன்ன நண்பனின் பெற்றோர்களை என்று வழக்கமாக இந்திய சமூகத்தில் நிகழும் சாதியின் கோரப் பிடியில் சிக்கி நம்பிக்கையை இழக்க இருந்த, மனவலிமையை மீட்கப் போராடுகிற ஒரு மாணவனாக இருந்தேன்.
வழக்கமாக அப்பா கொடுக்கிற நூல்களை வேண்டா வெறுப்போடு படிக்கும் காலம் அது, அப்பா, ஒருநாளைக்கு ஒரு திருக்குறள் என்று கட்டளை இட்டிருந்த காலம் அது, அன்று அப்பா கொடுத்த ஒரு நூல், பெரியார் குறித்த ஒரு திராவிடர் கழக வெளியீடு, ஆழ்ந்த ஈடுபாடு ஏதுமில்லாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் சொற்றொடர் எனது உள்ளுணர்வுக்கு ஏதோ சொன்னது.
“மனிதன் சுயமரியாதையையும், தன் மீதான மதிப்பையும் உயிரை விட மேலானதாகக் கருத வேண்டும், மானமும், அறிவுமே மனிதர்க்கு அழகு, ஆகவே, புராணங்களும், மதப் புளுகு மூட்டைகளும் சொல்கிற பார்ப்பான் பிறவியிலேயே உயர்ந்தவனாகப் பிறக்கிறான் என்பதை நம்பாதீர்கள், உங்களை அடிமையாகவே வைத்திருக்க அவன் செய்கிற தந்திரம் அது”
எனது உண்மையான கல்வி அங்கே தான் துவக்கம் பெற்றது, எந்த மனிதனும் ஒருவனை ஒருவன் உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ பிறப்பது அறிவியலின் படி சாத்தியமற்ற முட்டாள்தனமான நம்பிக்கை என்கிற உண்மையான கல்வியையே எனக்குள் உருவாக்கியது பெரியாரின் அந்தச் சொற்கள் தான், மதம் சொல்கிற அல்லது செயல்படுத்துகிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டும், மொழியைக் குறித்த பெரிய அளவிலான ஈடுபாட்டை இழந்தும் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு மொழி இனக்குழுவை, அவரது வருகை ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தை நோக்கித் தள்ளியது, அவர் தெருக்களெங்கும் பேசினார், அவர் பயணம் செய்யாத ஊரே தமிழகத்தில் இல்லை என்கிற அளவில் வாழும் காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு தலைவராக அவர் இருந்தார், மக்களை அவர் நேசித்தார், மொழியின் மீது அற்புதமான காதல் கொண்டிருந்தார், வளர்ச்சியின் மீதும், அறிவியலின் மீதும் அளப்பரிய நம்பிக்கை கொண்டவராக மூர்க்கமாக எந்த விளைவுகளையும் பொருட்படுத்தாத ஒரு போர்வீரனைப் போல அவர் தமிழக சமூகச் சூழலில் போராடினார். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார், அவரது இயக்கம் பழம்பெரும் அழுகிப் போன நம்பிக்கைகளைச் சிதைக்கும் வாள் வீச்சாக இருந்தது.
இன்றைய தமிழ்ச் சூழலில் பெரியாரை எந்த ஒரு இனக்குழுவும் மறுதலிக்கவில்லை, பெரியாரின் போராட்டங்களால் அவரது மூர்க்கத்தனமான மூட நம்பிக்கை எதிர்ப்பால், அவருடைய தீர்க்கமான பார்ப்பனீய எதிர்ப்பால் தான் இன்று தமிழக அரசியல் இயக்கங்களும், அறிவுலகமும் ஏனைய மாநிலங்களை விட நம்மை வெகு தொலைவு நகர்த்திச் சென்றது, அவரது சிந்தனைகளே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் கல்வியையும், வேலை வாய்ப்புகளையும், பொருளாதார வளத்தையும் ஓரளவுக்குக் கொண்டு சேர்த்தது. தனி மனித விளம்பரங்களுக்குக் கட்சி நடத்தும் ஒரு சில ஒட்டுண்ணித் தமிழ்த் தேசியக் குழுக்களையும், அடிப்படைவாதக் காவி அரசியல் இயக்கங்களும் தவிர தமிழகத்தின் பெரும்பான்மையான வெகுமக்களின் மனதில் பெரியார் ஒரு மகத்தான ஜனநாயகச் சிந்தனைகள் கொண்ட ஒரு தலைவர், அது மட்டுமல்ல, ஒட்டு மொத்த பொது சமூக மனநிலையிலும் ஜனநாயகத்தின் பண்புகளை உரமேற்றிய ஒரே தலைவரும் அவரே.
