கதவுச் சதுரத்தின் பாதி இடைவெளியில் வெளி படர்ந்து கிடக்கிறது, குளிர் காற்றின் சலசலப்பைத் தாங்கியபடி இருளோடு மல்லுக்கொண்டிருக்கிறது தொலைதூர மரம், இரவுப் பறவைகள் வருகிற நேரம் ஆகி இருக்கவில்லை, அவை இன்னும் சில நிமிடங்களில் வரக்கூடும், பிடிக்காத ஏதோ ஒன்றைப் பார்த்தபடி நாயொன்று இரவின் ஏகாந்த அமைதியில் குரைத்துக் கொண்டிருக்கிறது, பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இரவு ஒரு நெருங்கிய நண்பனைப் போல எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது, சிவப்பு நிறமும், கருநீல நிறமும் கொண்ட ஒரு உருண்டையான வண்டு தோள்பட்டையில் ஊர்கிறது, அதற்கு என்னிடத்தில் அச்சமில்லை, உனைப்போலவே எனக்கும் இரவின் நெருக்கம் பிடித்திருக்கிறது, நீ ஒன்றும் தனிமையில் இல்லை என்று சொல்வதைப் போல இருக்கிறது அதன் இயக்கம், இரவு விளக்கின் மங்கிய வெம்மையில் அந்த வண்டு தயக்கங்களும், அச்சமும் இல்லாமல் ஏதோ நினைத்தபடி எனது உடல் பரப்பில் நகர்கிறது.
இரவுச் சாலையைப் பார்க்கிறேன், எப்போதாவது கடக்கிற ஊர்திகளின் வெளிச்சம் பட்டு விழித்துக் கொள்ளும் கட்டிடங்களின் சுவர்கள், இரவுச் சாலையில் இயக்கம் எளிதாய் இருக்கிறது, வாழ்வின் அழுத்தங்களும், தயக்கங்களும் மேற்கில் மறைந்த வெளிர் ஆரஞ்சு நிறச் சூரியனின் கதிர்களோடு கரைந்து விடுகின்றது, இரவு பக்கத்தில் இருக்கிற மரங்களையும், நிலவொளியில் பறக்கிற பறவைகளையும், சந்திக்கிற மனிதர்களையும் எளிதாக உயிருக்கு அருகில் கொண்டு வருகிறது, பகல் உயிரியக்கத்தின் மீது ஒரு கனத்த போர்வையைப் போர்த்தி விடுகிறது, உடல் உழைப்பும், மனத்தடைகளும் இல்லாத ஒரு போலியான முதலீட்டிய வாழ்க்கையில் இருந்து தப்பிக்க இரவையும், அதன் பரந்த வெளியையும் நோக்கியே ஓட வேண்டியிருக்கிறது. ஆகவேதான், இரவுகளை நான் உறங்கிக் கழிக்க விரும்பாதவனாக இருக்கிறேன், உறக்கத்தில் இரவுகளைக் கழித்த பிறகு பகல் நீண்டதாய் இருந்து துன்புறுத்துகிறது, சிவப்பு நிற வண்டுகளுனுடனோ, ஆழ்ந்த மயக்கத்திலோ, உறக்கத்திலோ சுவற்றை ஒட்டிக் கிடக்கும் ஒரு மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சியின் சிறகுகளுடனோ, தொலைதூர இரவு மரத்தில் இலைகளின் சலசலப்புடனோ வாழ்வது உடலை எளிதானதாக்குகிறது.
