வாழ்க்கையைக் குறித்த சில முன்முடிவுகளை மாற்றும் வல்லமை கலைக்கு இருக்கிறது, மானுட வாழ்வின் இயல்பான இருத்தலுக்கான போராட்டத்தைக் கொஞ்சமேனும் சுவாரசியம் மிகுந்த ஒரு பயணமாக மாற்றும் ஆற்றல் உறுதியாக ஒரு நூலுக்கோ ஒரு திரைப்படத்துக்கோ உண்டு என்று நான் நம்புகிறேன், பான்ட்ரி (Fandry) திரைப்படத்தைப் பார்த்த போது ஒரு அறச்சீற்றமும், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் சார்பில் ஆதிக்க உணர்வின் தலையில் கல்லெறிந்ததைப் போல ஒரு நிம்மதியும் உருவானது, அதற்குப் பிறகு ஒரு விபத்தைப் போல இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு, கயிற்றின் மேலே நடக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.
நியூயார்க் நகரத்தின் மன்ஹட்டனின் இரட்டைக் கோபுரம் பின்புலத்தில் விரிய "சுதந்திர தேவி" சிலையின் உச்சியில் நின்று பிலிப் தனது கதையைச் சொல்லத் துவங்கும் காட்சியிலேயே ஒரு எதிர்பார்ப்பையும், வியப்பையும் உருவாக்குகிறார் இயக்குனர். "தி வாக்" (The Walk), பாரிஸ் நகரத்தில் வசிக்கும் ஒரு பைலட்டின் மகன் "பிலிப்" வழக்கமான தந்தையின் கனவுகளைச் சுமக்க மறுத்துவிட்டு சர்க்கஸ் நிகழ்வுகளின் மீது கவனம் செலுத்துகிறான், "பாப்பா ரூடி" என்கிற குடும்பம் செய்கிற சாகசங்களையும், கயிற்றின் மீது நடக்கும் சர்க்கஸ் காட்சிகளையும் பிலிப் தொடர்ந்து தனது இளம் வயதில் பார்க்கிறான், பிறகு கயிற்றின் மீதி நடக்கும் கலையின் மீது அவனுக்கு அளப்பரிய ஈர்ப்பு உருவாகிறது, வீட்டின் பின்புறம் மரங்களின் இடையே கயிற்றைக் கட்டி நடந்து பழகுகிறான், ஆர்வம் அதிகமாகி "பாப்பா ரூடி" சாகசம் செய்யும் சர்க்கஸ் கூடாரத்துக்கு இரவு நேரத்தில் சென்று கயிற்றின் மீது நடந்து பழக முயற்சி செய்யும்போது பிடிபடுகிறான் பிலிப், பாப்பா ரூடி அவனது ஆர்வத்தையும், திறன்களையும் கண்டு வியந்து கயிற்றின் மீது நடக்கும் கலையின் நுட்பங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
பிலிப்பின் தந்தைக்கு தனது மகன் ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போலக் கயிற்றின் மீது நடப்பது கண்டு எரிச்சல், ஒரு கட்டத்தில் பிலிப்பை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார், பிலிப் தெருவோரங்களில் கயிற்றைக் கட்டி வித்தை காட்டிப் பிழைக்கிறார், பாரிஸ் நகரின் தெருவோரத் திண்டு ஒன்றில் மலர்களுக்கு நடுவே வயலின் இசைத்தபடி அமர்ந்திருக்கும் ஆனியைச் சந்திக்கும் பிலிப் அவரோடு நட்புக் கொள்கிறார், விளக்குத் தூண்கள், மலர்ப் பாத்திகள், நிழற்குடைகளில் அமர்ந்து தேநீர் குடிக்கும் இளம் காதலர்கள், அழகான, அமைதியான அந்த பாரிஸ் நகரத்தின் வீதி மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறது, மழை நமக்குள் பெய்கிறது, ஒரு நிழற்குடையைப் பெயர்த்து ஆனிக்காக எடுத்துச் செல்லும் பிலிப்பின் மனமும், பிலிப்பின் கனவுகளை அடைய ஆனி உதவுவதாகச் சொல்லும் தருணங்களும் இயல்பானவை மட்டுமல்ல, மனதுக்கு நெருக்கமான மானுட உணர்வுகளைத் தூண்டும் காட்சிப் படிமங்கள்.