பார்ப்பனீயம் என்பது எப்படி ஒரு கோட்பாடாக இருக்கிறது, மனித உடலை வெறுப்பதும், மனிதன் உருவாக்குகிற, நம்புகிற கோட்பாடுகளை வெறுப்பதும் வெவ்வேறானது என்று பெரியார் பல இடங்களில் சொல்லி இருக்கிறார், நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன்? என்கிற கேள்வியைப் பல மேடைகளில் அவர் முழங்கி இருக்கிறார், தெளிவாக அதற்கான காரணங்களை அவரே விளக்குகிறார்.
“பாப்பனர்கள் என்பவர்கள், இப்படியான கீழான, மனித குலத்துக்கு விரோதமான பிரிவினைகளையும், அதன் மூலமாக உழைப்புச் சுரண்டலையும், துவேசத்தையும் பரப்புகிற காரணத்தாலே நாம் அவர்களை வெறுக்க வேண்டியாதாய் இருக்கிறது.”
சமூகத்தில் பிறவித் தகுதிகளையும், முன்னிலை வகிக்கிற நிலைப்பாடுகளையும், “சாமி” என்கிற பெருமைக்குரிய உளவியல் சொகுசையும் பல காலமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்த “சோ கால்ட்” பார்ப்பனீய உளவியல் சமூகக் குழுவுக்கு, அவர் தனது உரைகளாலும், தனது அரசியல் இயக்கங்களாலும், பிரச்சாரங்களாலும், எழுத்தாலும், கிடைக்கிற எல்லா வாய்ப்புகளைக் கொண்டும் ஆப்படித்தார். பொது சமூகத்தில் பார்ப்பனர் என்றால் நெடுங்காலமாக இருந்த அச்சம் கலந்த சமூக மரியாதையை அவர் குலைத்தார். அதுவரை உலகின் தலைசிறந்த அறிவாளிகள் என்றும், கல்வியையும், உயர் பதவிகளையும் அடையத் தகுதியான ஒரே இனக்குழு என்று அவர்களே உருவாக்கி வைத்திருந்த ஒரு லாபி மனநிலையை அவர் அடித்து நொறுக்கினார்.
இந்த ஆறாத உளவியல் சினம் அவருடைய தலைமுறையில் வாழ்ந்த பார்ப்பன சமூக குழு உறுப்பினர்களை ஒரு தீவிர வெறுப்புணர்வுக்குள் தள்ளியது, அவர்கள் அப்போதைக்கு ஒடுங்கிய மனநிலையில் இருந்தாலும் தங்கள் குடும்பங்களில் இளைய தலைமுறைக்கு இந்த வெறுப்புணர்வை மடை மாற்றினார்கள், பெரியார் உண்மையில் சமூக அறிவியலின் படி என்ன செய்தார் என்பதைக் கண்டறியும் ஆய்வுகளை விடுத்து அவர் எங்கே எல்லாம் தவறு செய்திருக்கிறார் என்று கண்டுபிடிக்கும் ஒரு நவீனத் தலைமுறையை அவர்களே உருவாக்கினார்கள். அந்த வெறுப்புணர்வு அவர்களை மீண்டும் மீண்டும் பொது சமூகத்தில் இருந்து விலக்கியே வைக்கிறது என்ற உண்மையை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். பெரியாரின் வாழ்க்கையும், அரசியலும் மானுட குலத்துக்கு என்ன நன்மைகளை வழங்கியது என்ற புரிதலுக்குள்ளும், ஆய்வுகளுக்குள்ளும் பார்ப்பனீய உளவியல் செல்ல மறுக்கிறது. அந்த மறுதலிப்பின் தொடர்ச்சியே, அந்த வெறுப்புணர்வின் தொடர்ச்சியே இப்போது சோ ராமசாமியாகவும், சுப்ரமணிய சாமியாகவும், பீ. ஏ. கிருஷ்ணனாகவும், பத்ரி சேஷாத்ரியாகவும், இன்னும் பல பெயர்களிலும் தொடர்கிறது.