பேரண்டத்தின் சிதறலில், மிக வினோதமான பொருள் மனித உடல், அதன் இயக்கம், அதன் பரந்த சிந்தனை வெளி, அதன் தேடல் என்று எல்லாக் கோணங்களிலும் உடல் ஒரு வினோதமான பண்டத்தைப் போலவே காட்சி அளிக்கிறது, அதனுள்ளிருந்து தான் மானுடத்தின் குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. அதனுள்ளிருந்து புறப்பட்ட தேடல் தான் எட்ட முடியாத தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கிரகத்தின் நீர்நிலைகளைக் கண்டறிகிறது, மனிதக் கண்களால் நேரடியாகப் பார்க்கப்படாத அதன் மிக உயர்ந்த சிகரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் அழுத்தமாய் வழிந்து ஓடுவது வெறும் செவ்வாயின் தண்ணீர் அல்ல, மனித இதயத்தின் வலியும், வேதனையும் நிரம்பிய பயணத்தின் சுவடுகள், ஒவ்வொரு அறிவியல் இயக்கத்தின் கண்டுபிடிப்புகளுக்காகவும், எண்ணற்ற மானுட உயிர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மானுட இயக்கத்தில் பறத்தலின் மலர்களைப் பூக்கச் செய்த "ஆர்வில்லே" மற்றும் "வில்பர்" ரைட் சகோதரர்கள் ஒருநாள் இரவில் தங்கள் வீட்டின் பின்பக்கமிருக்கும் தோட்ட நிலத்தில் நெடுநேரம் விழித்திருந்தார்கள், 1903 ஆண்டின் முதல் பறத்தல் வெற்றிகரமாக முடிந்திருந்தது, மானுட வாழ்க்கையின் பயணங்களின் துயரத்தை ஒரு திறப்பின் மூலமாக அவர்கள் வெல்ல முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தார்கள், உலகம் வியக்கும் ஒரு உன்னதமான அந்த நிகழ்வைக் குறித்து வரலாறு எண்ணற்ற குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, ஆனால், அன்றைய இரவில் அழுது கொண்டிருந்த ஒரு தந்தையின் இதயத்தை நமக்குத் தெரியாது, ரைட் சகோதரர்களின் தந்தையான "மில்ட்டன் ரைட்" அன்றைய இரவில் தனது கண்ணீரைத் துடைத்தபடி "எனது அன்பு மகன்கள் இருவரையும் பறத்தலின் அற்புதத்துக்காக நான் இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கதறினார், தங்கள் உடலையும், உயிரையும் பணயம் வைத்தே வடக்குக் கரோலினாவின் "கில் டெவில் ஹில்ஸ்" இல் இருந்து அந்த இளைஞர்கள் பறத்தலை சாத்தியம் என்று நம்பினார்கள். பிறகு மில்டனின் கண்ணீருக்காக சகோதரர்கள் ஒரு உறுதிமொழியைக் கொடுத்தார்கள், இருவரும் சேர்ந்து ஒருபோதும் பறப்பதில்லை என்கிற தந்தைக்கான உறுதிமொழி.
பிறகொருநாள், 1910 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஆர்வில்லே தனது 82 வயதான தந்தையை ஓரளவு பறக்கக் கூடிய தங்களது வானூர்தியில் ஏற்றிக் கொண்டு பறந்தார், தள்ளாடும் கைகளோடு பறத்தலின் போது, மில்டன் என்கிற அந்த முதியவர், "மகனே, இன்னும் உயர உயரப் பற, இன்னும் உயர உயரப் பற" என்று கதறி அழுதார். அது ஒரு தந்தையின் ஒப்பற்ற மகிழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டும், அந்த மகிழ்ச்சியும், மன எழுச்சியும் தான் அவரது குழந்தைகளைப் பறக்கச் சொல்லித் தூண்டியது. அந்த அன்பும், வாழ்க்கை மீதான பிடிப்பும் தானே வகை வகையான வானூர்திகள் கண்டுபிடிக்கப்பட்டு வெவ்வேறு கோள்களுக்குப் பயணித்தாலும் மனிதனைத் தனது மண்ணையும், மானுடத்தையும் நேசிக்க வைக்க வைக்கிறது.