Rober Zemeckis (The Director)
வரலாற்றுச் சிறப்பு மிக்க "நோட்ரே டேம்" கோபுரங்களின் இடையே கயிற்றைக் கட்டி நடக்கிறார் பிலிப், பின்பொருநாள் நியூயார்க் நகரின் மன்ஹட்டன் இரட்டைக் கோபுரங்களை ஒரு வார இதழில் பார்க்கிறார், அந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கயிற்றைக் கட்டி நடந்து விட்டால், "உலகின் மிகச் சிறந்த கயிற்றின் மீது நடக்கும் கலைஞனாக மாறி விடுவேன்" என்று பிலிப் நம்புகிறார், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். பிலிப் கயிற்றின் மீது நடப்பதை ஒரு வித்தையாகவோ, பொருளீட்டும் தொழிலாகவோ கருதவில்லை, மாறாக கயிற்றின் மீது நடப்பதை ஒரு அற்புதக் கலையாகவே தனக்குள் உணர்கிறார், அப்படிச் செய்வதை அவர் ஒருபோதும் ஒரு இழிவான செயல் என்று கருதவில்லை, "பாப்பா ரூடி" பார்வையாளர்களுக்கு எப்படி வணக்கம் சொல்வது என்று பிலிப்புக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சியில் பிலிப் "பார்வையாளர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இது எனக்கும் கயிற்றுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்" என்கிறார், "இது பிழைக்கும் வித்தை அல்ல, கலை, எனது இதயத்தில் இருந்து சுரக்கும் கலை வடிவம்" என்று சொல்கிறார், உலகின் ஒவ்வொரு நிகழ்த்துக் கலையில் ஈடுபாடு காட்டும் கலைஞனுக்கும் இருக்கும் செருக்கை, அவனது கலை மனத்தை வெகு நுட்பமாகச் சித்தரிக்கிறார் இயக்குனர் "ராபர்ட் செமெக்கிஸ்".
ஆனால், முதியவரான "பாப்பா ரூடியோ" பார்வையாளர்கள் இல்லாத கலையால் பயனொன்றுமில்லை என்று வாதிடுகிறார், ஆனாலும் பிலிப் காட்டும் ஈடுபாட்டையும், கடின உழைப்பையும் மதிக்கிறார், கயிற்றின் மீது நடக்கும் ஒரு சர்க்கஸ் நிகழ்வின் மீது ஒரு புதிய கலைப் பரிமாணத்தை பிலிப் உண்டாக்கி இருப்பதாக நம்புகிறார். எந்த ஒரு செயலையும், தொழிலையும் மனிதனின் மனம் உன்னதமான ஒரு கலையாகவோ, படைப்பாகவோ மாற்றக் கூடிய வல்லமை கொண்டது என்பதை பிலிப் உயிரோட்டமாக வாழ்ந்து காட்டுகிறார், திரையில் தோன்றும் ஒவ்வொரு கணமும் அவரது முகக்குறிப்புகளும், உடல் மொழியும் நிஜமான பிலிப்பின் கனவுகளை நமக்குக் காட்டுகிறது.
ஒரு மானுடத் துண்டத்தின் உயிர்த் தூண்டலும், காதலும், ஈடுபாடும் எப்படி எட்ட முடியாத உயரங்களில் அவனைக் கொண்டு செலுத்துகிறது, எப்படி அவனை காற்றிலும், நீரிலும் நடக்க வைக்கிறது என்று நுட்பமான திரை மொழியால் சொல்கிற இயக்குனர் மனதைக் கொள்ளையடிக்கிறார். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத இயல்பான நண்பர்கள், எப்படி சக மனிதனின் கனவை வாழ்கிறார்கள் என்கிற ஒரு தனிக்கோட்டில் பயணிக்கும் கதையும் "தி வாக்"கில் உண்டு, உயரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஒரு நண்பன் எப்படி உயரத்திலேயே வாழும் நண்பனின் கனவைப் பின்தொடர்கிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றாலும் அது இயக்குனர் "ராபர்ட் செமெக்கிஸ்" மீதான மதிப்பைக் கூட்டுகிறது.