ஆனால், இறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும், பெரியார் முதலில் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது, மானுடத்தை எப்படி நேசிப்பது என்கிற அரிச்சுவடியைத் தான், அவர் எங்களுக்கு உறுதியாகக் கற்றுக் கொடுத்தது என்ன தெரியுமா?, “உலகம் என்ன உள்ளீடுகளைக் எனக்குக் கொடுத்தாலும், நான் ஒரு சுயமரியாதையும், தன் மதிப்பும் கொண்ட மனிதன் என்கிற அடிப்படை அறிவை மறக்க வேண்டாம்” என்பதைத் தான் அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார், மானுட ஏற்ற தாழ்வுகளை அவர் எங்களை மறுக்கச் சொன்னார், சமநீதி கொண்ட அன்பும், அமைதியும் நிலவுகிற ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவே அவர் தனது இறுதி மூச்சு வரை போராடினார். அவர் உங்களைப் போல ஆய்வுகளை மேற்கொள்ளும் உயர் கல்வித் திட்டங்களில் படித்து முனைவரானவர் அல்ல, அவருடைய சொற்களையும், கோட்பாட்டையும் அப்படியே “ரா”வாக (Raw) எடுத்து மேற்கோள் காட்டுவது என்பது அந்தப் பழைய தீராத கோபமும், வன்மமும் தவிர வேறொன்றுமில்லை.
பார்ப்பனர்களைக் குறித்த எங்கள் நிலைப்பாடு மிக எளிமையானது, மானுடத்தின் சிறப்புகளையும், மானுட இருப்பின் வலியையும் பார்ப்பனர்களுக்கு ஒன்று, பறையர்களுக்கு ஒன்று என்றெல்லாம் வேறுபடுத்த இயலாது, எமது குழந்தைகளை நேசிப்பதைப் போலவே நாங்கள் உங்கள் குழந்தைகளையும் நேசிக்கிறோம், நாங்கள் வெறுப்பது உங்கள் உளவியலில் இன்னுமும் மிச்சமிருக்கிற “நான் பிறவியிலேயே உயர்வானவன்” என்கிற தேவையற்ற செருக்கையும், உங்கள் சுயநலம் மிகுந்த உழைப்புச் சுரண்டல் மனநிலையையும் தான், மற்றபடி உங்கள் தனி மனித நம்பிக்கைகளில், வாழ்க்கை முறைகளில், உங்கள் மொழி குறித்த நம்பிக்கைகளில் எல்லாம் ஒருபோதும் நாங்கள் தலையிட விரும்புவதில்லை, மாறாகப், பார்ப்பன உளவியல் கொண்ட சமூகக் குழுக்களுக்கும் நாளை ஒரு ஒடுக்குமுறையும், அழுத்தமும் நிகழுமேயானால், தந்தை பெரியாரின் மாணவர்களாக, அவரது மானுட நேசத்தை உள்வாங்கிய அறிவார்ந்த மனிதர்களாக நாங்களே முன்னே வந்து நிற்போம், ஏனெனில் அவர் எங்களுக்கு அடிப்படையில் அத்தகைய நேசத்தைத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்.
கை. அறிவழகன்
*************
மறுமொழியொன்றை இடுங்கள்