"ரோனல்ட் காரொன்" 2008 இல் முதன்முறையாகப் பன்னாட்டு வான்வெளி ஆய்வுக் கூடத்தில் கால் பதித்த இரவில் தான் வாழும் பூமி இத்தனை அழகானதென்று வியந்தார், கண்கொள்ளாமல் பேரண்ட வெளியில் இருந்து புவிப்பந்தின் மீது அலையடிக்கும் ஆழ்கடலின் அற்புதங்களையும், விளக்கொளியில் ஜொலிக்கும் அதன் நகரங்களையும் கண்டு பூரித்தார், ஆனால், அவரது அந்த மகிழ்ச்சியும், பூரிப்பும் அடுத்த கணங்களில் மாறிப் போனது, கிடைக்காத அந்த அரிய வாய்ப்பின் முனைகளில் மனிதர்களால் எட்ட முடியாத உயரத்தின் நின்றபடி அவர் கண்ணீர் சிந்தினார், அவருடைய சொற்கள்:
"மிக அற்புதமான அந்தக் கணத்தில் நான் கீழே பூமியைப் பார்த்தேன், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தர வேண்டிய அழகான அந்த நிமிடம் மாறாக எனக்குள் ஒரு கடுந்துயரை நோக்கித் தள்ளியது. அந்த அழகிய உருளைப் பந்தில் வாழும் மானுடப் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் சமூக அநீதிகள், பசி, தாகம், போர், ஏழ்மை என்று எல்லாம் என்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியது"
("But as I looked down at this stunning, fragile oasis — this island that has been given to us, and has protected all life from the harshness of space — a sadness came over me, and I was hit in the gut with an undeniable sobering contradiction. In spite of the indescribable beauty of this moment in my life, I couldn’t help but think of the inequity that exists on the apparent paradise we have been given. I couldn’t help but think of all the people who don’t have clean water to drink or enough food to eat, of the social injustice, conflicts, and poverty that exists throughout the Earth.")
பிறகு பூமிக்குத் திரும்பி ரொனால்ட் என்ன செய்தார் தெரியுமா? ஆப்ரிக்காவின் ருவாண்டாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தைத் துவங்கி அங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீரை வழங்கும் பணிகளை இன்றும் செய்து வருகிறார். அந்த மானுடத்தின் மீதான அன்புதானே உயர உயர வெளியெங்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.
இத்தனை பேரன்பு நிரம்பிய மானுடத்தின் இதயம் தான் பக்கத்தில் வசிக்கும் ஒரு சக குழந்தையைத் தனது வீதிக்குள் நுழைந்தான் என்று கைகளைப் பொசுக்கி விடுகிறது, தனக்குப் பிடிக்காத எதையோ தின்றான் என்று கொன்று விடுகிறது, சக உயிரைக் காதலித்தான் என்று கழுத்தை அறுத்துத் தண்டவாளங்களில் எறிந்து விடுகிறது, குருதியும் சதையுமான எண்ணற்ற மானுட உயிர்களையும், அவற்றின் வாழ்க்கையையும் விட மதம், சாதி, தேசம் என்கிற கண்ணுக்குப் புலப்படாத மானுட எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் நலனே மிக முக்கியம் என்று வாதிடுகிறது.
மீண்டும் ஒருமுறை கதவுச் சதுரத்தின் வழியாக வெளியைப் பார்க்கிறேன், வெகு தொலைவில் பேரண்டத்தின் புலப்படாத கோட்டில் மிதக்கும் ஒரு பருப்பொருளைப் போல உடலைக் கடந்து உயரத்தில் மிக உயரத்தில் கண்சிமிட்டும் ஒரு நட்சத்திரத்தின் மீது ஒரு துளி காதலைத் தெளிக்கிறேன், அங்கே பூக்கள் மலரும், அங்கே தேசங்களையும், எல்லைகளையும், மதங்களையும், இனங்களையும் கடந்த ஒரு புதிய குழந்தைகளுக்கான உலகம் காத்திருக்கும், மனித மனத்தின் உள்ளே ஆழமாய்ப் பதிந்து கிடக்கும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து எல்லைகளும், போருமற்ற அமைதி இந்த இரவைப் போல அங்கே ஊடுருவிச் செல்லும். படுக்கையறைக்குச் சென்று குழந்தைகளைப் பார்க்கிறேன், வேறெந்த உலகமும் தெரியாமல் என்னையே சுற்றிச் சுற்றி அன்பு கொள்ளும் அவர்களின் காதல் பன்னாட்டு வான்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் காட்சியை விடப் பூரிப்பானது.
மறுமொழியொன்றை இடுங்கள்