Dariuz Wolski (The Cinemotographer)
ஆனியைத் தனது திட்டத்துக்கான முதல் கூட்டாளி என்று பிலிப் சொன்னாலும், ஆனி பிலிப்பின் மீதும் அவரது கலை மீதும் அளப்பரிய காதல் கொண்டவராயிருக்கிறார், ஒரு கலைஞனின் வாழ்வில் துணையாக வரும் பெண்ணோ /ஆணோ எப்படி அந்தக் கலைஞனின் மன எழுச்சியைப் பாதுகாக்கிறார்கள் என்கிற வெகு நுட்பமான உளவியலை இயக்குனர் பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார், இரட்டைக் கோபுரங்களின் மீது கயிற்றைக் கட்டி நடப்பதற்கு முதல் நாள் இரவில் பல திட்டங்களை பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களின் இடையில் பிலிப்பை சாப்பிடச் சொல்லி ஆனி கொடுக்கும் தட்டில் தான் எத்தனை எத்தனை அன்பும், நேசமும் வழிகிறது. ஆனி, பிலிப் நட்பை வெறும் காதலாக மட்டுமில்லாமல் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் இடைவிடாத நுட்பமான மனமொழியாக விவரிக்கிறார் இயக்குனர்.
பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பிலிப்பும் அவரது நண்பர்களும் இரட்டைக் கோபுரங்களின் மீது பிலிப் நடப்பதற்கு முதல் நாள் இரவில் நிலை கொள்கிறார்கள், பிலிப்பின் திட்டத்துக்கான எல்லா வேலைகளையும் சட்டவிரோதமாக அதே வேளையில் உணர்வுப்பூர்வமாகவும், இதய சுத்தியோடும் செய்கிறார்கள், திட்டமிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கிறது பிலிப்பின் கனவுப் பயணம். ஜெப் என்கிற உயரத்துக்கு அஞ்சும் நண்பன் கடைசி நேரத்தில் இரட்டைக் கோபுரத்தின் மீது நின்றபடி நண்பனின் கயிற்றைக் கட்டுகிறான். மறுமுனையில் நின்று "ஜீன் லூயிஸ்" நண்பனின் கனவுகள் வீழ்ந்து விடாமல் இறுக்கப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறான், இறுதிக் காட்சியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கட்டப்பட்ட முறுக்குக் கயிறு கொஞ்சம் கொஞ்சமாக மேலேறும் போது மானுட நட்பின் வலிமை உயர உயர மேலே எழும்புவதைப் போல அற்புதமான உணர்வாக இருக்கிறது. கீழே நண்பனின் திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிகழாமல் இருப்பதை நினைத்து வருந்தியபடி நிற்கிறார்கள் பாரியும், ஆனியும்
ஒருவழியாக பிலிப்பின் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையிலான கனவுக் கயிறு கட்டி முடிக்கப்படுகிறது, பிலிப்பின் கால்கள் கயிற்றின் மீது நிலை கொள்கிறது, மேகக் கூட்டம் கண்களையும், மறுமுனைக் கோபுரத்தையும் மறைக்க பிலிப்பின் கண்களில் கயிறு ஒரு எல்லைகளற்ற பரப்பில் நீண்டு கிடப்பதைப் போலத் தெரிகிறது, பிலிப் மனதை அமைதியாக்கி கயிற்றுக்கும், ஒரு மிகச் சிறிய மானுட உயிரின் கால்களுக்கும் இடையிலான இடைவிடாத காதலையும் ஈடுபாட்டையும் உயிரூட்டுகிறார், 140 அடி நீளத்தை வானளாவிக் கிடக்கும் இரட்டைக் கோபுரங்களின் ஊடாகக் காற்றில் கடப்பதைப் போல பிலிப் நடந்து கடக்கிறார், காட்சி அனுபவங்களின் மிக அற்புதமான உணர்வை அந்த அற்புதக் கணங்களில் நமக்கு உணர்த்த முயற்சி செய்கிறார் "டேரியுஸ் வோல்ஸ்கி", டேரியுஸ் ஒரு போலந்து நாட்டு ஒளிப்பதிவாளர், "பைரேட்ஸ் ஆப் கரீபியன்ஸ்" திரைப்படத்தைப் பார்த்தவர்கள் உறுதியாக இவரை அறிந்து கொள்ள விரும்பி இருப்பார்கள், செயற்கைத் தன்மையற்ற இயல்பான கோணங்களில் அதே வேளை வெகு நுட்பமாகத் தனது கலைக் கண்களை மூடிக் கொள்ளாமல் படம் முழுக்க ஓடும் இவரது கேமரா, இறுதிக் காட்சிகளிலும் அதே இயல்புத் தன்மையையும், முதிர்ச்சியையும் காட்டி இருப்பது அற்புதம்.
Allan Silverstri (The Musician)
ஒருமுறை கயிற்றைக் கடந்து விட்ட பிலிப் மறுமுனைக்கும் செல்கிறார், பாப்பா ரூடியின் பார்வையாளர்களுக்கான வணக்கத்தை கயிற்றின் நடுவே நின்றபடி செலுத்துகிறார், பிறகு ஒரு கணத்தில் கயிற்றின் மீது படுக்கிறார், 1400 அடி உயர இரட்டைக் கோபுரங்களின் மீது 1974 ஆம் ஆண்டு கயிற்றின் மீது நடந்து கடந்து காட்டிய உண்மையான பிலிப்பின் அசாத்திய மன எழுச்சியையும், கடும் உழைப்பையும், மனித மனதின் விசித்திரமான கனவுகளைத் துரத்தும் உன்னதத்தையும் இவ்வளவு அழகாக யாரும் சொல்லி இருக்க முடியாது, இரட்டைக் கோபுரங்களுக்கு நடுவே ஒரு சின்னஞ்சிறு பறவையைப் போல காற்றின் இசையைக் கேட்டபடி படுத்திருக்கும் பிலிப்பின் கண்களுக்கு மேலே அப்போது ஒரு வெண்ணிறப் பறவை காட்சியளிக்கிறது, உயர உயரப் பறக்கும் பிலிப்பின் கனவு மகுடங்களை அலங்கரிக்கும் ஒரு கோஹினூர் வைரத்தைப் போல காட்சியைச் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ராபர்ட்.
பிலிப்பின் அற்புதமான உடல் மொழி, திகைக்க வைக்கும் நடிப்பின் மீதான ஈடுபாடு, காமெராவின் இயல்பான கோணங்கள், மானுடத்தின் அழகான கனவுகள் என்று பல நுட்பமான கூறுகளோடு இணையும் "அல்லேன் சில்வெஸ்ட்ரி" யின் பின்னணி இசை காட்சிகளோடு நம்மைக் கட்டிப் போடுகிற "பெர்பெக்ட்" வகை, கயிற்றின் மீது இறுதிக் காட்சியில் பிலிப் நடக்கத் துவங்கும் போது நாம் கேட்பது பலமுறை இந்தியச் சாலைகளில் மகிழுந்துகள் பின்னோக்கி வரும்போதோ, பொம்மைகளுக்குச் சாவி கொடுத்து முடிக்கும் போதோ கேட்கிற இசை தான், ஆனால், அதனையே ஒரு அற்புதமான இசையனுபவமாக மாற்றிக் இருக்கிறார் அல்லேன்.
Joseph Gordan Levitt (The Replicate) & Phillippe Pettit (The Original)
சராசரி மனித வாழ்க்கையை விடுத்து ஒரு கணமேனும் உன்னதமான வாழ்க்கை அனுபவங்களை நோக்கியோ, ஒரு அழகிய கனவைத் துரத்தியோ ஓடும் மனம் கொண்ட மனிதரா நீங்கள், கிளம்பி முதல் வேலையாக "தி வாக்" திரைப்படத்தைப் பார்த்து விடுங்கள், ஒருவேளை வாழ்க்கை குறித்த மிகச் சிக்கலான உங்கள் முன்முடிவுகளை இந்தப் படம் மாற்றக் கூடும். "தி வாக்" – வெறும் நடையல்ல, விண்ணை நோக்கிச் செல்லும் மனிதக் கனவுகளின் பயணம்.
மறுமொழியொன்றை இடுங்கள்